ஏதனின் இலஞ்சியவள் 20- 2

 

அவர் மகன்மார் சண்டையிட்டுக்கொள்கிறார்களா?  சிறுவயதில் கூட இப்படியொரு காட்சியை அவர் கண்டதில்லையே! 

 

“ஓ கோட்!” ஓடிவந்து ஏதன் கரத்தை ஐவன் கழுத்திலிருந்து எடுக்க முயன்றார்.

 

“ ஏதன், ஆர் யூ மேட்?” ஏதனை விலக்கும் சக்தியின்றித் தவித்தார். அதுவே யோசிக்க விடவில்லை. நிதானம் தப்ப வைத்தது. அவரையும் அறியாதே அவன் கன்னத்தில் பளார் என்று இழுத்துவிட்டார்.

 

அப்போதுதான் ஏதன் கோபாக்கினி, வெறி கட்டுக்குள் வந்தது. சோஃபியாவுக்கு தான் செய்த செயல் உறைத்தது.

 

 “ஏதன்!” தழுதழுத்தபடி அவனை நெருங்கினார், சோஃபியா. அவனோ, சகோதரனை உதறியவன் தாயை எரி பார்வை பார்த்தான்.

 

“என்ன பார்வை இது , அதுவும் என்னை?” கண்ணீரோடு கேட்டவர், அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார். “ இது என்ன இடம், உங்கட டாட் என்ன நிலையில் இருக்கிறார்?  நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை செய்துகொண்டு நிக்கிறீங்க? ரெண்டு நாளா குடும்பப் பெயர் நாறுது. அது போதாதா உங்களுக்கு? இதுவும் சேரோணுமா?” கண்ணீரோடு கேட்டவர் விக்கியழுதார்.

 

அவரைத் தேற்றவும் வராது கோபத்தோடு பார்த்து நின்றான், ஏதன். “உன்னட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கேல்ல ஏதன். இட்ஸ் ரியலி பெயினிங்.” சின்ன மகனைக் குற்றம் சாட்டினார். தன் நெஞ்சை நீவிக்கொண்டார்.

 

“நானும்தான் எதிர்பார்க்கேல்ல.” ஏதன் கோபச் சீறல்  தாயும் இதில் கூட்டோ என்ற சந்தேகத்தோடு சோஃபியாவை உற்றுப் பார்த்தது.

 

நெற்றி சுருக்கினார், சோஃபியா. ஐவனுக்கு இன்னமும் ஒன்றும் விளங்கவில்லை. வந்தான், அடித்தான், கழுத்தை நெரித்தான். கொலையாம் அதாம் இதாம். என்னவாம் இவனுக்கு. தொண்டயைச் செருமிக்கொண்டு வாயை திறக்க முயன்றான். 

 

“ஒண்டுமே தெரியாதது போல நடிக்கிறான் பாருங்க. துர்க்கா வந்து நிண்ட நேரம் இவன் கோவத்தில கதைக்கிறான்  எண்டுதான் நினைச்சனான். ஆனால் அப்பிடி இல்லை எண்டு இப்பதான் விளங்குது. இப்ப இந்தக் கணம் இவன் என்ர சகோதரன் எண்டு சொல்லவே வெக்கப்படுறன்.” கொதிநிலை அடங்காத ஏதன் தாயைக் கோபமாகப் பார்த்தான். 

 

“உங்கட மகன்ட கன்னத்தில ஒரு அறை குடுத்ததுக்கே இந்தளவுக்குத் துடிக்கிறீங்க மோம், அவன் என்னையும் சேர்த்து நாலு கொலை செய்ய ஆள் அனுப்பி இருக்கிறான். உங்களுக்கும் தெரிஞ்சு நடந்ததா இது?” கூர் பார்வையோடு கேட்டதில் உச்சபட்சமாக அதிர்ந்தார், சோஃபி.

 

“ஏதன் என்ன கதை இது? அதுவும் என்னைப் பாத்து இப்பிடிக் கேட்கிறியே.” வருத்தமும் கண்ணீருமாகக் கேட்டவரைச்   சந்தேகம் விலகாது பார்த்து நின்றான், ஏதன்.

 

“நீங்களும் சேர்ந்தா கொலை செய்ய ஆள் அனுப்பினீங்க மோம்? என்ர மோம்  இந்தளவுக்குப் போவா எண்டு உண்மையா நான் நினைக்கேல்ல. வேர்த் ஒலிவியாக்கு முன்னால எந்தளவுக்குச் சிறுத்துப் போனன் தெரியுமா? சரியான அவமானமா இருக்கு. எல்லாம் சொத்துக்காகத் தானே? எனக்கு எண்டு அப்பாட சொத்தில ஒரு பெனி வேணாம். அதையும் நீயே எடு. இனிமேலும் இப்பிடித் தரம்   தாழ்ந்து வேல செய்யாதீங்க.” என்றவன், கசிந்த விழிநீரை இரு கைகளாலும் அழுந்தத் துடைத்தபடி சுவரோடு சாய்ந்து கொண்டான். 

 

ஏதன் கதைக்க கதைக்க ஒன்றும் விளங்காது விழித்து நின்ற சோஃபியா, கடைசியில்  சப்பென்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தார்.

 

“என்ன எல்லாம் கதைக்கிற நீ ? இந்தளவுக்குக் கீழ்த்தரமா எங்கள நினைக்க உன்னால எப்பிடி ஏலுமா இருக்குது? நீ சொல்லுறது போல ஒரு வேலைய ஐவன் ஒருநாளும் செய்யவே மாட்டான். உங்கட அப்பா இருக்கிற நிலையென்ன, புதுசு புதுசா  நீங்க அடிக்கிற கூத்து என்ன? ” சீறினார்.

 

“என்ன நடந்தது எண்டு விரிவாச் சொல்லாமல் கொள்ளாமல் கை வைப்பியா நீ? நீ சொல்லுறது போல ஒரு வேலை நான் செய்யேல்ல. இப்ப சொல்லு என்ன நடந்தது? ஒலிவியா வேர்த் சேஃப் தானே?” கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தபடி, தாயையும் அணைத்துப் பிடித்துக்கொண்டு, வீட்டின் பெரியவனாகக் கேட்டான், ஐவன். 

 

பதில் சொல்லாது இருவரையும் முறைப்போடு ஆராய்ந்தான், ஏதன். அவர்களில் கள்ளத்தனமோ தடுமாற்றமோ இல்லை. அப்போ இவர்கள் இல்லை என்றால் யார்? 

மனத்துள் வந்த கலவரத்தைக் காட்டாது நடந்ததைச் சொன்னான்.

 

கேட்டவர்களுக்கும் அதிர்வுதான். யார் இதைச் செய்திருப்பார்கள், முதல் எதற்கு? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை சோஃபியாவுக்கு. “உனக்கு ஒண்ணும் இல்லையே?” பதற்றமாக மகனை ஆராய்ந்தார். 

 

“இவ்வளவு பிரச்சினைகளுக்க நேற்று நீ அந்த ஏசியன் கேர்ளை கிராணி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போயிருக்கிற. காதலிக்கிறதாச் சொன்னியாமே!  அது சரிவராது ஏதன், விலத்தி விட்டிரு. பிறகு தேவையில்லாமல் அந்தப் பிள்ளைதான் கரைச்சல் படும். ஆறு மாதங்களுக்குப் படிக்க வந்த இடத்தில அவளுக்கு என்ன இதெல்லாம் விளையாட்டோ? வந்த வேலையைப் பாத்திட்டுப் போகச் சொல்லு. நீங்க உங்களுக்க பிரச்சினைப்படாமல்  இருந்தா எதையும் எதிர்கொள்ளலாம்.” மகன்கள் முகம் வருடிச் சொன்னார். 

 

ஏதன் நெற்றி சுருங்கியது. 

 

“எங்களுக்க என்ன பிரச்சினை  மோம்? இவன்ட இப்பிடியான கற்பனைக்குளுக்கு, நிதானமில்லாமல் நடக்கிறதுக்கு எல்லாம்  நான் பதில் சொல்ல ஏலாது.” சகோதரனை முறைத்தான் ஐவன். 

 

“உண்மையா எனக்கு அந்த ஒலிவியாட  முகம் பாக்கவே பிடிக்கேல்ல. எங்கட டாட் எங்களுக்கு மட்டும்தான். டாட் எண்ட  வார்த்தை அவள் வாயில இருந்து வரக்கூடாது . இப்பவும் அதில மாற்றம் இல்ல. ஆனால் அண்டைக்கு நான் கதைச்சது கோபத்தில. நான் இப்பிடியான வேலைகள் செய்யிற ஆளா?” சகோதரனைப் பார்த்து வருத்தமாகக் கேட்டான். அதே கையோடு   காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் தன்  நண்பனுக்கு அழைத்தான்.

 

துர்க்கா விடயமாகத்  தாயோடு ஒரு வார்த்தையும் ஏதன் கதைக்கவில்லை. அவன் மனத்துள் யார் இந்த வேலை பார்த்தது என்கிறதே ஓடிக்கொண்டிருந்தது. 

 

“ஒரு மணித்தியாலம் …இல்ல ஒன்றரை  மணித்தியாலத்தில ஒலிவியாவ கூட்டிக்கொண்டு வருவன். “ எங்கு செல்கிறாய் என்று கேட்ட சோஃபியாவுக்குப் பதில் சொல்லாது வெளியேறினான்.

 

error: Alert: Content selection is disabled!!