மயங்கினேன் மழைச்சிலையே – 18

அத்தியாயம் – 18

சக்திக்கு தந்தை சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் முதுகுத்தண்டு சில்லிட்டது. பெற்ற மகளுக்கு செய்ததை கணக்கு வைத்து திருப்பிக் கேட்கும் தந்தையை இப்போது தான் பார்க்கிறாள்.

அவருக்கு அவள்மீது அன்பு பாசம், அக்கறை சர்க்கரை என்று எதுவும் இல்லை என்பதை அறிவாள். அதற்காக அவர் வயதொத்த மனிதனிடம் வாங்கிய கடனுக்காக தன்னை பணயம் வைக்க துணிவார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

ரத்தன்தேவ்வை பொறுத்தவரை தற்போதைய கழுத்தை நெரிக்கும் பிரச்சனையிலிருந்து வெளியே வந்தால் போதும். மகளின் எதிர்காலம் பற்றி எல்லாம் பெரிதாக கவலையில்லை.

தனசேகர் தன் மகளை ஒன்றும் வேறு மாதிரி கேட்கவில்லையே மனைவியாகத் தானே கேட்கிறார். அவரைப் போன்ற பணக்காரனுக்கு மனைவியானால் வசதிக்கு குறைவே இருக்காது என்பதுதான் அவரது மனநிலை.

“வயசு காலத்துல உடல்சுகத்துக்காக எதுக்கு ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டுனு அப்படியே ஜாலியா இருந்துட்டேன் ரத்தன். ஆனா இப்ப தான் என்னோட சொத்துக்களை எனக்கு அப்பறம் கவனிக்க வாரிசு இல்லையேனு ஃபீல் பண்றேன்.”

“எனக்கு பொண்ணு கொடுக்க நீ நான்னு போட்டி போட்டு தருவானுக, ஆனா அவளுங்க எல்லாம் முத்திப் போன மூஞ்சியா தான் இருக்கும். உன் பொண்ணு தான் நல்லா தளதளனு தக்காளியாட்டம் ஃப்ரெஷா இருக்காள்.”

“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. உன் கடனை எல்லாம் கூட நான் தள்ளுபடி பண்றேன். எனக்கு அவள் வேணும். யோசிச்சு நல்ல முடிவா சொல்லு.”தனசேகர் அன்று சொன்ன போது ரத்தனுக்கு ஒன்றும் ஓடவில்லை.

ரத்தனுக்கு சற்று தயக்கமாக இருந்தது மகளின் மீதிருந்த பாசத்தில் என்றில்லை. வயதான மனிதனுக்கு தன் பொண்ணைத் திருமணம் செய்தால் சமுதாயத்தில் எல்லாரும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே!

அந்த யோசனையை கடனைப் பற்றிய கவலை சில நாட்களில் ஓரங்கட்டி விட, இப்போது மகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பதுதான் அவருக்கு முக்கியமாகப்பட்டது.

அதனால் இதுவரை அவளது பராமரிப்பு மற்றும் படிப்பிற்கு செலவளித்த தொகையை காரணமாகக் காட்டி அவளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்,

“நானே நாளைக்கு இந்த விசயத்தை உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன். உன்னோட அப்பாவோட உயிரைக் காப்பாத்த ஓகே சொல்ல மாட்டியா சக்தி? நாளைக்கு நான் தனசேகர் கிட்ட சரினு சொல்லிடவா?” அவளை அவசரப்படுத்தினார்.

அப்போதும் தன்னிடம் தெரிவிக்க மட்டுமே நினைத்திருக்கிறார் தனது சம்மதத்தை கேட்பதற்கல்ல என்பதில் அதிர்ந்த முகத்துடன் “நா.. நான் யோ..சிச்சு சொல்றேன்ப்பா.” தயக்கத்துடன் கூறிவிட்டு அவரது அறையிலிருந்து வேகமாக வெளியேறி விட்டாள்.

ஏதோ பேய் துரத்துவது போல தன் அறைக்கு வந்து கதவை இறுக மூடியவளுக்கு அப்போதுதான் மூச்சுகூட சீராக வந்தது. ‘ச்சே! என்ன மனுசன் இவரு!? நான் அவர்ட்ட போய் பேசி இருக்கவே கூடாது!’ என்ற காலங்கடந்த ஞானோதயம்.

‘லூசா சக்தி நீ? நீ போய் இப்ப பேசலைனாலும் அவரே முடிவெடுத்த பிறகு, கடைசி நிமிசத்துல உன்னை கார்னர் பண்ணுனா உன்னால என்ன செய்ய முடிஞ்சிருக்கும்?’ மனம் கேள்வி கேட்டது.

“அதுவும் சரிதான். இப்ப கேட்டதால எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கிடைச்சது.” அதிலும் நேர்மறையாக யோசித்த சக்திக்கு மனம் முழுவதும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல கனத்தது.

“அவருக்கு பாசத்தை வெளிகாட்டத் தெரியலைனு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவருக்கு எம்மேல பாசமே இல்லைங்கறது இப்ப தான் புரியுது.” வாய்விட்டு சொன்னவளது விழிகள் தனது நிலையை நினைத்து கண்ணீர் சிந்தியது.

‘ஏழை வீட்டில் கூட பெற்ற மகளுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்யும் போது, கடனுக்கு ஈடாக மகளை ஒரு வயதானவனுக்கு கொடுக்க இவருக்கு எப்படி மனம் வந்தது!? அதையும் கொஞ்சம் கூட வருத்தமோ, தயக்கமோ இல்லாமல் சொல்கிறாரே!’ அவருக்கு மகளாக பிறந்த தன்னை எண்ணி மனம் வலிக்க கண்ணீரில் கரைந்தாள்.

அழுது ஓய்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சற்று தெளிந்தவள் உடனே அனிருத்திற்கு அழைத்து பேச, அதைக் கேட்டவனுக்கு அவளது தந்தையை எண்ணி கொலைவெறி உண்டானது.

“என்ன கேட்க ஆளில்லைனு நினைச்சுட்டாரா? சின்னப் பொண்ணு உன்னைப் போய் அந்த வயசானவனுக்கு.. அதுவும் பணத்துக்காக.. நினைச்சாலே பத்திக்கிட்டு வருது.” பொங்கிய அனிருத், தங்கையின் அழுகையில் நிதானமடைந்து,

“அழாதேடா! நீ முகத்துல எதுவும் காட்டிக்காம கொஞ்சம் சமாளிடா சக்திமா. ரெண்டு நாள் டைம் கேளு, அதுக்குள்ள நான் எதாவது வழி பண்றேன். ஆனா எந்த தவறான முடிவும் எடுத்துடாதே.” எச்சரித்து சிறிது நேரம் அவளுக்கு ஆறுதலாகப் பேசி வைத்தான்.

சகோதரனிடம் கூறிவிட்டதில் சற்று நிம்மதியாக உணர்ந்த சக்தி அப்படியே உறங்கிப் போனாள். அன்றிரவே அனிருத் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அந்த தனசேகரைப் பற்றி விசாரித்தான்.

தனசேகருக்கு இல்லாத கெட்ட பழக்கம் என்று எதுவுமில்லை. நிறைய இல்லீகல் வேலை செய்து கோடி கோடியாக சொத்து சேர்த்தவன். சில வருடங்களுக்கு முன்பு தன் ஆசைக்கு பணியாத பெண்ணை அடித்து துன்புறுத்தியே கொலை செய்து விட்டதாகக் கூட செய்தி உண்டு.

தனது பணபலத்தால் அதை எல்லாம் மூடி மறைத்து விட்டு உல்லாசமாக உலவுகிறான் என்பதை அறிந்து கொண்ட அனிருத், சக்தியின் நிலையை எண்ணி பெருங்கவலை கொண்டான்.

மறுநாள் காலையில் தன் தந்தையிடம் அனிருத் சொன்னது போல இரண்டு நாட்கள் வரை தள்ளிப் போட்ட சக்தியிடம், தான் அறிந்து கொண்ட விசயங்களை அனிருத் சொல்லவும் உள்ளுக்குள் பீதியில் உறைந்தாள்.

“இங்க பாரு சக்தி உனக்கு வேணும்னா அப்பானு அவர்மேல பாசம் இருக்கலாம், ஆனா அவருக்கு நீ ஒரு அசர்ட்ஆ தான் தெரியற. உன்னை வைச்சு தன்னோட கடனை எல்லாம் அடைக்கலாம்னு நினைக்கிறார்.” அனிருத் சொல்வது உண்மை தானென்றாலும் சக்தியின் மனம் வலித்தது.

‘தன் தாய் மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்குமா?’ ஒருமனம் வலியில் துடித்தது. இல்லாதவரை நினைத்து ஏங்கி என்ன பயன் என்று தன்னையேத் தேற்றி கொண்டு அனிருத் சொல்வதை கவனித்தாள்.

“உனக்கு வேலை கிடைச்ச கம்பெனி பற்றி அவருக்கு எதாவது தெரியுமா?” அவன் வினவ, “கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன் மட்டும் தான் தெரியும் அனி. ஆனா கம்பெனி விபரம் எல்லாம் அவர் கேட்டுக்கலை.” சொல்லும் போதே தொண்டை அடைத்தது.

அவர் இப்படி ஒரு பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் போது அவளது பணியைப் பற்றிய விசயமெல்லாம் அநாவசியம் என்று எண்ணி இருக்கலாம் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள் சக்தி.

“ஓகே! அதுவும் நல்லதுதான். ஆனா உன்னோட காலேஜ்ல அவர் விசாரிச்சா அது தெரிய வாய்ப்பிருக்கு. அதனால கொஞ்சம் உன் சென்டிமெண்ட் ஒதுக்கி வச்சுட்டு நான் சொல்றதை கவனமா கேளு.” தீவிரமாக தன் திட்டத்தை சொல்லத் துவங்கினான்.

“இனிமே நீ அந்த வீட்டுல ஒருநாள் இருந்தா கூட எப்ப எது வேணும்னாலும் மாறும். உன்னை இங்க வர வைக்கலாம் தான், ஆனா உன்னை காணோம்னா அவரோட முதல் டவுட் இங்கதான் வரும். அதனால அது சரிப்பட்டு வராது.”

“நீ ரெண்டு நாள் டைம் கேட்டு இருக்கறதால அவர் கொஞ்சம் அலட்சியமா இருக்கலாம். நமக்கு இதான் சமயம், நீ இன்னிக்கி நைட்டே வீட்டை விட்டு கிளம்பிடு. நான் எல்லாம் ஏற்பாடு பண்றேன்.” அனிருத் சொல்ல, “என்னடா இப்படி சொல்ற!!?” திகைத்தாள் சக்தி.

“நான் அப்படி போயிட்டா, அப்பாவை அந்தாளு பணம் கேட்டு எதாவது செய்துட்டா என்னடா பண்றது?! எனக்கு பயமா இருக்கு அனி.” அப்போதும் தந்தையின் நிலையை எண்ணி உண்மையில் மனம் முழுவதும் பயம் கவ்விக் கொண்டது அவளுக்கு.

“அதுக்கு!!? அந்த தனசேகரை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்கப்பாவை கடன்லேருந்து கரையேத்த போறியா?!” சூடாக வந்து விழுந்த அனிருத்தின் கேள்வியில் மௌனம் சாதித்தாள் அவள்.

“உன்னை அவர் பெத்த பொண்ணுனு இல்ல, ஒரு மனுசியா கூட மதிக்கல. அப்படி நினைச்சு இருந்தா அந்த கேடு கெட்ட கிழவனுக்கு கட்டி வைக்க ஃபோர்ஸ் பண்ணுவாரா? நல்லா யோசிடா சக்தி! நமக்கு இதை விட்டா வேற வழி இல்லை.” அனிருத் சிறிது நேரம் பேசி சக்தியை ஒருவழியாக சம்மதிக்க வைத்தான்.

வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே பார்க்கும் தன் உடன்பிறவா சகோதரி மீது அவனுக்கு இருக்கும் பாசமும் பரிதவிப்பும் பெற்றவருக்கு இல்லை. அவள் கேட்ட இரண்டு நாட்களில் ஒருநாள் முடிந்ததுமே ‘அவர்ட்ட ஓகே சொல்லிடலாமா?’ எனக் கேட்டு நின்றார் ரத்தன்தேவ்.

“நா.. நான் நாளைக்கு..சொல்றேன்ப்பா ” மிரட்சியுடன் சக்தி பதிலளிக்க அவளை கூர்மையாகப் பார்த்த ரத்தன்தேவ் அமைதியாக சென்று விட்டார்.

மறுநாள் அவருக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, வீட்டிலிருந்து அவளை கண்காணிக்க முடிவு செய்த ரத்தன்தேவ்விற்கு கம்பெனியில் ஒரு பிரச்சனை என்று காலையிலேயே அழைப்பு வர கிளம்பிச் சென்று விட்டார்.

அதுதான் சரியான சந்தர்ப்பமென்று கோவிலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு தனது ஹேண்ட்பேக் மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் சக்தி.

அனிருத் திட்டப்படி அவனது தொழில்துறை நண்பர் மூலமாக சக்திக்கு சென்னையில் பணிக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பெங்களூரு வரை ஃப்ளைட் டிக்கெட் போட்டு, அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் எல்லாம் திட்டமிடப்பட்டது.

அங்கு அவள் தங்கவும் அவசரமாக வீட்டை ஏற்பாடு செய்ய, அவனது அவசரத்திற்கு உடனே குடியேறும்படி நல்ல ஏரியாவில் எந்த தனிவீடும் இல்லை. அதனால் ஹவுஸ் ஷேரிங் வகையில் தேட அன்புமதியின் வீடு கிடைத்தது.

வீடு கிடைத்த நிம்மதியில் அன்புமதி ஆணா, பெண்ணா என்பதை அவன் விசாரிக்கவில்லை. அதற்கு அவனுக்கு கால அவகாசமும் இல்லை. அது ஒரு பெண்ணின் பெயராகத் தான் இருக்கும் அவனாகவே முடிவிற்கு வந்து இலகுவாக விட்டுவிட்டான்.

எப்படியோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த யுவசக்திக்கு அன்புமதி ஆண் என்று தெரிந்த பிறகு அவனுடன் தங்குவதற்கு தயக்கம் இருந்தாலும், தற்போதைக்கு வேறு வழியில்லாமல் தங்கினாள்.

அவள் வீட்டை விட்டு சென்றதும் ரத்தன்தேவ் முதலில் அழைத்துக் கேட்டது அவளது பெரியம்மா வீட்டைத் தான். அதனால் இன்னமும் சிறிது நாட்களுக்கு சக்தியை தொடர்பு கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்த அனிருத் அவளிடம் பேசாததால் இங்கு நடந்த குளறுபடி அவனுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுப் படுத்திருந்த சக்திக்கு மனதின் ஒரு மூலையில் அந்த தனசேகரால் தன் தந்தைக்கு என்னவானதோ என்ற கலக்கம் இருந்து கொண்டிருந்தது.

ஏற்கனவே வெகு நாட்களுக்கு பிறகு பேசிய அனிருத் விளையாட்டாகச் சொல்வது போல அவளது தந்தையைப் பற்றி நினைவூட்டி இருக்க, அதிலிருந்து வெளிவந்த சக்தி தற்போது அன்புமதியின் கேள்வியால் பழைய நினைவுகள் அலைமோத உறக்கமின்றி தவித்து அதிகாலையில் உறங்கிப் போனாள்.

error: Alert: Content selection is disabled!!