மையல் மீளுதே மேகவியே – 30

மையல் 30

“பொண்டாட்டி ப்ளீஸ்.. நாம போகலேனா நல்லா இருக்காது. எல்லாரும் வருத்தப் படுவாங்க இல்ல? என்னோட அம்மா வேற பாவம், உடம்பு சரி இல்லாதவங்க. மகனைப் பார்க்கணும்னு கூப்பிடுறாங்க. ஊருக்குப் போயிட்டு வருவோமே?” என சிறுபிள்ளை போல் கையைப் பிடித்துக் கெஞ்சிய கணவனைக் கண்டு இதயம் ஏறுக்கு மாறாய் துடித்துக் கொண்டிருந்தது மேகவிக்கு.

ஒரு வார மௌனப் போராட்டம் கலைந்த பின்னர், சற்றும் இடைவெளி கொடாது இப்படித்தான் மனைவியை ஒட்டிக் கொண்டு சுற்றி வருகிறான் சத்தி.

பேசியே மனதைக் கரைக்கும் திறன் பெற்றவன், தற்போது நெருக்கத்தைக் கூட்டி மையல் கொள்ளத் தூண்டினான். அதனை வெளிப்படுத்த இயலாது, உள்ளுக்குள் ரசித்து, மெல்ல உயிர் பறிக்கும் காதல் கூண்டிற்குள் தானே அறியாது சிக்கிக் கொண்டாள் பாவை.

கூடத்தில் இருந்த இருக்கையில் அவள் அமர்ந்திருக்க, மனைவியின் கால்களிற்கு அண்மையில் கீழே உட்கார்ந்து, முழங்காலின் மீது ஒரு பக்க கன்னத்தைப் பதித்து இருந்தான் அவன்.

‘சட்டென்று எழுந்து சென்றுவிடக் கூடாதே? அப்படியே சென்றாலும், வெகு அருகில் இருப்பதால் உடனே தடுத்துப் பிடித்துக் கொள்ளலாம்!’ என்பதற்காக இச்செயல்.

இருவருக்குமான முதல் வாக்கு வாதத்திற்குப் பின் வந்த சமாதானம். அவள்‌ இயல்பாகவே இருக்க, ஆடவனது செயல்களும் உணர்வுகளும் அதீதமாய் வெளிப்பட்டன. தற்போதைய நெருக்கம் போல்.

அவனோடு ஒன்றவும் இயலாது விலகிச் செல்லவும் முடியாது, இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தவள், “நான் உன்னைப் போக வேணாம்னு ஒன்னும் சொல்லலையே? உங்க அம்மாவை, நீ போய் பாத்துட்டு வா. என்னால வர முடியாது.”

“மாமியார் மேல பாசம் இல்லாம பேசாத பொண்டாட்டி. நல்ல மருமகளுக்கு அழகில்ல இது!”

“ஹோ.. வேற எது அழகு மிஸ்டர் சன் ஆஃப் புஷ்பவதி.”

“புருஷனுக்காக அப்பப்ப ஏதாவது செய்யணும்.”

“ஓஹோ.! நீ செஞ்ச வேலைக்கு, உன்னை வீட்டை விட்டு துரத்தாம இருக்கேனே? இதுவே என்னைப் பொறுத்த வரை பெரிய கருணை தான்.”

“நீ இருக்கும் போது, நான் மட்டும் தனியா போய் என்னோட தங்கச்சி விசேஷத்துக்கு நின்னா உன் புருஷனோட மரியாதை என்ன ஆகுறது?”

“என்ன ஆகும்னு நினைக்கிற?”

“பொண்டாட்டி.. ம்ம்.. க்கும்ம்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. என் செல்லம்ல?”

“கொஞ்சமாவது வளர்ந்த ஆம்பளை மாதிரி நடந்துக்கிறியா? சின்னப் பையன் போல காலுக்கிட்ட உட்கார்ந்து இப்படி என்னை இம்சை பண்ணிக்கிட்டு இருக்க.? எழுந்திரி முதல்ல!”

அண்ணார்ந்து மனைவியின் முகத்தைப் பாவமாய் பார்த்தவன், “என்ன பொண்டாட்டி இப்படிச் சொல்லிட்ட? சரி, உன்னை நான் சின்னப் பிள்ள மாதிரி டிஸ்டர்ப் பண்ணல!” என்றவாறே எழுந்து, “அப்ப, வளர்ந்த ஆம்பளையா நடந்துக்கவா?” எனக் கெஞ்சலில் இருந்து கொஞ்சலுக்குத் தாவினான்.

“என்ன செய்யிற நீ!” என்ற மேகவி எழுந்து செல்ல முயல அதற்கு அனுமதியாது, மனைவியின் இரு பக்கமும் தனது கரங்களை வைத்து நெற்றியில் மூக்கு உரசும்படி மேலே சரிந்தான்.

“கீர்த்தி, திஸ் இஸ் தி லிமிட்..” என எச்சரிக்க, “ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ஃபுக்குள்ள லிமிட்னு ஒன்னு இருக்கா என்ன?‌” என்றவனின் இதழ்கள் அவளின் கன்னத்தில் பதிந்தது.

“நீ செஞ்ச வேலைக்கு நான் இன்னும் உன்னை மன்னிக்கவே இல்ல.” என அவனது உமிழ்நீர் பட்ட இடத்தைத் துடைத்துக் கொள்ள, “அவசரம் இல்ல. உனக்குத் தோணும் போது மன்னிச்சி விடு! நான் வெயிட் பண்ணுறேன்.” என்று அவள் துடைத்ததால் மீண்டும் ஒற்றி அப்படியே கீழ் இறங்கிக் கழுத்திற்குப் பயணித்தான்.

“எப்படி உன்னால இப்படிப் பேச முடியிது? ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சனை இருக்கும் போது, கொஞ்சம் கூட மான ரோஷமே இல்லாம என்கிட்ட இப்படி வேற..” என்று முழுதாய் உரைக்காமல் பாதியில் நிறுத்த, “எப்படி.?” என‌ வினவிய படியே முகம் பார்த்தான்.

“ஒரு உண்மைமையைச் சொல்லவா? இந்த மனசுக்கும் ஆசைக்கும் சம்பந்தமே இல்ல. மனசு, ஸ்டேண்டர்டான ஒன்னைக் கன்ஃபர்மேஷனோட கேட்கும். ஆனா ஆசை‌‌.. எதிர்ல இருந்தா போதும், தேவை இருக்கிற‌ பட்சத்துல எடுத்துக்கும். இந்த நிமிஷம் எனக்கும் உனக்குமான வித்தியாசம் இதுதான். நீ, நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி உறவுக்கு ஆப்டடா இருக்கணும்னு நினைக்கிற. உனக்குத் தேவையானது நம்பிக்கையும் உறுதியும்.

நான்.. நாம கப்பில்ஸ் தான, எப்படி இருந்தா என்னனு நினைக்கிறேன். எனக்கு அன்பும் அக்கறையும் போதும்னு தோணுது. நீ நம்ம உறவை கடமையால கட்டமைக்கப் பார்க்கிற! நான் காதலால அழகுபடுத்த டிரை பண்ணுறேன். அவ்வளவு தான் டிஃபரெண்ட்ஸ்.

என்ன தான் நம்பிக்கையும் உறுதியும் இருந்தாலும் கொஞ்சமா காதலும் கள்ளமும் இல்லாம போனா, ஒரு கட்டத்துல அந்த ரிலேஷன்ஸிப் நீர்த்துப் போயிடும்.

உனக்கு என்மேல இருக்கிற கோபம் முழுசா போகணும்னு எல்லாம் அவசியம் இல்ல. அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டுப் போகுது. அதுக்காக எப்பவும் நமக்கு இடையில டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ண வேண்டாம். முதல்ல இருந்த மாதிரியே இருக்க டிரை பண்ணுவோம். ஏதாவது ஒரு தருணத்துல இல்லேனா ஆர்கியூமெண்ட்ல தானா அது வெளிப்பட்டு அப்படியே மறஞ்சும் போயிடும்.

வாழ்க்கையை அது போக்குல வாழப் பழகு பொண்டாட்டி. இப்படி இருக்கணும்னு டிசைன் பண்ண நினைக்காத. ஒருவேளை நீ விருப்பப்படுற மாதிரி அது அமையலேனா, வருத்தப்படப் போறதும் நீதான்!

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.‌ அதுக்கான வாய்ப்பு கிடைக்கல இதுவரை. நான்‌, நம்ம ஏஜ் டிஃபரெண்ட்ஸை மறைக்க நினைக்கல. நேரம் பார்த்து சொல்லணும்னு இருந்தேன். அன்னைக்கு தாரிகா சிஸ்டர் கேட்டப்ப, பொய் சொல்லி இருக்க முடியும். ஆனா, நான் சொல்லல. ஏன்னு தெரியுமா.?”

அவள் ‘ஏன்‌?’ என்பது போல் பார்வையாலேயே வினவ, “நீ என்னை நேர்மையானவன்னு நம்பின இல்ல? அந்த நம்பிக்கையை பொய்யாக்குறதுல விருப்பம் இல்ல எனக்கு. அதான் உன்னை ஃபேஸ் பண்ணிக்கலாம்னு, உண்மையைச் சொல்லிட்டேன்.”

“ஹோ..” என்றவள் ஒரு மெலிதான பெருமூச்சை விட, “என்ன ஆச்சு.?”

“ஒன்னும் இல்ல.”

“பொண்டாட்டி, நீ இன்னும் கொஞ்சம் கூட என்னை நம்புறதுக்கு ட்ரை பண்ணலாம். நிச்சயம் நான் ஏமாத்த மாட்டேன்.”

அவள் சின்னதாய் சிரித்திட, “ஊருக்குப் போகலாமா?”

“ம்ம்.”

மனைவியை வியப்புடன் நோக்கியவன், “நிஜமாவா?”

“எஸ். மிஸ்டர் கீர்த்தி. டிக்கெட் புக் பண்ணுங்க. போயிட்டு வரலாம். நான் ஒர்க் ஃப்ரம் ஹோம் போட்டுக்கிறேன்.”

“பாருடா! என் பொண்டாட்டி, என் பேச்சை எல்லாம் கேட்கிறா?”

“உனக்காக இல்ல. அத்தை மாமாக்காக! ரொம்ப சந்தோஷப் பட்டுக்காத, என்ன?”

“சோ சேட்!” எனப் போலியாய் வருத்தம் கொண்டவன், “யாருக்காக ஓகே சொன்னா என்ன? ஊருக்குப் போறோம், அவ்வளவு தான்!” என்று சற்றே மகிழ்ச்சியுடன் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றான்.

தாரிகாவிடம் விடைபெற, “அப்பாடி! ஒரு வழியா சமாதானம் ஆகிட்டீங்களா? இந்த மாதிரி சின்னச் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்ட் வர்றது நார்மல் தான். அதை முடிஞ்ச அளவு சீக்கிரமா பேசி சரி செஞ்சிடுங்க‌. இல்லேனா கடைசி வரைக்கும் ஒருத்தர்கிட்ட ஒருத்தர் பொய்யா தான் நடிக்க வேண்டியது இருக்கும். அது உங்க ரெண்டு பேருக்குமே செட்டாகாது.” என அறிவுரை தந்து வழியனுப்பி வைத்தாள்.

இருவரும் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தனர். மேகவி ஜன்னலின் வழியே நடைமேடையில் பார்வையைப் பதித்தபடி இருக்க, “பொண்டாட்டி, வாட்டர்.?” என்று அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான் சத்தி.

ஆடவனது பேச்சில்‍, ஓரிருவரின் பார்வை இவர்களின் மீது சில நொடிகள் பதிந்து விலகியது.

அதைக் கவனித்தவள், “வெளிய வரும் போது, இப்படி பொண்டாட்டினு கூப்பிடுறதைக் கொஞ்சம் நிறுத்துறியா ப்ளீஸ்.?”

“ஏன்.?”

“சுத்தி இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க.?”

“இதுல அவங்க நினைக்க என்ன இருக்கு? பொண்டாட்டியைப் பொண்டாட்டினு தான் கூப்பிட முடியும்? நான் தப்பா எதுவும் சொல்லலையே? சொல்லப் போனா நான்தான் கரெக்டான உறவு முறையை சொல்லிக் கூப்பிடுறேன்.”

உண்மைதான், சரியாய் அழைக்கிறான் அவன். அதை தவறு என்றோ குறையாகவோ உரைக்க இயலாது. ஆனால் அவளுக்குத்தான் கணவனது ஒவ்வொரு அழைப்பின் பொழுதும், எவரேனும் ஒருவர் அவர்களை திரும்பிப் பார்த்து விட்டு செல்வது சற்றே அசௌகர்யமாய் இருந்தது.

மற்றவர்களிற்கு இது புதிதாய் தோன்றியது போலும்!

‘நீ, எப்ப இருந்து மத்தவங்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்ச? இதுவரைக்கும் உனக்கு தோணுறதைத் தான செஞ்சுக்கிட்டு இருந்த? அப்படி இருக்கும் போது, கீர்த்தியை மட்டும் அவரோட பழக்கத்தை மாத்திக்க சொல்லுறது எந்த விதத்துல நியாயம்? ஏன், அவன் பொண்டாட்டினு கூப்பிடுறது பிடிக்கலயா உனக்கு?’ என சிந்தையானது வினா எழுப்பிட, ‘வேற யாரும் தேவை இல்லை எனக்குள்ள இருக்க அந்த நியாயவாதியே போதும், என்னை ஆஃப் பண்றதுக்கு!’ என்று அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டாள்.

“தண்ணி வேணாமா?” என நீர் பாட்டிலை அவன் கண்களால் காட்டி வினவ, “தேங்க்ஸ்!” என்று வாங்கி இருமிடறு அருந்தினாள்.

அறிந்தவை தெரிந்தவைகளைப் பற்றிப் பேசியபடியே பயணத்தை முடித்து, வீடு வந்து சேர்ந்தனர்.

நேராய் சத்தியின் இல்லத்திற்குத் தான் வந்திருந்தனர். சூழலில் விழாக் கோலம் இணைந்திருந்தது. தாலி கோர்க்கும் வைபவத்தை, இங்கேயே வைத்து செய்வதாய் ஏற்பாடு. மேகவியின் பிறந்த வீட்டினர், இங்கு வருவதாய் பேசி இருந்தனர்.

“பிரயாணம் செஞ்சு வந்தது சோர்வா இருக்கும். போயி ரெஸ்ட் எடுங்க. அப்பதான் நாளைக்கு ஃபங்க்ஷன்ல அலுப்பு தெரியாம இருக்கும்!” என ஓய்வெடுக்க மகனையும் மருமகளையும் அனுப்பினார் புஷ்பவதி.

நேரத்திற்கு உணவு தயாராகி, இவர்களிற்கு அழைப்பு வந்தது. உண்பதற்காக மட்டுமே அறையில் இருந்து வெளியே வந்து சென்றனர்.

அன்றைய தினம் இருவருக்கும் பெரியதாய் வேலை என்று எதுவும் இல்லை. மூத்தவர்களே அனைத்தையும் செய்து விட்டனர். அவரவர் மடிக்கணினியில் அலுவலக பணியை மட்டுமே கவனித்தனர்.

“ரெண்டு பேரையும் ரெஸ்ட் எடுக்கச் சொன்னா, லேப்டாப்பைத் தூக்கி வச்சு உட்கார்ந்து இருக்கீங்க?‌” என்று கதிரவன் வினா எழுப்பிட, “நாம நினைச்ச உடனே எல்லாம் லீவ் எடுத்திட முடியாது மாமா. வேலையை வீட்டுல இருந்தே முடிச்சுத் தர்றேன்னு சொல்லி தான் பர்மிஷன் கேட்டிருக்கேன்!” என விளக்கம் அளித்தாள் மேகவி.

அடுத்ததாய் மகனைப் பார்க்க, “இங்கேயும் அதேதான். பிரமோஷன் கிடைக்கிற டைம்ல இப்படி நாள் கணக்குல எல்லாம் லீவ் போட முடியாது. கவலைப்படாதீங்க அப்பா, ஃபங்ஷனுக்கு நானும் உங்க மருமகளும் ஃப்ரெஷ்ஷா ரெடி ஆகிடுவோம். நாளைக்கு டிஸ்டபன்ஸ் இல்லாம இருக்கணும் இல்ல, அதுக்காக தான் இன்னைக்கு வேலையைப் பார்த்தோம்.”

“என்னமோ ப்பா, உடம்பையும் பார்த்துக்கோங்க. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!‌” என்றிட, இருவரும் ஒன்று போல் தலை அசைத்தனர்.

error: Alert: Content selection is disabled!!