கிருபனின் கமலி 5 – 2

கிருபனோ திகைப்புடன் கமலியைத் தான் பார்த்தான். சும்மா குருட்டுப் போக்கில் எறிந்த பந்து, இலக்குத் தவறாமல், அவளைத் தாக்கும் என்று, அவன் எதிர் பார்க்கவே இல்லை.

“என்னையா அவுட் ஆக்கினீங்க, மாட்டுவீங்க தானே, வச்சு வெளுக்கிறன்!” காலைத் தடவி விட்டபடி கருவியவளின் பேச்சில், சின்ன அதிர்வு தாக்க, கண்ணால் மன்னிப்பை யாசித்தான், கிருபன்.

அதன் பிறகு, நடந்த விளையாட்டு முழுவதிலும் எதிரணியில் பலர் இருந்தாலும் அவளின் இலக்கு, அவன் மட்டுமே என்றாகிப் போனான். அவனும் இலேசுப்பட்டவன் அல்ல என்று, அவளின் பந்துக்கு அகப்படாமல் நீளக் கால்களால் தப்பித்து ஓடி நிரூபித்தான்.

அவள், தன்னைத் தான் குறி வைத்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைத் தானும் குறிவைத்துத் தாக்கினான். ஜீன்ஸ் கால்களை முழங்கால் வரை மடித்து விட்டுவிட்டு, முகம் முழுக்கச் சிரிப்புடன் அவளை விரட்டி விரட்டி அடித்தான். சந்தர்ப்பம் அமைகிற போது அவளும் விடாமல் தாக்கினாள்.

உருண்டு ஓடும் பந்தைக் கண்டு பிடிப்பது சிரமம் என்கிற அளவுக்கு இருட்டிய பிறகே, அவர்களின் விளையாட்டு முற்றுப் பெற்றது. இதை, இத்தனை நாட்களாக விளையாடாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிற அளவுக்கு, கிருபனுக்கு விளையாட்டுப் பிடித்துப் போயிற்று. வியர்த்து, களைத்து, கால்களில் மெல்லிய உளைவு தெரிந்தாலும், மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. என்னவோ, சின்ன வயதிற்கே போன உணர்வு.

அதே தெரு என்பதில் நிமிடத்தில் மற்றவர்கள் தத்தம் வீடுகளுக்கு ஓடி இருந்தனர்.

“மச்சி! வீட்டுக்கு வாறியா?” தன் பைக்கை இவனருகில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு வினவினான், அரவிந்தன்.

“இல்லயடா. நான் குளிக்கோணும். கனகாலத்துக்குப்(கன- நிறைய) பிறகு நல்லா வேர்த்திருக்கு!” இலாவகமாகத் தன் பைக்கில் ஏறி அமர்ந்த படி சொன்னான், கிருபன்.

இப்போது, அவன் தேகம் முழுவதிலும் கூட புழுதி அப்பிக் கிடந்தது. பார்த்துச் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டான்.

“அப்ப நான் போய்க் குளிச்சிட்டு உன்ர வீட்டுக்கு வாறன். பிளே ஸ்டேஷன் விளையாடுவம்.” என்றுவிட்டு, தங்கையைத் திரும்பிப் பார்த்தான், அரவிந்தன்.

ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்து, காலைத் தேய்த்து விட்டுக்கொண்டு இருந்தாள், அவள்.

“வெளிக்கிடாம இன்னும் என்ன செய்றாய்? இருட்டுது பார்!”

“கால் நோகுது, அண்ணா. சுளுக்கிட்டுதா எண்டு பாக்கிறன். நீ போய்க் கெதியாக் குளி. நான் அபிய அவன்ர வீட்டுல விட்டுட்டு வாறன். நான் வரேக்க பாத்ரூம் ஃப்ரீயா இருக்கோணும்!” காலை உருவி விட்டுக்கொண்டே சொன்னாள், கமலி.

அரவிந்தன் பைக்கை முறுக்கிக்கொண்டு சென்று மறைந்தான். அவனின் பின்னால் புறப்பட்ட கிருபனால் போக முடியவில்லை. அவளுக்குக் கால் சுளுக்கிய விடயம் அவனைத் தொந்தரவு செய்தது. அவனால் தானோ? அவளைத் திரும்பிப் பார்த்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதாவது கேட்கலாம் என்று நிற்க, அவள், இவனைக் கவனிக்கவில்லை. மும்முரமாகக் காலைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்கு மேல், அவளோடு தானும் நிற்பது சரியல்ல என்று பட, பைக்கை ஸ்டார்ட் செய்தான். அந்தச் சத்தத்துக்கு நிமிர்ந்தாள், கமலி. அவன் பைக்கை திருப்பியபோது முழங்கையில் சிவப்பாக இரத்தம் தெரிந்தது.

“அச்சோ, என்ன இது ரெத்தம்?” அவளின் பதற்றத்தில் வேகமாகத் திரும்பி அவளின் காலைப் பார்த்தான், அவன்.

“என்ர கால்ல இல்ல. உங்கட கைல!”

எங்கே என்று இரண்டு கைகளையும் ஆராய்ந்தான். வலது முழங்கையில் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அட, இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? பனையின் அருகால் ஓடிய போது ஏதோ உரசியது போல் இருந்தது தான். தப்பிக்கும் மும்முரத்தில் அதைக் கவனிக்கவில்லை. அது தான் போலும்.

அவனருகே ஓடி வந்தாள், கமலி. “இவ்வளவு ரெத்தம் வாற அளவுக்கு எங்க போய் விழுந்தீங்க?”

அவள் கேள்வியில் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. விழுந்து காயம் வாங்க, அவன் என்ன குழந்தைப் பிள்ளையா? “அது ஒண்டுமில்ல. சின்னக் காயம் தான்!” கையை மறைக்க முனைந்தவாறு சொன்னான்.

“விசரா உங்களுக்கு! காட்டுங்க, ஒரு விரல் நீட்டுக்குக் கீறி இருக்கு. ஒண்டுமில்ல எண்டு சொல்லுறீங்க.” அவனது கையைப் பற்றிக் காயத்தைப் பரிசோதித்தாள், அவள்.

“இல்ல விடுங்கோ.” ஒரு பெண்ணின் கை பட்டதில் அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

“டேய் லூசாடா நீ. ரெத்தம் வருது எண்டு சொல்லுறன். விடுங்கோ விடுங்கோ எண்டுகொண்டு. என்ன?”

அவளின் அதட்டலில் திகைத்துப் போனான், கிருபன். என்ன சொல்வது என்று தெரியாமல் அவளைப் பார்த்தான்.

அவனைக் கவனிக்கும் நிலையில் இல்லை, கமலி. காயம் சற்றே ஆழமாக இருந்தது. “கொஞ்சம் பொறுங்கோ. கழுவி விடுவம்!” என்றுவிட்டுத் தண்ணீர் எடுக்க ஓடினாள்.

போகிறவளையே மெல்லிய அதிர்வுடன் பார்த்திருந்தான், கிருபன். சற்றே அதிகமாக எரிந்தது தான். என்றாலும், அவள் பதறுகிற அளவுக்கெல்லாம் ஒன்றுமே இல்லை. அவனும் இறங்கிக் குழாயடிக்குப் போய்க் கழுவிக் கொள்ளலாம் தான். ஆனால், அசையக் கூட முடியாதவனாகத் தனக்கான அவளின் துடிப்பை, இமைக்க மறந்து பார்த்திருந்தான்.

ஒரு போத்தலில் தண்ணீரைக் கொண்டு வந்து, இவனின் முழங்கைப் பக்கத்தை மென்மையாகத் தேய்த்து தேய்த்துக் கழுவினாள். “நொந்தாச்(வலித்தால்) சொல்லுங்கோ!” கனிந்த குரலில் சொன்னாள்.

நன்றாகவே எரிந்தது. ஆனாலும், அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான், கிருபன்.

சொந்த மாமா விருட்டென்று எழுந்து போக யாரோ ஒருத்தி இந்தப் பாடு படுகிறாள்; அவனுக்காகத் துடிக்கிறாள்; அக்கறையோடு கவனிக்கிறாள்.

“நீங்க என்ன சின்னப்பிள்ளையா? விளையாட வந்து காயம் வாங்கி வச்சு இருக்கிறீங்க. நாங்க எல்லாம் எத்தினை வருசமா விளையாடுறோம். ஒரு சின்னக் கீறல் கூட இல்ல.”

அவன் அனுபவித்தறியாத ஏதோ ஒன்றை அவனுக்கு அறிமுகப் படுத்திக்கொண்டு இருந்தாள், அவள்.

“எருமை மாடு மாதிரி வளந்தது தான் மிச்சம். கவனமா விளையாடத் தெரியாதா?”

அவனுடைய உணர்வுகள் பொங்கிக் கொண்டு இருந்தன. அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. கையை மட்டும் அவளிடம் கொடுத்து விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

வாய் அவனைத் திட்ட, கை இரத்தத் திட்டுகளோடு காய்ந்து போயிருந்த காயத்தை மிருதுவாகச் சுத்தப் படுத்தியது. “வெண்டிக்காயின்ர அளவுக்குக் கீறி இருக்கு. இதுல சின்னக் காயமாம். மண்டையிலயே குட்ட வேணும் உங்களுக்கு!”

அம்மாவின் பாசத்தை அவளின் கோபத்தில் உணர்ந்த போது, அவன் விழிகளில் மெல்லிய நீர்ப் படலம்.

இவ்வளவு திட்டியும் வாயே திறக்காமல் இருக்கிறானே என்று நிமிர்ந்து பார்த்தாள், கமலி. கசிந்திருந்த அவன் விழிகளைக் கண்டு இரக்கம் கொண்டாள். “நல்லா நோகுதா? வீட்டுக்கு வாங்கோ மருந்து போட்டு விடுறன். அப்பிடியே சாப்பிட்டுப் போகலாம், சரியா?” என்றவளின் கனிந்த அன்பில், முற்றிலுமாக உடைந்து போனான், அவன்.

“என்னைக் கலியாணம் கட்டுறியா?” அவனின் உத்தரவு இன்றியே கேட்டிருந்தது, அவனது உதடுகள்.

திகைத்து நின்று விட்டாள், கமலி. அதுவும், நொடி நேரம் தான். கையில் இருந்த தண்ணீர் போத்தலாலேயே படார் என்று அவனுக்கு அடித்தாள்.

“அண்ணான்ர பிரென்ட் எண்டு நம்பிப் பழகினா என்ன கதைக்கிறீங்க? பாவம் எண்டு பாத்தா பல்லைக் காட்டச் சொல்லுவீங்களோ? ஓடிப் போயிடுங்க! இல்ல, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” நொடியில் கோபத்தில் சிவந்து விட்ட முகத்துடன் சீறினாள், அவள்.

அவளையே பார்த்தான், கிருபன். அடைத்த தொண்டை ஒரு முறை ஏறி இறங்கிற்று. ‘நீ எனக்கு அம்மா மாதிரித் தெரிஞ்சியேடி’ என்று எப்படிச் சொல்வான். அவனளவில் மனதில் பட்டதைப் பட்ட நொடி வாய் விட்டுச் சொன்னதே இமாலயச் சாதனை. இதில், மனத்தைத் திறப்பது என்பதெல்லாம் நடக்கிற காரியமா?

“சொறி!” உதடுகள் முணுமுணுக்க, அவனுடைய பைக் அங்கிருந்து சீறிக்கொண்டு பறந்தது.

error: Alert: Content selection is disabled!!