ஏதனின் இலஞ்சியவள் 22- 2

“ப்ச்!” என்றாளேயொழிய வேறு எதுவுமே கதைக்கவில்லை. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. இவனை விட்டுத் தள்ளி நில், அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது என்று அவளை எச்சரிப்பதும் இவள் மனம்தான். இதோ,  இவன் கரிசனையை, சிறு அன்பான பார்வையைக் கண்டுவிட்டால் போதும் தள்ளாடித்  தளும்பி  நிற்பதும் அதே மனம்தான்.

மனத்துள் இப்படிப் போராட்டம் நடந்தாலும் அவனுக்குக் காட்டிவிடக்கூடாது என்று நினைத்தாள். அவன் பார்வை தன் மீது இருப்பது தெரிந்தும் அவனை ஏறிடவும் இல்லை.

இவர்கள் மின்தூக்கியால் வெளியில் வந்தால் அங்கே  வேர்த், ஒலிவியா நின்றார்கள். இவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தினாள், ஒலிவியா.

“நீ என்னோட கதைக்காத!” வெடுக்கென்று சொன்னாள் துர்க்கா. 

“அதுமட்டும் என்னால ஏலாத வேலை. வேற ஏதாவது சொல்லு செய்யிறன்.” நண்பியைக் கட்டிப் பிடித்தவள், “என்ன முகமெல்லாம் இப்பிடிச் சிவந்து கிடக்கு, என்ர  ப்ரோ  தூக்கிக்கொண்டு வந்தவரே?” காதோரமாகக் கிசுகிசுத்தாள். 

“உனக்கு உண்மையா விசர். இனிமேல் இப்பிடிக் கதைச்சியோ நான் உன்னோட கதைக்கிறத விட்டிருவன்.” சீறிக்கொண்டு அவளை விலத்திவிட்டவள் ஏதனை முறைத்தாள்.

“வாட் ? நான் இப்ப என்ன செய்தனான். இப்பிடி முறைக்கிற?” பாவமாகக் கேட்டான், அவன். 

பதில் சொல்லவில்லை. ‘உனக்கு எல்லாம் பதில் சொல்லுறதே வீண்.’ மனக்குமுறலை விழிகளால் கடத்தியவள், விறுவிறுவென்று நடந்தாள். 

ஆரோன் தங்கியிருக்கும் அறை அந்த வராண்டாவில் கோடியில் இருந்தது. அதுவரை வந்துவிட்டவளுக்குக் கதவைத் திறந்து உள்ளிடும் அளவுக்குத் தைரியம்  இருக்கவில்லை. ஆரோன் மட்டும் என்றால் நிச்சயம் பிரச்சினை இல்லை, உள்ளே வேறு யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ? ஏதன் என்னதான் சொல்லட்டும் அவன் தாய், சகோதர சகோதரிகளை எதிர்கொள்ளவே இவளுக்குப் பிடிக்கவில்லை. 

தயக்கத்தோடு திரும்பினாள். அவளில் முட்டிவிடுவதுபோல் வந்து நின்றிருந்தான், ஏதன். விழிகளில் விசமம், சீண்டல். புருவம் உயர்த்தினான். 

இவள் முறைக்கத்தான் முயன்றாள். நடந்ததுவோ? நிச்சயம் அவள் முகத்தின் செம்மையை அவன் கண்டுகொண்டிருப்பான். பட்டென்று மறுபுறம் திருப்பிவிட்டாள். 

வலு சுவாதீனமாக அவள் தோள் பற்றி விலக்கினான். அவள் கரத்தைப் பற்ற முனைந்தவாறே கதவைத் திறந்தான். இவள் விலத்தித் துள்ளி நகர்ந்துவிட்டாள். அதே வேகத்தில் ஒலிவியா, வேர்த்து பின்னால் சென்று நின்றுகொண்டாள்.

சிரிப்போடு திரும்பியவன், “உள்ளுக்கு வாங்கோ!” நுழைந்து நடந்தான்.

அங்கே ஆரோன் மனைவி, மூத்த மகன், மகள்மார் மட்டுமின்றி ஆரோன் அன்னையும் தந்தையும் கூட இருந்தார்கள்.

துர்காவிற்கு அவர்களைச் சந்தித்தத் தருணங்கள்தான் கண்முன்னால் வந்தன. எதுவுமே இதமானவை அல்லவே!  அவர்களை எதிர்கொள்வது மிகவும் அசௌகர்யமாக இருக்கவே பின்தங்கிவிட்டாள். 

நல்லவேளையாக எல்லோர் பார்வையும் ஒலிவியாவில்தான் இருந்தது.

ஒலிவியா இலண்டன் வந்துவிட்டாள் என்று தாய் தந்தை மூலம் ஆரோன் அறிந்திருந்தார். மகிழ்வில் மனம் தடுமாறிப்போனது. தன்னை, தன் பொறுப்பற்றத்   தன்மையை, தவிர்ப்பை மகள் மன்னித்துவிட்டாள்  என்பதற்கு அவள் வருகையே ஆதாரம் என்று எண்ணியவர், மகள் மீதான பாசத்தில் உருகிப்போனார். இனிமேல்பட்டு அவளைத் தள்ளிச் செல்ல அவர் அனுமதிக்கப்போவதில்லை. வலுவாகத் தீர்மானமே செய்துகொண்டார்.                                                                                                                                           

என்னதான் இப்படியெல்லாம் எண்ணினாலும் இலண்டன் வந்திறங்கியதும் தன்னிடம் ஓடிவரவில்லையே என்ற ஆதங்கமும் இருந்ததே! சோர்வாகக் கட்டிலில் படுத்திருந்தார்.

பெற்றோரும் குடும்பத்தினரும் சொன்ன ஆறுதல் தேறுதல் வார்த்தைகளோ, கதைகளோ அவர் கருத்தில் பதியவில்லை . நேரத்தைப்  பார்ப்பதும் வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார்.

                                                                                                                                                                                                   அதுவே, கதவைத் திறந்து உள்ளிட்ட இளைய மகன் பின்னால் ஒலிவியாவின் தலை தெரிந்த நொடி, உடலைப் பிடித்திருந்த சோர்வெல்லாம் பறந்திருக்க, விருட்டென்று எழுந்தமர்ந்தவர்  அதேவேகத்தில்  கட்டிலை விட்டு இறங்கிவிட்டார்.

காலூன்றியவரால் நிற்க இயலவில்லை. தடுமாறியவரை, 

“டாட் பாத்து” எட்டிப் பிடித்துத் தன் தோளோடு அணைத்து, மீண்டும் கட்டிலில் அமர வைத்தான், ஏதன்.

மனிதர் பார்வை ஒலிவியாவில்தான். அவள் விழிகளும் நிறைந்துவிட்டன. மூக்கு விடைத்து இதோ வெடித்து அழுதுவிடுவேன் என்ற நிலைதான். ஆரோன் மெலிந்திருந்தார். கன்னங்கள் ஒட்டி, ஒருபோதுமில்லாது தாடியும் மீசையும் சொரசொரப்பாக வளர்ந்து அவர் முகத்தோற்றத்தை வேறாகக் காட்டின. அவ்வளவாக உணர்வுகளை வெளியில் காட்டிடாது இலாவகமாக, நிமிர்வாகக் கடக்கும் அவர் பார்வையில் தவிப்பும் தத்தளிப்பும் கண்ணீரும். 

மகன் பிடியை விலத்தி மீண்டும் பிடிவாதமாக எழ முயன்றார், ஆரோன். “ப்ச் டாட்!” மெல்ல அதட்டினான் ஏதன். “இப்பிடியே இருங்க.” என்றவன் மறுகரம் எட்டி ஒலிவியாவைப் பிடித்து அருகில் கொண்டு வந்திருந்தது.

பதுமை போலவே இழுபட்டு வந்தாள், அவள். சுற்றம், அங்கு நின்றவர்கள் என்று யாருமே அவள் கருத்தில் படவில்லை. திடகாத்திரமாகக் கண்டு, பார்த்து அதிசயித்த மனிதர், தகப்பன் என்று அறிந்து அதிர்ந்து, கோபித்து, உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதர், இன்று, தளர்ந்து பத்து வயதுகள்  சரி  அதிகரித்த தோற்றத்தில்  விழிகளில் கண்ணீர்த்தடங்களோடு இருந்த நிலை மிகவுமே  வலிக்கச் செய்தது. கண்கள்  உடைப்பெடுக்க அவரை நெருங்கியவள் ஒரு கை கணவனை இறுகப் பற்றியிருந்தது.

வேர்த்துக்கும்  தன் ஆசானைப் பார்த்து அதிர்வுதான். 

ஆரோன் இரு கைகளையும் விரித்தார்.

“மகளே!” என்ற, ஒற்றைச்சொல்தான் அவர் குரலில் திணறலோடு வெளியில் வந்து விழுந்தது.  இதயக்கூடு தவிப்பில் கலகலக்க பீறிட்டு எழுந்த விம்மலை அடக்கப் பெரும்பாடு பட்டார், மனிதர். மகளை ஆரத்தழுவிவிட்டு இந்தத்  துன்பத்திலிருந்து விடுபட்டு விடு என்று, மனத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

error: Alert: Content selection is disabled!!