நேரத்தைப் பார்த்துக்கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள், அடுத்த இருபதாவது நிமிடம் வெளியில் செல்ல ஆயத்தமாகியிருந்தாள்.
அவள் கைப்பேசி சிணுங்கியது.
கிறிஸ்டீனாதான் அழைத்திருந்தார்.
“பயணம் எல்லாம் எப்பிடி இருந்தது கனி?”அன்போடு விசாரித்தார்.
பதில் சொன்னவளிடம், இன்று வேலையா என்றும் வினவினார்.
“ஓம் அன்ரி, லீவு எல்லாம் முடிஞ்சிட்டு.”என்றவளை, கணம் கூட ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டேயிரு என்கிறதே, மனம்.
“ உங்களுக்குப் பிரச்சின இல்ல எண்டா வேலைக்குப் போகேக்க பிள்ளைகளப் பள்ளிக்கூடத்தில விடேலுமா கனி? பி அண்ட் பி அபார்ட்மென்ட்டில(B&B -Bed and Breakfast ) திருத்த வேல நடக்குது எல்லாம்மா? தம்பிக்கு நேரத்துக்கே போகோணுமாம் …” என்று சொல்லிக்கொண்டிருந்தவரை முடிக்கவிடாது இடையிட்டிருந்தாள்,கல்யாணி.
“எத்தின நாள் சொல்லிட்டன் அன்ரி, இதெல்லாம் கேக்கவா வேணும்? சொன்னாச் செய்யப்போறன். அதோட பள்ளிக்கூடம் நான் வேலைக்குப் போற வழியில தானே , பக்கத்திலயும்.” குறைப்பட்டாள்.
“பிள்ளைகள் மூண்டு பேரும் எப்பிடி இருக்கினம் அன்ரி ?” என்று விசாரித்துவிட்டு, “ வெளிக்கிடச் சொல்லுங்கோ வாறன்.” என்று வைத்தவள், அறையோடு இருந்த சிறு சமையல் பகுதிக்குள் நுழைந்தாள்.
பொழுது புலரும் முன்னரே வேலைக்குச் சென்றிருந்தார்,இவள் தாய் சுமதி. அவருக்கு அழைத்துக் கதைத்தபடி, க்ரோசோன்ட் ஒன்றை மைக்ரோவில் இலேசாகச் சூடாக்கிக் கடித்தவள், அவளுக்குப் பிடித்தவாறே கடுஞ்சாயம் கலந்து பால் தேநீர் தயாரித்துக்கொண்டாள்.
“உம்மட தேத்தண்ணிட ருசி வேற லெவல்…” என்றபடி, விழிகளால் அவளைப் பருகிக்கொண்டே நிதானமாகத் தேநீரை உறிஞ்சுவானே! கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்த எண்ணம் பின்னோக்கிப் பாய, கல்யாணிக்கு மிகவும் அலுப்பாகவும் களைப்பாகவும் இருந்தது.
ஐந்தாறு வருடங்களாக ஆள் இன்னார், தான் இருக்கும் வீட்டுக்கு அருகிலுள்ள கராஜில் வேலை செய்யும் பெடி என்று தெரியும்தான். சுமூகமாக கதைத்தது , அதன்பின் விரும்பி, இவள் வளர்ந்த வீட்டு அன்ரி மற்றும் சூர்யா வீட்டினர் சம்மதத்தோடு பழகியது எனப்பார்த்தால் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள்தான். கடைசியாக அவனைக் கண்டபோது இவளுக்கு இருபத்திமூன்று வயது. தாதியர் பயிற்சிப் பாடசாலையில் மூன்றாம் வருடத்தில் இருந்தாள்.
நீண்ட பெருமூச்சு வெளியேறியது. எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. இதோ, முப்பத்தியைந்து ஆகப்போகுது. இதுதான் கடைசி என்று சென்று, அவன் மகிழ்வோடு வாழ்வதைப் பார்த்து வந்த பின்னும் இது எல்லாம் என்ன? அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
பச்! நினைவுகளையும் எண்ணப்போக்குகளையும் ஒருவர் மற்றவர் வெளிப்டையாகப் பார்க்கும் படி வாய்ப்பு இருந்திருக்க, இந்த உலகு என்றோ அழிந்துவிட்டிருக்கும்.
கசந்த முறுவலோடு தேநீரைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தவள், அச்சிறு வரவேற்பறையில், இருவர் அமரக் கூடியவகையில் இருந்த மென் இருக்கையின் ஒருபுறம் அமர்ந்துகொண்டாள்.
சுகமாக வந்து சேர்ந்ததை, கிளிநொச்சியில் உள்ள நண்பிக்கும் தீபா அம்மாவுக்கும் குறுஞ்செய்தியில் தெரிவித்தவள், முகநூலைத் திறந்தபடி தேநீரை உறிஞ்சினாள். மனத்தைத் தற்காலிகாமாக மாற்றும் முக்கிய மருந்துகளில் ஒன்று வாசிப்பு!
எழுத்தாளர் நிதனிபிரபு, அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை. ‘உன் அன்புக்கு நன்றி’ கதைக்கான அடுத்த அத்தியாயம் போட்டிருந்தார்.
‘நிரல்’ உயிர் நேசத்தின் பிரிவு தரும் அவளின் வலியை இவளைவிட யாரால் விளங்கவியலும்! நிதனிபிரபுவின், இதயத்தைச் சுண்டியிழுக்கும் வரிகளில் தன் இதய வேதனையை அச்சொட்டாக வாசித்துணர்ந்தாள், கல்யாணி.
அந்த அத்தியாயத்தை விம்மியழுத வண்ணம்தான் வாசித்து முடித்தாள். சிசிர, இரண்டு குழந்தைகளோடு நிரலை அறியாது நின்றான். இவள் சூர்யாவோ, ஒரு மகளோடு… அவளை …
சிந்தனை தடைபட்டு நின்றுவிட்டது.
‘ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்திச்சா என்ன செய்வார்? அந்தக் கனவில வந்தது போல…’ என்றோடிய சிந்தனைக்கு, வலிக்க வலிக்க அடி கொடுத்தவாறே எழுந்துகொண்டாள்.
தேநீர்க்கோப்பையைக் கழுவி வைத்த வேகத்தில் கைப்பையும் கார்த்திறப்புமாக வெளியில் வந்து வீட்டைப் பூட்டியவள், சற்றே தள்ளியிருக்கும் பெரிய வீட்டை நோக்கி விறுவிறுவென்று நடந்தாள்.
அன்று, சூர்யா குடும்பமே தங்கையின் திருமணத்திற்காக இந்தியா சென்றிருக்க, இவள் மறுநாள் கொழும்பு செல்ல வேண்டிய ஆயத்தங்களைச் செய்து வைத்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தாள்.
சிறிது நேரம் கடந்திருக்கும் வாயில் கதவு தட்டப்பட்டது. இவள் எழுந்து வெளியேவர அன்ரியும் வந்துவிட்டார். தொடர்ந்து கதவு தட்டப்படுகிறதே. “ஆரது?” என்ற அன்ரியின் அதட்டலுக்கு, “அக்கா, நான்தான் ஜீவன், கிளிநொச்சில இருந்து வந்திருக்கிறன், கதவத் திறங்கோ!” என்று பதில் வரவும், தாமதியாது கதவைத் திறந்தார், அன்ரி.
அன்ரிக்கு தெரிந்தவர்கள் இருவர் வந்திருந்தார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்ற விபரம் சொல்லாது, இவளை இழுத்துக்கொண்டு கிளிநொச்சி சென்றிருந்தார். அன்ரி.
நடுச்சாமம் என்றாலும் உதயநகரில் இருந்த அந்தப் பெரிய வீட்டின் பின்னால் இருந்த சிறு வீட்டில் லன்டர் வெளிச்சம் இருந்தது.
“ஆர் வீடு இது? என்ன பிரச்சினை அன்ரி? ஏன் அழுதுகொண்டே இருக்கிறீங்க?” என்று, திருப்ப திருப்பக் கேட்டுக் களைத்துப்போனாள், கல்யாணி.
இவர்களின் அரவம் கேட்டதும் கதவு திறந்துகொண்டது. கையில் லன்டரோடு நிற்பது …
“என்ர … அம்மாளே!” திடுமென்று, தான், கனவெதுவும் காண்கிறோமோ என்று எண்ணிவிட்டாள், கல்யாணி.
இல்லையேல், இறந்து போனவர்கள் எப்படி நேரில் வருவார்கள்!
‘அம்மா!’ கிடுகிடுவென்று நடுங்கிய அவள் நெஞ்சம் அலறியது. அவரைத் தொட்டுணர ஏங்கினாள். அதுதான் முடியாதே! கண்ணீரோடு நெருங்க முயன்றாள். அதற்கிடையில், லன்டரை கீழே வைத்துவிட்டுப் பாய்ந்து வந்து அணைத்திருந்தார், இவள் அன்னை சுமதி.
“அம்மா!” வீரிட்டாள், கல்யாணி. இறுக அணைத்துக்கொண்டவர் இது கனவில்லை என்று உணர்த்தினார். உடல் உதற, சத்தமில்லாது கண்ணீர் விட்டார், சுமதி. இன்றுவரை அவர் வாய்விட்டு அழுது இவள் காணவில்லை. ஆரம்ப வருடங்களில் இருந்த கண்ணீர் கூட இப்போது இல்லை.
அன்று, இரவிரவாக அன்னையைக் கட்டிபிடித்தபடி கொட்ட கொட்ட முழித்துக் கிடந்தது இன்றும் பசுமையான, கனமான நினைவாகவுள்ளதே!
அன்று, தாயின் மரித்து உயிர்த்த கதையைக் கேட்ட கல்யாணி, மறுநாள் கொழும்பு செல்ல வேண்டியதையும் தான் உயிராக நேசித்தவனையும் மறந்தே போனாள். நாட்கள் சில சென்றபின் நினைவில் வந்தபோது, அதில், உயிராக நேசித்தவனை ஒரேயடியாக ஒதுக்கியே விட்டாள்.