கிருபனின் கமலி 3 – 2

“அவள் அப்பிடித்தான்டா. நீ உள்ளுக்கு வந்து இரு. ஒரு நிமிசத்தில ஓடி வாறன்.” என்று, அழைத்தான்.

கிருபனும் வந்து அமர்ந்தான். அவன் பார்ப்பதற்கு ஏதுவாகத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்துவிட்டு உள்ளே ஓடினான், அரவிந்தன்.

அவளைக் காணவில்லை. என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு எதற்கு விடாப்பிடியாக நின்று கூப்பிட்டாள்? பார்வை தொலைக்காட்சியில் இருந்தாலும் உள்ளே யோசனை ஓடிக் கொண்டிருந்தது. வீட்டில் பெரியவர்கள் யாரும் இருப்பது போலும் தெரியவில்லை.

சற்று நேரத்தில், பலகாரமும் தேத்தண்ணியும் கொண்டு வந்து டொங் என்று மேசையில் வைத்தாள், கமலி. உண்மையாகவே அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டு தான் இருந்தது. நேற்று இரவு, அவன் சமைத்தது அவனுக்கே கன்றாவியாக இருக்க, வெறுப்புடன் பிரிட்ஜில் தூக்கி வைத்து விட்டு வந்திருந்தான். இப்போதோ, தட்டிலிருந்த முறுக்கு அழைத்தது. அவளின் சுவை அறிந்த நாக்கு, உமிழ் நீரை, எப்போதோ சுரக்க ஆரம்பித்து இருந்தது.

வந்த இடத்தில் அதுவும், அவள் முன்னே எடுத்துச் சாப்பிடக் கூச்சமாக இருக்க, “நன்றி” என்கிற முணுமுணுப்புடன், தேநீரை மட்டும் எடுத்துக் கொண்டான்.

“முறுக்கையும் சாப்பிடுங்கோ!” அவள் சொன்ன பிறகு எடுக்காமல் இருப்பது அழகல்ல என்று ஒன்றை எடுத்துக் கொண்டான்.

அதன் பிறகு தான் அங்கிருந்து நடந்தாள், அவள்.

“டேய் அண்ணா!” திடீரென்று கேட்ட அவளின் அதட்டலில் வாயருகில் கொண்டு போன தேநீருடன் அதிர்ந்து நிமிர்ந்தான், கிருபன்.

அதுவும் அவளின் பார்வையில் பட்டுவிட்டது. நடை நிற்க, “இங்க என்ன பார்வை?” என்று கேட்டாள்.

இவளுக்குச் சாதாரணமாகக் கதைக்கவே வராதா என்று உள்ளுக்கு ஓடினாலும், ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையை ஆட்டினான், கிருபன்.

‘அது!’ என்பதுபோல் மேலும் கீழுமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள், அவள்.

‘நல்ல காலம் தேத்தண்ணி ஊத்தேல்ல. இல்ல, எல்லாம் அவிஞ்சிருக்கும்.’ மிகுந்த கவனத்துடன் பருகினான். எப்போதுமே, அவனை ஒருவிதமான பதட்டத்திலேயே வைத்திருந்தாள், கமலி. இந்த அரவிந்தன் விரைவாக வந்து விட்டால் எழுந்து ஓடிவிடலாம் போலிருந்தது அவனுக்கு.

“உனக்கு எவ்வளவு சொன்னாலும் சொன்ன நேரத்துக்கு ரெடியாக மாட்டாய் என்ன? அப்பிடி என்னத்தப் போட்டு உருட்டுறாய்?” என்று, தமையனை அதட்டுவதும் கேட்க, அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

“என்னடா கலர் இது? ப்ளூ டெனிமுக்கு ப்ளூ ஷேர்ட் நல்லாவா இருக்கு? இதுக்கு நீ பேசாம பள்ளிக்கூடத்துக்குப் போட்ட யூனிபோர்ம போடலாம். அதக் கழட்டிப்போட்டு இந்தச் சாம்பலைப் போடு!” என்று, தொடர்ந்து கேட்டது, அவள் குரல்.

“அங்கப் பார், உன்ர பிரென்ட்ட எவ்வளவு மச்சிங்கா போட்டு வந்திருக்கிறார் எண்டு. நீயும் இருக்கிறியே ரசனை எண்டுறதே மருந்துக்கும் இல்லாம.”

அவள் என்னவோ ரகசியமாகத் தான் தமையனைக் கடிந்து கொண்டாள். என்ன, அவளின் அந்த ரகசியம் இவனுக்குத் தெளிவாகக் கேட்கும் அளவில் இருந்தது.

அதைக் கேட்டு அவன் உதட்டினில் ரகசியச் சிரிப்பு மலர்ந்து போயிற்று. உண்மையிலேயே, இந்த மட்சிங் பார்க்கும் விசயத்தில் அரவிந்தனை விடவும் அவன் மோசம். அவள் என்றோ ஒரு நாள், இப்படி, அரவிந்தனுக்குச் சொன்னதை அப்படியே நினைவில் வைத்து வாங்கிக் கொண்ட செட் தான் இன்று, அவன் அணிந்திருப்பது. இன்றும், அரவிந்தன் வெளியே வந்த பிறகு, அணிந்திருப்பதைக் கவனித்து, அதே நிறக் கலவையில் ஒரு செட் வாங்கத் தான் போகிறான். ஆனால், கொஞ்ச நாட்கள் கழித்துப் போடுவான். அப்போது, அவனைக் கண்டதும் அவள் விழிகளில் வந்து போகும் மெச்சுதலைக் காண, அவனுக்கு மிகவுமே பிடிக்கும்.

படிக்கிற காலத்தில் மாமா என்ன வாங்கித் தருகிறாரோ அது தான் அவனுக்கான ஆடைகள். அடுத்து எப்போது வரும் என்று தெரியாது என்பதில், இருப்பவற்றைக் கவனமாகத் துவைத்து, காயவைத்து, அயர்ன் செய்து மிகவும் பக்குவமாக வைத்துக் கொள்வான்.

வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு, தன் சம்பளப் பணத்திலேயே வேலைக்கு ஏற்றவாறு, அவனே வாங்க ஆரம்பித்தான். முதல் சம்பளம், அதில், அம்மா அப்பாவின் பெயரில் முதன் முதலாகச் செய்த அர்ச்சனை, மாமா குடும்பத்துக்கு எடுத்துக் கொடுத்த ஆடைகள், அப்படியே அவனுக்கும் இரண்டு செட் வாங்கிக் கொண்டது எல்லாம், பசுமையாக நினைவில் இருந்தது.

அப்படி, வேலைக்குப் பொருத்தமாக என்று வாங்க ஆரம்பித்த போதும் இந்த, மட்சிங் ரகசியம் பிடிபடவே இல்லை. அரவிந்தனை ஏற்றிச் செல்ல வந்த ஒரு நாள், இப்படி, அவள் கண்டித்ததை எதேற்சையாகக் கேட்டுவிட்டு, அரவிந்தனைக் கவனிக்க ஆரம்பித்தான். உண்மையிலேயே, அவன் அணிவது எல்லாம் வெகு நேர்த்தியாய் இருந்தது. அதன்பிறகு தான், வேலைக்கு ஏற்ற உடைகள் என்று மட்டும் பாராமல், இந்த ஜீன்சுக்கு இந்த சேர்ட் பொருந்துமா, இந்த டீ சேர்ட் பொருந்துமா என்று பார்த்து வாங்க ஆரம்பித்தான்.

கூடவே, இவள் கொசுறு கொசுறாக விடும் தகவல்களைக் கப்பென்று பிடித்துக் கொண்டு, ஆடைகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்வதில் சற்றே தேர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறான்.

மற்ற ஆண்கள் எப்படி அணிந்திருக்கிறார்கள் என்று கவனித்து, நன்றாக இருப்பதை மனதில் குறித்துக் கொள்வான். அதில், தனக்குப் பொருந்துகிறவற்றை வாங்கி அணிந்து, அவனை அவனே அழகு பார்க்க ஆரம்பித்ததும் அவளால் தான். அவனை அவனே ரசிப்பதும் அவளால் தான்.

நன்றாக இருக்கிறோம் என்று தோன்றுகிற நாட்களில் ஒருவித உற்சாகம் பொங்கி வழியும். அந்த நாளே நல்ல நாளாக மாறிப்போகும் வித்தையை அவனுக்குக் கற்பித்ததும் அவள் தான்.

இதெல்லாம் அவளுக்குத் தெரியாதே. தெரிந்தால் என்னடா வேவு பார்க்கிறாயா என்று கேட்டு, மண்டையில் குட்டினாலும் குட்டுவாளாக இருக்கும்.

ஒரு வழியாக அரவிந்தன் தயாராகி வந்தான். கூடவே, கமலியும் வந்தாள். அவள் வைத்துவிட்டுப் போன முறுக்கில், ஒன்றே ஒன்று மாத்திரமே குறைந்திருப்பதைப் பார்த்து, அவனை முறைத்தாள்.

‘இப்ப என்ன?’ நண்பனையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான், கிருபன்.

“முறுக்க என்ன வடிவு பாக்கவோ கொண்டு வந்து வச்சனான். அப்பிடியே இருக்கு. இல்ல, எங்கட வீட்டுச் சாப்பாடு உங்கட வாயில வைக்கிற அளவுக்கு இல்லையோ?”

பதறிப் போனான் அவன். “இல்லையில்லை. அப்பிடி இல்ல. எனக்குக் காணும், பசியில்லை. அதுதான்…” என்றான் அவசரமாக.

“லூசுக் கமலி, சும்மா சும்மா அவனை வெருட்டாத. பசிச்சாச் சாப்பிடுவான் தானே. இவள் ஒரு ஆள் எண்டு நீயும் ஏனடா!” என்ற அரவிந்தனின் தலையில், தண்ணீர் போத்தல் ஒன்று நங் என்று வந்து மோதியது.

“அம்மா!” தலையைப் பிடித்துக்கொண்டு அலறினான், அவன்.

தண்ணீர் வேறு தரையில் சிந்திச் சிதறியது. “நான் லூசா உனக்கு? ஒழுங்காத் தரையைத் துடைச்சு, மொப் போட்டுட்டுப் போறாய்! இல்லையோ தெரியும்!” என்றுவிட்டுப் போனாள், அவள்.

“பாத்தியாடா பெருச்…” என்றவனின் வாயை ஓடிவந்து பொத்தினான், கிருபன்.

“என்னடா?” என்றவனின் காதில் குனிந்து, “சொல்லாத! பிறகு இதுக்கும் என்ன வரும் எண்டு தெரியாது.” என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு நிமிர்ந்தவன், தன் பின்னால் நின்றவளைக் கண்டு திகைத்துப் போனான்.

அவளோ அவர்கள் இருவரையும் மிகக் கேவலமாகப் பார்த்தாள். அப்போது தான் அவனும் தங்களைப் பார்த்தான். அரவிந்தனின் வாயைப் பொத்திக்கொண்டு, காதோரமாக் கதை பேசியது ஒரு மார்க்கமாக அவனுக்கே தெரிய, வேகமாக விலகி நின்றான்.

“அடச்செய்! கருமம் பிடிச்சவங்களே. ரெண்டு பேருமாச் சேர்ந்து பிள்ளையைக் கிள்ளையப் பெத்துப் போடாதீங்கடா!” என்றுவிட்டுப் போனாள், அவள்.

கிருபனின் முகம் சிவந்தே போயிற்று!

error: Alert: Content selection is disabled!!