மையல் மீளுதே மேகவியே 33 – 1

மையல் 33

படுக்கையில் அமர்ந்து ஜன்னலின் வழியே வெளிப் பக்கத்தைப் பார்த்திருந்தாள் மேகவி.

சாகரன் எழுதிய காதல் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, அவளுக்கு வயது பதினைந்து.

இருவரும் அப்பொழுது படிப்பதற்கு ஒரே மேஜையை தான் உபயோகித்து வந்தனர். மூத்தவன் எழுதிய கடிதங்களை அவனது கவிதைகள் நிறைந்த நாட்குறிப்பிற்குள் சேமித்து வைத்திருந்தான்.

அறியாமல் அவளின் கைப்பட்டு கீழே விழுந்திட, காற்றின் காரணத்தால் திசைக்கு ஒன்றாய் சிதறின காகிதங்கள்.

முதலில் அதனைப் பார்க்கும் எண்ணம் இல்லை, அப்பருவ மங்கைக்கு. கண்களில் விழுந்த எழுத்துகள் ஆர்வத்தைத் தூண்டிட, இரகசியமாய் ஒவ்வொன்றாய் வாசிக்கத்‌ துவங்கினாள்.

‘அவளின் விழி மணியில் தெரியும்
என் பிம்பத்திற்கு
கருவறைக்குள் இருக்கும் வளர்ந்த
குழந்தையின் சாயல்!’

இதுதான் மேகவி வாசித்த தமையனது முதல் கவிதை.

அந்த ஒப்பீடு அவளை வெகுவாய் இரசிக்க வைத்தது.

நட்பின் பெயரைச் சொல்லி பாவையின் குணத்திற்குத் தேர்வு நடத்தி தோல்வியையும் பரிசளித்த‌ ஒருவனிற்குப் பின், தனது குடும்பத்து ஆண்மகனைத் தவிர்த்து வேறு எந்த எதிர்பாலினத்தவரோடும் பழகுவதற்குச் சற்றுத் தயக்கமாகத் தான் இருந்தது‌.

அந்த வலியில் இருந்து மீண்டு வராதவளிற்கு‍, தமையனின் எழுத்துகளில் விரவிக் கிடந்த அன்பும் அக்கறையும் ஆறுதல் அளித்து அணைத்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்டதே கோலம் என எண்ணும் பருவம் அது‌. அதனால் அக்கடிதங்களில் இருந்த கற்பனைகளை, விசாரிக்கத் தோன்றாது அப்படியே நம்பிவிட்டது‌ அச்சிறுமியின் மனம்.

உண்மை யாதென தெரியாததால்‍, சாகரனும் சந்தியாவும் காதலிப்பதாய் எண்ணி விட்டாள்.

இரண்டும் கெட்டான் வயது. ஆகையால் அத்தருணங்களில் ஏற்படும் உணர்வுகளின் தாக்கம் இயல்பைக் கடந்து அதீதமாகத் தான் இருக்கும்.

அதனால் தான் இயற்கையாகவே பன்னிரண்டு முதல் பத்தொன்பது வயதிற்கு இடையேயான காலத்தில் கிட்டும் அனுபவங்களே, எதிர்கால வாழ்வின் பாதையினைத் தீர்மானிக்கின்றன. அத்தோடு அவை நம் நினைவில் இருந்து அகலாது, அப்படியே பதிந்தும் போய் விடுகின்றன.

சந்தியாவிற்குத் திருமணம் என்ற செய்தி வரும் வரையிலுமே, அவளின் தவறான புரிதல் தொடர்ந்து வந்தது‌.

தனது முந்தைய அனுபவத்தால், ‘தமையன் தான் காதலித்துப் பழகி, கரம் பற்றாமல் விலகி விட்டான்!’ என்ற எண்ணம் தானாய் உருவெடுத்து விட்டது.

அதன்பின்னர் மூத்தவனிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் மெல்ல இறங்கிட, அவனிடம் இருந்தும் தள்ளிச் செல்ல துவங்கினாள் மேகவி‌.

சிறுமியில் இருந்து இளம் பெண்ணாய் மாறும் காலம் என்பதால், சாகரனும் தங்கையின் விலகலை இயல்பாகவே ஏற்றுக் கொண்டான்.

ஆனால், ‘தனது அண்ணனா இப்படி? நன்கு தெரிந்த இவனே இப்படி என்றால், முன்பின் தெரியாத வேறு எந்த ஆணைத் தான் நம்பிட இயலும்?’ என்று அவளுள் எழுந்த வினாவின் அழுத்தத்திற்கு, ‘இனி எதிர்ப் பாலினத்தை சேர்ந்த எவரையும் நம்புவது இல்லை.’ என விடை தந்து அதற்கு முடிவுரை எழுதி விட்டாள்.

‘தவறான புரிதலால் உடன் பிறந்தவனிடம் ஆண்டுக் கணக்கில் சினம் கொண்டு அன்பையும் பகிர மறுத்து விட்டோமே.?’ என்று தற்போது தன்னையே நொந்து கொண்டாள்.

இச்சூழலையும் சாகரனையும் எதிர்கொள்ள இயலாது எழுந்து வந்தவளின், விழியோரம் கசியத் துவங்கியது.

மனைவியைக் கவனித்திருந்த சத்தி, சில நிமிடங்களின் இடைவெளியில் அறைக்குள் நுழைந்தான்.

“பொண்டாட்டி.”

கணவனின் குரலில் கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு, கேள்வியாய் நோக்கினாள்.

“ஏன், உள்ள வந்துட்ட?”

“வேலை இருக்குனு சொல்லிட்டு தான வந்தேன்?”

“ஆனா, இப்ப தான் நீ வேலை பார்க்கலயே?” எனப் படுக்கையின் ஓரம் இருந்த மடிக்கணினியை கண்களால் காட்டினான்.

மேகவி வேறுபுறம் பார்வையை திருப்ப, “அழுதியா என்ன?”

“ம்கூம்ம்.. இல்ல.”

“பொய் சொல்லக் கூடாது!” என்றவன் அவளின் அருகே வந்து அமர, விழிகளில் நீரோடு முகம் நோக்கினாள்.

“ஹேய்.. எதுக்கு இப்ப அழுகுற?” எனப் பதற்றம் அடைந்தவன் முகம் பற்றி துடைக்க, “அண்ணனை இத்தனை வருஷமா தப்பா நினைச்சிட்டேன் கீர்த்தி. இனி, எப்படி நான் அவரை ஃபேஸ் பண்ணுவேன்? என்கூட பிறந்தவரு, எப்படி இப்படித் தப்பா நினைச்சேன் நான்?”

“சிம்பிள். நீ அவரை அண்ணனா பார்க்காம, ஆண்களோட பொது பிம்பமா பார்த்து இருக்க.”

“நான் அவருக்கிட்ட அப்பவே இதைப் பத்தி கேட்டு இருந்தா, மனசுல இவ்வளவு வெறுப்பு வந்திருக்காது இல்ல?”

“உண்மை தான்.‌ பட், கேட்டிருக்க முடியாது உன்னால.”

“ஏன் அப்படிச் சொல்லுற?”

“நீ அவரை அண்ணனா இல்ல, அப்பாவோட இடத்துல வச்சுப் பார்த்திருக்க‌. எந்த மகளுமே தன்னோட ஃபர்ஸ்ட் ஹீரோ தப்பான ஆளா இருக்கிறதை விரும்ப மாட்டா. சொல்லு, மாம்ஸ் தான உனக்கு ஃபர்ஸ்ட் ஹீரோ? அதுவும் கவிதை எல்லாம் வேற எழுதி, ஒரு லவ்வர் பாயாவும் இருந்திருக்காரு.”

அவள் அழுது சிவந்த கண்களுடன் புன்னகைக்க, “நீ வெளிப்படையா கேட்டு, மத்தவங்க பார்வையில அவரோட மரியாதை குறைஞ்சு போறதை விரும்பல பொண்டாட்டி. அதுனால தான்‌ உன்னால கேட்க முடியல. புரிஞ்சிச்சா?”

‘ஆம்’ என்பது போல் மேலும் கீழுமாய் தலை அசைத்தவள், “உண்மையைத் தெரிஞ்சிக்காம தனாக்கிட்ட வேற நான் இதைப் பத்திச் சொல்லிட்டேன்‌. அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல? ‌எப்படி அதை ஹேண்டில் பண்ணானு தெரியல!” என்று தமையன் மனைவியை எண்ணி வருத்தம் கொள்ள, “ஓ.‌. என்ன சொன்னா உன்கிட்ட?” என வினவினான் சத்தி.

திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் தாங்கள் இருவரும் பேசியதை அப்படியே கணவனிடம் உரைத்தாள்.

“கரெக்டா தான் சொல்லி இருக்கா.”

“ம்ம்.. என்னை விட சின்னப் பொண்ணு. அவ அதை சரியா அணுகி இருக்கா. நான் ஏன் அப்படி இல்ல கீர்த்தி? எல்லாத்தையும் தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஒருமாதிரி ரூடாவே நடந்துட்டு இருந்திருக்கேன்.”

“ஒருத்தரை உருவாக்குறது, அவங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுற விஷயங்களும், கடந்து வந்த பாதையும், பார்த்து வளர்ந்த சூழலும் தான். உனக்கு நடந்தது மாதிரி அவளுக்கு நடக்கல. சோ‍, அந்த வயசுக்கும் குடும்ப சூழலுக்குமான பக்குவத்தோட வளர்ந்து இருக்கா‌. ஆனா நீ அப்படி இல்ல.”

அவன் கணவனைப் புரியாது பார்க்க, “அப்பா இல்ல. அப்பத்தாவும் அம்மாவும் தான் வளர்த்திருக்காங்க. பொதுவாவே அந்த மாதிரி சூழல்ல பெண்கள் தங்களோட பாதுகாப்புக்காக, நார்மலாவே கொஞ்சம் கடுமையா தான் நடந்துப்பாங்க.

அம்மாச்சி சாதாரணமா பேசுறதே, நல்ல சௌண்டா டாமினேட் பண்ணுற மாதிரி தான் இருக்கும். அத்தை அவ்வளவா குரலை உயர்த்த மாட்டாங்க. ஆனா, அழுத்தமா இருக்கும். அவங்களைப் பார்த்து வளர்ந்திருக்க. சோ, அவங்களோட அந்த பிரதிபலிப்பு உன்கிட்ட இருக்கிறது நார்மல் தான்‌.

error: Alert: Content selection is disabled!!