ஏதனின் இலஞ்சியவள்-33 – 2

இப்படியே நாட்கள் நகர்ந்து துர்கா அவுஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. அவள் இலண்டனில் இருந்து புறப்படும் அன்று அவள் பிறந்தநாளும் கூட.

ட்ரீட் என்று கேட்ட ஏவாவோடு முதல் நாள்  ரெஸ்ட்டோரண்ட் சென்று வந்திருந்தாள். பயணப்பைகளையும் அடுக்கி வைத்தாகிற்று. அன்றைய விடியலில் அவளுக்குப் படுக்கையை விட்டு எழவே மனம் வரவில்லை. அவுஸ்திரேலியா செல்ல முன் ஏதனைச் சந்திக்க கிடைத்தால் என்று ஆசையாக இருந்தது. அன்றைக்குப் பிறகு, ஒவ்வொருநாளும் இல்லை என்றாலும் இடையிடை கதைத்துக்கொள்வார்கள்.  அப்போது, இன்னமும் அங்கே வேலை முடியவில்லை என்று சொல்லியிருந்தான்.

 “கவனமாப் போயிட்டு வா.” என்றவனிடம், “இனி எப்ப சந்திக்கிறது?” என்று கேட்டிருந்தாள்.  அவன் சிறிது நேரம் கதைக்கவில்லை. அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

 இத்தனைக்கும் அவள் தன்  விருப்பை,  சம்மதத்தை நேரடியாக  அவனிடம் சொல்லவில்லை. அது ஒரு குறையாக அவனுள் இருக்கிறது. சுமூகமாக  விரும்பிக் கதைக்கிறாள், பிறகு என்னதான் வேண்டும் என்று விட முடியவில்லை. அவன் தன்  விருப்பைப் பகிர்ந்துகொண்டானே. அதுபோலவே அவளிடமிருந்தும் எதிர்பார்த்தான். அது அவளுக்கும் தெரியும். இருந்தும் அவள் தன் மனத்தைச்  சொல்ல முனையவில்லை. எது தடையாக நிற்கிறது? இப்போதைக்கு ஆராயப்  பிடிக்கவில்லை.  இந்தக் கணம் அவன் தன்னை நேசிக்கிறான் என்பது மிகவும் பிடித்திருக்கிறது. அவளுமே அவனை நேசிக்கிறாள்  என்பதில் அவளுக்குத் தெளிவு.  

மனத்தில் எண்ண அலைகள் அடித்தபடியிருக்க அவன் பார்வையில் தடுமாறினாள், துர்கா. அதை மறைக்கவென்றே, “அந்தளவுக்குப் பதில் சொல்லச் சிரமமான கேள்வியோ கேட்டிட்டன்?” என்று சீண்டினாள். 

ஏதன் மெல்லச் சிரித்தான். “பயம் போய்  என்னில, எங்கட அன்பில முழுசா நம்பிக்கை வந்திட்டு எண்டு சொல்லு, அடுத்த வேலை சந்திக்கிறதுதான். உன்னோட சேர்ந்து அவுஸ்திரலியா வந்து உன்ர வீட்டிலும் கதைக்கிறன். கலியாணமே செய்துகொள்ளவும் தயார். அதுக்குப் பிறகும் வடிவாப் படிக்கலாம் துர்கா. ” என்றிருந்தான். 

“ஐயோ! ஐயையையோ வேணாம் வேணாம்!” இவள் பதறிவிட்டாள்.  அந்தப் பதற்றம் பார்த்து அவனுக்கு ஒருசாதியாகிற்று. 

“பயப்படாத துர்கா,  எப்பவும் உனக்கு  விருப்பம் இல்லாதது  நடக்காது.” சட்டென்று மாறிவிட்ட குரலில் சொன்னான்.   

“இல்ல, நான் அதுக்கில்ல ஏதன், முதல் படிப்ப முடிச்சிட்டு.” என்று அவள் தொடங்கவே.“அதான் தெரியுமே! படிச்சு முடி.” என்றிருந்தான். 

இப்படி, அவனுடனான சிறு சிறு பொழுதுகள் அவள் சிந்தையை வசப்படுத்தியிருக்க, “துர்கா இன்னும் எழும்பேல்லையா?” கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார், சிறிய தயார்.  கட்டிப்பிடித்துக் கொஞ்சி வாழ்த்தியவர், “கெதியா வெளிக்கிட்டுக்கொண்டு வா, கோயிலுக்குப் போயிட்டு வந்திருவம்.” என்றுவிட்டுச் சென்றார். 

சரியென்றவள்  கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். இவள் சொல்லவில்லை என்றாலும் இன்று அவள் பிறந்தநாள் என்று ஏதனுக்குத் தெரியாதிருக்காது. ஏவா சரி சொல்லி இருப்பாள். முதல் நாள் சாமம் பன்னிரெண்டில் இருந்து புலனத்தில் கண் வைத்துக்கொண்டு இருக்கிறாள். அது வாழ்த்துகளால் நிறைந்து வழிகிறது. அவன் வாழ்த்து மட்டும் வரவேயில்லை.

 “ப்ச்!” சலித்துக்கொண்டே குளியலறைக்குள் புகுந்துகொண்டவள்,  ஒரேயடியாகத் தோய்ந்து விட்டே வெளியில் வந்தாள். 

“கோயிலுக்குப் போகேக்க இதக் கட்டு. பிளவுஸ் தைச்சி இருக்கு” என்ற அம்மம்மா, சேலையொன்றும் தங்கச் சங்கிலியும் பரிசாகக் கொடுத்திருந்தார். “சல்வார் போடுறனே.”  என்றவளிடம், “இனி நீ இஞ்ச வரேக்க இந்தப் பொல்லாத  கிழவி இருக்கிறனோ தெரியா.  ஆசையா வாங்கினது கட்டன், குறைஞ்சு போவியா?” குதர்க்கமாகவே கேட்டிருந்தார். ஏதன் விடயம் தெரிந்த பின்னர் இவளோடு இப்படித்தான்  நடந்துகொள்கிறார். 

சேலையை விரித்துப்பார்த்தாள். சாணிபச்சையில் சில்க் சாறியொன்று. பிரவுண் முழுக்கை பிளவுஸ் தைத்து இருந்தார்கள். 

பெரிதாக விருப்பம் இல்லாமல் சேலையைக் கட்ட ஆரம்பித்தாள்.  கட்டி முடித்துவிட்டுப் பார்க்கப்  பிடித்திருந்தது.

தலையை இழுத்துத் தளர்வாக விட்டு கிளிப் போட்டுவிட்டாள். காதிலிருந்த குட்டி முத்துத் தோட்டைக் கழற்றிவிட்டு சித்தியின் பிறந்தநாள் பரிசான சின்ன சிமிக்கியோடு இருந்த  தங்கத்தோட்டை போட்டு, அப்படியும் இப்படியும் அசைத்துப்பார்த்தாள். நீளமான கண்கள் அவளுக்கு, மெல்லிய அலங்காரம் செய்துகொண்டாள். இயற்கையாகவே மென் றோஸ்  வண்ண உதடுகள். லிப் க்ளோஸ் போட்டுகொண்டாள். திருப்தியாக இருந்தது. கைப்பேசியை  எடுத்துப் பின்னால் முதுகில் கிடந்த தலைமயிரை ஒரு பக்கத்துத்  தோளால் வழியவிட்டபடி ஒரு சுயமியைத் தட்டியவள் முறைத்துக்கொண்டு ஏதனுக்கு அனுப்பி வைத்தாள். பார்க்கப்படவில்லை. ‘தூங்கியிருப்பானாக்கும்.’

“துர்கா, ரெடி எண்டா கீழ வாம்மா.” சிறிய தாயார்தான்.  “இந்தா  வாறன்.” அறையை ஒருக்கலித்துச்  சாத்திவிட்டுப் படிகளால் இறங்கினாள்.

சில படிகள் கீழே சென்றபோதுதான் கீழேயிருந்து மெல்லிய பேச்சொலி வருவது கேட்டிட்டு. நெற்றி சுருங்கியது. “இந்த விடிய வெள்ளன ஆர் வந்திருக்கிறது?” முணுமுணுத்தபடி இன்னும் சில படிகள் இறங்கிய போது வரவேற்பறை ஓரளவுக்குத் தெரிந்தது.  பார்த்தவள் நடை நின்றிருக்க, ஆச்சரிய அதிர்வில் மையிட்ட அவள் விழிகள் விரிந்தன. சில கணங்கள்தான், “ஓ கோஷ்!” இவள் கூவ, “சர்ப்ரைஸ்!” ஏவாவின் கூச்சல் அந்த வரவேற்பறையை நிறைத்திட்டு.  இவள் இறங்கிச் செல்ல முதல் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கன்னங்கள் இரண்டிலும் கொஞ்சி வாழ்த்தினாள், ஏவா.

சோஃபியா, ஐலா தவிர எல்லோருமே வந்திருந்தார்கள். 

இவர்கள் வரப்போவது அவளைத் தவிர எல்லோருக்கும் தெரியும் என்றதே அப்போதுதான் தெரிந்தது. ஏவாவின்  ஏற்பாடாம். விழிகள் கலங்க எல்லோரிடமும் வாழ்த்தைப் பெற்றுக்கொண்டவளுக்கு, ஏதனின் பிரசன்னமின்மை வெகுவாகவே தாக்கியது. 

கேக் வெட்டினார்கள். அப்பம், இடியப்பம் என்று காலை உணவையும் முடித்துக்கொண்டுதான் அவர்கள் விடைபெற்றார்கள். 

“வீட்டுக்கு வா வா எண்டா  ஏதோ ஒரு சாட்டுச் சொல்லி சொல்லியே கடத்திட்ட. அடுத்த முறை இலண்டன் வரேக்க, ஏர் போட்டில வச்சே எங்கட வீட்டுக்குக் கடத்திருவம்”  என்று சொல்லித்  தலையை வருடி, விரைவில் அவள் வீட்டில் கதைப்பதாகச் சொல்லி விடைபெற்றார், செஃப் ஆரோன் டேல்.

“நானும் துர்காவோட கோயிலுக்குப் போயிற்று வாறன்.” என்ற ஏவா நின்றுவிட்டாள். அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அவளும் சேலையில் தயாராகி வர, சிறிய தாயார்,  அம்மம்மாவோடு பிள்ளையார் கோவிலுக்குச் செல்லப் புறப்பட்டார்கள்.

*****

error: Alert: Content selection is disabled!!