யன்னலில் முகம் பதித்தவள் விழிகள் மாத்திரம் உயர்ந்தன. நீல வானில் நட்சத்திரக் கோலங்களுள் வெண்மதி. அங்கங்கே திட்டு திட்டாக நகர்ந்த பஞ்சு மேகங்களோடு சுதந்திரமாகச் சீண்டி சீண்டி உறவாடிக்கொண்டிருந்தது, அது. அவள் பார்வை அப்படியே நிலைத்து நின்றது. அவளுக்கே அவளுக்கு என்று உரிமையானவன் மேற்கையை இறுகப்பற்றிக்கொண்டு எட்டாத தோளில் தலை சாய முடியாவிட்டாலும் அவனோடு அணைந்தபடி இந்த வெண்மதியை இரசிக்க முடிந்தால்!
சில்லென்ற காற்று வேறு முகத்தில் மோதியது. ஒருவன் உன்னை விரும்புகிறேன் என்று பிடிவாதமாக வந்து நிற்கிறான். உண்மைக்கு மனத்தில் எத்தனை மகிழ்வும் அமைதியும் இருக்க வேண்டும்? அது பார்த்தால் மனம் முழுதும் தவிப்பும் ஏக்கமும் பயமுமே கலந்து கட்டிக் கிடக்கிறது. அவன் நெஞ்சில் சாய்ந்தபடி, அது எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாகச் சொல்லிக் களைந்தெறிய வேண்டும் போன்றதொரு உணர்வு எழுந்தது. அவளால் அது இயலுமா என்றால் உண்மையாகவே தெரியவில்லை.
“ஆசைக்கு அளவு கணக்கு எண்டு எல்லாம் இல்லவே இல்ல. விட்டா பெருக்கெடுத்து ஓடக்கூடியது. ஒருவனோ ஒருத்தியோ முதிர்ச்சியடைந்தவன் எண்டு காட்டுறதே அந்த அழகிய, ஆனால் அளவு கடந்தால் ஆபத்தை அறிமுகம் செய்யக் கூடிய ஆசைகளை அடக்கி ஆளும் போதுதான். அந்த வேலையைச் செய்யிற அங்குசமாக உன்ர புத்தி எப்பவும் இருக்கோணும். அது சொல்லுறத உன்ர மனமும் கேட்டு அனுசரிச்சு நடக்கோணும்.” என்று, அவள் தாய் அடிக்கடிச் சொல்வார். இதோ இப்போதும் அவர் குரல் அவள் காதோரமாகக் கேட்டது. தறி கேட்டு ஓட முயன்ற, கற்பனையில் மூழ்க முனைந்த மனத்தைப் பிடித்து நிலையாக நிறுத்தினாள், துர்கா.
சில நிமிடங்களுக்கு அவளும் அவனைப் போலவே நேரே முன்னால் பார்த்தபடி விறைப்பாக அமர்ந்திருந்தாள். கண்கள் சொல் கேட்கவில்லை. மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்தன. கடைக்கண் பார்வை ஒன்று அவனைத் தழுவியிருந்தது. சில தடவைகள் இதுவே தொடர்ந்தன. அவன் அசையவில்லை. ‘திடீரெண்டு ரோபோ ஆகிட்டானோ? அச்சச்சோ!’ நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் சந்தேகம் அவளில் முறுவலைக்கொண்டு வந்திருந்தது. விடாது பார்த்துக்கொண்டிருந்தாள். ‘அங்குசமாம் மண்ணாங்கட்டி அங்குசம். இந்த அலுப்படிகிற, மதிப்பில்லாத வேலை எனக்கு வேணாம் சொல்லிட்டன்’. புத்தி காரித் துப்பிவிட்டுப் பதுங்கிற்று.
ஏதன் சட்டென்று திரும்பிப் பார்த்தான். “ வாட்?” விறைப்பாகவே கேட்டிருந்தான். பிறகு என்ன? படித்து படித்துச் சொன்ன பிறகும் உனக்கும் எனக்கும் சரிவராது என்றால்.
“வாட்!”அவன் கேட்ட விதத்திலேயே திருப்பிக் கேட்டாள்.
“நீதான் சொல்லோணும், எவ்வளவு நேரமா என்னையே இரசிக்கிற?” இப்போதும் அவனில் இளக்கம் இல்லை.
“அச்சோ ஆளுக்கு நினைப்பு!”தமிழில் சொன்னவள், “நான் உன்னைப் பார்த்தன் எண்டு நினைச்சிட்டியா? இந்தப் பக்கத்தைவிடவும் அந்தப்பக்க யன்னலால நல்ல காட்சிகள் தெரியுது எண்டு பார்த்துக்கொண்டு வாறன் சரியா?” என்றாள், அதுதான் உண்மை என்றது போல்.
“ரியலி?” கேட்டுக்கொண்டே, வந்த வழியில் காரைத் திரும்பியவன், “இனி அந்த யன்னலாலயே பாத்து ரசி!” சொன்னவன் கரத்தில் கார் சீறிச் சென்றது.
“ஏதன் இதென்ன விளையாட்டா உங்களுக்கு? முதல் வேகத்தைக் குறையுங்கோ!”அவன் தோளில் கை வைத்து உலுப்பியவள் பயத்தில் கையை இழுத்துக்கொண்டாள்.
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு? ஓம், உங்களத்தான் பாத்தனான். சத்தமே இல்ல, நித்திரையா எண்டு பாத்தன் ஏதன் . ப்ளீஸ் வேகத்தைக் குறையுங்கோ!” அவள் சொல்லி முடிக்கவும் கார் பாதையோரமாகக் கிரீச்சென்று நிற்கவும் சரியாக இருந்தது.
“உங்கட காரில வந்து ஏறினனே என்னைச் சொல்லோணும்.”ஆளரவம் இல்லாத காட்டு நெடுஞ்சாலை, அப்போ அப்போ செல்லும் கன்டைனர் வாகனங்கள், அவளையே விழியெடுக்காது பார்த்திருக்கும் ஏதன், பக்கென்று இருந்தது அவளுக்கு. பயத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பிவிட்டது.
“போவம் ஏதன் ப்ளீஸ்!” என்றவள் பயம் அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. அவனுக்கும் அது விளங்கியது.
ஏதன், முகம் சிறுத்துப் போனான். “என்ர காதலியாக, மனைவியாகத்தான் பயம், நம்பிக்கை இல்லை எண்டாய் எண்டு நினைச்சிருந்தனான். அது பாத்தா, ஒரு நண்பனாக் கூட உனக்கு என்னில நம்பிக்கை இல்ல என்ன?” வருத்தமாகக் கேட்டிருந்தான்.
“நான் இப்ப எங்க அப்பிடிச் சொன்னன்? முதல் கார எடுங்க, போய்க்கொண்டே கதைப்பம்.” வெளியில் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னாள்.
அவன் அசையவில்லை. “கேட்டதுக்குப் பதில் சொல்லு? என்னைக் கண்டு பயம் உனக்கு. அப்பிடித்தானே?” என்றவனை, “மோடா நீ? மனுசருக்கு வாற விசரில உன்ன கொல்லோனும் போல இருக்கு .” தமிழில் ஏசியவள், “ கெதியா தமிழ் படிக்கிறீங்க!” வெருட்டல் விட்டாள்.
“வெளில பாருங்க, எப்பிடி இருக்கு? நமக்கு என்ன நடந்தாலும் கேக்க ஆளில்ல ஏதன். அது ஒரு சாதியா… பயமா இருக்கு. அதை விட இஞ்ச ஆரும் உங்களப் பாத்துப் பயப்படேல்ல. உங்கட கிராணி வார்த்தைக்கு வார்த்தை முரடன் எண்டு சொல்ல வேண்டியதுதான். அப்பிடி ஒரு அசுமாத்தமும் இஞ்ச இல்ல.” இதழ்களைப் பிதுக்கியவளை ஒரே இழுவையில் தன் நெஞ்சுக்குள் பொத்தியிருந்தான், ஏதன்.
‘ஐயோ இதுக்குதான் பயந்தனான். முருகாஆஆ காப்பாத்து காப்பாத்து .’ மனம் அலற, நெளிந்து வளைந்து அவனை விட்டு விலக முயன்றாள். அவனுக்கு விலக்கும் எண்ணமே இல்லை.
“ஏதன் விடு! இதுதான் நான் முதலே உன்னோட வரேல்ல எண்டது. காத்திருக்கிறன் அது இது எண்டு பொய் சொல்லிட்டு இப்ப என்ன செய்யிற? என்ர அனுமதி இல்லாமல் தொட மாட்டன் எண்டு அண்டைக்கு வசனம் பேசியதையும் மறந்திட்டியா? இப்பிடிப்பட்ட உன்ன நான் எப்பிடி நம்புறது?”அழுகையோடு அவள் சொல்லி முடிக்கவும் அவளை விலத்திவிட்டிருந்தான், ஏதன்.
அதேநேரம் பின்னால் வந்த பெரிய கன்டெய்னர் வாகனம் சற்றுத் தூரம் சென்று நிறுத்தவும் இவளுக்கு உடல் சிலிட்டுட்டு.
“ஏதன் காரை எடுங்க பயமா இருக்கு.” அவனோடு கோழிக்குஞ்சு போல் ஒட்டிக்கொண்டாள். இந்த நாட்களில் இணையமும் செய்திகளும் சொல்லும் கொடும் செய்திகள்தான் நினைவுக்கு வந்தன.
“ப்ச் துர்கா, ஒண்ணும் இல்ல நேரா இரு!” அவள் உடல் நடுங்குவது தெரிந்தது. தன்னையே நொந்து கொண்டவன் காரை வேகமாகக் கிளப்பினான்.
“வந்த வழில போறம்.” மெல்ல நேராக அமர்ந்து கொண்டே சொன்னவள், அவன் வளைத்துத் திருப்பிச் செலுத்தவும்தான் நிம்மதியானாள்.
சற்றுமுன் என்ன எல்லாம் சொன்னாள்? நினைவுபடுத்திப் பார்த்தவளுக்கு அழுகைதான் வந்தது.
“உண்மையா நான் உங்கள அப்பிடிக் கூடாம நினைச்சு ஒண்டும் சொல்லேல்ல ஏதன் . அந்த இடமே அவ்வளவு பயமா இருந்தது. இதுக்க நீங்க …ப்ளீஸ்… சொறி!” அவன் தோளில் மெல்லச் சாய்ந்தது, அவள் தலை.
“விடு…நான் அப்பிடி நடந்திருக்கக் கூடாது. எஸ்ட்ரீம்லி சொறி!” என்றவன் கரம் அவள் கையைப் பற்றி அழுத்திட்டு. அப்படியே தலை வருடவும் ஆசைகொண்டது. தடா போட்டு விட்டான்.