ஏதனின் இலஞ்சியவள் 15 – 2

அவள் நண்பி மட்டுமல்லாது போவோர் வருவோர் பார்வையும்  அவர்களில்தான். அதுவும் ஏதனை அடையாளம் கண்டவர்கள் தம்முள் குசுகுசுத்துக்கொண்டே கைப்பேசியை அவர்கள் நோக்கிப் பிடித்தார்கள்.

ஒரே உதறலில் விடுபட்டவள் மறு நொடி பின்புறமாக ஏற எத்தனிக்க, “அங்க இல்ல இங்க.” அவள் கரம்பிடித்துச் சென்று முன்புறமாக ஏற்றிவிட்டான், அவன்.

விடுப்பைப் புசிக்கும் கைப்பேசிகள்  சில வயிற்றை நிரப்பிக் கொண்டன. ‘அய்யோ’ மனத்துள் அலறினாள் துர்கா. ‘இந்த வெள்ளைக்காரன் முகத்தைக் குத்திக் குதறப்போறன். இண்டீசென்ட் பெல்லோ.’ நெருப்பைக் கக்கும் விழிகளால் அவனைச் சுட்டாள்.  

சுற்றத்தை மட்டுமா அவளையும் அவதானித்த ஏதன் உதட்டோரம் நகையொன்று தோன்றி மறைய காரைக் கிளப்பினான். வேர்த்,  ஒலிவியாவோடு கதைத்துவிட்டுக்  கோபமும் இறுக்கமுமாக வந்திருந்தவனுக்கு மனத்துள் ஒரு அமைதி. அருகண்மையில்  இருப்பவள் மகிமையாம். அவனுள்ளம் அப்படித்தான் சொல்லிக்கொண்டது.

“நான் செய்த முதல் பிழை இந்த லண்டனுக்குப் படிக்க வந்தது.” சீறலாக ஆரம்பித்தாள்.  “என்ர அம்மா எவ்வளவு சொன்னா, கேட்டனா நான்?  அதுக்குதான் இப்ப கிடந்து அனுபவிக்கிறன். சரி வந்தது வந்தன், இந்தப் பெரிய நாட்டில எனக்கு வேலைக்கு எண்டு வேற இடமே இல்லையா என்ன? நான் செய்த அடுத்தப் பெரிய பிழை உங்கட ரெஸ்ட்டோரண்டுக்கு வேலைக்கு வந்தது. இது எல்லாத்தையும் விடவும் பெரிய பிழை என்ன தெரியுமா?” கேட்டவள்  பதிலை எதிர்பாராது தொடர்ந்தாள்.  “உங்களோட கதை பேச்சு வச்சிக்கொண்டதுதான் என்ர முட்டாள்தனத்திட உச்சம்.” படபடவென்று பொரிந்து தள்ளினாள் . 

அடுத்த இருபது நிமிடங்கள் துர்க்காவின் சீறல் மட்டுமே அக்காரினுள் ஒலித்தபடியிருந்தது. அவன் அமைதியையும் கொடுப்புக்குள் நெரிந்த சிரிப்பையும் பார்த்தவளுக்குச்  சினம் அதிகரித்துச் சென்றிட்டு. அதுவே கார் எங்கே செல்கிறது  என்றதில் கூடக் கவனம் பதிக்கத் தவறினாள். 

அவள் அதைப் பற்றிய கவனமே இல்லாதிருப்பதை அவன் கவனித்தான். என்னில் நம்பிக்கை இல்லாமலா இப்படி ஏறியிருக்கிறாள். இதைக் கேட்டால் உன் தகப்பனில் உள்ள மரியாதை என்பாள் என்ற அவனுள்ளமோ, அவள் குமுறலைச் சிறிதும் மனத்துள் எடாது வேறு புறமாகப் பயன்பட்டது. 

“உங்கட வீட்டு ஆக்கள் ஆர் என்னை அவமரியாதை செய்ய?” மூக்கு நுனி சிவக்கக் கேள்வி கேட்டவள் கழுத்தை நெரிக்கவில்லை என்றது மட்டுமே குறை. 

அவள் வீட்டினரின் செய்கைகளும் பேச்சுவார்த்தைகளும் அவளை மிகவும் நோகடித்தது ஏதனுக்கு  விளங்கிற்று. தகப்பனின் உடல்நிலை சீராக இருந்திருக்க, வீட்டில் தேவையற்ற நாடகங்கள், முட்டல் மோதல்கள் இல்லாதிருந்திருக்க, இவன், அவளை எவராவது நோகடிக்க விட்டிருப்பானா என்ன?  அவன் கவனம் மொத்தமும் அவள் மீதல்லவா  இருந்திருக்கும்.

வேகமாகவே வந்தவன்  ஒலிப்பானை மெல்ல ஒலிக்கவிட்டான். அடுத்து வந்த பெரிய மதிலோடு இருந்த வளவு வாயில் கதவு அகலத் திறந்துக்கொள்ள, வாயிலோடு இருந்த குட்டி ஓட்டு வீட்டில் இருந்து வெளிப்பட்டார் ஒரு திடகாத்திரமான முதியவர்.

மலர்ந்த சிரிப்போடு அவருக்குக் கை காட்டிவிட்டு காரை வேகமாகச் சீற விட்டான்.

கார் சென்ற பாதையின் இரு மருங்கும் கண்களுக்குத் தெரிந்த வரை பசுமையும் சோலையும் பூத்துக் குலுங்கும் மலர்களுமாக நந்தவனமாக இருந்தது.  

துர்க்காவைச் சந்திக்கச் சென்ற போது இங்கு வரும் எண்ணமெல்லாம் ஏதனுக்கு இருக்கவில்லை. திடுமென்று தோன்றியதில் வந்துவிட்டான். அது என்னவோ அவன் மனத்துள் முகிழ்ந்துவிட்ட நேசத்தை தன்னை மிகவுமே நேசிக்கும் நெஞ்சத்திடம் காட்டிடும் வேகம். இத்தனைக்கும் நேசிப்பவளிடம் சொல்லவில்லை, அவள் எதிரொலியை அறியவில்லை.

இந்த எண்ணம் வர உதட்டில் வெளிப்படையாகவே முறுவல் நெளிந்தது. அதில் கர்வம் முதன்மையாக இருந்ததோ! அவனை, அவன் நேசத்தைப் போய் யாராவது மறுத்து ஒதுக்குவார்களா என்ன? எடுவலாக  முணுமுணுத்த அவன் மனத்தில் குரல், அந்த முறுவலோடு கடைக்கண்ணால் அருகண்மையில் இருப்பவளைப்  பார்க்க வைத்தது.

அவளோ இன்னமும் சிடுசிடுப்பதை நிறுத்தவில்லை. கார் மெதுவாகியது. முன்னால்  தெரிந்த குட்டி அரண்மனை போன்ற பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான், ஏதன்.

இத்தனைக்கும் பிறகு, இக்கணம் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று விளங்கினாலும் இப்போது இங்கு வருவதைப்  பற்றி எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற ரீதியில் அவன் ஆழமாக யோசிக்கவில்லை.

 காதலிக்கு மிகப்பிடித்த விடயத்தைச் சொல்லாமல் கொள்ளாமல் செய்து காட்டிடும்  மகிழ்விக்கும் ஆச்சரியப்படுத்தும் உயிர் நேசம் கொண்டவன் மனநிலையில் இருந்தான் அவன்.

அவள் கதைத்த விதத்தில் அவன்பால் நம்பிக்கையற்ற நிலை வந்துவிட்டதோ என்றே எண்ணத் தோன்றிட்டு. அதுவே, ‘நீ நினைப்பது போல் இல்லை துர்க்கா, நான் உன்னோட உனக்காக இருக்கிறன். உன்ர நம்பிக்கைக்குரியவன்.’ என்று காட்டிடும் வேகமாக்கும். 

அவன் நேசத்தை, அவள் மீதான அக்கறையை, தானேயென்றாலும் உருவாக்கிக்கொண்ட பொறுப்பை  என்று, அவளுக்கு ஆணித்தரமாக விளங்க வைத்துவிடுவதில் தாமதம் வேண்டாமே! 

“துர்கா இனஃப்!” மென்மையாகச் சொன்னபடி அவள் கரத்தைப் பற்றியவன், “வாய் நோகேல்லையா உனக்கு?” நக்கலாய்க் கேட்டதும்தான் அவள் சுயத்துக்கு வந்தாள். 

சட்டென்று மௌனமாகியவளுள் கார் எங்கு நிற்கிறது என்ற கேள்வியும் வந்தது. தன்னால் வலக்கைக்குள் இருந்த கைப்பேசியில் நேரம் பார்த்தாள். விழிகள் அதுபாட்டில்  சுற்றிச்சுழன்றன . அதில் வந்துபோன அதிர்வை, திகைப்பைக்  கவனித்தவன் உதடுகளில் முறுவல் மட்டுமே! 

அவளோ, மனத்துள் எழுந்த பதற்றத்தை மறைத்திட முயன்றாள். எல்லாவற்றுக்கும் முதல்  சப் சப்பென்று தன்னைத்தானே அறைந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. கால் மணித்தியாலத்தை விடவும் அதிக நேரம் கார் ஓடியிருக்குப் போல் இருக்கே. அதுவரை, எங்குப் போகிறோம் என்ற சுரணையே இன்றிக் கத்திக் கொண்டிருந்திருக்கிறாளே! இவளை என்ன செய்வது?

 

error: Alert: Content selection is disabled!!