மையல் மீளுதே மேகவியே – 32

மையல் 32

விழாவிற்கான விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. உறவுகள் என்று எவரையும் அழைக்காது குடும்பத்தார் மட்டுமே சுபநிகழ்வில் கலந்து கொண்டதால், வீட்டிலேயே சமைத்து விடலாம் என உரைத்து இருந்தார் கனகவள்ளி.

காலை உணவாய் இட்லியும் இரண்டு வகை சட்னிகளும் மட்டும் தயாரானது. புஷ்பவதி முதல்நாள் மாவை மட்டும் அரைத்து வைக்க, காலையில் கதிரவனும் சத்தியும் ஆளிற்கு ஒரு சட்னி செய்ய, இட்லியை வேக வைத்து எடுத்தாள் மேகவி.

மதிய நேரப் பணியை ஷீலாவும் பிரார்த்தனாவும் பொறுப்பேற்றுக் கொள்ள, மற்ற அனைவரும் வெங்காயம் உரிப்பது முதல் தேங்காய் துருவுவது வரை ஆளிற்கு ஒன்றை செய்து உதவினர்.

வெண்டைக்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக் கொண்டிருந்த சத்தி, “மாம்ஸ், சமைக்கத் தெரியுமா?” என்று வினவினான் சாகரனிடம்.

“சாப்பிட வேணும்னா தெரியும். சமையலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் மாப்ள. கல்யாணத்துக்கு முன்னாடி அடுப்பைக் கூட பத்த வைக்கத் தெரியாது.”

“ஓ.. சரி, இப்ப எப்படி?”

“உன் தங்கச்சி புண்ணியத்துல டீ, காஃபி போட கத்துக்கிட்டேன். தோசையும் ஆம்லெட்டும் ஒரு தடவை டிரைப் பண்ணேன். அதை இன்னும் முழுசா பழகல.”

“அதெப்படி அண்ணனும் தங்கச்சியும்‌ ஒன்னுபோல இருக்கீங்க?” என வினவிட, தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தான் சாகரன்.

மடிக்கணினியில் பணி செய்து கொண்டிருந்த அவளும் மூத்தவனைப் பார்க்க, “அதுசரி! தினமும் ஹோட்டல் சாப்பாடு தானா? ஏய் கவி, இன்னுமா நீ சமைக்கப் பழகல?” என்று தோழியிடம் வினவினாள் சிந்தாமணி.

“கீர்த்திக்குத் தெரியுமே? நான் வேற எதுக்குப் பழகணும்.? ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லனு சாப்பிட விட மாட்டான். மேக்ஸிமம் ஹோம் ஃபுட்தான். அவன் சமைப்பான், நான் ஹெல்ப் பண்ணுவேன்.” எனப் பதில் உரைத்தவளை, “அதென்ன புருஷனை அவன் இவன்னு கூப்பிடுற? வாங்க போங்கனு சொல்லிப் பழகு!” என்று பெயர்த்தியை அதட்டினார் கனகவள்ளி.

“அப்பத்தா, வயசு அதிகமா இருக்க அண்ணனையே வா போனு தான் பேசுறேன். இவன் என்னைக் காட்டிலும்..” என பேசிக் கொண்டே வந்தவள் சட்டென்று நிறுத்திட, “அண்ணன்ற உறவும் புருஷன்ற உறவும் ஒன்னா? இங்க மரியாதை வயசுக்கானது இல்ல. முறைனு ஒன்னு இருக்கு இல்ல.?” என்றார் மூத்தவர்.

“எனக்கும் அவனுக்கும் ஒரே வயசா, அதான் வாங்க போங்கனு சொல்ல வாய் வரமாட்டிது. ”

“இதெல்லாம் ஒரு காரணமா?”

“அப்பத்தா..” என அவள் பல்லைக் கடிக்க, “விடுங்கம்மா. நம்ம காலம் வேற, இப்ப இருக்கிற காலக் கட்டங்கள் வேற. பிள்ளைக அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்திட்டுப் போகட்டுமே?” என்று கனக வள்ளியிடம் சமாதானமாய் உரைத்தார் கதிரவன்.

இல்லத்தில் லேசான சிரிப்பலை எழ, மேகவியின் அருகே வந்து முழங்கையில் சுரண்டினாள் சிந்தாமணி.

தோழியின் பக்கம் திரும்பியவள், “என்ன‍?” எனக் குரல் தாழ்த்தி வினவ, “எப்படி ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தீங்க?”

“ஏன் கேட்கிற?”

“நீ இருந்த மனநிலைக்கும் பேசுன பேச்சுக்கும், மாறவே மாட்டனு இல்ல நினைச்சேன்?”

சின்னதாய்ச் சிரித்தவள், “இப்பவும் அப்படியே தான் இருக்கேன். நான் மாறலயே?”

புரியாது பார்த்த மணி, “ஓ.. அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்ததுக்கு, வேற என்ன பேராம்?”

“என் லைஃபைத் தூக்கி அவன்கிட்ட ஒன்னும் கொடுக்கல. என்ன செய்யணும் செய்யக் கூடாதுங்கிறதை நான்தான் முடிவெடுக்கிறேன். அவனை ஹஸ்பெண்டா யூஸ் பண்ணிக்கச் சொல்லி கேட்டான். யூஸ் பண்ணிக்கிட்டேன், அவ்வளவு தான்.”

“ஏது, யூஸ் பண்ணிக்கிறியா?”

‘நமக்குனு ஒரு அடிமை சிக்கும் போது எதுக்கு விடுவானேன்?”

“ஓஹோ.. அப்ப, உனக்கு அவரைப் பிடிக்கல‍. அப்படித்தான?”

“நான் எப்ப அப்படிச் சொன்னேன்? எனக்குக் கீர்த்தியை பிடிச்சிருக்கு. சோ, ஐ யூஸ் ஹிம்‌.”

“நல்ல விளக்கம்! யாரும் உன்னை மாதிரி புருஷனுக்கு சர்டிஃபிகேட் கொடுக்க மாட்டாங்க!” என்று கேலியாய் உரைத்து சிரித்திட, மேகவியும் கணவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு புன்னகைத்தாள்.

பேச்சின் இடையே உணவு தயாராகி இருந்தது‌.

அனைவரும் ஒன்றாய் உணவை முடிக்க, பெரியவர்கள் அயர்வின் காரணமாக, ஓய்வெடுக்கச் சென்றனர். சிந்தாமணியும் அவளின் இல்லத்திற்குக் கிளம்ப, சாகரன் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று விட்டு வந்தான்.

கூடத்தில் தொலைக்காட்சி மதிய நேர செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்க, சத்தியும் பிரார்த்தனாவும் அதை பார்த்து இருந்தனர். மேகவி அவளின் அலுவலகப் பணியினைக் கவனித்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த மூத்தவன், “என்ன ரெஸ்ட் எடுக்கலயா? மூனு பேரும் அப்படியே உட்கார்ந்துட்டீங்க?” என வினவ, “என் பொண்டாட்டிக்கு வேலை இருக்காம் அவளை விட்டுட்டு நான் எப்படிப் போறது? உங்க வொய்ஃப், உங்களுக்காக வெயிட்டிங் மாம்ஸ்.” என்று பதில் தந்தான் சத்தி.

மெலிதாய் சிரித்தவன் மனைவியின் அருகே சென்று அமர, “எப்படிப் போகுது மாம்ஸ், மேரேஜ் லைஃப் எல்லாம்?”

“ம்ம்.. சூப்பரா போகுது.”

“சூப்பரா போனா‍, இந்நேரத்துக்கு குட் நியூஸ் வந்திருக்கணுமே.?” எனத் தங்கையிடம் வினவ‍, “நீயும் அண்ணியும் கூட சமாதானம் ஆகிட்டீங்க தான? அப்புறம் ஏன் அங்க இருந்து இன்னும் எந்த நியூஸும் வராம இருக்கு?”

“ம்ம்.. லாஜிக் கரெக்ட் தான். நாங்க குழந்தையைப் பத்தி இப்ப எதுவும் யோசிக்கல. அதுவும் இல்லாம நான் மாம்ஸை விடச் சின்னப்பையன் தான?” என சத்தி சமாதானம் உரைக்க, “இதுக்கு எல்லாமா வயசு பார்க்கணும்.?” என்றான் சாகரன்.

“பார்க்கணும் மாம்ஸ். முதல்ல நீங்க குழந்தைப் பெத்துக்கிட்டா, நீங்க அதை வளர்க்கிறதைப் பார்த்து நான் கத்துப்பேன். அப்புறம் என் பிள்ளையை அந்த எக்ஸ்பீரியன்ஸோட பார்த்துக்கலாம்.”

மேகவி கணவனின் பேச்சைக் கேட்டுச் சிரிப்புடன் வேலையைப் பார்க்க, “நல்ல பிளான்டா மாப்ள!” எனத் தங்கையின் கணவனிற்கு சான்றிதழ் வழங்கினான் மாமனானவன்.

எத்தருணம் என்று தெரியாது இனிமேல் வருகை தரப்போகும் குழந்தையைப் பற்றிய பேச்சில் சிறிது நேரம் செல்ல, “மாம்ஸ், உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். கேட்கவா?” என்றான் சத்தி.

“என்ன, கேளு!”

“நீங்க காலேஜ் டேஸ்ல ஒரு பொண்ணை லவ் பண்ணதா என் காதுக்கு நியூஸ் வந்துச்சு, உண்மையா.?”

இரு பெண்களும் ஆடவனைத் திகைப்புடன் பார்க்க, “உனக்கும் தெரிஞ்சிடுச்சா?” எனச் சிரித்தான் சாகரன்.

“என்ன மாம்ஸ் சிரிக்கிறீங்க.?”

“அப்புறம் இப்படி காமெடி பண்ணா, சிரிக்காம என்ன செய்யிவாங்களாம்.?”

பிரார்த்தனா கணவனின் கைப்பற்றி, “காமெடியா.?”

“பின்ன.?”

“அப்ப, அது நிஜம் இல்லையா.?”

“ஹேய்.. நீயும் அதை உண்மைனு நம்பிக்கிட்டு இருக்கியா.?”

“என்னங்க சொல்லுறீங்க?”

“என் லைஃப்ல நான் முதன் முதலா லவ் பண்ண பொண்ணு நீதான். முதல் மட்டும் இல்ல, கடைசியும் நீயா தான் இருப்ப!”

மேகவி தமையனைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, சத்தி மனைவியின் முக மாற்றத்தைக் கவனித்தான்.

“அப்ப, சந்தியா யாரு மாம்ஸ்..?” என அவன் வினவிட, “என்னோட ஃப்ரெண்டுடா.”

“ஃப்ரெண்டா? இதுவரை நீங்க சொன்னதே இல்ல.” என தனா கேட்க, “எப்பவாவது பேசுறதோட சரி. இப்ப யூ.எஸ்ல இருக்கா. அவளுக்கு ரெண்டு பசங்க. நம்ம மேரேஜ் இன்விடேஷனைக் கூட செண்ட் பண்ணி இருந்தேன். இந்தியா வரும் போது, வந்து நம்மளை மீட் பண்ணுறேனு சொன்னா‌. ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் வேற‌. சோ, வேலை பிஸியில நான் அவளைப் பத்தி உன்கிட்ட ஷேர் பண்ண மறந்துட்டேன்.”

“காலேஜ் டைம்ல, நீ அப்ப சந்தியாவை லவ் பண்ணலயா அண்ணா.?‌‌” என்று இம்முறை மேகவியே தமையனிடம் நேரடியாய் வினவினாள்.

“பாப்பா, நீயுமா அப்படி நினைச்சுட்டு இருக்க?”

“ப்ச்ச்.. நீ, முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு‌.”

“இல்ல பாப்பா‍, அவ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும்‌ தான்.‌”

“பொய் சொல்லாத. நீ எழுதி வச்சிருந்த லவ் லெட்டர்ஸ் கவிதை எல்லாம் நான் பார்த்திருக்கேன்.”

வாய்விட்டுச் சிரித்தவன், “அதைப் பார்த்தா, அப்படி நினைச்ச.?”

“பின்ன? அந்த லெட்டர்ஸூக்கு எல்லாம் வேற மீனிங் இருக்கா என்ன?”

“எஸ்.‌ அதோட மீனிங் வேற!”

மூவரும் அவனைக் குழப்பத்துடன் பார்க்க, “ஃபைனல் செமஸ்டர்ல சும்மா ஜாலிக்காக ஒவ்வொரு ஸ்டூடண்ஸுக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து விளையாடினோம்‌. எனக்கு வந்த டாஸ்க், எங்க கிளாஸ்ல இருக்கிற ஏதாவது ஒரு பொண்ணுக்கு வீக்லி ஒன்ஸ் லவ் லெட்டர் எழுதணும்.

நான் யாருக்குனு எழுத? அந்த டைம்ல எனக்குக் கிரஷ்ஷுனு கூட யாருமே இல்ல. அதுனால சந்தியாக்கு எழுதினேன். அவளுக்கும் தெரியும். கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் தான் வாசிச்சு காட்டினேன்.

அது டைரி போட்டு கவிதை எழுதி கனவு கண்டுகிட்டு இருந்த காலம். அதுனால லெட்டருக்கு நடுவுல கவிதையும் வந்துடும்.”

“அண்ணா, ஆர் யூ சீரியஸ்? ”

“ம்ம்.. இப்ப அந்த லெட்டர்ஸ் எல்லாம் சந்தியாக்கிட்ட தான் இருக்கு.”

“சும்மா எழுதின லெட்டரை அவங்கக்கிட்ட எதுக்குக் கொடுத்தீங்க?” என்று தனா வினவ, பதில் உரைக்காமல் புன்னகைத்தான்.

“நீ பேசுறதையும் சிரிக்கிறதையும் பார்த்தா, டாஸ்குக்காக லெட்டர் எழுதின மாதிரி தெரியல! நான் அதை வாசிச்சு இருக்கேன். சும்மா எல்லாம் அப்படி எழுத முடியாது!” எனத் தங்கையானவள் உடன் பிறந்தவனைக் குற்றம் சாட்ட, “கற்பனைக்கு எது அளவு?‌ அதுவும் இல்லாம அது ஏடா கூடமான வயசு வேற. இல்லாத காதலிக்கு எழுதின லெட்டர்ஸ். சொல்லப் போனா, எதிர்காலத்துல வரப்போற காதலிக்காக எழுதினதுனு வச்சுக்கோயேன்!” என்று மனைவியைப் பார்த்தான் சாகரன்.

பிரார்த்தனா வியப்பும் மகிழ்ச்சியுமாய், “அப்ப, என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே எனக்காக எழுதினதா?” என வினவ‍, “அப்படியும் சொல்லலாம்.” என்று பதில் அளித்தான்.

“அப்புறம் ஏன், நீங்க உங்களோட ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்தீங்க? எனக்காக இல்ல வச்சிருந்து இருக்கணும்?”

“இல்ல தனா. அது சரியா இருக்காது. அதுல சந்தியாவோட பேர் இருந்துச்சு. வேற பொண்ணோட பேரைப் போட்டு, உன்கிட்ட எப்படி கொடுக்க முடியும்? அதோட காலேஜ் முடிச்ச பின்னாடிதான் தெரிஞ்சிச்சு, அவளுக்கு என்மேல இண்ட்ரெஸ்ட் இருந்தது. அதுனால தான், நான் அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை தொடர்ந்து கொண்டு போகாம, மெல்ல விலகிட்டேன்.

நீ எழுதின லெட்டர்ஸை தர்றியானு, அவதான் கேட்டா. எனக்குமே அதை வச்சிருக்கிறதுல விருப்பம் இல்ல. சோ, கொடுத்திட்டேன். ஏதோ‍, அவளுக்கு அதுல சின்னதா ஒரு சந்தோஷம்.”

“சந்தியாக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் இருந்தது, எப்படி தெரிய வந்துச்சு?”

“ஒன் டைம் பிரபோஸ் பண்ணா, எனக்கு.”

“மாம்ஸ்.‌. என்ன என்னென்னமோ சொல்லுறீங்க?” என சத்தி இடைநுழைந்து வினவ, “எனக்கு, அந்த டைம்ல லவ் பண்ணுற ஐடியா எதுவும் இல்ல மாப்ள. வீட்டுல ஆம்பளைனு இருக்கிறது நான் ஒருத்தன் தான்.‌ அப்பத்தா, அம்மா, பாப்பா எல்லாரையும் பார்த்துக்கணும். லவ்வு அது இதுனு யோசிக்க ஆரம்பிச்சிட்டா, ஃபேமிலியோட நிலைமை? சோ, நோனு சொல்லிட்டேன். நல்லப் பொண்ணு அவ. என்னோட சுச்சுவேஷனைப் புரிஞ்சிக்கிட்டா.

அவங்க வீட்டுல காலேஜ் முடிச்ச உடனே மாப்பிள்ளைப் பார்த்துப் பேசி முடிச்சிட்டாங்க. நானும் இஷ்டம் இல்லனு சொன்னதால, அந்த மாப்பிள்ளையையே கல்யாணம் செஞ்சுக்கிட்டா. எப்பவாவது அவளா கால் பண்ணுவா. சும்மா ஒரு ரெண்டு நிமிஷம் பேசிப்போம். என்ன இருந்தாலும், ஒரு காலத்துல என்மேல அன்பு வச்ச பொண்ணு. அதுனால ஃப்ரெண்ட்லியா பேசுவேன். அவ்வளவு தான்.”

கணவன் சந்தியாவைப் பற்றிய விபரங்களைத் தன்னிடம் பகிராததன் காரணம் தற்போது புரிந்தது பிரார்த்தனாவிற்கு.

பற்றி இருந்த அவனது கரத்தை, சற்று அழுத்திக் கொடுத்தாள்.

மூத்தவன் உரைத்ததையும், மனைவியுடனான அவனது உணர்வுப் பரிமாற்றத்தையும் பார்த்திருந்த மேகவிக்கு விழிகளில் நீர் கட்டிக் கொள்ள, “சரி, நான் உள்ள போய் வேலை பார்க்கிறேன். நீங்க பேசுங்க.” என்றுவிட்டு மடிக்கணினியோடு அறையை நோக்கிச் சென்றாள்.

error: Alert: Content selection is disabled!!