அவர் சொன்ன விதத்தில், பார்த்த சீண்டலான பார்வையில் விழி சுருங்கக் கண்ணடித்ததில் தடுமாறிப்போனது துர்காதான். கோபமும் எரிச்சலுமாக ஏதனோடு சீறியவள், அப்பெரியவர் ஆரோன் அன்னையென்று தெரிந்தபின் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவர் பிடியில் இழுப்பட்டுச் சென்றாள். இப்போதோ, அவர் கதைக்கு அவளையும் அறியாதே முகம் சிவந்தாள். தலையுமே அவள் அனுமதிக்குக் காத்திருக்கவில்லை, பின்னால் திரும்பியிருந்தது.
மனத்துள் அவன் மீது நிறைய அதிருப்தி. அதையும் கடந்ததாக இருந்தது இருவர் பார்வைகளும் மோதுண்ட அச்சில நொடிகள். அவளுக்கே அவ்வளவாகத் தெரியாது, அவளுள் அவன் சார்பில் மிக மிக மென்மையான உணர்வுகள் உண்டு என்பதற்கு சாட்சியான கணங்களாயின அவை.
அதுவரைக்கும் ஏதன் அதே இடத்தில்தான் நின்றிருந்தான். கைகள் இரண்டும் காற்சட்டைப் பைக்குள் திணிபட்டிருக்க, பார்வை என்னவோ அவளில்தான், அதுவும் முகத்தில் அவ்வளவு சிடுசிடுப்போடு.
ஒரு நிமிடமும் எடுக்கவில்லை, அவனைக் கீழே தள்ளிக் காலால் மிதித்துவிட்டாளே! டைம் பாஸுக்கு அவளைக் காதலிக்கிறானாமே. அவள் அப்படிச் சொன்னது அவன் மனத்துள் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. ‘அவளை உனக்கு உண்மையில் பிடிச்சிருக்கா?’ என்று உள்ளம் வேறு இடித்துக் கேட்கத் தொடங்கியிருந்தது.
அப்படியிருக்க, திரும்பியவள் பார்வை சில நொடிகள்தான் அவன் பார்வையை உரசிச் சென்றிருந்தது. அந்த விழிகள்தான் சற்று முன்வரை கோபத்தைக் கக்கினவா? இல்லையே! எப்போதும் அவள் விழிகள், ‘ சேர்ந்து சிரிக்க வாறியோ’ என்று கேட்பதாக உணர்வான் ஏதன். அதில் சினத்தைக் கண்டு நைந்து நின்றவன் ஆச்சே! குழைவோடு வந்து மோதிய பார்வையை அப்படியே தன் இதயத்துள் சேமித்துக்கொண்டவனோ, அவர்களை நோக்கி விறுவிறுவென்று ஓடினான்.
‘அவளுக்கும் நிச்சயமா என்னைப் பிடிச்சிருக்கு. அது எப்பிடிப் பிடிக்காமப் போகும்?’ மீண்டும் அவனுள் இறுமாப்பு. என் வீட்டினரின் அன்றைய கதை பேச்சு, நடக்கும் குழப்பங்கங்களே அவளின் இந்த மறுப்புக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தவன், அவளோடு இணைந்து சோடியாக வீட்டினுள் கால் வைத்தான்.
இடித்துப் பிடித்துக்கொண்டு வந்து துர்காவின் தோளோடு உரசிக்கொண்டு உள்ளே நுழைந்த பேரனை முறைப்போடு பார்த்துக்கொண்டு பின்தங்கி நின்றார், முதியவர்.
ஏதன் எங்கே அதைக் கவனித்தான். நுழைந்தவன் பார்வையில் சிறு திகைப்பு வந்தொட்டிக்கொண்டது. அங்கே, அவனே எதிர்பாராத விதமாக வீல் சேரில் அமர்ந்து வாசலையே பார்த்திருந்தார், ஆரோன் தந்தை டோனி டேல்.
அறைக்குள் இருந்த கணவர் வெளியில் வருவார் என்று ஏதன் கிராணி ஈவ்லின் எதிர்ப்பார்க்கவில்லை போலும். சற்றே தடுமாறினார். இருந்தாலும் சடுதியில் சுதாரித்துக்கொண்டவர், துர்காவின் மறுதோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டார்.
“உள்ள வா ஸ்வீட்டி. உன்னை ஒரு நாளைக்குக் கூட்டிக்கொண்டு வருவதாக நேற்றுத்தான் ஏதன் சொன்னவன். இவ்வளவு கெதியாக் கூட்டிக்கொண்டு வருவான் எண்டு நினைக்கேல்ல. ” என்றவர், “ஓ டோனி நீங்களே வந்திட்டிங்களா? ஆர் வந்திருக்கிறது எண்டு பாருங்கோ, இவள் துர்கா. உங்கட செல்லப் பேரன் இவளைத்தான் …” என்றுவிட்டு ஏதனைப் பார்த்தார்.
“நான் சொல்லுறத விட உன்ர கிராண்ட்பாக்கு நீயே உனக்கு இவள் ஆர் எண்டு அறிமுகம் செய்து வை. போ!” என்றவர், பேரன் முதுகில் கை வைத்து டோனி நோக்கித் தள்ளினார். மறக்காது துர்காவைத் தான் பிடித்துக்கொண்டார்.
கிராணியைப் பார்த்தால் அறுபதின் பின்பகுதி என்பார்கள். உண்மையில் அவருக்கு என்பது வயதாகப்போகிறது. கிராண்ட்பாவுக்குமே அதே வயதுதான். இருவருக்கும் பதின்முன்று வயதிலிருந்து அறிமுகம். கணவரின் ஒரு ஒரு சிறு அசைவும் என்ன சொல்லும் மனத்துள் என்ன நினைக்கிறார் என்று சொல்லிவிடுவார், கிராணி.
ஏதன் முதல் நாள் துர்கா மீதான தன் விருப்பைச் சொன்னபோதே, தன் கணவர் அவ்வளவு சுலபமாகத் துர்க்காவை ஏற்கமாட்டார் என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் பேரனுக்குப் பிடித்திருக்கே. பிறகென்ன என்பதே இவர் எண்ணமாக இருந்தது.
மனைவி சொன்னதைக் கேட்டதும் டோனியின் முகத் தசைகள் இறுக்கிப் போயின. பரம்பரை பரம்பரையாக உயர்க் குடிமகன் அவர். சிறந்த கல்வியறிவு கொண்டவர். ஒக்ஸ்வோர்ட் பல்கலையின் பெருமைக்குரிய பழைய மாணவர், கை தேர்ந்த கட்டடக்கலைத் தொழில் வல்லுநர், நல்லதொரு அன்பான கணவன். குடும்பத்தின் கட்டுக்குள் அடங்காது, சீரான வாழ்வுக்கு இது இதை எல்லோரும் கடைப்பிடித்தேயாக வேண்டும் என்று சொல்லப்பட்டவற்றைத் தளைகள் என்று சொல்லி அறுத்தெறிந்துவிட்டு, கரண்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சென்ற ஆரோன் தவிர, மற்றவனுக்குச் சிறந்த தந்தை, பேரன் பேத்திகளுக்கு ஈடுகொடுத்துக் கலகலக்கும் கவனித்துக்கொள்ளும் தாத்தா அவர்.
இப்போது ஒரு சிறு பெண்ணை முறைக்க வைத்துவிட்டான் அவர் செல்லப் பேரன்.
துர்காவைக் கூர்மையான பார்வையால் துளைத்தார். பார்த்த முதல் கணமே அவள் சிடுசிடுப்பைக் கண்டுகொண்டார். பேரனின் அருகண்மையைத் தவிர்க்கும் உடல்மொழியைத் துல்லியமாகக் கவனித்துவிட்டார். தன் பேரனை ஒருத்தி தவிர்கிறாள் என்றால் அவள் எந்த நாட்டு இளவரசியாம்? அப்படியே இருந்தாலும் அவர் பேரன் என்ன சளைத்தவனா என்ன? அவளைப் போய் மனைவி இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்க வேண்டாமே!
அதே கூர்மையோடு பேரனையும் பார்த்தவர், “என்ன இதெல்லாம் ஏதன்? அதுவும் இப்ப உன்ர குடும்பம் இருக்கிற நிலையில நீ என்ன செய்து கொண்டிருக்கிற?” மெல்லிய உடலும் தளர்ந்த தோற்றமுமாக அமர்ந்திருந்தாலும் குடும்பத்தில் அவர் அதிகாரம் எந்தளவு என்பதைக் காட்டுவதாக இருந்தது, அவர் ஏதனைப் பார்த்த பார்வையும் பேசிய விதமும்.
ஏதன் முகம் மாறியது. சட்டென்று துர்காவைத்தான் திரும்பிப் பார்த்தான். யோசிக்கவெல்லாம் இல்லை, பின்னால் எட்டு வைத்தவன் அவள் இடக்கரத்தைப் பற்றி மெதுவாகத் தன் கரத்தினுள் பொத்தி வைத்துக்கொண்டான்.
துர்கா பார்வையும் டோனியில். அந்த மனிதருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றளவுக்கு விளங்காமல் இருக்க அவள் என்ன குழந்தையா? அன்பை யோசியாது வெளிப்படுத்திய இந்தப் பெண்மணியின் கணவரா இவர்?
அதற்குள் இவன் வேறு. ஏதன் கைக்குள்ளிருந்து தன் கரத்தை விடுவிக்க முனைந்தாள். முடியவில்லை. மென்மையாகப் பற்றியது போலிருந்தாலும் அவன் விடும் எண்ணத்தில் இல்லை என்று விளங்கியது. தோளோடு இடித்துக்கொண்டு நின்றவன், நிச்சயம் இது புதுச் சூழல் என்றோ, இவள் தனித்துச் சமாளிக்கவேண்டிய சந்தர்ப்பம் என்றோ உணர்வைத் தரவில்லை. அது விளங்கியும் கடும் முறைப்பைக் கொடுத்தாள்.
“எல்லாப் பக்கம் இருந்தும் அனல் அடிக்குது கிராணி” சின்னக்குரலில் பெரும் கவலையாகச் சொல்வதாக நடித்தான், அவன்.
ஆனாலும் விளையாடும் மனநிலை அவனுக்கும் இல்லை. அதுவே அவளைக் கிட்டத்தட்ட நடப்பித்துக்கொண்டு கிராண்ட்பா முன்னால் சென்று நின்றான். எதிர்க்கவில்லை என்றால் அவள் துர்கா இல்லவே. பயனிருக்கவில்லை.