ஏதனின் இலஞ்சியவள் 15 – 3

தன்னில்தான் கொண்ட கோபம் அப்படியே அவனில் பாய்ந்தது. அப்படி என்ன செய்து விடுவானாம் என்ற அசட்டுத் துணிச்சலும் ஆரோன் என்ற மனிதர் மறைமுகமாகக் கொடுத்த தைரியமுமாக அவனை முறைப்போடு பார்த்தவள்  ஒரே இலுவையில் கையை உருவிக்கொண்டாள்.

“எங்கக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீங்க? இது எந்த இடம்? அதுவும் என்னட்ட ஒரு வார்த்தை கேட்காமல் .  கதைக்கோணும் கதைக்கோணும் எண்டீங்களே, இதான் கதைக்கிற வடிவோ?” விழிகளுக்குப் போட்டியாக அவள் வார்த்தைகளிலும் அனலடித்தது.

அவன் அதையெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.  

“கதைக்கலாம் கதைக்கலாம் . கட்டாயம் கதைக்கோணும்தான்.  அதுக்கு முதல் முக்கியமான நபர் ஒருவருக்கு உன்னை அறிமுகம் செய்யோணும்.” என்றதும்  நெற்றி சுருக்கினாள். 

“ஓ கோட்! கதைக்கவே ஒண்ணும் இல்ல எண்டுறன், உங்களுக்கு விளங்கேல்லையா ஏதன்? பின்னேரம் ரெஸ்டோரண்ட் வந்து சொல்லிட்டு வேலையை விட இருந்தனான். என்ன தேவைக்கு அந்த அலைச்சல்? இந்தா இப்பவே சொல்லுறன், அந்தப் பக்கத்துக்கே பெரிய கும்பிடு!” அவள் அம்மம்மா போல் கை கூப்பி தலைக்கு மேல் உயர்த்தியவள் விழிகள் கலங்கிப் போயின.

எவ்வளவு ஆசையாக இலண்டனுக்கு வந்தாள். வேலைக்குச் சென்றாள். இப்போதோ, சுழலுள் சிக்குப்பட்டு நிம்மதி தொலைத்து மூச்சு முட்டி நிற்கிறாள். எல்லாவற்றுக்கும் இவன்தான் காரணம் என்று மனம் உறுமியது. உன் மேல் பிழையை வைத்துக்கொண்டு அடுத்தவரில்  பழி சொல்லாதே என்று மேலாக உறுமியது மனசாட்சி.

சிறிதாகவோ பெரிதாகவோ சறுக்கல் வந்துவிட்டது. அதற்கென்று அப்படியே சகதி சேறு, முள்ளு கல்லு என்று பாராது உருண்டு பிறழ்வதா? இனிச் சரி சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அருகில் பார்த்தால், அவளையே ஆழ்ந்து பார்த்தபடி இருந்து அவளுக்கு மேலும் சினமூட்டினான், ஏதன்.

 “ஐ அம் சீரியஸ் ஏதன்.” என்று ஆரம்பிக்க,  “ சரி, நானும் சீரியஸா கேக்கிறன், என் பிரதர் கோவத்தில சொன்னதுகளை எல்லாம் ஒண்டு விடாமல் அந்த ஒலிவியாவுக்குச் சொன்னாயோ?”  என்றான், சட்டென்று மாறிவிட்ட வானிலையாக முகம் மாற. 

அவள் விழிகள் சுருங்கப் பார்த்தாள். “உங்களுக்கு அவள் ‘அந்த ஒலிவியா.” என்று வாயை அதிகமாகவே சுழித்தாள். “எனக்கு அவள்  பெஸ்ட் ஃப்ரெண்ட் டில் மை சைல்ட் ஹூட். உங்கட  குடும்பத்தினர் சொல்லாத  எதையாவது சொன்னனானா ஏதன்?”  

அது இல்ல கதை. அது எப்பிடி நீ என்ர குடும்பம் பற்றி ஒலிவியாட்ட அப்பிடிச் சொல்லலாம்?” என்றவன், கோபமாக இடையிடை முயன்றவளுக்கு இடம் விடவில்லை. 

“இஞ்ச பார் துர்க்கா,  ஐவன், மோம், ஐலா எண்டு அவே  கதைச்ச எதையும் நான் நியாயப்படுத்த வரேல்ல. உன்னோட அவே கதைச்ச முறை பிழை. ஆனால், அதெல்லாம் சாதாரண மனநிலையில கதைச்ச கதை இல்ல. என்ன நிலையில என்ர குடும்பம் இப்ப இருக்குச் சொல்லு? கூடவே இருக்கிற உனக்கு அது கூட விளங்கேல்லையா? ஒலிவியா வந்தால்தான் சேர்ஜரி செய்வன் எண்டு  டாட் நடிக்கிறாரா? இல்லையே. அப்பிடி இருக்க ஒலிவியாவ வராத, உன்ர  உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லி இருக்கிற நீ.  அந்த நேரம் உனக்கு என்ர  நினைவு வரேல்லையா? என்னில நம்பிக்கையே இல்லையா? அப்பிடி ஏதாவது நடக்க நான் விட்டிருவனா சொல்லு பாப்பம்?” சீறலாகத்  தொடங்கியவன் பார்வை அவள் விழிகளுள்  ஊடுருவ, குரலில் வருத்தம் தோயக் கதைத்த விதத்தில் துர்காதான் அசைய மறந்து போனாள்.

 அவனால் அவள் மனத்தை எட்ட முடிந்தது என்னவோ சில நொடிகள்தான், சுதாரித்துவிட்டாள். 

“ஓ! இதான் நீங்க கதைக்கோணும் எண்ட விசயமா?  இஞ்ச பாருங்க சேர், கோவம் வந்தா கொல்லுவன் எண்டு சொல்லுற அளவுக்கு எல்லாம் செல்லாத மிகவும் சாதாரண மனுசர்  நாங்க. அப்பிடி இருக்க அந்தச் சொல்லச் சொல்லேக்க இருந்த உக்கிரத்தைப் பகிடியா எடுக்க எனக்கு உண்மையாவே தெரியேல்ல. அவளை உடனே வா எண்டு சொன்னது நான் எண்டத  மறந்திருக்க மாட்டிங்க என்ன? ஆனா, இப்பவும் அவள்  வாறதில எனக்குக் கொஞ்சமும்   விருப்பம் இல்ல. உன்ர ஃப்ரெண்ட் நான் இல்லையா எண்டு சொல்லுற நீங்க, உங்கட அம்மா, அண்ணா, அக்கா எண்டு என்னை ஏசேக்க என்ன செய்துகொண்டிருந்தனீங்க? வேகமா வந்து அந்த இடத்த விட்டுப் போ எண்டு நாய் போல கலைச்சு விட்டனீங்க எல்லா?”  என்று அவள் கேட்ட நேரம் கன்னங்களால் கண்ணீர் வழிந்தோடியது.

“ஓ கோட் துர்கா!  இப்ப உனக்கு அதுவா கோபம்?”  அவன் இதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் முதிர்வோடு பக்குவமும் பொறுப்புமாக நடப்பவள் அவள் . அது அவனுக்கு நன்றாகவே தெரியும் . அந்த இடத்தில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டிருப்பாள் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.  

“ உங்களோட கோவிக்க நான் ஆர் சொல்லுங்க? நான் உங்களிட்ட பார்ட் டைமா வேலை செய்யிற ஒரு வேர்கர், அவ்வளவுதான். அதுகூட இனி இல்ல.”  என்றவள், “துர்கா ப்ளீஸ் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல வேணாம். உள்ள குழப்பங்கள் போதும். அதெல்லாம் சரி வரவிட்டு  எங்களப்  பற்றி வீட்டில் சொல்லலாம் எண்டு இருந்தனான்.” என்றவனை, அதிர்வும் கோபமுமாகப் பார்த்தாள். 

“வாட்! எங்களப் பற்றிச் சொல்ல அப்பிடி என்ன இருக்கு?” என்று  அவள் கேட்ட தொனியும் அவள் சிடுசிடுத்த முகபாவனையும் அவன் முகத்தையும் இறுக வைத்தன.

இருந்தும் அவன் கரம் வேகமாக நகர்ந்து அவள் கரத்தைப் பற்றி இறுக்கமாகப்  பொத்திக்கொண்டது. அவள் விடுவிக்கத் திமிர திமிரத்  தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது .

“இனி வாற என்ர  வாழ்க்க முழுதும் உன்ன மட்டுமே நேசிச்சுக்துக்கொண்டிருக்கோணும்  எண்டதுதான் இப்ப இருக்கிற என்ர ஒரே ஒரு பெரிய ஆசை!”  அவள் கரத்தைத் தன்  நெஞ்சில் அழுத்தியபடி சொல்லியும் இருந்தான். அவன் இளகி இருந்த நிலை, ஒரு ஒரு வார்த்தைகளையும்  உணர்ந்து அனுபவித்துச் சொல்கிறான் என்றது. 

அந்த இளக்கம் அவளுக்கு உதவியது. மறுகையால் அவனைத் தள்ளி ஒரே உதறலில் அவன் பிடிக்குள்ளிருந்த கரத்தை விடுவித்த வேகத்தில் வெளியே இறங்கியிருந்தாள், துர்கா.

சுதாரித்தவனும் வேகமாக இறங்கினான். வாயில் நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தவள் பின்னால் ஓடினான்.

வந்த வேகத்தில் அவள் கரம் பற்றி நிறுத்தி, “துர்கா ப்ளீஸ்!” கெஞ்சலாகச் சொன்னான். 

“இவ்வளவும்தான் மரியாதை. கையை விடுங்க. இல்லையோ  பொலிசுக்கு அடிப்பன்.” மறுகரத்தில் இருந்த கைப்பேசியில் அவசர உதவி எண்ணை அழுத்த முயன்றாள். அவன் கைப்பேசியைப் பறிக்க முயன்றான்.   

அந்நேரம் “ஏதன், இஞ்ச என்ன நடக்குது?” கம்பீரக்குரல் இருவரையும் அசைய விடாது செய்தது. பார்த்தால், நிமிர்ந்த நடையில் வயோதிப மாது ஒருவர் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

 

error: Alert: Content selection is disabled!!