ஏதனின் இலஞ்சியவள் 17 – 1

கார் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. மாறாக அதனுள் அமர்ந்திருந்த இருவர் மனங்களும் சீராகச் சிந்திக்க இயலாத தடுமாற்றத்தின், தவிப்பின், கோபத்தின், எரிச்சலின் பிடியில் அகப்பட்டுப்போயிருந்தன. 

ஒன்றா இரண்டா எத்தனை தடவைகள் என் பக்க விருப்பை அழுத்தமாகவே சொல்லிவிட்டேன்? இவ்வளவுக்கும் பிறகு என்னை மறுக்க உன்னால் எப்படி முடிந்தது என்ற கோபம் காரைச் செலுத்திக்கொண்டிருந்தவனை ஒரு வழி செய்துகொண்டிருந்தது. அவள் மறுப்பு என்றதை அவனால் சற்றும்  யோசித்துப் பார்க்க இயலவில்லை. அதெப்படி உன்னால் என்னைத் தவிர்க்க, மறுக்க முடியும் என்றதிலேயே அவன் மனம் சிக்குப்பட்டு முடிச்சிட்டு நின்றிட்டு.

அவன் அருகண்மையில், சற்றே அசைந்தால் போதும் அவன்  தோளோடு உரசும் வாய்ப்பிருக்க, அதை உணர்ந்தாள் போலில்லாது அமர்ந்திருந்தாள், துர்க்கா. சொந்த வாகனத்தில் பயணிக்கும் வகையில்தான் அமர்ந்திருந்தாள். வரும்போது போலவே கார் எங்குப் போகிறது என்பது பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஒரு வார்த்தை கேட்கவும் இல்லை.  

அவள் பார்வை நேரே முன்னால் நீண்டு வளைந்து செல்லும் பாதையில் குத்திட்டு நின்றது. மனமோ, பந்தயக் குதிரை வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் என்ன பொம்மையா, அவளுக்கே அவளுக்கென்று உணர்வுகள் இல்லையா? இதுதான் அவளுள் இருந்த பெருங்கேள்வி. அதை ஒரு கணம் கூட அவன் நினைத்துப் பார்த்தது போலில்லையே! அவனில் கோபம் கொள்ள இதுவே முதன்மைக் காரணமாகவும் இருந்தது. அதற்கு முதலே இவள்தான்  எனக்கானவள்  என்று உறவுகளிடம் அறிமுகமே செய்துவிட்டான். சளைக்காது தன்  நிலைபாட்டைச் சொல்லி சொல்லி, அவள் மனத்தைத்  தன் விருப்பிற்கு இசைய வைக்கப் பார்க்கிறானோ! 

அதையும் கடந்து ஒருத்தனால் இப்படிப்  பைத்தியக்காரத்தனமாக நேசிக்கப்படுவது மூச்சு முட்டுவது போல் இருந்தது. அதேவேளை இனிய சுகந்ததையும் சேர்த்தல்லவா இந்த இதயம் சுவாசித்துத் தொலைக்கிறது. 

மதில் மேல் பூனை நிலையில் துர்கா இருந்தாள்.

நொடிகள் நிமிடங்களாகிக் கரைந்து சென்றுகொண்டிருந்தன.  துர்கா கைக்குள் இருந்த கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததன் அறிகுறியாக அதிர்ந்தது. அவளைச் சுற்றத்தை உணர வைத்ததும் அதுதான். அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியேற்றினாள். மெல்லத்  திரும்பி அவனைப் பார்த்தாள்.  

ஏதனோ தாடைகள் இறுக அமர்ந்திருந்தான்.  பார்வையும் பாதையில்தான். 

“இப்படி இறுக்கமா, கோவமா இருக்க வேண்டியது நான்.” என்றவள், எப்படி அவனிடம் தன்னை விளங்கப்படுத்தலாம் என்று யோசித்தாள். மீண்டும் மீண்டும் அவள் மறுப்பதும் அது ஒன்றுமே இல்லை என்ற வகையில் கதைப்பதும் என்றதை நிறுத்தியே ஆக வேண்டும் என்றது அவள் மனம். அதே மனம்தான், ஒரு கணம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, ‘இந்த மனிசனோட என்ர வாழ்க்கை’ என்று யோசித்தும் பார்த்தது. 

அந்த யோசனை அவளுள் ஏற்படுத்திய தாக்கம் இருக்கே! என்னவோ திக்குத் தெரியாத காட்டில், அவிழ்க்கவே முடியாதபடி அவளை முடக்கிவிட்டு பார்வையையும் பறித்துவிட்டு உருட்டிவிட்டது போலுணர்ந்தாள். 

“ஓ கோஷ், என்ர அம்மாளே!” முகத்தை இரு கைகளாலும் துடைத்தபடி முணுமுணுத்தாள். அதுவும் அவன் குடும்பம் என்று ஒன்று இருக்கே. ஆரோனைத் தவிர்த்து அவளுக்கு எவரையும் பார்க்கவே பிடிக்கவில்லை. போனால் போகுதென்று எப்போதும் மிரண்டபடி கண்ணீர் கசிய நிற்பாளே இவன் கடைசித் தங்கை ஏவா, அவள் பரவாயில்லை, பழகிக்கொள்ளலாம். கிராணி   சோ சுவீட்.  ‘மற்றவே நோ சான்ஸ்…’ நினைத்தபடி மீண்டும் பார்வையை அவன் முகத்தில் நிலைக்க விட்டாள்.

சட்டென்று திரும்பிப் பார்த்தான் ஏதன்.  என்ன என்பதாக ஒற்றைப் புருவம் மேலேறி  இறங்கியது. அதுவரை அவனுள்  இருந்த இறுக்கம் வடிவதை அவனால் உணர முடிந்தது. அவன் விழிகளில் வந்த மாற்றம், முகத்தின் இளக்கம் என, அவளால் உணர முடிந்தது. அவளுக்கு  மூச்சு முட்டியது. மீண்டும் ஒருதரம் உன்னை நேசிக்கிறேன் பெண்ணே என்று விடுவானோ என்ற தவிப்பு அவளை ஆட்டுவித்தது. 

“ப்ளீஸ் ஏதன்” என்று ஆரம்பித்தவளுக்கு ஒத்துழையாது  தொண்டை வேறு அடைத்திட்டு. ஏதன் பார்வை மீண்டும் அவளில். இப்போது அதிலிருந்த கூர்மையில்  அவள்தான் பார்வையை விலக்க வேண்டியதாகிற்று. கண்ணீர் வேறு பார்வையை மறைக்கும் வண்ணம் சுரந்து தொலைத்தது.  சுரந்துவிட்ட கண்ணீரை உள்ளே இழுக்கும் வழி தெரியவும் இல்லை. மறுபுறம் திரும்பி வழிந்த கண்ணீரை மேற்கையை உயர்த்தி விரைவாகத் துடைத்துக்கொண்டாள்.  கோபமாக இருந்தது. அவனில் மட்டுமா அவள் மீதும்தான்.

 

error: Alert: Content selection is disabled!!