வர்ணம் 19
அன்று தன் கேமராவைப் பிடித்தபடி ராஷி சொன்ன அந்த வார்த்தைகள் அருளின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்தான். அதற்குப் பின்னால், கேமராவும் கையுமாகச் சிரித்துக் கொண்டே நிற்கும் ராஷியும், அவளுக்குப் பின்னால் குறும்புத்தனமாக முகத்தைக் காட்டும் சாருவும் தெரிவது போல அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது.
“ராஷி… சாரு… உண்மையிலேயே நீங்க எங்கே இருக்கீங்க? என்னை இப்படித் தவிக்க விட்டுட்டு எங்க போனீங்க?”
ஜன்னல் வெளியே தெரிந்த அந்த நீல வானமும், அடர்ந்த மேகங்களும் அவனது எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனமாக நகர்ந்தன. விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் வீசிய அந்தப் பனிக் காற்றில் தன் மூச்சுக்காற்று பட்டு உருவான நீராவியில், அருள் மெல்ல விரலால் ராஷியின் பெயரை எழுதத் தொடங்கினான்.
அவன் எழுதி முடிப்பதற்குள், அந்த பெயர் நீராவியோடு கரைந்து மறைந்தது… அவனது நம்பிக்கையைப் போல!
கண்ணீர் மீண்டும் கன்னத்தில் வழிய, அருள் தன் பார்வையை அந்த வெட்டவெளி மேகங்களிலிருந்து திருப்ப முடியாமல், சென்னை வந்து சேரும் வரை ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் காரில் ஏறிய அடுத்த நொடியே, அருளின் நெஞ்சம் தவிக்க சார் இப்பையாவது சொல்லுங்கள் ,என்ன ஆச்சு? ராஷியும் சாருவும் எங்கே? ஏன் அவங்க வரல? ஏன் நீங்க கண்ணீர் விடுறீங்க?” என்று அருள் பதற்றத்தோடு வினவினான்.
ராஷியின் தந்தை அருளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தொண்டை அடைக்கப் பேசத் தொடங்கினார்:
“அருள்… இந்த ஆறு மாசமா அவங்க ரெண்டு பேரும் உங்களை ஏமாத்திட்டாங்கன்னு நீங்க நினைச்சிருந்தா எங்களை மன்னிச்சிடுங்கப்பா. ஆனா உண்மை அது இல்லை…” என்று கூறி விக்கி விக்கி அழுதார்.
“சென்னையில இருந்து இந்த ஆவணப் படத்தோட டெல்லிக்கு வந்த அன்னைக்கே… மத்திய அமைச்சகத்துல இந்த ஃபைலை சப்மிட் பண்ணிட்டு வெளியே வரும்போது, எதிர்பாராத விதமா நடந்த ஒரு கார் ஆக்சிடென்ட்ல…” என்று அவர் நிறுத்தியதும், அருளின் தலை சுற்றியது. கால்கள் நடுங்கின.
“அவங்க ரெண்டு பேருக்கும் பயங்கரமான காயம் அருள்! ராஷி கடந்த ஆறு மாசமா ஹாஸ்பிடல்ல ‘கோமா’ நிலையிலதான் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா! அடிபட்ட அந்த நிலையிலயும் ராஷியோட கையில இருந்த ஒரே விஷயம்… உங்க மூணு பட்டுப் புடவைகளும், இந்த ஆவணப் படப் பெட்டியும்தான்! தன் உயிரை விட அந்தப் புடவையைத்தான் அவள் இறுக்கிப் பிடிச்சிருந்தா…”
சாருவின் தாய் கதறி அழுதுகொண்டே, “உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னுதான் அவங்க போராடினாங்க அருள். இன்னைக்கு அவங்களுக்கு விருது குடுக்குறாங்கன்னு தெரிஞ்சதும், நாங்கதான் அவங்க சார்பா வந்து வாங்குனோம்…” என்றார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி… அருளின் கையிலிருந்த தேசிய விருது நழுவிக் கீழே விழுந்தது!
‘பணக்காரி நம்மை ஏமாற்றிவிட்டாள்’ என்று ஆறு மாதங்களாக அவளைப் பழித்த தன் நெஞ்சை அவனே அடித்துக் கொண்டான். அவனது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைப் பொழிந்தன.
தன் பரம்பரை கௌரவத்தையும், கலையையும் உலகிற்கு உயர்த்தத் தன் உயிரையே பணையம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் தன் காதலியின் தியாகத்தை நினைத்து, அருள் உடைந்துபோய் கதறி அழுதான்!
மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட நீண்ட நடைபாதையில் நடக்கும்போது, அருளின் ஒவ்வொரு அடியும் பாரமாக இருந்தது. ராஷியின் தந்தை அவனை தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே, கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால்… ராஷி அமைதியாகப் படுத்திருந்தாள்.
அவளது உடலெங்கும் மருத்துவ உபகரணங்களின் ஒயர்கள் பிணைக்கப்பட்டிருந்தன.
இதயத் துடிப்பைக் காட்டும் திரையில் பச்சை நிறக் கோடுகள் மெதுவாக உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. இத்தனை நாட்களாகத் தன் காதலாலும் குறும்பான பேச்சாலும் அவனை உயிர்ப்போடு வைத்திருந்தவள், இப்போது எந்த அசைவும் இன்றி ‘கோமா’ நிலையில் ஒரு மெழுகுச் சிலை போல உறங்கிக் கொண்டிருந்தாள்.
கண்ணாடித் தடுப்பில் தன் கைகளைப் பதித்த அருளின் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தது.
“ராஷி…” என்று அவனது தொண்டையிலிருந்து மெல்லிய குரல் மட்டுமே வெளிப்பட்டது.
‘சிரசாமலையின் தென்னந்தோப்பில், தன் மார்போடு சாய்ந்து காதலைப் பொழிந்தவளா இது? “இனிமே நீதான் என்னைத் தேடி வரணும் வர்மா சார்” என்று குறும்புடன் சவாலிட்டவளா இப்படி உயிரற்றப் பாவை போலப் படுத்திருக்கிறாள்?’ என்ற எண்ணம் அருளின் நெஞ்சைப் பிளந்தது.
அவன் ராஷியின் தந்தையைப் பார்த்து, “ஐயா… நான் உள்ள போய்ப் பார்க்கலாமா?” என்று விம்மியபடி கேட்டான்.
மருத்துவர்களின் அனுமதியோடு, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டு அருள் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தான்.
கட்டிலின் அருகே சென்று அமர்ந்தவன், எந்தக் கரங்கள் தன் இடுப்பைத் தொட்டதற்காக அவளிடம் சண்டையிட்டானோ, அந்த மென்மையான, காயம்பட்ட ராஷியின் கரங்களை லேசாகத் தன் இரு கைகளுக்குள்ளும் ஏந்திக் கொண்டான். அவளது விரல்கள் ஜில்லென்று குளிர்ந்து போயிருந்தன.
அவளது காதோரம் குனிந்து, கதறிய குரலில் முணுமுணுத்தான்:
“டி… ராஷி! எந்திரிடி… பாரு, உன் உயிர் வர்மா வந்திருக்கேன்டி! நீ ஆசைப்பட்ட மாதிரியே டெல்லியில நமக்குத் தேசிய விருது கிடைச்சிருச்சுடி… நம்ம பட்டுப் புடவையை உலகமே பார்த்து ஆச்சரியப்பட்டு நிக்குது. இதையெல்லாம் பார்க்க வேண்டிய நீ… இப்படிப் பேசாம படுத்து இருந்தா நான் என்னடி பண்றது?”
அவனது கண்ணீர்த்துளி ராஷியின் குளிர்ந்த விரல்களில் சிந்தியது.
“என்னை மன்னிச்சுடுடி… நீ என்னை ஏமாத்திட்டன்னு நினைச்சு இந்த ஆறு மாசமா உன்னைத் தப்பா நினைச்சுட்டேன்டி. உன் உயிரையே பணயம் வச்சு என் பாரம்பரியத்தைக் காப்பாத்துவன்னு நான் கொஞ்சம்கூட யோசிக்கலையேடி…” என்று கூறி அவளது கைகளில் தன் முகத்தைப் புதைத்து உடைந்தழுது விட்டான்.
அருளின் இந்தத் துடிப்பையும் உண்மையான அன்பையும் பார்த்த மருத்துவமனையின் தலைவர்களும், ராஷியின் பெற்றோர்களும் கலங்கிய கண்களோடு நின்றிருந்தனர்.
சிரசு மலையில் தொடங்கிய அவர்களின் காதல், இப்போது சென்னையின் அதிநவீன மருத்துவமனையின் இந்தக் தீவிர சிகிச்சைப் பிரிவில், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான மாபெரும் போராட்டமாக உருவெடுத்திருந்தது!
வெளியே இருந்து அருளின் துடிப்பையும், கதறலையும் பார்த்த ராஷியின் பெற்றோர்களுக்கு அதில் காதல் இருப்பதே தெரியவில்லை.
அவர்கள் பார்வையில், அருள்மொழிவர்மன் ராஷிக்கும் சாருவுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்த ஒரு நேர்மையான ஆசிரியர் மட்டும்தான். தன் கலைக்காகவும், தன் பாரம்பரியப் பட்டுப் புடவைகளைக் காப்பாற்றவும் இந்த இளம் பெண்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்திருக்கிறார்களே என்ற குற்ற உணர்ச்சியில்தான் அந்த ஆசிரியர் இவ்வளவு தூரம் வேதனைப்படுகிறார் என்றே அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.
ராஷியின் தந்தை மெல்ல அறைக்குள் வந்து, அருளின் தோள்களை ஆதரவாகத் தொட்டார்.
“அழாதீங்க அருள்… அவங்க ரெண்டு பேரும் உங்க மேலயும், உங்க கலை மேலயும் வச்சிருந்த மரியாதைக்குத்தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்காங்க. நீங்க அவங்களுக்கு குரு மாதிரி. உங்க மாணவிங்க இப்படி ஒரு நிலைமையில இருக்குறதப் பார்த்து நீங்க இவ்வளவு வேதனைப்படுறது எங்களுக்குப் புரியுது. ஆனா, நீங்க தைரியமா இருக்கணும் தம்பி…” என்று ஆறுதல் சொன்னார்.
அருளின் மனம் ஒரு நொடி திகைத்தது.
‘தான் ஒரு ஆசிரியர் மட்டுமா? இல்லை… அவளது உயிருக்கு உயிரான காதலன்!’ என்ற உண்மையை உரக்கக் கத்த வேண்டும் போல அவனுக்குள் ஒரு தவிப்பு எழுந்தது. ஆனால், இந்த மரணப் போராட்டத்திற்கு நடுவே, தங்களின் காதலைப் பற்றிச் சொல்லி அந்தப் பெற்றோர்களை மேலும் குழப்பத்திலோ வேதனையிலோ தள்ள அவன் விரும்பவில்லை.
தன் காதலை மனதிற்குள்ளேயே அழுத்தமாகப் புதைத்துக் கொண்டான்.
“டாக்டர்… டாக்டர் என்ன சொல்றாருய்யா? ராஷி… என்… என் ஸ்டூடண்ட் எப்போ கண் விழிப்பா?” என்று தொண்டை அடைக்க, வார்த்தைகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கேட்டான் அருள்.
ராஷியின் தந்தை பெருமூச்சு விட்டு, “டாக்டர்ஸ் என்னென்னவோ ட்ரீட்மென்ட் பண்ணிப் பார்த்துட்டாங்க அருள். அவ கோமாவுல இருந்து எப்போ வெளிய வருவாங்கன்னு அவங்களாலேயே உறுதியா சொல்ல முடியல. ஆனா, மூளைக்குள்ள ஏதோ ஒரு சிறிய அசைவு மட்டும் இருக்குன்னு சொல்றாங்க. அவளுக்குப் பிடிச்ச விஷயங்களையோ, பிடிச்சவங்களோட குரலையோ தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தா… ஒருவேளை அவளுக்கு நினைவு திரும்ப வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க…” என்று கூறி முடித்தார்.
அதனைக் கேட்டதும் அருளின் கண்களில் சிறு நம்பிக்கை மின்னியது.
“ஐயா… நான் கொஞ்ச நேரம் அவ பக்கத்துல இருந்துக்கட்டுமா? நான்… நான் என் நெசவைப் பத்தியும், அவங்க கத்துக்கிட்ட பாடங்களைப் பத்தியும் அவகிட்ட பேசுறேன்…” என்று ஒரு ஆசிரியருக்கான உரிமையோடு கேட்டான்.
ராஷியின் தந்தை மனமுவந்து சம்மதித்துவிட்டு வெளியே சென்றார்.
அறைக்குள் இப்போது அருளும், கோமாவில் இருக்கும் ராஷியும் மட்டுமே!
மீண்டும் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் இறுக்கமாகப் பற்றிக் கொண்ட அருள், அவளது காதோரம் மிக மெல்லிய குரலில், ஆனால் ஆழமான காதலோடு முணுமுணுக்கத் தொடங்கினான்.
“ராஷி… நான் உன் அருள் சார் இல்லைடி… உன் வர்மா வந்திருக்கேன். உனக்குப் பிடிச்ச விஷயத்தைப் பத்தி பேசினா நீ முழிப்பியா? உனக்கு என்னடி பிடிக்கும்? என்னைத்தானேடி ரொம்பப் பிடிக்கும்!
சிரசா மலையில, அந்தப் பௌர்ணமி நிலாவுல, தென்னந்தோப்புல நீயும் நானும் எப்படிப் பேசிப் சிரிச்சோம்னு ஞாபகம் இருக்கா?” என்று தன் காதலின் நினைவுகளை ஒவ்வொன்றாக அவளது காதுகளில் ஊற்றத் தொடங்கினான்.
வர்ணம் மிளிரும்…

