ஏதனின் இலஞ்சியவள் 25 – 2

அந்தத் தோமஸ், துர்காவின் கைப்பேசியைப்  பறித்ததில் நடந்தைச் சொன்னான் ஏதன் . முதல் முறை விமான நிலையத் தாக்குதல் பற்றியும் சொல்ல, விசாரித்துவிட்டுச் சொல்வதாகக் கூறி  இவர்களை அனுப்பி வைத்தார்கள். 

இவர்கள் அப்பார்ட்மெண்ட் வந்து சேர்க்கையில் அங்கு ஏதனின் தாத்தா, பாட்டி, தாய் மற்றும் மூத்த சகோதரி ஐலா என்று அனைவரும் வந்திருந்தார்கள். அந்தத் தனியார்ப் பாதுகாவலர்கள், நடந்த சம்பவம் பற்றிச் சொல்ல வேண்டாம் என்றதையும் சேர்த்தே தாத்தாவிடம் சொன்னதன் பயன்.

எல்லோரும் மிகவுமே பயந்துதான் இருந்தார்கள். இரண்டாம் தடவை திட்டமிட்டுத் தாக்க முயன்றிருக்கிறார்களே! என்ன நடந்தது என்று கதைக்க ஆரம்பித்து, அன்று, துர்காவின் கைப்பேசி பறித்த விசயம் வரை கதைபட்டது. 

“இது உனக்குத் தேவையே இல்லாத வேலை ஏதன். அண்டைக்கு அந்த வெட்டு ஆழமா விழுந்திருந்தா.”  இத்தோடு, எத்தனையோ தடவைகள் இதையே சொல்லிவிட்டார், சோஃபியா. மீண்டும் சொன்னார். அதுவும் துர்காவை முறைத்தபடியிருந்து. 

“அதானே, உனக்கு ஏதாவது நடந்தா இவேயா பதில் சொல்லுவினம்.” துர்காவை வெறுப்பாகப் பார்த்தாள், ஐலா. “முதல், எங்கட குடும்பத்துக்க நடக்கிற விசயங்களில வெளியாள்களுக்கு என்ன வேலை எண்டு கேக்கிறன்?  எந்த நேரம் பாத்தாலும் இவா ஏன் இஞ்ச நிக்கிறா? விலத்தி வையுங்க ஒரு பிரச்சினையும் வராது ” என்றவள், “அது எப்பிடி விலத்திப் போறது? கோல்ட் டிங்கர்.” என்று முணுமுணுத்துவிட்டு விருட்டென்று வெளியேறியது எல்லோருக்குமே கேட்டது. 

துர்கா பெரும் அவமானத்தில் குன்றிப்போனாள். அவளையும் அறியாதுதான் ஏதனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பெரும் அந்தரம். “சொறி துர்கா. ஐலாவுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன்.” நகர்ந்து அவள் கரம் பற்றிச் சொன்னான். தாய் முகம் கோபத்தில் இறுகுவதை அவன் பொருட்படுத்தவே இல்லை.  

“ப்ச் விடுங்க.” கையை விடுவித்துக்கொண்ட துர்கா, இனியும் இங்கிருப்பது அழகில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். தன் பொருட்களை எடுக்கும் பொருட்டு அறைக்குள் நுழைந்தவள் கைப்பேசி அதிரவே எடுத்துக் பார்த்தாள்.  

‘இப்ப அவுஸ்திரேலியாவில  நடுச்சாமமா இருக்குமே . இன்னும் தூங்காம இவே என்ன செய்யினம்?’ என்று நினைத்துக்கொண்டே பார்க்கையில் ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருப்பது தெரிந்தது. வீட்டில் இருந்தும் சிறிய தாய் வீட்டில் இருந்தும் போட்டி போட்டுகொண்டு வந்திருந்தன.

நாக்கைக் கடித்துக்கொண்டாள். ‘செத்தன்  இண்டைக்கு.” மனத்துள் முணுமுணுத்தபடி அழைப்பை ஏற்று, “ம்மா”  வலு அன்போடு அழைத்தாள்.

“நீ என்ன நினைச்சுக்கொண்டு அங்க இருக்கிற எண்டது எனக்குத் தெரியோணும் துர்கா.”கத்தினார் அவள் அன்னை . சட்டென்று கைப்பேசியை விலத்திப் பிடித்தவள், “சொன்னா அடிப்பீங்கம்மா. நீங்க நம்பினாலும் இல்லை எண்டாலும் நான் இஞ்ச ஒரு வெள்ளையப்  பாத்திட்டனே…டொட்ட டொயிங்,” தாயைச் சீண்டி  வம்பிழுத்தாள்.

‘Before words could speak, my heart already knew you loved me’  என்று நெஞ்சுக்குள் குறுகுறுப்பூட்டியது ஏதன் உருவம் . 

‘சீ போ, உனக்கும் உன்ர வீட்டு ஆக்களுக்கும் பெரும் நினைப்பு என்ன?  கோல்ட் டிங்கர் நான். ம்ம்ம் …பெரிய தங்கச் சுரங்க முதலாளி இவர் பாருங்க. போடா டேய்…’ மனத்துள் கத்தி அவனை விரட்டிக்கொண்டு நிற்கையில் செவிப்பறை கிழியும் அளவுக்கு மூச்சு விடாது கத்தினார், அவள் தாய்.

“ம்ம்மாஆஆ …அச்சோ இல்ல இல்ல, வெள்ளையையும் பாக்கேல்ல கறுப்பனையும் பாக்கேல்ல.  உண்மையா அது பகிடிக்கு.”என்றவள், “ இத்தின தடவைகள்  எடுத்திருக்கிறீங்களே, சொறியம்மா. ஃபோன் சைலண்டில இருந்தது. என்ர செல்ல அம்மாக்குச் சரியான கோவம் வந்திட்டு. ஓடிப் போய்த்  தண்ணி குடிச்சிட்டு ஓடி வாங்கன.” கிண்டலும் செல்லங்கொஞ்சலுமாகத்  தாயைச் சமாதானம் செய்யப் பார்த்தாள்.

அவள் அன்னை மசியவில்லை. இன்று காலை மோலில் நடந்த சம்பவம், அதில் தோமஸும்  அவன் நண்பனும் கைதாவது வரை இன்ஸ்டாவில் வந்துள்ளதாகச் சொன்னவர்  உண்மையில் நன்றாகவே பயந்திருந்தார்.

“கோல் எடுத்தா எடுக்கிறாய் இல்ல. சித்தி ஆக்களும் சரியாப் பயந்திட்டினம். உனக்கு  இண்டைக்கு  கம்பஸ்  இருந்தும் நீ ஊர் சுத்தப் போயிருக்கிறாய் என்ன? ஏதாவது நடந்தால் ஆர் பொறுப்பு துர்க்கா? ஒலிவியா வந்ததும் அங்க நிண்டதும் காணும். கெதியா சித்தி வீட்ட போற வழியப் பார். இல்லையோ, அடுத்த ஃபிளைட்டில நீ இஞ்ச வரோணும் அல்லது நாங்க அங்க வரோணும். எது வசதி?” தாய்க்கு கோபம் உச்சத்தில் என்று உணர்ந்தவள் சட்டென்று அடங்கிவிட்டாள்.

“ம்மா சொறி சொறி சொறி! இந்தா நானே சித்தி வீட்ட போகத்தான் வெளிக்கிடுறன். இனி எங்கயும் போய்த் தங்க மாட்டன் மா. காலேல நடந்தது ஒரு ஆக்சிடென்ட். சோசியல் மீடியாவில வாறதுகள நம்பாதீங்க எண்டா கேக்கிறேல்ல. இனி இப்பிடி நடக்காது, இட்ஸ் ப்ரோமிஸ் மா!” என்று, ஒருவாறு அவரைச் சமாதானப்படுத்திவிட்டு தந்தையோடும் கதைத்துவிட்டு வைத்தவள் நீண்டதாக பெருமூச்சு விட்டுக்கொண்டே திரும்பினால், அறையின் வாசலில் ஒருபுறம் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு இவளையே பார்த்தபடி நின்றிருந்தான்,ஏதன். 

ஐலாவைத் தொடர்ந்து பெரியவர்களும் ஏவாவும் விடைபெற்றுச் சென்றிருக்க, தன் சகோதரி சொன்ன ‘கோல்ட் டிங்கர்’ என்ற வார்த்தை எந்தளவுக்கு இவளைக் காயப்படுத்தியிருக்கும் என்றுணர்ந்தவன் சமாதானப்படுத்தும் நோக்கில் வந்திருந்தான்.  

‘ஐயோ அம்மாவோட இங்கிலீசில கதைச்சனே! எல்லாம் கேட்டிருக்கும்.’ என்று எண்ணியவளுக்கு, வெள்ளையைப் பார்த்துவிட்டதாகச் சொன்னது நினைவில் வந்து பதற்றம் கொடுத்தது. மீண்டும் அவன்,Before words could speak, my heart already knew you loved me’ என்ற அதே வார்த்தைகளை அவள் விழிகளை ஊடுருவிக்கொண்டு  சொல்வது போலிருக்கவே, தலையை உலுக்கிக்கொண்டே திரும்பிவிட்டாள். மறக்காது சிறு முறுவலைச் சிந்திவிட்டுத்தான்.

அவன் உள்ளே வருகிறான் என்றது காலடிச் சத்தம். சட்டென்று திரும்பி, “என்ன ஏதன்?” என்றவள் முழுமையாகச் சுதாரித்திருந்தாள்.

“என்ன வேணுமோ? கேட்டா கிடைக்குமா?” என்றவன் பார்வை கனிந்து அவளில் உள்ள நேசத்தைக் காட்டியது. அவளுள்தான் சுறுசுறுவென்று கோபம் ஏறியது.

‘சுத்தி எவ்வளவு பிரச்சினை, இதுக்க ஆளுக்குக்  கிளுகிளுப்பு. அதோட, ஆரிட்ட வந்து தனகப் பாக்கிறார்.’ பற்களைக் கடித்தவள், “கிடைக்கும் கிடைக்கும் முகம் பழுக்கக் கிடைக்கும்” என்றுவிட்டுதான் முழித்தாள்.

‘ஓஓஓஓ கடவுளே!’  மானசீகமாக தலையில் கை வைத்து நின்றாள், துர்க்கா. 

அவனோ, கோபம்  எல்லாம் கொள்ளவில்லை. இரசனையோடு பார்த்தபடியே நெருங்கி வர,  சட்டென்று அப்பால் நகர்ந்த துர்க்கா, வேகமாகத்  தன் கைப்பையையும் மற்றைய பையையும் எடுத்துக்கொண்டாள்.

இப்போது அவன் முகபாவம் மாறிற்று. “எங்க போற?” என்றவன் குரலில் கோபம் எட்டிப்பார்க்க முனைந்தது.  

“அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம்.” என்றவள் விருட்டென்று வெளியேறி  இருந்தாள். கணங்கள் சிலதுகள் அப்படியே நின்றிருந்தவன் பின்னால் விரைந்தான்.

“துர்கா எங்க வெளிக்கிட்டுட்ட? இண்டைக்கு யுனி போகேல்ல எண்டு எல்லா சொன்னனி? என்ன பேக் எல்லாம் கொண்டு போறியா? ஏன், திரும்ப வரமாட்டியோ?” அப்போதுதான் உணவுக்கு ஓடர் செய்து முடித்திருந்த ஒலிவியா எழுந்து ஓடி வந்தாள்.

“சித்தி வீட்டுக்குத்தான் ஒலிவியா.” என்றவள் தாய் கத்தியதைச் சொல்லிவிட்டு , “இன்னும் ரெண்டு நாள்தானே, மூண்டாம் நாள் விடிய உனக்கு ஃபிளைட். நான் நேர ஏர்போட்டுக்கு வாறன் செல்லம்.” ஒலிவியாவைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சியவள், வேர்த்திடமும் சொல்லிக்கொண்டு நகர்ந்தவள், குறுக்கே வந்த ஏதனை முறைப்போடு பார்த்தாள்.

“நாடகம் போட வேணாம் ஏதன், தள்ளுங்க.வெடுக்கென்று அவள் சொன்ன விதம் ஏதனுக்குக் கோபத்தைக் கிளறிவிட்டிருந்தது.

“ஒலிவியா ஆட்கள் போன பிறகுதானே வெளிக்கிடுவ  எண்டு சொன்னனி? இப்ப என்ன அவசரம் எண்டு வெளிக்கிடுற?  நில்லு, நான் உன்ர  அம்மா அப்பாவோட  கதைக்கிறன்.” கைப்பேசியை எடுத்தான். அவனே எதிர்பாராது பட்டென்று பறித்து அங்கு அமர்ந்திருந்த ஏவாவிடம் கொடுத்தாள். 

“என்ர  வீட்டில நீங்க கதைக்க என்ன இருக்கு? முதல் நீங்க …” நீ யார் என்று கேட்க வந்தவள் நிறுத்திவிட்டாள். 

“போயிட்டு வாறன்.” விறுவிறுவென்று வெளியேறினாள்.

“ஒலிவியா சாப்பிடுங்க , நான் கெதியா வந்திருவன்.” என்றவன், “ இவளோட…” என்றுவிட்டு, அவர்கள் பதிலுக்குக் காத்திராது ஓடினான். 

error: Alert: Content selection is disabled!!