ஏதனின் இலஞ்சியவள்-33 – 4

ஐவன் காரோட்டுவதில் கவனமாக இருந்தான். இளைய சகோதரியின் கதைக்குத் திரும்பித் துர்காவைப் பார்த்தான். அவனுக்கும் அவள் முகத்தின் தெளிவின்மை நன்றாகவே தெரிந்தது. நெற்றி சுருங்கியது.  என்ன ஏதென்று கேட்கும் அளவுக்கு அவளோடு அவன் கதைத்ததில்லை.  இப்போது, சிறு முறுவலோடு அவன் திரும்பிக்கொள்ள, அவளும் சிக்கன முறுவலோடு நிறுத்திவிட்டாள். 

ஏவா அமைதியாக இருக்கவில்லை. பயணம் தொடர்பாகக் கதைத்தார்கள். இடையில், “ஏதன் இரவே எடுத்திட்டாரா ? இப்ப கதைச்சவரா? நான் எடுத்தனான், வேலை போல ரிஸீவ்  பண்ணேல்ல.” என்றாள்  ஏவா. என்ன சொல்வது? அவனுக்கு என் பிறந்தநாள் நினைவில்லை. முதல், தெரியுமோ தெரியாது என்றா.

“ஓம்,  இரவே எடுத்துக் கதைச்சவர்.” என்றதோடு நிறுத்திவிட்டாள். அப்படியே வேறு கதைகளுக்குச் சென்று, விரைவில் அவுஸ்திரலியாவுக்கு வரும்படி சொல்லி, அப்படியே நியூசிலாந்து செல்வதுபற்றி என்று கதைத்துக்கொண்டிருக்க விமான நிலையம் வந்திருந்தது.

காரை நிறுத்திவிட்டு, ஏவாவும்  துர்காவும் இறங்க முதல் சென்று ட்ரொலி எடுத்து வந்தான், ஐவன். பயணப்பைகள் இடம் மாறின. தள்ள முயல, “விடு, நான் கொண்டு வாறன்.” என்று, தானே உருட்டிக்கொண்டு நடந்தான். 

மின்தூக்கியால்  மேலே வந்தவர்கள், “லக்கேஜ் போடுறது  பெல்ட் 5”  என்றபடி, அதை நோக்கிச் செல்லும் பொருட்டு,  இடப்புறம் திரும்புகையில் துர்காவின் காதோரமாக ஒரு குரல் கிசுகிசுத்தது. 

“ஹேய்ய் ஹனி, மே ஐ ஹக்  யூ? ஐ வோன்ட்  டு, பட் ஒன்லி வித் யுவர் பெர்மிசன்.” என்ற குரலில் சரேலென்று திரும்பியவள், அவனைச் சற்றுமே  எதிர்பாராததில் உறைந்தது என்னவோ கணம்தான், அணைக்க அனுமதி கேட்டு நின்றவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் முகம் அவன் நெஞ்சில் அழுந்தப் புதைந்தது. அவள் வலக்கையில் பிடிபட்டிருந்த ஹாண்ட் லக்கேஜ் உதாசீனத்தில் பொருமிக்கொண்டு  இவர்களை வேடிக்கை பார்த்தது. 

ஏதன் ஒற்றைக் கையில் பெரிய சிவப்பு ரோசாப் பூங்கொத்து. மறுகையால் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டவன் முகம், அவள் உச்சியில் அழுந்தப் படிந்தது. முத்தமிட்டான். அவள் வார்த்தைகளால் இனிச் சொல்லவே தேவையில்லை, அவன் நேசத்துக்கு இதைவிடவும் வேறு எந்தவிதத்திலும் பதில் தர முடியாது. எவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருந்தாலும் சற்றுத் தயங்கி இவர்களை இரசிப்போடு பார்த்துச் சென்றது, சனத்திரள் . சிலர் நின்று கைபேசியில் அடக்கிக்கொண்டார்கள். அவளுக்குத்தான் இது எதுவுமே உறைக்கவில்லை. அவனும் அவளுமாக அண்டவெளியில் மிதக்கும் உணர்வு அவளுக்கு .

ஐவன், ஏவாவுமே சகோதரன் வரவை எதிர்பார்க்கவில்லை. அவர்களின் ஒரு ஒரு அசைவும் ஏவாவின் கைப்பேசிக்குள் அடங்கிக்கொண்டு இருந்தன. 

“துர்கா , ஹாப்பி பெர்த் டே!” நகைப்புக் கலந்த குரலில் சொல்லி அவளைச்  சுயத்துக்கு இழுத்து வந்திருந்தான், ஏதன். 

நிமிர்ந்து பார்த்தவள் கண்ணீரை ஒற்றைக் கையின் பெருவிரலால் துடைத்து விட்டவன், சற்றே விலத்தி நிறுத்திப் பூங்கொத்தைக் கையில் கொடுத்தான். 

“தேங்க்ஸ்!” கண்கள் மின்ன வாங்கிக்கொண்டவள், “அச்சோ! இத நான் கொண்டு போகேலாதே!” பரிதாபமாகச் சொன்னவள் பார்வை அந்தப் பூங்கொத்தில். அவனிடமிருந்து அவளுக்கே அவளுக்கென்று வந்த  முதல் பரிசு! காலம் முழுவதும் தன்னோடு வைத்திருக்க ஆசையெழுந்தது. 

“அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்ல. என்னட்டத்  தந்தா நான் ப்ரிசேவ் (preserve) செய்து வச்சிருந்து தரப்போறன்.” என்ற ஏவா, “சரி சரி நேரம் போகுது,  ரெண்டு பேரும் ஒண்டா நில்லுங்க, ஒரு ஃபோட்டோ எடுத்துத் தரலாம்.” தமையனை அவளருகில் நகர்த்திவிட்டாள்.

“ஹேய்… எப்பிடி நிக்கோணும்?” என்றபடி அப்படியே துர்காவைத் தன் முன்னால்  கொண்டு வந்திருந்தான், ஏதன். அவன் நெஞ்சோடு அணைந்து, அந்தப் பூங்கொத்தைத் தன்  நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்தவள் வலது தோளில் நாடியை ஊன்றி, அவள் கன்னத்தோடு கன்னம் உரசி, கைகளால் அவளை அப்படியே வளைத்து நின்ற போஸ் அவ்வளவு வடிவாக இருந்தது. 

புகைப்படங்கள் எடுத்து முடிய, “இன்னொரு குட்டி கிஃப்ட் இருக்கு. அத நீ கொண்டு போகலாம்.” என்றவன், பின்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கிருந்த சொக்லட் கடையில் நின்ற பெண் ஒரு சொக்லேட் பொக்கேயுடன் வந்தாள். வாங்கியவன் அவளிடம் நீட்டினான். 

Lindt Lindor மற்றும் Ferrero Rocher  சொக்லேட் Balls இருதய வடிவிலிருக்க, சுற்றிலும் மின்னித்தாள்களில் றோசாப்  பூ  அலங்காரம்  செய்யப்பட்டு மென் றோஸ் வண்ண லேசால்  சுற்றப்பட்டிருந்த அந்த பொக்கே அத்தனை வடிவு. கையில் வைத்திருந்த  ரோசாப்பூ பொக்கேயை ஏவாவிடம் கொடுத்துவிட்டு இதை வாங்கிக்கொண்டவளை, கட்டிப்பிடித்து கன்னத்தில் அழுந்தக் கொஞ்சினான், ஏதன்.

 “ஒண்டு ரெண்டு கிழமைகளா, முழுசா ரெண்டு வருசங்களுக்கு  இது!” மீண்டும் கொஞ்சியவன், “உன்ர படிப்பு முடிஞ்ச அடுத்த நாள் நான் அங்க இருப்பன்.” என்று விடை கொடுத்தான். 

லக்கேஜ் போட்டுவிட்டு, “போயிட்டு வாறன்” என்றவள்,   கரமிரண்டையும் பற்றி, “உன்னோட நான் அண்டைக்கு அப்பிடியெல்லாம் கதைச்சிருக்க கூடாது. சொறி துர்கா!” என்றிருந்தான் ஐவன்.

சிறு முறுவலும் தலையாட்டலுமாக அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே விடைபெற்று உள்ளே நடந்தவள், பார்வையிலிருந்து மறையும் வரை கைகாட்டிக்கொண்டிருந்தாள்,  ஏவா. ஏதனோ, இமைக்காது அவளையே தொடர்ந்துகொண்டிருந்தான்.

கேட்  கூடத் திறந்துவிட்டார்கள். அப்படியே விமானத்தில் ஏறித் தன் இடம் பார்த்து அமர்ந்துகொண்டாள்.  சீட் பெல்ட்டை போட்டவள் மடியில் அந்த பொக்கே. என்னவோ ஏதன்  அவளோடு பயணப்படும் உணர்வைக் கொடுத்தது, அது. 

கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைப்போம் என்று வாட்சப் சென்றால், அவன் ஒரு ஒலிப்பதிவை அனுப்பியிருந்தான். ஏர்பொட்டை காதினுள் பொருத்திவிட்டுப் பிளே செய்தாள்.

ஆனந்த அதிர்வு, அதைத் தொடர்ந்து ஆச்சர்யம்!

அவன் குரலேதான். அவனுக்குப் பாடத் தெரியும் என்பதே  அவளுக்கு இப்போதுதான் தெரியும். உருகிக் கரைந்த அவன் குரல் செவிவழி நுழைந்து இதயம் தீண்டியது. அந்த நீண்ட பயணத்தில் அவள் வழித்துணையாக அவன் குரல்!   

You are my sunshine

My only sunshine

You make me happy

When skies are gray

You’ll never know, dear

How much I love you

Please don’t take

My sunshine away

The other night, dear

As I lay sleeping

I dreamed I held you

In my arms

When I awake, dear

I was mistaken

So I hung my head and cried

You are my sunshine

My only sunshine

You make me happy

When skies are gray

You’ll never know, dear

How much I love you

Please don’t take

My sunshine away 

பாடல் முடிய, “துர்கா, இஃப் ஹக்ஸ் குட் ரீச் த்துரு ஸ்கிரீன்ஸ் , ஐ வுட் ரப் மைசெல்ஃப் அரவுண்ட்  யூ ஜென்ட்லி” ( If hugs could reach through screens, I’d wrap myself around you gently) என்று ஆழ்ந்து ஒலித்த அந்தக் குரல், இவளை, இறங்கி அவனிடமே ஓடிடச் சொன்னது. நிச்சயமாக அவனும் இவள் எண்ணத்தில்தான் இப்போது இருப்பான். அருகில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து கலங்கும் விழிகளை மறைக்கும் நோக்கில் மூடிக்கொண்டாள், துர்கா.

error: Alert: Content selection is disabled!!