ஏதனின் இலஞ்சியவள்-32 – 1

“ஓ அம்மா ப்ளீஸ்! சரியான களைப்பா இருக்கு. தூங்கிற்று நாளைக்கு எடுத்துக் கதைப்பமா? ப்ளீஸ் ப்ளீஸ்!”என, செல்லமாகக் கெஞ்சிய மகள் முகத்தில் களைப்புத் தெரிந்ததுதான், அதையும் கடந்து, அவள் தன்னைத் தவிர்க்கிறாளோ என்றிருந்தது, துர்காவின் தாய்க்கு. 

“இப்ப எத்தின மணி? பின்னேரம் ஆறு மணிக்கு ஏர்போட் வெளிக்கிட்டனியாமே! சாமம் பன்னிரெண்டரை வரை வெளில நிண்டுட்டு வந்திருக்கிற. அப்ப எல்லாம் நேரத்துக்கு வீட்டுக்குப்  போயிருவமே எண்டு நினைக்கேல்ல.  களைப்பும் தெரியேல்ல. இப்ப என்னோட  பத்து நிமிசம் கதைக்கிறதுதான் உனக்குச் சிரமமாக் கிடக்கோ?” விழிகள் இடுங்க அவர் கேட்ட விதத்தில் தலையில் கை வைத்துக்கொண்டாள், துர்கா.  

“மாஆஆ ..உங்களுக்கு இப்ப என்ன கதைக்கோணும்? கதையுங்க ப்ளீஸ்!” பொத்தென்று கட்டிலில் அமர்ந்தாள். 

“ஏர்போட் போயிட்டு வர நேரம் செல்லலாம் எண்டுதான் சித்தி, சித்தப்பா தங்களில ஓராள்  வாறதாச்  சொன்னவே. வேலைக்குப் போயிற்று அப்பதான் மா வந்தவே. அதோட தனியாப் போய் வாறதில எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.  அங்க இருந்து வெளிக்கிடேக்க, கூட்டிக்கொண்டுபோய் விடுறன் எண்டு ஒரே பிடியா நிண்டிட்டார், ஏதன். சரிதான் எண்டு வந்தன். இப்ப, இதில நீங்க என்ன பிரச்சினையக் கண்டீங்க?”  முறைப்போடு கேட்டவளை, அவளுக்கும் மேலாக முறைத்தார் தாய்.

“பிரச்சினைதான். என்ன  எண்டு உனக்கு விளங்கேல்லையா  என்ன? அந்த வெள்ள அண்டைக்கு உன்ன விரும்பிறதாச்  சொல்லிக்கொண்டு அங்க வந்தவர்தானே?” அவர் முடிக்கவில்லை, “அம்மா, அவரிட பேர் ஏதன்.” வெடுக்கென்று சொல்லியிருந்தாள், துர்கா.  

“இருக்கட்டுமே! எனக்கு பேர் எல்லாம் தேவையில்ல துர்கா. அண்டைக்கு அந்தாள நீ என்ன சொல்லி அனுப்பி வச்சனி? எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் இல்ல, இனியும் வராது எண்டனி  ரைட் ?” என்றதும் அதுவரை தாயை முறைத்துக்கொண்டு இருந்தவள் பார்வையை அப்பால் நகர்த்திவிட்டாள். அசைந்து அமர்ந்தாள். எட்டித்  தண்ணீர்ப் போத்தலை எடுத்துத் திறந்து மடக்கு மடக்கு என்று நீரை அருந்தினாள். போதும் போதும் என்று தொண்டை அடம்பிடித்தும் முழுதுமாகக் குடித்து முடித்தாள்.   நீர்ப்போத்தல் மூடியை வெகு கவனமாக மூடிவிட்டு எட்டி வைத்தவள் தாயைப் பார்த்தாள். இந்தச் சிறுபொழுதில் சுதாரித்துவிட்டாள்.

“ம்ம் சொன்னனான்தான் …அதுக்கு இப்ப என்ன?” 

“என்னடி என்ன?  திரும்பி இப்பிடிப் பழகிறது அவருக்கு நம்பிக்கை குடுக்கிறது போல இருக்காதா?”

“இருக்கலாம்தான். இருக்கட்டுமே, அதுக்கு என்னம்மா?” கேட்டவள்  நிதானமாகத் தாயைப் பார்த்திருந்தாள்.

அவள் தாய் அதிர்வது முகத்தில் தெரிந்தது. “இஞ்ச பார், எதைக் கதைச்சாலும் தெளிவாக்  கதை.” என்றவர், அவளுக்குக்  கதைக்கச் சந்தர்ப்பம் கொடுக்காது தொடர்ந்தார்.

“எங்கட குடும்பத்துக்கு இதெல்லாம் சரிவராது துர்கா. அவேட வளப்பு,  பழக்க வழக்கம், கனக்க ஏன்  வசதி வாய்ப்புகள் எண்டு எல்லாமே வேற வேற. அதுக்க போய்  உன்னால சமாளிக்க ஏலாது. அதோட, அவே நினைச்சோன்ன வெட்டி விட்டுப்போட்டு இன்னொண்ட பாத்திட்டுப் போற ஆக்கள். ஒலிவியாட அம்மா எவ்வளவு அருமையான மனிசி. அந்த ஆரோன் எண்ட மனுசன்  என்ன வேலை செய்திட்டுப் போனவர்?  அதுதான் அவே. அவேட கலாச்சாரம்.”என்றவர் மகள் முறைக்கவும் கோவப்பட்டார்.

“இஞ்ச நான் ஆரையும்  விமர்சிக்கேல்ல. மதிப்பிடேல்லை. எனக்கு அது தேவையும் இல்ல. உனக்கு விளங்கோணுமே எண்டதுக்குச்  சொன்ன உதாரணம் அது. பெத்த பிள்ளைகளில அக்கறையும் கரிசனையும் இருக்கிற எந்தத்  தாய் தகப்பனும் தங்கட  பிள்ளைகளிட வாழ்க்கையில பிரச்சினைகள் வாறதுக்கு விடாயினம். நாலையும்  பத்தையும் யோசிச்சுத்தான் முடிவுக்கு வருவினம். அதைக் கேட்டு நீங்க கெட்டுப்போக மாட்டீங்க.”  மூச்சு வாங்கச் சொன்னவர் விழிகளால் கண்ணீர் வழிந்தது. 

“ஓ அம்மா!  இப்ப என்னத்துக்கு அழுக்கிறீங்க? உனக்கு ஆரையும்  பிடிச்சிருந்தா ஒளிச்சு மறைக்காமல் அம்மாட்டச்  சொல்லோணும் எண்டு சொன்னது நீங்கதானே?” 

“அதுக்காக வெள்ளைய விரும்புவியோ! இதுக்கு நாங்க ஆருமே  ஓமெண்டு சொல்ல மாட்டம், நினைவில  வச்சிரு!”

“சரி, நினைவில வச்சிருக்கிறன். அவ்வளவுதானே?” என்றவள் தொனியில் அவ்வளவு பிடிவாதம் . தாய் எதுவோ சொல்ல முனைய இடம் தராது தொடர்ந்தாள். 

“இப்ப வரை நான் ஏதன் கேட்டதுக்குப் பதில் சொல்லேல்ல அம்மா.  தன்னை நம்பி ஓமெண்டு சொல்லுற வரைக்கும் வெய்ட் பண்ணுறன்  எண்டு சொல்லி இருக்கிறார். ஆனா இப்ப யோசிச்சா நானும் அவரை விரும்புறன் அம்மா. ஆனாலும் படிப்பு முடியவிட்டு இதைப்பற்றிக் கதைக்கலாம் எண்டுதான் பேசாமல் இருந்தனான். நினைச்சோன்ன வெட்டி விடுற வேலை, இன்னொண்டு பாக்கிறது எல்லாம்  வெள்ளைக்காரர் மட்டுமா செய்யீனம்?  ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா , இதில கதைச்சு விவாதிக்க நான் வரேல்ல. நீங்க உங்கட முடிவச்  சொல்லிட்டீங்க, நானும் சொல்லிட்டன் . ஆனா ஒண்டு, உங்கட விருப்பம் இல்லாமல் நான் என்ர  மூப்புக்கு ஒண்டும் செய்ய மாட்டன். இதோட இந்தக் கதைய விடுவம்  அம்மா. நான் வைக்கிறன்.”அழைப்பைத் துண்டித்தவள் அப்படியே தலையணைக்குள் முகம் புதைத்துவிட்டாள்.

***** 

மறுநாள் துர்க்காவின் சித்தி வீட்டில் பெரியவர்கள் பார்வையில் மாற்றம் தெரிந்தது. அதுவே, தாயோடு இவள்  கதைத்தது  வார்த்தை பிசகாது இங்கே வந்துவிட்டது என்று விளங்கியது. இவள் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. வழமைபோலவே அவர்களை எதிர்கொண்டாள்.

ஒரு கட்டத்தில்,  அவள் சித்திக்கு, இப்படி அமைதியாக எதுவுமே தெரியாது என்ற பாவனையில் இருக்கச் சிரமமாக இருந்தது.  “பிள்ள இஞ்ச வான கொஞ்சம் கதைக்கோணும்.”  என்று, கைப்பிடியில் அவள் அறைக்குள் இழுத்துச் சென்றார்.

அமைதியாகச் சென்று, “சொல்லுங்க சித்தி.” என்றாளா? நன்றாகவே முறைத்தார். “என்னட்ட சொல்லோணும்  எண்டு நீ நினைக்கேல்ல என்ன?” மனக்குறையோடு கேட்டார்.

“அச்சச்சோ! உண்மையா சொல்லக்கூடாது எண்டு நான் நினைக்கேல்ல சித்தி. முதல் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச விசயம்தானே?” என்றதும், “எது எங்களுக்குத் தெரிஞ்ச விசயம்? விழிகள் இடுங்கக் கேட்டார். 

“ஏதன் விரும்பிறதுதான், அதான் அண்டைக்கு வீட்ட வந்திருந்து சொன்னாரே!” என்றவளுக்கு, சித்தியின் முகபாவனையில் அடக்க முடியாதளவுக்குச்  சிரிப்பு வந்தது. கட்டுப்படுத்த முயன்றதன் பயன் அவள் விழிகள் சிரித்தன. ஏன் சிறிய தாயாரை சீண்டின என்றே சொல்லாம். 

“என்ன நக்கலா இருக்கோ உனக்கு? நீ என்ன சொன்னனீ?” 

 

“அது அண்டைக்கு அப்பிடிச் சொன்னனான் சித்தி, இப்ப எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு.” என்றவளை ஆழ்ந்து பார்த்தார், அவள் சிறிய தாயார். 

துர்காவுக்கு ஒரு மாதிரி அந்தரமாக இருந்தது. “ஏன் சித்தி அப்பிடிப் பாக்கிறீங்க? நான் பிழையா ஏதும் செய்திட்டனோ?” கேட்கையில்   குரல் கமறியது. விழிகள் கலங்கி விட்டன. தாயோடு கதைக்கையில் தன் விருப்பை, முடிவை அவர்களிடம் உறுதியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் திடமாகக் கதைக்க வைத்திருந்தது. கதைத்தபின்னர்தான் அழுதிருந்தாள்.  

அவள் விழிகளால் முத்து முத்தாக கண்ணீர் உருள, சிறிய தாயார்  கண்களும் கலங்கிப் போயின.  

“இஞ்ச வா.”அவளை அருகே அழைத்து, அணைத்துக் கண்ணீரையும் துடைத்துவிட்டார். 

“அவர் தன்ர  விருப்பத்த வந்து வீட்டில பெரியவரான அப்பாட்டச் சொன்னவர்.  நல்ல குணமானவராவே இருக்கட்டும் . ஆனாம்மா, நாங்க வேற அவே வேற. எல்லாத்திலும். நீயே அண்டைக்கு ஏதன்ட  தாத்தா உன்ன இந்தியாவா எண்டு ஒரு சாதியாக்(ஒரு மாதிரி ) கேட்டது எண்டு சொல்லேல்லையா? நான் அதையெல்லாம் இஞ்ச ஆரிட்டையும் சொல்லேல்ல துர்கா.  ஆனா என்ர பயமே அதான். அப்படிப்பட்ட மனுசர் எங்கள மதிப்பினமா சொல்லு? உன்னையும்தான் மதிப்பினமா? வாழப்போறது நீதான். இல்ல எண்டு ஆரும் சொல்லேல்ல. எல்லாத்தையும் யோசிச்சு உனக்கும் உன்ர  குடும்பத்துக்கும் சரிவருமா எண்டு ஒண்டுக்குப் பத்தா யோசி. பிறகு உன்ர முடிவுதான்.” அன்போடு கண்டிப்பும் கலந்தே சொல்லியிருந்தார்.  

சித்தியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் துர்கா.  அவர் தோளில் முகம் புதைத்தவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.  விம்மியழுதுவிட்டாள். ‘ஏதன் அதையெல்லாம் பாத்துக்கொள்வார் சித்தி’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. அதேநேரம் சொல்லவும் பயமாக இருந்தது. 

“அடிதான் வாங்கப் போற நீ ? இதென்னத்துக்கு இப்ப அழுகிற? இனி நான் இதைப் பற்றிக் கதைக்க மாட்டன். யோசிச்சு நட, போதும்.” எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவளை ஆறுதல் படுத்துவதில் இறங்கிவிட்டார், சிறிய தாயார். 

அவளுக்கு ஏதனோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. 

தாயிடம் இப்படிச் சொல்லிட்டேன், சித்தி இப்படிச் சொன்னவா என்று எல்லாமே சொல்ல வேண்டும் போலிருந்தது. அன்று முழுவதும் அவன் அழைப்பான் என்று மிகவுமே எதிர்பார்த்தாள். அடுத்தடுத்த நாட்களும்தான். 

எதிர்பார்ப்பு ஏக்கத்தோடு காத்திருந்தது. அவன் காத்திருப்பேன் என்றான், இப்போது, அவனது  ஒரு தொலைபேசி அழைப்புக்கு இவள்  காத்திருந்தாள்.  

*****

 

error: Alert: Content selection is disabled!!