ஏதனின் இலஞ்சியவள் 25 -1

ஷொப்பிங்  முடித்ததும் ஐவரும் மார்க் அண்ட் ஸ்பென்சர் கஃபேயில் வந்தமர்ந்தார்கள். 

அடுத்த முக்கால் மணிநேரம் பொதுவான உரையாடலோடு பொழுது கழிந்தது. 

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச்  சற்றே தள்ளி இருவர் அமரக்கூடிய மேசையில் ஒருவன் அமர்ந்திருந்தான். கறுப்பு நிற அடிடாஸ் ஹூடி அணிந்திருந்தவன் அதன் தொப்பியால் தலையை மூடியிருந்தான். காற்சட்டை, சப்பாத்துகள் கூட  அடிடாஸ்தான். முன்னால் பெரிய Prada கூலிங் கிளாஸ், புசு புசுவென்ற தாடி. அவன் இடக்கைக்குள்ளிருந்த ஐபோன் உயிரிழக்கும் தருவாயை எட்டியிருந்தது. கோபத்தோடு துசனங்களை முணுமுணுத்தபடி Anker MagGo Power Bankஐ எடுத்து இணைத்தான்.

“என்ன ஜோன்  வெளில வாற  பிளான்? இன்னுமா சாப்பிடுகினம்?” கைப்பேசியில் முரட்டுத்தனமாக வந்த குரலுக்கு மேலே, இவன் கோபக்குரல் குறுக்கிட்டது. 

“எங்க? அசையுதுகள் இல்ல. போய் இழுத்துக்கொண்டுதான் வரோணும் போல  இருக்கு. செய்யட்டா?” எடுத்திருந்த கறுப்புக் கோப்பியின் கடைசிச் சொட்டையும் உறிஞ்சிக்கொண்டே கேட்டான்.

“ப்ச்! உள்ள விசருக்கு நீ வேற. இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தனி எல்லா? இன்னும் கொஞ்ச நேரம்தான்  ப்ளீஸ் ஜோன்!” என்றவனுள்ளும் கோபம் கனன்றது. பின்ன, இத்தனையாண்டுகளில் தன்பாட்டில் தானும் நன்றாகத் தெரிந்த வேலையுமாக  இருந்தானே. ஒரே நாளில் நிலைமை தலைகீழாகிவிட்டிருந்தது. இன்று, இப்படியெல்லாம் சக தொழிலாயிடம் கெஞ்ச  வேண்டியிருக்கிறதே! அதற்குக் காரணமானவனுக்குத் தான் யார் என்று காட்ட வேண்டாமா?

‘வரட்டும் ஒரே செருகு’ பற்களை நறநறத்தபடி கார் பார்க்கிங்கில் காத்து நின்றான், அவன்.   

“தோமஸ்  தோமஸ்,  மெயின் என்டரென்ஸுக்கு வா. குயிக்! அவே எங்கயோ நடந்து போகப் போயினமாம்.” பதற்றமாகச் சொன்னபடி எழுந்த ஜோன், வலு இயல்பாக, துர்கா ஆட்களுக்கு முன்னால் மெயின் என்டரன்ஸ் நோக்கி நடந்தான்.

உள்ளே இருந்தவர்கள் வாயிலருகில் வருவதற்கு முன்னரே அந்த இடம் வந்துவிட்டான், தோமஸ். அவனும் ஹூடிதான். கறுப்புக்  கண்ணாடியும் மேலதிகமாக மாஸ்க்கும். ஹூடி பொக்கற்றுக்குள் மறைத்திருந்த கத்தியை வலக்கை இறுகப் பற்றிக்கொண்டிருக்க, கொக்கென வாயிலில் பார்வை பதித்துக்  காத்திருந்தான். 

கண்சாடை  காட்டியபடி வெளியே வந்த ஜோன், தோமஸுக்கு  எதிரே ஆயத்தமாக நின்றுகொண்டான். அவன் பின்னாலே  துர்க்காவும் ஒலிவியா வந்தார்கள். தோமஸ் நெற்றி சுருங்கியது. எங்கேயோ பார்த்த முகம் போலிருந்தது. சட்டென்று நினைவு வரவில்லை. அவன் பார்வையில் பட்ட ஏதன்  உருவம், அதைப் பற்றி மேலும் யோசிக்க இடம் கொடுக்கவில்லை. 

வேட்டைக்குத் தயாராகும் பாணியில், புலன்களையெல்லாம் ஏதன் மீது குவித்து இயங்க முயன்றவன் அந்த நொடியே  இயக்கம் மறந்து உறைந்து நின்றுவிட்டான். அதிர்வில் விரிந்த விழிகள் இமைக்க மறந்தன. தடதடத்த இதயமும் மூளையும் இணையும் வழி தெரியாது தட்டுத் தடுமாறிப்போயின. என்ன பரிதாபம் என்றால் பளபளக்கும் கூரான கத்தியை வெளியில் எடுத்துவிட்டிருந்தான். 

நண்பனின் துரிதமான இயக்கத்தை எதிர்பார்த்திருந்த ஜோன் மிகுந்த பதற்றமானான். இவனுக்கு என்னவாகிற்று, விளையாடும் நேரமா இது?  நண்பன் என்றெல்லாம் பார்ப்பதா நழுவி விடுவோமா என்றுகூட நினைத்துவிட்டான். எல்லாம் கணம்தான், நண்பன் இந்தளவுக்கு இறங்க என்ன காரணம் என்று தெரியுமே. அவன் செய்யத் தவறிய காரியத்தைச் செய்துவிட்டுப் போவோம் என்ற முடிவுக்கு வந்தான், ஜோன். இரண்டாம் தரமாக ஒரு விசயத்தில் தோற்பதா என்ற உணர்வு வேறு உசுப்பி விட்டிட்டு. சரேலென்று திரும்பியவன் கத்தியை வெளியில் உருவியெடுத்த கணம் பின்புறமிருந்து  இரும்புக் கரம் இரண்டு அவனைப்  பிடித்து வளைத்துவிட்டிருந்தன.

கத்திகளோடு இருவர், அவ்விடம் கலவரமடைந்திட்டு. கூச்சல் குழப்பம். அதில் தோமஸ் தன்னுணர்வுக்கு வரும் போது அவனும் பிடிபட்டிருந்தான். ஏதன் கிராண்ட்பா டோனி நியமித்திருந்த தனியார் பாதுகாப்புக் காவலர்கள், கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு இவர்களுக்காகத்தானே காத்திருந்தார்கள். மோலுக்குள் ஜோன் இவர்களையே பின்தொடரும் போதே கவனித்துவிட்டார்கள். மிகுதி கடினமாக இருக்கவில்லை. 

இப்படியென்று தகவல் பெற்ற காவல்துறையும் விரைந்து வந்துவிட்டார்கள். அதற்குள், “என்ன வேலை நீ பாத்திருக்கிறாய்?” என்றபடி தோமஸை  எட்டி உதைத்துத் தள்ளியிருந்தான், ஜோன். நண்பனை அடித்துத் துவைக்கும் ஆவேசம். கைகளில் விலங்கிட்டுப் பிடித்திருக்கையில் எப்படி? அவன் வாயால் தூசணங்கள் வழுக்கி விழ, பளார் என்று இரண்டு அறை கொடுத்துத்தான் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள், காவலர்கள். 

எதற்காக அவர்களைத் தாக்க வேண்டும், அதுவும் இரண்டாம் தடவையாக என்ற எண்ணம் ஏதன் மனத்தை அரித்தெடுத்திட்டு. 

அதேநேரம் அந்த இருவரினதும் முகங்கள் தெளிவாகத் தெரியும்படி கண்ணாடி, ஹூடியை அகற்றினார்கள். தோமஸின் மாஸ்க் கழற்றப்பட்டது.

 ஏதனுக்கு மட்டுமில்லாமல் துர்க்காவுக்குமே தோமஸை அடையாளம் தெரிந்தது.

“அந்த பிற்பொக்கற்  ஏதன்!” என்றபடி, சட்டென்று அவனை நெருங்கி மேற்கையோடு பிடித்தபடி நின்ற துர்க்கா, வெளிப்படையாகவே நடுங்கினாள். அவள் மட்டுமல்ல, ஐவருக்குமே அவ்வளவு அதிர்வு. அன்று நடந்ததை வாய் வார்த்தைகளால் கேட்டிருந்த ஏவாவோ, சில்லிட்டுப் போய் ஒலிவியாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். 

 “இவனா அண்டைக்கும் வந்தது? அப்ப என்னைக் கொல்லவா வந்தவே? ஐயோ உங்களையுமா ஏதன்? எல்லாம் இந்த ஃபோனுக்கா? அப்பிடி என்ன இதில இருக்கு?” நடுங்கும் குரலில் கேட்டவளால் உண்மையில் சீராகச் சிந்திக்க இயலவில்லை. சிந்திக்கும் திராணி இருந்திருந்தால் இப்படி இவனோடு ஒட்டிக்கொண்டு நிற்பாளா? 

அந்நிலையிலும் ஏதனுள் இந்த நினைவுதான். பிறகு தயங்காமல் உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை என்பாள் என்று நினைத்தபடியே அவளைப் பார்த்தவன் தோளில் பரிவாகத் தட்டிக்கொடுத்தான். 

“எங்களுக்கு ஒண்டும் நடக்கேல்ல துர்கா. ரிலாக்ஸ். கைஸ் நீங்களும்தான்.” என்றவன், ஒலிவியாவின் தலையை வருடிவிட்டு, “ஏவா என்ன நீ?” கண்ணீரோடு நின்ற  சகோதரியை மறுகையால் பிடித்து அணைத்துக்கொண்டான். 

“இவேயல வீட்டுக்கு அனுப்பி விடுவம் ஏதன்.” கூட்டம் கூடியதும் இவர்களின் ஒவ்வொரு அசைவுகளும்  கைப்பேசிகளில் பதிவாவாவதும் வேர்த் முகத்தைச் சுருங்க  வைத்திட்டு. “ என்ன விதமான மனிதர்கள் இவர்கள்? வர வர ஆறாவது அறிவைத் துளைச்சிட்டுத்தான் நடமாடுகினம். செய்க்.” கோபப்பட்டான் .

அதேநேரம் கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். இவர்களையும் காவல் நிலையம் வரும்படி சொல்லிவிட்டு, அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது, காவல்துறை வாகனம்.

நடந்ததைத் தாத்தாவிடம் சொல்ல வேண்டாம் என்று அந்தத் தனியார் பாதுகாப்பு ஆட்களிடம் சொல்லிவிட்டுத்  தம் காரில் காவல் நிலையத்துக்குப் பயணமானார்கள்.

சென்ற வேகத்தில் அந்த இருவரோடும் அல்லது  அந்த பிற்பொக்கற்றிடம்  கதைக்க வேண்டும் என்றான், ஏதன். அவனுக்கு நாலு அறைகள் கொடுத்து என்ன காரணத்துக்காக இந்த வேலை செய்யத் துணிந்தாய் என்று கேட்டுவிட வேண்டும் போலிருந்தது. சொல்வானா  என்பது ஐமிச்சம்தான். இருந்தாலும் கேள் என்றது மனம். 

காவலரோ, தாம் விசாரணை செய்யாமல் கதைக்க அனுமதிக்க முடியாது என்றவர்கள், அந்த இருவரும் அறிமுகமானவர்களா, தாக்க வந்த காரணம் ஏதாவது தெரியுமா என  வினவினார்கள்.

error: Alert: Content selection is disabled!!