ஏதனின் இலஞ்சியவள் 24 – 1

ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய   கடைத்தொகுதிகளுள் ஒன்றான ‘Westfield London’ கார் பார்க் கிங்கினுள் ஏதன் கார் நுழைந்தது. 

இந்தக் கடைத்தொகுதி பற்றி  துர்கா கேள்விப்பட்டிருந்தாள். டிக்டொக் மற்றும்  இன்ஸ்ட்டாவில்  றீல்ஸ்  பார்த்திருக்கிறாள். கட்டாயம் போக வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். ஆர்வமாகவும் இருந்தாள். 

இப்போது அதே மனநிலையில் உள்ளாளா என்றால் சற்றும் யோசிக்காதே இல்லை என்பாள். நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளவில்லை என்றாலுமே அவளை ஒருவன் அடிக்கடி பார்த்துத் தொலைப்பதாக மனம் உணர்கிறதே! அது மிகவுமே பதற்றம் தருகிறது, ஒரு நிலையில் இருக்கவிடாது அந்தரப்படுத்துகிறது, அவளைப் பலவீனப்படுத்திப் பலமிழக்கச் செய்கிறது. பிறகெப்படி ஆர்வமாகவும் உடற்சாகமாகவும்  இருப்பதாம்? 

“வெளில இருந்து பாக்க நல்ல வடிவா இருக்கு. பெரிசும் என்ன, நல்ல சனமும்.” என்றாள், ஒலிவியா. 

“எல்லா விதமான ட்ரான்ஸ்போட் வசதிகளும் சுற்றி இருக்குது. 2008இலதான் இந்த மோல் திறந்தவே. கொஞ்சக்   காலத்திலேயே பேமஸ் ஆகிற்று. இஞ்சதான் மார்க் அண்ட் ஸ்பென்சருக்கு அடிக்கடி வாறனாங்கள். அவங்களிட கஃபேக்கும்  போகாமல் திரும்ப மாட்டம்.” என்றுகொண்டே இறங்கினாள், ஏவா. அவளோடு சேர்ந்துகொண்ட ஏதன் கதைத்தபடி விறுவிறுவென்று நடந்தான். 

வேர்த்  கரம் தன்னால் மனைவியின் கரத்தைப் பற்றியிருந்தது. ஏதன், ஏவாவைத் தொடர்ந்தார்கள். 

துர்க்காவின் நடை தயங்கி மெதுவாகியது. இவ்விடத்தில் அவள் இருப்புத் தேவையா? ஒலிவியா வந்த அன்று வைத்தியசாலை செல்கையில் இருந்த அதே மனநிலை. அதே கேள்வி. அதேநேரம் பிறகு நடந்ததும் அவள் கை பற்றி ஏதன் அழைத்துச் சென்றதும் அவளை அவனுடையவளாக அந்தக் குடும்பத்துக்கே ஆரோன் சொன்னதும் என்று நினைவில் வந்து தொலைத்தது. அது மிகவுமே தொந்தரவு செய்தது. 

தலையை உதறிக்கொண்டாள். மறந்தேயாக வேண்டும் என்று நினைக்கையில்தான் சிலதுகள் இன்னும் இன்னும் நினைவில் பதிந்திடும் போலும்.  மறக்கவே விடமாட்டேன் என்று அடம்பிடித்து ஒரு வழி செய்யுமாக்கும்.

விறுவிறுவென்று வேர்த்  ஒலிவியா பின்னால் நடந்தாள்.

ஏதனுமே துர்க்காவின் கவனத்தைக் கவரா வண்ணம் அவளைக் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான். அவனுக்கும் அவள் நினவுலாவில் சுற்றித்திரிந்த அதே அன்றைய நாள்  நினைவுதான். 

அன்று முழு நாளும் அவன் சுமந்து கொண்டிருந்த  பொறுப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஒரே வடிகாலாக இருந்தவள் அவள் மட்டுமே!

இவள் கரம் பற்றி நடந்த அந்தக் கணங்கள் ஒன்று ஒன்றும், தம்மிருவரையும் ஒன்றாகச் சேர்த்துத்  தகப்பன் கதைக்கையில் அவள் சாதித்த மௌனம்  என எல்லாமே அவனை உச்சபட்சமாக இதமாய் உணர வைத்திருந்தது. இப்போதும் இதம் மட்டுமே உணர வைக்கிறது. அதே, மறுநாளே என்ன செய்தாள்? எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிடும் வகையில் கதைத்திருந்தாளே! அதுவும் நினைவுகளை உரசி உரசி வலி தருகிறதே!

“ராட்சசி!” முணுமுணுத்தபடி மெல்லத் திரும்பினான். அவளும் அவனைத்தான் பார்த்தபடி வந்துகொண்டிருந்தாள். தனியாக அவள் வரும் விதம் இவன் மனத்துக்குள் என்னவோ செய்தது. 

இவன் பார்வையைத் தாங்கிய கணம் சரேலென்று பார்வையை விலத்திக்கொண்டாள், துர்க்கா. அவளுள் பதற்றம் அதிகரித்துகிட்டு. தள்ளிப் போய்விடு  என்று விரட்டியவளுக்கு என்ன பார்வை வேண்டிக்கிடக்கு என்று கேட்டுவிட்டானென்றால்.

அல்லது, ‘திருப்பியும் வந்து கை பற்றி…’ என்று செல்ல முனைந்த நினைவுக்குத் தடைபோட்டவள், “என்ன பின்னடிக்கிற நீ? வர வர நீ சரியே இல்ல. நடிக்கிறியோ என்ன?” என்றபடி இழுத்த ஒலிவியாவோடு சேர்ந்து நடந்தாள்.

 

ஐவரும் அமைதியாக மின்தூக்கிக்குள் தம்மை நுழைத்துக்கொண்டார்கள். உள்ளே நுழைந்த வேகத்தில்  வலு மும்முரமாகக் கைபேசியில் தலையைப் புதைத்துக்கொண்டாள், துர்க்கா.  நிமிர இயலவில்லை. நேரே ஏதன் நின்றுகொண்டிருந்தானே.  அக்கணம், வந்து மீண்டும் கதைப்பான் என்று அவன் இதுவரை நடந்துகொண்ட விதம் வைத்து எண்ணியவளுக்கு இலேசான ஏமாற்றமே. 

அதற்கென்று அவளைப் போல்  சிடுசிடுத்துக்கொண்டும் அவன் இருக்கவில்லை. தன் சகோதரிகள்,  வேர்த் என்று கதைத்துக்கொண்டிருந்தான். ஆளுமையான ஆழ்ந்த அவன் குரல் துர்கா செவிகளைத் தொட்டு தொட்டுச் சீண்டிச் செல்கிறதே! 

வெளியேற முயன்ற நெடும் மூச்சை இழுத்துப் பிடித்து இரகசியமாய் சிறிது சிறிதாக வெளியேற்றினாள், துர்க்கா.

மின்தூக்கியால் வெளியேறியவர்கள் நேர மார்க் அண்ட் ஸ்பென்சருக்கு சென்றார்கள்.

“நானும் ஏதனும் ஜென்ட்ஸ் பக்கம் போயிட்டு வாறம், நீங்க பாருங்க.” என்ற வேர்த், ஏதனோடு நகர்ந்தான். இவர்கள் தம் பார்வையிலிருந்து மறையும் தருவாயில் திரும்பிப் பார்த்தான், ஏதன்.அந்நேரமா இவளும் அவர்களைப் பார்க்க வேண்டும்? பார்த்த வேகத்தில் அப்பால் நகர்ந்து தன்னை மறைத்துக்கொண்டாள். ஆனாலும் அந்த ஏசியின்  குளிர்மையிலும்  வியர்த்துப்போனாள்.

error: Alert: Content selection is disabled!!