ஆழியே மெளனம் ஏனோ 17 – 1

மௌனம் -17

ஆழினி அறையின் இருளில் மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க.

அறைக்குள் வந்த செழியனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

அவன் மனதிற்குள், ‘அக்கா ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற ஒரே கேள்விதான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது.

அதை யோசித்தபடியே அறைக்குள் அங்கும், இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

ஆழினியோ கீழே நடந்த அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்து அவள், அவளாகவே இல்லை.

செழியனிடமிருந்து முழுதாக விலக வேண்டும் என்று தான் ஆழினி எண்ணியிருந்தாள்.

ஆனாலும் காதல் கொண்ட மனது அவனிடமிருந்து முழுதாக விலகவில்லை.

தனுவையும், அவளை அணைந்திருந்த செழியனையும் பார்த்ததிலிருந்து அவள் மனதிற்குள் ஏதோ ஒரு பாரம் அழுத்தியது.

‘ இப்போது தான் செழியன் தன்னுடன் நெருங்கி வருவது போல் தோன்றியது. வழக்கம் போல் நெருங்கி வருவதும், விலகுவது தான் எப்போதும் போல நடக்கிறது. இது நம்முடைய ராசி போல. இவங்க இரண்டு பேரும் தான் ஒருவருக்கொருவர் பொருத்தம். இரண்டு பேருக்கும் கூட பிடிச்சிருக்கு. அப்ப அவங்களுக்கு இடையில் நான் தொந்தரவாக இருக்கக்கூடாது. சீக்கிரம் இந்த வீட்டை விட்டுப் போயிடணும்…’
என்று ஆழினி தனக்குள் முடிவு செய்தவளின் கண்களிலிருந்து மேலும் கண்ணீர் வழிந்தது.

‘இப்பவே டைவர்ஸ் வேணும்னு கேட்டா மய்யூ விடமாட்டா…’என்று நினைத்தவளுக்கு அடுத்த நொடியே
‘இல்லை… அவளுக்கும் அண்ணனோட வாழ்க்கையும், தன்னோட கூடவே வளர்ந்த அத்தை மகளும்தான் முக்கியமாக தோணும். அவங்க இருவரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் அவளும் நினைப்பா. அப்படீன்னா நம்மளே ஒதுங்கிப் போயிடலாம்.’
என்று தனக்குள் முடிவு செய்தவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உறங்க முயன்றாள்.

ஆனால் அந்த அறையை அளந்து கொண்டிருந்த செழியனின் மனதில் மட்டும் எந்தத் தெளிவும் இல்லை.

‘ அக்காவிடம் இப்போது எதையாவது கேட்டு வீட்டில் பிரச்சனையை உருவாக்க அவனுக்கு விருப்பமில்லை. முதலில் ஆனிவர்சரியை நல்லபடியாக முடிச்சிட்டு, ஆழினியை முதலில் டூருக்கு அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்க வைச்சு அவளது பிரச்சனை என்னன்னு கேட்கணும்.பிறகு அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.’ என்று எண்ணியவனும் உறங்க முயன்றான்.

ஆம் ஆழினி தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதுமே டூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தான் செழியன்.

இப்பொழுது அக்காவிடம் பேசி பிரச்சனை வந்து டூர் செல்வதில் எந்த தடங்களும் வருவதை அவன் விரும்பவில்லை.

அதனால் தான் டூர் முடிந்து திரும்பி வந்ததும், மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

ஆனால்…

நினைப்பது எல்லாம் அப்படியே நடந்துவிடுவதில்லை.
**************
காலையில் தாமதமாகத் தான் கண் விழித்தான் செழியன். எப்பொழுதும் போல் மனைவியின் தலையணையில் புரண்டு முகம் புதைத்து, அவளது வாசனையை நுகர்ந்து, தன்னை புதுப்பித்துக் கொண்டவன் கண்களைத் திறக்க.

அங்கோ ஆழினி நிற்பதைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்தான்.

எப்பொழுதும் இவனுக்கு முன்பாக எழுந்து குளித்து கீழே சென்றிருப்பாள். இன்று அவளை அறையில் பார்க்கவும் அவனுக்கு குழப்பம். அந்தக் குழப்பத்தோடு, “என்ன விஷயம்?”என்பது போல் பார்த்தான்.

அவனுடைய மனைவியோ அவனோடு சண்டைபோடுவதற்காகவே காத்திருந்தவள்,
அவனுடைய பார்வைக்கு பதிலளித்தாள்.

“எனக்கு டைவர்ஸ் வேணும்.”

“வாட்?”என்ற செழியன் அதிர்ச்சியுடன் பெட்டிலிருந்து வேகமாக எழுந்து அவளருகே வந்தான்.

அவளோ எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன சொன்ன?” என்றவனது குரலில் இருந்த கோபத்தைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“மறுபடியும் சொல்லணும். அவ்வளவுதானே.எனக்கு டைவர்ஸ் வேணும். ”என்றவளது குரலில் கோபமும், அழுகையும் கலந்திருந்தது.

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று வினவியவனின் முகம் இறுகியது.

“நான் எதுவும் நினைக்கல. நீங்கதான் யாரையோ நினைச்சிட்டு இருக்கீங்க.”

“ஆழி…”

“நேத்து நைட் நடந்த கூத்தெல்லாம் நானும் பார்த்தேன். உங்க இரண்டும் பேருக்கும் இடையில நான் இருக்க விரும்பல. நான் கிளம்புறேன். நீங்களும் உங்க அத்தை மகளும்… சந்தோஷமா இருங்க.”

செழியன் அழுத்தமான குரலில் ,

“இங்க பாரு ஆழீ…”

“என் மனசுல என்ன இருக்குன்னு உனக்குத் தெரியுமா? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத.”

“என்ன தெரியணும்? நான் என் கண்ணால பார்த்தேனே?”

“நான் ஏற்கனவே செம டென்ஷன்ல இருக்கேன். நீ வேற என்னை இன்னும் டென்ஷன் ஆக்காத.”

“நான் தான் உங்களை டென்ஷன் பண்றேன்ல. அப்ப என்னை டைவர்ஸ் பண்ணிடுங்க. நீங்க நிம்மதியா இருக்கலாம்.”

“ஃபைன்! நான் நிம்மதியா இருப்பேன். நீ டைவர்ஸ் வாங்கிட்டு என்ன பண்ணப் போற.” என்று சற்று கோபமாகவே கேட்டான் செழியன்.

“நான் என்னமோ பண்ணிக்கிறேன். நீங்க ஆசைப்பட்ட மாதிரி உங்க அத்தை மகளை கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா… ஆழினி இனிமேல் உங்களுக்கு இடையூறா இருக்க மாட்டா,” என்று அவள் சொல்லிவிட, செழியனை ஒரு நொடி மௌனம் சூழ்ந்தது.

“ஓஹோ… எதுவா இருந்தாலும் இந்த வெட்டிங் டே ஃபங்ஷன் முடியட்டும். பங்க்ஷன் வரைக்கும் நான் கூலா இருக்கணும்னு பார்த்துட்டு இருக்கேன். அதுவரைக்கும் இப்ப எப்படி இருந்தியோ, அப்படியே இரு. அதுக்கப்புறம் என்ன செய்யணுமோ அதை பண்ணிக்கலாம்,” என்று கூறியிருந்தான்.

“அதைத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன். நான் இங்க இருந்தா உங்களுக்கு இன்னும் பிரச்சனை அதிகமாக தான் இருக்கும். அதனாலதான் சீக்கிரமா உங்ககிட்ட டைவர்ஸ் கேக்குறேன்.”

“வாயை மூடு! மனுஷனை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுறியா?”
என்று அவன் சத்தமாகக் கூறியதும் ஆழினி அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவளைத் திட்டக்கூடாது என்று நினைத்தவனுக்கு அவளுடைய வார்த்தைகள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் அடுத்த நொடியே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

அதிர்ந்த ஆழினியோ அறையை விட்டு வெளியேறினாள்.

‘ இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும்.’ என்ற எண்ணமே தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருப்பதைப் போல அவளை மூச்சுத்திணற வைத்தது.

‘இன்னும் எத்தனை நாள் இந்த வலியைத் தாங்கணும்?’
என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டவள், கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

கண்களில் வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்ட ஆழினி, எதுவும் நடக்காதது போல கீழே இறங்கி வந்தாள்.

வழக்கம்போல பாட்டி அவளைப் பார்த்ததும், அவளுடைய முகத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு,

“வெளிநாட்டுல இருந்து ஒரு பொண்ணு வந்திருக்காளே. நேரத்தோட வந்து அவளுக்குப் பிடிச்சதைச் செஞ்சு கொடுக்கணும். அவ மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா? அவ உன் நாத்தி தானே? உன் மாமியாரும், பெரிய மாமியாரும் சமையலறையில கிடந்து அல்லாடிட்டு இருக்காங்க. நீயும் அவங்களுக்கு போய் ஏதாவது உதவி செய்யலாம்ல!” என்று சற்று கோபமாகக் கூறினார்.

error: Alert: Content selection is disabled!!