அத்தியாயம் 1
பரபரப்பாக இயங்கும் காலைப் பொழுது. குளித்து, உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன்னே வந்து நின்றான், கிருபன். கருப்பு நிறக் காற்சட்டைக்கு வெண்மையில் பளபளத்த முழுக்கை சேர்ட்டினை, கண்ணாடியைப் பார்த்த படி உள்ளே விட்டு நேர்த்தியாக்கினான். காலைக் குளியலின் பயனாக அடங்காமல் நின்ற கேசத்தை ஜெல்லை அப்பி அடக்கினான். அப்படியே, மீசையையும் நீவி விட்டவனுக்குத் தன் தோற்றத்தின் மீது மிகுந்த திருப்தி!
அலுவலகத்துக்கான பெயர்ப் பட்டியை எடுத்து ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு சமையலறைக்கு நடந்தான். கொதித்திருந்த நீரிலிருந்து தேநீரை ஊற்றி, அங்கேயே நின்றபடி பருகினான். மெல்லிய பசி தெரிந்தாலும், தானே செய்து உண்ணும் உணவை நினைக்கும்போது, அந்தப் பசியும் பறந்து போனது.
புதிய கட்டத்தில், மூன்றாவது மாடியில் அமைந்த, ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடு தான் அவனுடையது. வாங்கிப் போட்டிருந்த அத்தியாவசியப் பொருட்களோடு மிகவும் நேர்தியாகக் காட்சியளித்தது.
ஆனால், யாருமில்லாத வீட்டில் நேர்த்தி இருந்தென்ன? அழகு இருந்தென்ன? கை பட்டுக் கலையாத பொருட்கள் சலிப்பைத் தான் உண்டாக்கின. அந்தத் தனிமைக்குள்ளிருந்து தப்பித்து வெளியே ஓட வேண்டும் போலிருந்தது. அருந்திய கோப்பையை அலசி வைத்தான். தன் மடிக்கணனி அடங்கிய பையை எடுத்துக்கொண்டு, அரவிந்தனின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
அவன் பணி புரியும் IT நிறுவனத்தின் கிளிநொச்சிக் கிளையில் இருந்து, மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து, கடந்த மூன்று மாதங்களாகத் தான் மன்னாரில் வசிக்கிறான்.
மாமா வீட்டிலிருந்து வெளியேறியது பெரிய விடுதலை. அவனை வளர்த்தது அவர்கள் தான். அந்த நன்றி மனதிலிருந்தாலும், எப்போது வெளியே வருவோம் என்று காத்திருந்து வந்துவிட்டான்.
அவனுடைய இயல்பான சுபாவம் என்ன என்று அவனுக்கே தெரியாது. நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்று தான் பழக்கம். அவன் யாரிடமாவது எதையாவது கதைத்து, அது, மாமா மாமியின் காதுக்குப் போய்ப் பிரச்சனையாகிவிடுமோ என்கிற பயத்தில், அவசியம் தாண்டி ஒரு வார்த்தை உதிர்க்க மாட்டான்.
அவனால் அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம். எப்போதுமே, இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொள்வான். அதுவே, நாளடைவில் அவனை அமைதியான சுபாவமுள்ளவனாக மாற்றியிருந்தது.
இப்படி, தன்னைச் சுற்றி அவன் அமைத்திருந்த வேலிக்குள் அனுமதியே கேளாமல், குட்டி ஒட்டை ஒன்றைப் போட்டுக்கொண்டு நுழைந்தவன் தான், அரவிந்தன். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதில்லை. அவனுடைய ஒதுக்கத்தைக் கவனித்து மற்றவர்களுக்கு முன்னால் வைத்துக் கிண்டல், கேலி செய்தது இல்லை. அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, வலிய வந்து பேசிப் பழகும் அரவிந்தனின் சுபாவம், கிருபனுக்கு மிகவுமே பிடிக்கும். அதுவே, அவர்களுக்குள் ஆழமான நட்பை விதைத்திருந்தது.
இன்று, அவர்களின் நிறுவனத்தின் மேலதிகாரி, மீட்டிங் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். அது, அரவிந்தனோடு இணைந்து செய்து முடித்த பிராஜெக்ட். அதனால், இருவரும் ஒன்றாகவே அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று, இவனைத் தன் வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தான், அரவிந்தன்.
எப்போதுமே, இன்னொருவர் வீட்டுக்குப் போவதென்றால் காரணமில்லாத் தயக்கம் ஒன்று, அவனுக்குள் வந்துவிடும். அதில், எதையாவது சொல்லிப் பின்னடித்து விடுவான். அரவிந்தனிடமும் அப்படித் தான். அதனாலேயே, இந்த முறை இவன் வந்து அழைத்துப் போனால் மட்டுமே மீட்டிங்குக்கு வருவேன் என்று, அரவிந்தன் சொல்லிவிட்டதால் வேறு வழியற்றுப் புறப்பட்டான்.
அவர்களின் வீட்டின் கேட் தூணில் பதித்திருந்த,‘பரந்தாமன் GS’ என்கிற அவனது அப்பாவின் பெயர், அது தான் வீடு என்று உறுதிப் படுத்தியது. உள்ளே செல்லாமல், வண்டியின் ஒலிப்பானை ஒரு முறை அழுத்திவிட்டு வெளியிலேயே காத்திருந்தான்.
அடுத்த நொடியே, “எந்த எளியவன் விடியக் காலமயே வந்து நிண்டு உயிர எடுக்கிறது?” என்று, ஒரு பெண்ணின் குரல் அதட்டியது.
அரண்டு போனான், கிருபன்.
அரவிந்தனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று தெரியும். அதனாலேயே, உள்ளே போக ஒரு மாதிரி இருக்க, வெளியே நின்று, தான் வந்து விட்டதை அப்படித் தெரிவித்து ருந்தான். அது பிழையோ? வேகமாகக் கைபேசியை எடுத்து, ‘வெளில நிக்கிறன். கெதியா வாடா!’ என்று அனுப்பிவிட்டான்.
வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கமலி, கேள்வி கேட்டும் பதில் வராத கோபத்தில், வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.
யாரோ ஒருவன். முன்பின் பார்த்திராத முகம். கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
திட்டப் போகிறாளோ என்று இவனுக்குப் பதட்டமாயிற்று. சமாளித்துக்கொண்டு, “அரவிந்தன் நிக்கிறானா?” என்று, தயக்கத்துடன் வினவினான்.
“ஓம், குளிக்கிறான். நீங்க?”
“நான் கிருபன். அவன்ர பிரென்ட்.”
“புது பிரென்ட்டோ?” அவள் விழிகள் அவனை ஆராய்ந்தது.
ஆம் என்பதாகத் தலையை மட்டும் ஆட்டினான், கிருபன்.
“பொறுங்கோ! அண்ணாட்டச் சொல்லுறன்!”
இனி உள்ளுக்குப் போய்விடுவாளாக்கும் என்று அவன் நினைக்க, அதற்கு மாறாக, “இப்பிடித்தான் விடியக் காலம வந்து நிண்டு ஊரக் கூட்டுவீங்களா? ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டியது தானே? ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளர இல்லப் போல!” என்று, அதட்டினாள்.
நொந்தே போனான், கிருபன். “சொறி!” அவன் வாய் தானாகச் சொன்னது.
“ம்ம்! இன்னொரு முறை இப்பிடி ஏதாவது நடந்தது, மண்ணெண்ணையை ஊத்தி பைக்கை கொளுத்தி விட்டுடுவன்!”
அவளின் மிரட்டலில் ஒரு கணம் ஆடிப்போனான், அவன்.
“இல்ல. இனி இல்ல.” என்றான், அவசரமாக.
“அதையும் பாக்கத் தானே போறன்.” முறைப்புடன் மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள், அவள்.
அதுவரை, அடக்கி வைத்திருந்த மூச்சை அப்போது தான் வெளியேற்றினான், கிருபன். ஊரைக் கூட்டியதாகச் சொல்லிவிட்டாளே. இதில், அவனை வெட்டிக் கிழிக்கும் பார்வை வேறு! வாழ்க்கையில் இனி, எந்த அவசர ஆபத்துக்கும் தன் ஒலிப்பானை அழுத்துவானா என்பதே சந்தேகம்.
அவனுக்கான அன்றைய சோதனை இன்னும் முடியவில்லை போலும். அவர்களின் வீட்டுக்கும் கேட்டுக்கும் பெரிய தூரமில்லை என்பதில், “யாரோ கிருபனாம் அண்ணா. வெளில நிக்கிறார்.” என்று, அவள் சொல்வதும், “வந்திட்டானா? எட்டுக்குத் தானே வரச் சொன்னனான்.” என்று, அரவிந்தன் சொல்வதும் கேட்டது.
“இப்ப நேரம் எட்டுப் பத்து. எட்டுக்கு வரச் சொன்னா, அதுக்கு முதல் நீ ரெடியா நிக்கோணும். இப்பிடித் தான் காக்க வைப்பியா? என்ன பழக்கம் அண்ணா? அவர் வேற வெளில நிண்டு கத்திக் கூச்சல் போடுறார்.”
“சரி சரி கத்தாத. ஜீன்சும் சேர்ட்டும் மாத்துறது மட்டும் தான்!”
அழுதுவிடும் நிலைக்கே போயிருந்தான், கிருபன். தெரியாமல் ஒரு முறை ஒலிப்பானை அழுத்தியது எல்லாம் ஒரு பிழையா?
“அவனை உள்ளுக்கு வந்து இருக்கச் சொல்லு.”
“நீயே சொல்லு! என்னால ஏலாது!” என்று, அவள் மறுப்பது கூடக் கேட்டது.
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் கிருபனும் வெகு கவனமாக இருப்பான். அதைவிட, அரவிந்தனும் இவனைப் போலவே இருபத்தியாறு வயது நிரம்பியவன். இருந்தும், இவளின் பேச்சுக்கு அடங்கிப் போகிறானே. அல்லது அடக்குகிறாளோ? அப்படித் தான் தெரிந்தது. முதன் முதலாகப் பார்த்த அவனையே ஒரு அரட்டு அரட்டவில்லையா!
தன் தங்கையைப் பற்றி எதேற்சையாகச் சொல்கையில் சேட்டைக்காரி என்று அரவிந்தன் சொல்லி இருக்கிறான் தான். என்றாலும், இந்தளவில் எதிர்பார்க்கவில்லை.
பைக்கில் இருந்தவாறே கைபேசியை ஆராய்ந்துகொண்டு இருந்தான். சற்று நேரத்தில், “அம்மா! வாறன் போயிட்டு!” என்றபடி, அவள் வெளியே வருவது தெரிந்தது.
வேகமாக நிமிர்ந்தான், கிருபன். அவளை எதிர்கொள்வதை நினைக்கவே அவனுக்கு வியர்க்கும் போலிருந்தது. ‘இப்ப அவளைப் பாத்துச் சிரிக்கிறதா இல்லையா’ பெரும் கேள்வி ஒன்று எழுந்து வந்து அவன் முன்னே நின்றது.
வளரிளம் பருவத்திலிருந்து பெண்களுடனான பழக்கம் இல்லாமலேயே வளர்ந்தவனுக்கு, இன்னும் சொல்லப் போனால் ஒதுங்கிப் போயே பழகியவனுக்கு, பெண்கள் என்றாலே சற்றுத் தடுமாற்றம் தான். வெளியே காட்டிக்கொள்ள மாட்டானே தவிர, தனக்குக் கீழே வேலை செய்யும் பெண்களிடம் கூட வேலை வாங்குவதற்குப் பெரும்பாடு பட்டுவிடுவான்.
சாதாரணப் பெண்களை எதிர்கொள்வதற்கே அந்தப் பாடு என்றால், இந்த வாயாடியை? சிறு தவறு செய்தாலும் வாயாலேயே அவனைக் கழுவில் ஏற்றி விடுவாளே!
என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நிற்க, ஸ்கூட்டியில் வந்த அவளோ, அவனைப் பார்த்துப் பளீரெனப் புன்னகைத்தாள்.
அதை எதிர்பாராதவன் ஒருவித அதிர்வுடன் அவளைப் பார்த்தான்.
“அண்ணா ரெடியாயிட்டான், இப்ப வருவான்!” என்றுவிட்டு, ஒரு தலையசைப்போடு விடைபெற்றுக் கொண்டாள், அவள்.
‘அப்பாடி போறா.’ இவன் நினைத்து முடிக்க முதலே, ஸ்கூட்டியை நிறுத்தித் திரும்பி இவனைப் பார்த்தாள்.
“இன்னொரு விசயம். இனி அண்ணா எட்டுக்கு வரச் சொன்னா எட்டே காலுக்கு வாங்கோ. அவன் ஒரு முழுச் சோம்பேறி. எதையும் அந்தந்த நேரத்துக்குச் செய்யவே மாட்டான்.”
அவள் சொன்னதைக் கேட்டு நகைப்பில் விரியப் பார்த்த உதடுகளை அடக்கிக்கொண்டு, வேகமாகச் சரி என்று தலையை ஆட்டினான், கிருபன்.
அவள் பார்வை, அவன் மீது, ஒரு கணப்பொழுது சற்றே அதிகமாகப் படிந்தது போல் ஒரு தோற்றம். அவன் தடுமாறும் போதே அவள் பறந்து போயிருந்தாள்.
‘ஊப்ஸ்!’ கிருபன் மூச்சை இழுத்து விட்டான்.
“என்னடா சொல்லிப்போட்டுப் போறாள். எப்பிடியும் என்ர மானத்தத் தான் வாங்கி இருப்பாள்!” ஓடி வந்து பின்னால் ஏறியபடி வினவினான், அரவிந்தன்.
ஒன்றும் சொல்லாமல் சிறு முறுவலுடன் வண்டியைக் கிளப்பினான், கிருபன்.
இங்கே, வேலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த கமலியின் உதட்டினிலும் மெல்லிய குறுஞ்சிரிப்பு. தன்னைப் போன்ற இளம் பெண்களின் முன்னே, தங்களின் அலட்டல்களைக் காண்பித்து, ‘படம்’ காட்டும் ஆண்களுக்கு மத்தியில், அவனுடைய தயக்கம் வித்தியாசமாகத் தோன்றிற்று. அவள் அதட்டியதற்குக் கோபப்படவும் இல்லை, முகம் கருக்கவும் இல்லையே!
சீறிப்பாயும் குதிரையைப் போல் இருந்த புல்லட்டில், கம்பீரமாக ஆரோகணித்திருந்தவனின் முகத்தில் தெரிந்த கூச்சத்தையும், பார்வையில் தெரிந்த தடுமாற்றத்தையும் நினைக்க நினைக்கச் சிரிப்பு அரும்பிக் கொண்டே இருந்தது.

