அதற்குள், மோல் வாயிலில் நடக்க இருந்த தாக்குதல் பற்றிய விபரங்களை எல்லாம் காலையில் இன்ஸ்டாவில் பார்த்ததைச் சொல்லி, நலம் விசாரித்து அமர வைத்துவிட்டார், தாத்தா.
“இவர்தான் இப்ப கூட்டிக்கொண்டுவந்து விட்டவர்.” பொதுவாகச் சொன்ன துர்க்கா, “என்ன ஏதன்?” என்றாள் அவனிடம். அவன் வந்து அமர்ந்திருந்த விதம் அவளுள் ஒருவிதமான எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவித்தது. அது மிகச் சரி என்றது அவன் அடுத்துச் சொன்னது.
“கிராண்ட்பா, ஐ லவ் துர்கா டீப்லி, ஷி மீன்ஸ் தி வேர்ல்டு டு மீ. எவ்ரி டைம் ஐ திங்க் ஒஃப் மை ஃபியூச்சர், ஐ சீ ஹேர் பை மை சைட். ஜ கான்ட் இமாஜின் மை லைஃப் வித்தவுட் ஹேர். ஐ ட்ருலி வாண்ட் டு மரி ஹேர் அண்ட் ஸ்பென்ட் தி ரெஸ்ட் ஒஃப் மை லைப் மேக்கிங் ஹேர் ஹாப்பி!” என்று, அவன் அமர்ந்த மென்னிருக்கையில் தானும் அமர்ந்துகொண்ட பெரியவர் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டே சொல்லியிருந்தான்.
கேட்ட தாத்தா மட்டுமா, அம்மம்மாவும் துர்க்காவுமே அதிர்ந்து போனார்கள். தாத்தா பார்வை சரேலென்று பேத்தி நோக்கித் திரும்பிற்று.
“அம்மாளே ! என்ன கூத்து ஆச்சி இது? உண்மையாவே இந்த வெள்ளையைக் கட்டப் போறியா நீ? முதல் இதுக்கோ இஞ்ச வந்தனீ? வந்து மூண்டு மாதங்கள் கூட ஆகேல்லயே. அதுக்க எப்பிடி? இல்லாட்டி, இஞ்ச வந்துதான் இவேயப் பழக்கம் எண்டு எங்களிட்டப் பொய் சொன்னியா? இஞ்ச பார் குஞ்சு இதெல்லாம் இப்ப நல்லாத்தான் இருக்கும். எத்தினை வருசங்களுக்குத் தாங்கும் சொல்லு? வேணாம் ஆச்சி. உன்ர அம்மாவும் அப்பாவும் இடிஞ்சு போயிருவினம். வேணாம் விட்டிரு!” நடுங்கும் கரங்களால் அவள் தாடையைப்பற்றியபடி தழுதழுத்தார் அம்மம்மா. அவர் கண்களால் கண்ணீர் வடிந்தது.
அவனோ, அவளைத் தன் உலகம் என்கிறான். அவளில்லாது அவனுக்கு எதிர்காலமே இல்லையாம். அவளை எப்போதும் மகிழ்வோடு வைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை வாழ விருப்பம் என்கிறான்.
தாத்தா மீண்டும் பேத்தியைப் பார்த்தார். அவள் விழிகளிலும் நீர்த்திரை. ஆனாலும் முகம் கல்லாக இறுகிக் கிடந்தது. அவள் பார்வை ஏதனில் அழுத்தமாகப் படிந்து கிடந்தது.
இதுதான் நீ. உன் சுபாவம். அது மாறவே போவதில்லை. நீ விரும்புகிறாய் என்றது மட்டுமே உனக்குப் போதுமாக இருக்கிறது என்ன?
இப்படித் திடுமென்று வந்தமர்ந்து, நெஞ்சைத் தொடும் வகையில் உன் மனத்தை உருக்கமாகச் சொல்லி முடித்தாகிற்று. கேட்கும் இந்த வயதானவர்கள் மனநிலை பற்றிய கவலை உனக்கு இல்லை.
மீண்டும் மீண்டும் மறுக்கிறேனே என்று கூட யோசிக்கவில்லை. என் மனமோ, விருப்பு வெறுப்புப் பற்றிய கவலையோ உனக்கு இல்லை. நான் உன்னை விரும்புகிறேன். நீயும் விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும் என்றது தாண்டி, என்னை நீ விரும்பித்தான் ஆக வேண்டும், என் விருப்பை நீ இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றது போல் அல்லவா நடந்து கொள்கிறாய்!
உன் வீட்டில் என்னவென்றால் நான் உன்னிடம் உள்ள பணத்தைப் பார்த்துவிட்டு ஒட்டுகிறேன் என்று பழி சொல்கிறார்கள்.
கோபமாக எண்ணிக்கொண்ட துர்காவின் மனம் சற்றுமே ஏதன்பால் இளகவில்லை. அவன் காட்டும் இந்த அதீத நேசம் அவளை எரிச்சல் கொள்ள வைத்தது.
“அம்மம்மா ப்ளீஸ், அழுகிறத நிப்பாட்டுங்க.” என்று, அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டவள் அவரோடு அவர்களை நோக்கி நடந்தாள்.
ஏதன் மகிழ்வோடு தொடர்ந்தான். “நீங்கதான் எங்கட கலியாணத்த நடத்தி வைக்கோணும். அப்பாக்கு இப்பதான் சேர்ஜரி நடந்தது. கொஞ்சம் சுகம் வரவிட்டு அம்மா அப்பாவோட வந்து கதைக்கிறம். ஏனோ இப்பவே உங்களிட்ட இதைச் சொல்லோணும் போல இருந்தது கிராண்ட்பா . அதுதான் வந்து சொல்லிட்டன்.” என்று முறுவலித்தவன், அந்த வயதானவர்களை வசீகரிக்க முயன்றான்.
தாத்தாவை வசீகரிக்கவே செய்தான். வெள்ளைக்காரன். இது என் வாழ்க்கை, நீயெல்லாம் தலையிட்டு அனுமதி தர யார் என்றெல்லாம் இருக்கவில்லையே! ஆரோன் டேல் மகன், செல்வச் செழிப்பில் மூழ்கிக் கிடப்பவன். அதை, அவன் எந்தவிதமான செய்கையிலும் காட்டவில்லையே! அவன் எளிமையும் பணிவும் அன்பும் அவரை மிகவுமே கவர்ந்தது.
ஆனால் பேத்தியைக் கல்யாணம் செய்து கொடுக்க இது போதுமா என்ன? ‘தம்பி நீங்க எங்கட சனமா இருந்திருக்கலாமே!’ மனத்துள் இப்படித்தான் எண்ணிக்கொண்டார். பேத்தி ஒரே பிடியில் நின்றால் என்ன செய்வது? பெரியவர் தவித்துப் போனார்.
அவர்கள் பரம்பரையே வெளிநாடுதான். எண்பதுகளில் இருந்து வேலைவாய்ப்பு என்று வர ஆரம்பித்தவர்கள். இதுவரை , தம் சனம் தாண்டிய திருமணம் என்று நடந்ததில்லை. காதல் திருமணங்கள் ஏராளம் . ‘காதலிக்கலாம், ஆனால் எங்கட ஆக்களா இருக்கோணும்.’ என்றது, ஏதோ ஒரு வகையில் பிள்ளைகள் மனத்துள் பதிக்கப்படுவதால் அது நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.
பெரியவர் இப்படி மனத்துள் திக்குமுக்காடிக்கொண்டிருக்க, வலு நிதானமாக வந்து அவர்களுக்கு முன்னாலிருந்த இருக்கையை நிறைத்தாள், துர்கா. பதற்றம் விலகாது கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்துகொண்டார், அம்ம்ம்மா.
“கிராண்ட்மா ஏன் அழுகிறீங்க? துர்க்காவ நான் சந்தோசமா வச்சிருப்பன்.” சட்டென்று எழுந்துவந்து அவரை அணைத்துக்கொண்டவன் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி சொன்னான்.
அம்மம்மா மிகவுமே அந்தரப்பட்டுப் போனார். “இல்ல, இப்பிடித் திடுதிப்பெண்டு வந்து சொன்னா, பதற்றமா இருக்காதா சொல்லுங்க?” என்றவருக்கு அவனில் கோபித்து என்ன பயன் என்று இருந்தது. அவன் கதைப்பதற்கும் தனக்கும் எவ்விதமான சம்மதமும் இல்லை என்ற கணக்கில் வலு அமைதியாக அமர்ந்திருக்கும் பேத்தியைக் கோபமாகப் பார்த்தார்.
அவளோ, ‘என்ர மகிழ்ச்சிக்கு எப்பவும் நான்தான் பொறுப்பு ஏதன்’ என்று நினைத்தபடி, ஏதனை நிதானமாகப் பார்த்தபடி இருந்தாள். நறுக்கென்று கதைத்து அவனை நோகடிக்கும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லவே இல்லை. ஆனால், அது நிகழ்ந்து விடுமோ என்ற தயக்கம் வார்த்தைத் தெரிவில் இறங்கியிருந்தது.
ஏதன் வீட்டினுள் நுழையும் போதுதான் துர்காவின் சிறிய தாயாரும் வேலை முடித்து வந்தார். அவருக்கு ஏதன் இன்னார் என்று தெரியவில்லை. “ஆர் இந்த வெள்ள? வீடு திறந்து இருக்கு எண்டோன்னா இப்பிடியா உள்ள நுழையிறது? ஐயோ கள்ளனோ!” என்றபடி விரைந்து வந்தவர் வெளியே பாதையோரமாக நின்றிருந்த அவன் காரைக் காணவில்லை.
வேகமாக உள்ளிட்டவர், அவன் தன் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்தவும் ‘ஓ செஃப்ட மகனா?’ என்று, அவனை வரவேற்கும் நோக்கில் இரண்டு அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார். அடுத்து அவன் சொன்ன செய்தி அப்படியே நிறுத்தியிருந்தது. அதுமட்டுமா? கணமும் தாமதிக்காது சகோதரிக்கு அழைத்துவிட்டார்.
“லைனில நிண்டு கதைக்கிறதுகள கேள் அக்கா.” என்றபடி நகர்ந்தவர், “என்ன துர்கா இவர் சொல்லுறது? உண்மையோ? அதுக்க லவ்வா? எல்லாமே விளையாட்டா உங்களுக்கு?” இடுங்கிய விழிகளோடு கேட்டபடி அவர்கள் முன்னால் சென்று நின்றார்.
“பச்!அவருக்கு விசர் சித்தி.” என்று தமிழில் சொன்னவள், “அதான் தெளிவா அறுத்துறுத்துச் சொன்னாரே சித்தி, என்னைக் காதலிக்கிறாராம். கல்யாணம் செய்து வைக்கிறீங்களா எண்டு கேக்கிறார்.” என்றாள் ஒரு சாதிக் குரலில். பார்வை அவனில் தீர்க்கமாக நிலைத்திருந்தது.
“அதைத்தான் நானும் கேக்கிறன், அப்ப உனக்கும் விருப்பமோ?” கோபமாகவே வினவினார், அவர்.
“அவர் இதே கதையை என்னட்டயும் சொன்னவர், சித்தி. நானும் கனக்கத் தரம் சரிவராது எண்டு பதில் சொல்லிட்டன். ஒருவேளை உங்களுக்குப் பயப்படுறன் எண்டு ஏதும் அவரா நினைச்சிட்டாரோ என்னவோ!” சிறிய தயாரிடம் சொன்னாலும் அவள் பார்வை ஏதனைவிட்டு விலகவில்லை. ஆங்கிலத்தில் அவள் சொன்ன தொனியில் நக்கல் இருந்ததோ என்று எண்ணிய ஏதன் நெற்றி சுருங்கியது.
“அவருக்குப் பிடிச்சது போல எனக்கும் அவரைப் பிடிக்கோணும் எல்லா? என்ர மனசில அப்பிடி எந்த ஃபீலிங்கும் இல்ல எண்டு இவரிட்ட தெளிவாச் சொல்லியாச்சு. அதுக்கும் பிறகும் வந்து இப்பிடி உங்களிட்ட கேக்கிறார்.” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, எழுந்துவிட்டான், ஏதன். மீண்டும் மூக்குடைக்கிறாள். அவள் அடிப்பது அவள் மீதான அன்பில் என்று விளங்கவே இல்லையா இவளுக்கு. மனம் சீற, கோபத்தில் முகம் இரத்தமாகச் சிவந்திட்டு.
“பொய்! நீ சொல்லுறது பொய்! உனக்கு என்னைப் பிடிக்கும் நீயும் என்னை விரும்புற.” அழுத்தமாகச் சொன்னவன், “நானே வலிய வலிய வந்து என்ர விருப்பத்தச் சொன்னோன்ன உனக்கு மதிப்புத் தெரியேல்ல என்ன?” கோபமாகக் கேட்டாலும் அவன் விழிகள் வருத்தத்தைக் காட்டி நின்றன. துர்க்காவின் கண்கள் சர்ரென்று நிறைந்திட்டு.
“உங்களுக்கும் நான் சொல்லுறது விளங்குது இல்ல ஏதன். உண்மையாச் சொல்லுறன் எனக்குப் பயமா இருக்கு. இவ்வளவு கொஞ்ச நாள்களில விரும்பிறன் எண்டு நீங்க சொல்லுறத நம்பேலாம இருக்கு. இந்த விருப்பத்திட ஆயுள் எத்தனை நாள் எண்டு எல்லாம் யோசனை போகுது. எனக்கு ஆரிடையும் டைம் பாஸா இருக்கிறதில கொஞ்சமும் விருப்பம் இல்ல ஏதன். அதோட, ஒருக்காவும் என்ர விருப்பு வெறுப்ப யோசிக்காம நீங்க விரும்பினா நானும் விரும்போனும் எண்டதுபோல நடக்கிறது இன்னுமே பயத்தத் தருது. உறவுக்கு முக்கியம் நம்பிக்கை. இஞ்ச அது இல்ல ஏதன். பயம்தான் பிரதானமா இருக்கு. இப்பிடியான மனநிலையில் உங்கட விருப்பத்த நான் ஏற்றுக்கொண்டா, ஐலா திரும்ப திரும்ப சொல்லுறது போல நான் கோல்ட் டிங்கர்தானோ எண்டு எனக்கும் சந்தேகம் வந்திரும். சோ ப்ளீஸ், என்னை இனிமேலும் தொந்தரவு செய்யாதீங்க! வசதி வாய்ப்பு, இனம், மதம் எண்டு எல்லாவிதத்திலும் உங்கட வீட்டுக்குத் தகுதியான பெண்ணாப் பாத்துக் கலியாணம் செய்யுங்க ஏதன். ப்ளீஸ்!” என்று அவள் சொல்லி முடிக்கவும் விறுவிறுவென்று அவன் வெளியறவும் சரியாக இருந்தது.
துர்க்காவும் வேகமாக மாடியேறினாள். அவள் அழுதுகொண்டு போகிறாள் என்றது பெரியவர்கள் மூவருக்குமே தெரிந்தது.