இலண்டன் புறநகர்ப்பகுதி. இப்படியே இன்னமும் அரைமணிநேரம் சென்றால் பிரிஸ்டல் நகர் வந்துவிடும்.
சுற்றத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. அவன் மனத்திலும் ஏமாற்றமும் கருமையுமே. புத்தம் புதிய ‘டெஸ்லா மொடல் வை’ எங்கென்று இலக்கில்லாது சென்றுகொண்டிருந்தது. இலண்டனை விட்டு வெளியே சென்றுகொண்டிருக்கிறான் என்பது கூட கருத்தில் பதிந்தது போலவே இல்லை.
பொறுமையாகக் காலம் எடுத்துப் பார்த்துப் பழகிக் கூடிக் கழித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பினால்தான் நேசச் சுவர்களில் உறுதியிருக்குமா? நம்பிக்கைக்குரியதாக இருக்குமா? இல்லையோ, பயம் கொடுக்குமோ! எந்த ஊர் நியாயம் இது, முதல் யார் உருவாக்கியது? ஏதனுள் பெரும் கோபம்.
என் அன்பு அவளுக்குப் பயம் தருகிறதாமே! அதன் ஆயுளில் நம்பிக்கை இல்லையாமே! மனத்தில் இந்த நினைப்பு ஓட, அவன் இறுகிக் கிடந்த முகத்தில் கோப முறுவல் மின்னிச் சென்றிட்டு.
மீண்டும் மீண்டும் அவள் அப்படிச் சொன்னதே அவன் செவிகளில் எதிரொலித்தபடியிருந்தது. அதேநேரம் அதைச் சொல்கையில் அவள் முகம் காட்டிய பாவனையையும் கோபம் கொண்ட மனத்தால் கூட ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.
அதுவே, அந்த முகபாவனையும் விழிகள் சொல்லும் செய்தியுமே, முகத்துக்கு நேரே பல தடவைகள் மறுப்பைச் சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் அவளுக்கு அவனில் விருப்பம் உண்டு என்று வலுவாகவே உணர்த்துகிறது.
அவள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, மீண்டும் அவள் முன் போய் நில் என்று அவனை உந்தித்தள்ளுகிறது.
திடுமென்று பிரேக்கில் அழுத்தியிருந்தான், ஏதன். நெடுஞ்சாலை அது. கார் நட்ட நடு வீதியில் நின்றது. நல்ல வேளை பின்னால் வாகனங்கள் வரவில்லை.
சீறலாக, ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன், காரை நகர்த்திப் பாதையோரமாக நிறுத்திவிட்டு, ஸ்டியரிங்கில் தலை கவிழ்த்தான்.
கனத்த மனத்தை அவனால் சுமக்க முடியவில்லை. தலைவேறு இடித்துத் தொலைத்தது. இலஞ்சிப்பூ வாசம் வேண்டுமாம். எந்நேரமும் இப்படிப் பிடிவாதம் பிடிக்கும் மனத்தை எப்படி திசை மாற்றுவது என்பதும் அவன் புத்திக்குத் தெரியவில்லை. இப்படி அல்லாடும் மனத்தைச் சிறிது நேரத்துக்குச் சரி கழற்றிக் கைக்கெட்டாத தூரத்தில் வைக்க முடிந்தால்?
“நீயும் என்ன விரும்புற துர்கா. உனக்கும் சேர்த்தே நான் ஒண்டு ஒண்டையும் செய்யிறன். அதில ஒண்டுதான் உன்ர சித்தி வீட்டுக்கு வந்ததும் எங்கட நேசத்தைச் சொல்லிக் கதைச்சதும். என்ர வீட்டில தெரிஞ்ச விசயம் உன்ர வீட்டுக்கும் தெரியட்டும் எண்டு நினைச்சன். அது உனக்கு ஏன் கடைசிவரை விளங்குது இல்ல?” தழுதழுத்தபடியே கேட்டவன் மனத்தைப் பார்த்துப் பரிகாசம் செய்தபடி காரித் துப்பியது, அவன் புத்தி.
‘இத்தனைக்கும் பிறகு சரிதான் போடி எண்டு நீ விலகிச் செல்லப் போவதில்லையா?’ அதன் கடுமைக்கு முன் அவன் மனம் பிடிவாதமாக நிமிர்ந்து நின்றது. ஆழமான நேசம், புத்தியின் சாதூர்யத்துக்கும் தந்திரத்துக்கும் திட்டமிடல்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்குமே அப்பாற்பட்டது. அதை விளங்கிக்கொள்ள முடியவில்லையோ, தயவு செய்து அப்பாலே போய்விடு என்ற கணக்கில், புத்தியைத் தள்ளி வைத்தது அவனுள்ளம்.
“துர்காதான் என்ர எதிர்கால வாழ்க்கை. இதுக்கு அங்கால இஞ்சால என்னால யோசிக்கவே ஏலாது. எந்தக் காரணத்துக்காகவும் அவள இழக்க நான் தயாரா இல்ல. இல்லவே இல்ல.” மெல்ல முணுமுணுத்தான். அவன் அந்தச் சொற்களை ஆழ்ந்து உச்சரித்ததில், இந்த விசயத்தில் அவனுள் இருந்த பிடிவாதம் தெரிந்தது.
‘இதற்கும் மேல நான் என்ன சொல்லக் கிடக்கு? நீ குழந்தையும் இல்ல.’ சலித்துக்கொண்ட புத்திக்கு, உண்மையில் அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ‘சரி ஒண்டு செய், ஒரு தடவை அவள் என்ன சொல்ல வாறாள் எண்டு ஆழமா யோசிச்சுப் பாரேன் மடையா.’ அதட்டியது. அப்படியே சென்றுவிடாது, ஒலிவியா திருமணத்தில் முதன் முதலாக அவளைச் சந்தித்த கணத்திலிருந்து ஒன்று ஒன்றையும் நின்று நிதானமாக நெடுந்தொடராக அவனுள் ஓட வைத்தது.
தீரா இரசிகனாக அந்தக் கணங்களில் மூழ்கிப் போனான், ஏதன்.
தன் மனத்தை அவளிடம் வெளிப்படுத்திய ஒவ்வொரு இடங்களையும் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தான். துளி துளியாக இரசித்தான். தன்னுள் முறுவலித்துக்கொண்டான். நொந்து கிடக்கும் மனத்துக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டான். அவளுக்கு முத்தமிட்ட கணத்திடம் ‘வன்ஸ் மோர்’ இறைஞ்சினான்.
இப்படியே நிமிடங்கள் கரைய கரைய அவனுமே கரைந்துதான் போனான். அவனையுமறியாதே புத்தியும் மனமும் ஒரு புள்ளியில் இணைந்து கொண்டன. அதன் பயனாக, அவள் தவிர்ப்பும் கோபமும் எரிச்சலோடு உதிர்த்த வார்த்தைகளும் கூட அர்த்தமுள்ளவையாகத் தெரிந்தன. அர்த்தம் தேட முயன்றான். அவனது மொத்த நேசத்துக்கும் உரியவளான, அவன் வாழ்வில் சேரத் துடிக்கும் இலஞ்சியவள் சார்பில் யோசிக்க ஆரம்பித்தான், ஏதன்.
நிமிர்ந்து காரின் இருக்கையில் தலையைச் சாய்த்தவன் விழிகளின் கசிவையும் துடைக்க மறந்து அமர்ந்திருந்தான்.
*****