ஏதனின் இலஞ்சியவள் 27- 2

ஏதனோடு கதைத்துவிட்டு அறைக்குள் நுழைந்த துர்கா வெளியே செல்லவில்லை. சித்தியும் அம்மம்மாவும்  மாறி மாறி நான்கைந்து தடவைகள் அவளைத் தேடி மாடிக்கே வந்திருந்தார்கள். 

“ப்ளீஸ் கொஞ்ச நேரம் தனிய விடுங்க. எனக்கு உண்மையாவே ஒரு பிரச்சினையும் இல்ல. நீங்க தேவையில்லாம எதையும் யோசிக்க வேணாம்.” என்று அவர்களிடம் சொன்னவள், தாய் அழைக்கவும் தாமதிக்காது ஏற்றாள். சிறிய தாய்க்கும்  அம்மம்மாவிடமும் சொன்னதே அவுஸ்திரேலியாவிற்கும் சொல்லப்பட்டது. 

அவளால் விழிகளைத் திறந்து வைத்திருக்க  முடியவில்லை. இறுக மூடிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். மிகவுமே களைத்திருந்தவள் குளிக்க நினைத்தாள். முடியவில்லை. மனம் வரவில்லை. தளர்ந்து தொய்ந்த உள்ளம் போலவே அவளுடலும் சோர்வின் பிடிக்குள் அகப்பட்டிருந்தது. இதுதான் என்று வரையறுக்க இயலாத வகையில் வருத்தம் தொண்டைக்குள் சிக்கி அவளைத் தடுமாற, துடிக்க வைத்தது. 

சரிந்து குறண்டிக்கொண்டவள் முகம் தலையணைக்குள் புதைந்தது. இப்போ அவளை யாருமே பார்க்கவில்லை. இந்தக் கணத்துக்குக் காத்திருந்த கணக்கில் அவள் விழிகள் உடைப்பெடுத்தன. 

திரும்பிப் பார்த்தால் அப்படியொன்றும் நீண்ட தூரமில்லை. அவள் இங்கு வந்து மூன்று மாதங்கள் இன்னமும் முடியவில்லை. அவ்வளவுதான் அவனுக்கும் அவளுக்குமான பழக்கம், அறிமுகம் எல்லாமே. 

சிந்தனை அப்படி இப்படிச் சுழித்துக்கொண்டு ஏதன் என்பவன் பற்றி எண்ண முயன்றது. இக்கணம் அவள் மனநிலை, பொங்கித் தெறிக்கத்  துடிக்கும் விம்மலை அடக்கிய கண்ணீர்ப் பிரவாகம் என எல்லாமே, அவள், ஏதன் முன்னால் உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் காட்டி நிற்கும் கோபத்துக்கும் கண்டிப்புக்கும் தவிர்ப்புக்கும்   எதிரானவையாக இருக்கிறதே!

ஆனாலும் சரியே வராத ஒன்றைப் பற்றிப் பிடிக்க  முனைவதே புலி வாலைப் பற்றுவதற்குச் சமன் அல்லவோ! அது அவளுக்கு வேண்டாம். 

இன்னும் தெளிவாகச் சொல்வதாயின், ஏதனிடம் சொன்ன ‘பயம்’ என்றது வார்த்தைக்காகச் சொன்னதல்ல. அவன் திடீர் நேசத்தில், அதன் ஆயுளில் முழு நம்பிக்கையில்லை என்றதுமே அப்படித்தான். இப்படியிருக்கையில், தன் எதிர்கால குடும்ப வாழ்வில் அனுமானங்களோடு விளையாட அவள் தயாராக  இல்லை. 

 இதுதான், இப்படித்தான் என்கிற ஒரு தீர்க்கமான பற்றுதல் கிடைக்காது அந்த வாழ்வுப் பாதைக்குள் நுழைய அவள் விரும்பவில்லை. இதைத்தாண்டி, காலம் கொடுக்கும் சவால்களும் சோதனைகளும்  சிந்தனைக்கு அப்பாற்பட்டதாச்சே!  அதை, அந்த அந்த நேரம் சமாளித்துக்கொள்ளும் வலு அவளுக்கு உண்டு. 

அதோடு, உள்ளங்களால் இணைந்த அல்லது இணையத் தயாராகும் , இணையும் முயற்சியில்  இறங்கிவிட்ட ஆணும் பெண்ணும் மாத்திரமல்ல ஒரு குடும்பம் என்று நம்புபவள் இவள். இருபக்க உறவுகளும் இணைந்த அவர்களோடு கைகோர்த்துச் செல்லும் வாழ்வே முழுமையான குடும்ப வாழ்வு என்பது அவளுள் ஆழமாகவே பதிந்து போயிருக்கிறது . அதுவே தன்னை வெறுக்கும் மிகவும் கீழாக நினைக்கும் அவமதிக்கும் ஏதன் குடும்பத்தினுள் கால் வைக்கவே பயந்தாள்.

அவள் மறுப்பைத் தெரிவிக்கும் போதெல்லாம் சுருங்கிவிடும், ஏமாற்றத்தை மறைக்காது காட்டும் ஏதனின் வேதனையான  முகம் அவளைச்  சாடத்  துணிந்தது. அவள் புத்தியின் பிடிக்குள் அகப்படாது நேரடியாக இதயத்தைத் தட்டவும் செய்தது.  தேடிச் செல்லாது, மினக்கடாது  கைக்கு வரும் எதுவும்  அது அன்பாகவே இருந்தாலும் பெறுமதி தாழ்ந்துதான் போகுமோ! அவள் மனமே அவள் நடந்துகொள்ளும் விதம்,  எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது.

எதிர்த்து நின்று தன் பக்க நியாயத்தை எண்ணிப் பார்க்க முயன்றாள், துர்கா. எப்போதும் அது இலகுவானதாக இருக்கும். ‘நீ சரியாத்தான் கதைச்ச. இப்பிடித்தான் இந்த விசயத்தப் புத்திசாலித்தனமாக் கையாளோணும். அவனைத் தள்ளி நிறுத்திறதே  உசிதமான செயல்’ என்று, அவளை அவளே பாராட்டிக்கொள்வாள். இன்றோ, அது இயலாது கண்ணீரின் வசம் தன் மனத்தைக் கையளித்திருந்தாள். மனமெல்லாம் உப்புக்கரித்தது.  சுற்றி சுற்றி வந்து அக்கறையை, நேசத்தைக் காட்டுபவன் நினைவுகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு, அவளோடு போராடி அவள் மனத்தில் இடம் பிடிக்க முயன்று கொண்டிருந்தன.  அவளுள் செய்வதறியாத திண்டாட்டம்.

இப்படி அவள் உழன்றுகொண்டிருக்கையில் கைப்பேசி அருட்டியது.  அவளுக்கு யாரோடும் கதைக்க விருப்பம் இல்லை. வீட்டிற்குக் கதைத்துவிட்டாளே! யார் என்றாலும் இப்போ வேண்டாம். தலையணைக்குள் புதைந்திருந்த தலையை வெளியே எடுக்கவில்லை.  அதுபாட்டில் அடித்து ஓய்ந்தது. தாமதிக்காது மீண்டும் பின் மீண்டும் பின் மீண்டும் என்று சத்தமிட எழுந்தமர்ந்தாள். நல்லவேளையாக அழைப்பு ஒலியை மிகவும் குறைத்து வைத்திருந்ததில் தப்பினாள். இல்லையோ, கீழேயிருந்து அம்மம்மாவோ சித்தியோ மாடிக்கு வந்திருப்பார்கள்.

 விருப்பமேயில்லாது எட்டி கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.  அழைப்பது ஒலிவியா. விடாத அழைப்பு அவளுள் ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கியது. அழைப்பை ஏற்று ஹலோ சொல்ல முதல் அங்கிருந்து படபடத்தாள், ஒலிவியா.

“இப்ப நீ எங்க இருக்கிற துர்கா? ஏன் ஃபோன்  அட்டென்ட் பண்ணேல்ல? எங்க ஏதன்? நீ சிலிப்பிக்கொண்டு போவ, அவன் பின்னால ஓடி வருவான் . முதல், ரெண்டு பேரும் மனத்தில என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க?” கோபமாகக் கேட்டாள்.

 துர்கா பதில் சொல்ல முதல், “ இஞ்ச  அவன்ட தமையன் ஐவன் வந்திருக்கிறார். அவர்ட  வைஃப், ஏவாவும் வந்திருக்கினம். அவனைத்தான் கேக்கினம் துர்கா. உனக்குப் பின்னால போனவன் குட்டுப்பட்டுட்டு எங்க நிக்கிறானோ எண்டா  நான் சொல்ல?” மூச்சு விடாது படபடத்தவள், “இப்ப என்ன அலுவலுக்குப் பின்னால வாற எண்டு ஏசினதானே நீ?” நண்பி பற்றி நன்கறிந்தவள் கேட்டாள்.

“பச்! அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல ஒலிவியா. நான் அப்போதே வீட்ட வந்திட்டன். தூங்கிக்கொண்டு இருந்ததில ஃபோன் எடுக்கேல்ல. ஏன், ஏதன் இன்னும் வீட்டுக்கு வரேல்லையோ?” என்று கேட்டவளுள் பதற்றம். 

“இல்லையே! எங்க போறான் எண்டு சொன்னவனா? ஃபோன் அடிச்சா எடுக்கிறானும் இல்ல.” என்று அவள் சொல்ல, இவளுடலில்  நடுக்கமோடியது. இங்கிருந்து  கோபம், வருத்தம் என்று கலவையான உணர்வுகளோடு  சென்றிருந்தானே. கார் வேகமாகச் சீறிக்கொண்டு சென்றதே! ‘ஐயோ! இவ்வளவு நேரமா எங்க போயிருப்பான்?’ மனம் பதறியது. 

 “வை ஒலிவியா, ஐஞ்சு நிமிசத்தில கூப்பிடுறன்.” என்றவள், அவள் பதிலுக்கும் காத்திராது அழைப்பைத்  துண்டித்தாள். அதே வேகத்தில்  ஏதனுக்கு அழைத்தாள்.  கண்கள் தளம்பிக் கசிய மீண்டும் மீண்டும் அழைத்தாள். அவனோ, இவள் அழைப்பைப் புறக்கணித்தான். 

அவன் நேசத்தைப் புறக்கணித்தவளால் அவனின் இந்த தவிர்ப்பைத் தாங்கவே இயலவில்லை. தானாகக் கனிந்து அவளை நாடி வந்த நேசம் அவனது. இதெல்லாம்  சரிவராது, விட்டுவிடு, விலகிச் சென்றுவிடு  என்றது அவள்தானே? இக்கணமோ, இந்த நினைப்பே கசந்தது, தாங்க இயலாத அளவில் கனமானதாக இருந்தது. சகித்தே ஆகவேண்டும். கனத்தைச் சுமக்கவும் வேண்டும்.  அவள்  முகம் மீண்டும் தலையணைக்குள் புதைந்திட்டு. 

இங்கோ, காருக்குள் அப்படியேதான் அமர்ந்திருந்தான்,  ஏதன். திரையில் ஒளிர்ந்த துர்கா என்ற பெயரில் அவன் பார்வை அழுத்தமாக ஒட்டுப்பட்டு நின்றது. மீண்டும் மீண்டும் அவளின் விடாத அழைப்பு அவன் கண்களில் கண்ணீர்த் திரையை உருவாக்கிற்று. அவன் மனமோ சினந்தது. அரங்க மறுத்த கரமிரண்டையும் வன்மத்தோடு பார்த்திட்டு. ‘எடுத்துக் கதையனடா!’ என்று அதட்டிட்டு. அவன் புத்தி அவசரமாகக் குறுக்கால் விழுந்து கிடந்து, ‘எடுக்காதே எடுக்காதே ’ என்று சைகை செய்திட்டு. 

இதுவரை அவள் விடயத்தில் மனம் சொல்வதை மட்டுமே கேட்டு வந்தவன், இம்முறை, புத்தியின் சிறு தலையாட்டலுக்குக் கட்டுப்பட்டான். 

அலைப்புற்றுக்கிடந்த மனம் கட்டுக்குள் வர ஆரம்பித்திட்டு. கைப்பேசியை எடுத்து ஐவனுக்கு அழைத்தான். வேர்த்தோடும் ஏவாவோடும் கதைத்தான். 

“எங்க போய்ட்ட நீ?” மூவருமே முதல் கேட்டது இதைத்தான். சட்டென்று பதில் சொல்ல இயலவில்லை. 

ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவதாகக் கூறி அழைப்பைத்  துண்டித்தவன் காரை இயக்கி வந்தவழிக்குத் திருப்பினான்.

 மீண்டும்  அதே வேகத்தில் நிறுத்தியும் இருந்தான். என்ன முயன்றாலும் முடியாது, பெருமூச்சொன்று நீளமாக  வெளியேறியது .

 நிதானமாகவே குறுஞ்செய்தியைத் தட்டி அனுப்பினான், ஏதன். அடுத்து வீடு நோக்கி விரைந்தது, கார்.

I’ll wait as long as it takes, until your fear fade and you can fully trust the love between us. (உன் பயம் காணாமல் போகும் வரை, நமக்கு இடையேயான நேசத்தை நீ முழுமையாக நம்பும் வரை  காத்திருப்பேன்.) 

துர்கா எழுந்தமர்ந்துவிட்டாள். அச்சிறு சொற்கள் ஒன்று ஒன்றும் அவள் விழிகளைத் தம்பால் இறுக்கமாகப் பிடித்து வைத்துக்கொண்டன. அவை, அளவற்ற உணர்வுகளை  அவளுள் உருவாக்கிவிட்டன. மீண்டும் மீண்டும் வாசித்தாள்.  கண்கள் கசிந்தன. மெல்ல மெல்ல இதழ்களில் இரகசிய முறுவல் நெளிந்தது. 

மனம் உணர்ந்த உணர்வுகளை விளக்கிட வார்த்தைத் தேடலில் இறங்கினாள். அவளுக்கே அவளுக்கான உணர்வுகளை…ப்ச் இன்னொருத்தனுக்கும் சொந்தமானவைதான், இருந்தாலும் மற்றவர்களுக்குக் கடைபரப்புவானேன்? அவனிடம் கூட சொல்லவில்லையே!   மனத்துள் பத்திரமாகப் பொத்தி வைத்துக்கொண்டாள். பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி அதன் வடிவைக் குறைக்க அவள் விரும்பவே இல்லை. 

கண்களைத் துடைத்துக்கொண்டு கண்ணீர்க் கறைபட்ட தலையணையை மறுபுறம் திருப்பிப் போட்டுவிட்டு முகத்தைப் புதைத்துக்கொண்டவள் இதழ்கள் புன்னகையில் விரிந்து கிடந்தன. 

இதுவெல்லாம் சரி வருமா? சரி வரவே வராது. சாத்தியமா? சாத்தியமே இல்லை. அவன் வீட்டில் உன்னைத் தவிர்க்கிறார்கள், அவமதிக்கிறார்கள். உன் குணத்தின் மீது மிகப்பெரிய அளவில் மதிப்பீடுகளை வீண் பழியாக வைக்கிறார்கள். உனக்கு என்று மரியாதை உண்டுதானே? உன் மரியாதை கேள்விக்குறியாகும் இடத்தில் உன் குடும்பம் தலைகுனியும் என்று தெரியும்தானே? இப்படிப்பட்ட உறவு தேவையா?  முதல் எத்தனை காலத்துக்காம் என்று, வரிசை கட்டிநின்ற மதிப்பீடுகளும் கேள்விகளும் அந்தப் புன்னகையின் வீரியத்தின் முன்னால்  நிற்க இயலாது விலத்தி நின்று வேடிக்கை பார்த்தன.

 

error: Alert: Content selection is disabled!!