MPK 21
“இல்லை… அது சரி வராது…” என்றவள் நினைவில் நேற்றைய இரவு அவர்கள் மாலா வீட்டின் பக்க வீட்டில் குடியிருக்கும் பெண்மணி மாலதி பேசியதெல்லாம் ஓடியது.
நேற்றிரவு சாதனா ஆதித்யன் வீட்டிலிருந்து கிளம்ப சற்று தாமதித்து விட்டது. எல்லாம் நித்திலனால் தான். ஆதித்யனுக்கு நேற்று கிளினிக்கில் நோயாளிகள் அதிகம். அதனால் அவன் முடித்து வரத் தாமதமாக, நித்திலனோ தான் வரைந்த சித்திரத்தை அவனிடம் காட்டி விட்டே வீடு வருவேன் என்று அடம் பிடித்தான். நாளை காட்டலாம் வா என்றாலும் வரவில்லை.
தன் பிடிவாதத்தில் நின்று வென்று தன் ஓவியத்துக்கு ஆதித்யனிடம் உண்டியல் காசு நூறு ரூபாய் பரிசு வாங்கிக் கொண்ட பின்தான் அங்கிருந்து நகர்ந்தான்.
ஏழு மணி தாண்டி வீடு வந்திருந்தவள் வீட்டைத் திறக்கும் முன், வெயிலில் காயப்போட்டு, இரவின் மென்பனியில் நனைந்து இளகியிருந்த உடைகளைப் பொறுக்க, எங்கிருந்தோ வந்த மாலதி…
“சாதனா, உனக்கு இந்த வீடு வேணுமோ? இல்லாட்டி என்ர சொந்தக்காரப் பிள்ளை ஒண்டு இந்தப் பக்கமா வாடகைக்கு வீடு கேட்குது, அவைக்குக் குடுப்பமோ?” என்று சம்பந்தம் இல்லாமல் கேட்க, இவள் முழித்தாள்.
“என்னக்கா கேக்கிறீங்கள் நீங்கள்? இந்த வீட்டிலதானே நாங்கள் இருக்கிறம். அதை என்னண்டு நாங்கள் வாடைக்குத் தாறது? அதுவும் வாடகை வீட்டை?”
“இல்லை, நீங்கள் விடிஞ்சா பொழுதுபட்டா டொக்டர் வீட்டதானே முழுநேரமும் நிக்கிறீங்கள்? சிலநேரம் பெடியன் ஏழெட்டு மணிக்கு வந்துதான் யூனிஃபோர்மே மாத்திறார். அதான் ஜோக்கா கேட்டனான்.” என்று விட்டு பெரும் குரலில் சிரிக்க, இவளுக்கு அவரின் நகைச்சுவை சகிக்கவில்லை.
வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் எப்படி நைசாகத் தன் நடத்தையைக் கேள்விக்கும் கேலிக்குமுள்ளாக்குகிறார்?
சாவகச்சேரியில் இருக்கும்போதும் இப்படி சிலதை அனுபவித்திருக்கிறாள்தான். ஆனால் இங்கே இதை எதிர்பார்க்கவில்லை அவள். ஊர் மாறி விட்டால் மனிதர்கள் மாறி விடுவார்கள் என்று நினைத்து விட்டாளா இல்லை, மருத்துவர் வீட்டை சுற்றிலும் உள்ள சுற்றம் அவர்களைப் போல் குண சுத்தமாக இருப்பார்கள் என்று நினைத்து விட்டாளா தெரியவில்லை.
அவளுக்குத் தெரியவில்லை, இதுபோன்ற சாக்கடைகள் சந்தன வாசனைத் திரவியம் தெளித்த வண்ணம் தமக்கான தருணம் வரும்வரை காத்திருப்பர் என்று!
இவரும் அப்படித்தான். சற்றுநாள் முன் வரை அவளுடன் நல்ல மாதிரியாகத்தான் பழகி வந்தார்.
அப்படி ஒருநாள் கதைக்கும் போது, தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் உன்னைப் போல் ஒரு நல்ல ஒரு வேளை கிடைத்தால் உதவியாக இருக்கும். டொக்டர் வீட்டில் கதைத்து ஏதாவது வேலை வாங்கித்தா என்று கேட்டிருந்தார்.
பரமேஸ்வரியைப் பற்றி நன்கு தெரிந்த சாதனாவுக்கு இவரை அவர் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவே மாட்டார் என்று நூறுவீதம் நிச்சயம்.
ஆனால் அதற்கான காரணத்தை சொல்லி இவரின் மனதை நோகடிக்க மனமின்றி வேலையிருந்து அவர்கள் கேட்டால் சொல்கிறேன் என்று சும்மா சொல்லி வைத்தாள்.
அதன் பின் இவளைக் காணும் நேரமெல்லாம் வேலைக்குக் கேட்டாயா என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.
இவளும் சமாளித்துப் பார்த்து ஒருகட்டத்தில் முடியாமல், “அவை எதிர்பார்க்கிற குவாலிபிகேஷன் உங்களிட்ட இல்லை, அக்கா!” என்று விட்டாள்.
“வீட்டு வேலை செய்ய என்ன பட்டம் படிச்சுப் போட்டுப் போகோணுமோ? நீ அப்பிடி எத்தினை பட்டம் முடிச்சிருக்கிறாய்? உனக்கு கேட்க விருப்பமில்லை எண்டு சொல்லேன்.” என்று அன்று முறுக்கிக் கொண்டு போனவர் அதன் பின் அடுத்தநாள் தானாகவே வந்து கதைத்துமிருந்தார்.
வேலையைப் பற்றியெல்லாம் பேசாமல் சாதாரணமாக பேச இவளும் ஏமாற்றத்தில் ஏதோ கதைத்துவிட்டார் என்று அவரை மன்னித்து சாதாரணமாகப் பேசினாள்.
ஆனால் அவர் இவ்வளவு வஞ்சத்தை அடி மனதில் வைத்திருந்து எப்போது சந்தர்ப்பம் அமையும் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். மனிதர்களை எண்ணி ச்சீ என்றானது அவளுக்கு.
முதலில் அவர் கேள்வியில் கோபம் எக்கச்சக்கமாய் வந்தாலும் அனுபவம் கற்றுத் தந்த பாடம் அவளை நிதானிக்க வைத்தது.
“நான் இஞ்ச வந்ததே அவேற்ற வேலைக்கு போகத்தானே அக்கா? பிள்ளையளுக்கு எதுவும் தேவை எண்டா என்னை உடன பிடிக்கோணும் எண்டுதான் பக்கத்தில வீடும் எடுத்துத் தந்திருக்கினம். அப்பிடியிருக்கேக்க பரமு அம்மா கூப்பிடுற நேரம் ஓடிப் போகோணும்தானே நான்? இல்லாட்டி என்ர வேலை சரியே! பிறகு என்ர வீட்டுப்பாட்டை ஆர் பார்க்கிறது?”
‘நீ பார்ப்பியா?’ என்ற விகுதிக் கேள்வியை அவர் விளங்கிக் கொள்ளும் தொனியில் கேட்டுவிட்டு உடைகளோடு மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
அவருக்குத் தக்க பதில் சொன்னாலும் அவர் சொன்னது அவளை உறுத்திக் கொண்டே இருந்ததில்தான் அடுத்த நாள் காலை ஆதித்யன் வீட்டுக்கு செல்லவில்லை அவள்.
அதை இப்போது நினைத்தபடியே அவள் தன் சிந்தனைக்குள் சென்று இருக்க, ஆதித்யன் அவளைக் கலைத்தான்.
“கதைக்கிறவை ஆயிரம் கதைப்பினம் சாதனா. அவைக்கெண்டு பாத்து நாங்கள் எங்கட விருப்பங்களை ஏன் இழக்கோணும்? இண்டைக்கு நீங்கள் வரேலையெண்டவும் பிள்ளையள் எவ்வளவு தேடினவை தெரியுமோ உங்களை?
ஒரு விஷயத்தைப் பழக்கினா, அதில இருந்து பின்வாங்காதேங்கோ! ஏன் இண்டைக்கு நான் கேட்டதை மனசுல வச்சும் நீங்க இவ்வளவுநாள் செஞ்சதுகளில இருந்து விலகாதேங்கோ. நீங்க யோசிச்சு நல்ல பதில் சொன்னா எனக்கு சந்தோஷம். உங்களுக்கு சம்மதமே இல்லையெண்டா நடுவில இப்பிடி ஒரு விஷயம் நடக்காத மாதிரி நோர்மலா வேலைக்கெண்டு வந்து போங்கோ.
என்னை நினைச்சு நீங்க பயப்பிடவெல்லாம் தேவையில்லை. நான் ஒண்டும் காவாலி விடுகாலி இல்லை, உங்களுக்கு பின்னால சொறி சேட்டை விட்டுத் திரிய! எப்பயேன் இருந்திட்டு யோசிச்சனீங்களோ எண்டு மட்டும்தான் கேப்பன். அதுவும் உங்களை டோர்ச்சர் பண்ணவெண்டு இல்லை. இப்ப பாங்க்ல லோன் அப்ளை பண்ணி எங்கட ரிக்குவஸ்ட் வெயிட்டிங்ல இருக்கெண்டு மனேஜர் சொன்னா, லோன் வாற நேரம் வரட்டும் எண்டு விட்டுட்டு இருக்கமாட்டம்தானே? லோன் அப்ரூவ் ஆகியிருக்கோ எண்டு செக் பண்ண அடிக்கடி பாங்க் போவம், இல்லா மனேஜர கென்டாக்ட் பண்ணுவம். அது மாதிரித்தான் இதுவும்.” என்று அவள் மனதின் மொத்த குழப்பங்களுக்கும் அவன் ஒரே மூச்சில் பதில் சொல்லி விட, அவளுக்கும் கொஞ்சம் சித்தம் தெளிந்தது.
‘அவர் மனதில் இருக்கும் விருப்பத்தைக் கேட்கிறார். அதே சமயம் அதை செய்தே ஆகவேண்டும் என்று கட்டளை இடாமல், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் எனக்கே கொடுக்கிறார். எனில் இதில் தன் விருப்பத்துக்கு எதிராக எதுவும் ஆகப்போவதில்லை.’ என்று தெளிவானாள்.
ஆனாலும் அவன் சொன்ன அந்த லோன், மனேஜர் உதாரணம்… அதை நினைக்க அவளுக்கு ஒருபக்கம் சிரிப்பு வரும் போல இருந்தது.
‘குழந்தைகளுக்கு உதாரணம் கூறி. வகுப்பெடுப்பது போல் தனக்கும் எடுக்கிறாரே!’ மனதோடு நினைத்துக் கொண்டவள், மீண்டும் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு
விரைந்து இடத்தை விட்டு அகன்றாள்.
இன்னும் தாமதித்தால் என்னவெல்லாம் சொற்பொழிவுகள் எல்லாம் கேட்க வேண்டி வருமோ என்று உஷாராகி ஓடுவது போலிருந்த அவள் செய்கையில் இவன் உதடுகளில் விரிந்த புன்னகை.
‘கதைக்கவெண்டு கூப்பிட்டு காதைக் கருக்கிறான் எண்டு நினைச்சிருப்பாவோ?’
மனதில் தன்னைத் தானே கேலி செய்தவன், அதன் பின் அவளைத் தொடர எண்ணாது அந்த இடத்திலேயே வேரூன்றி நின்றுவிட, அவள் மகன் அதற்கு விடவில்லை.
“டொக்டர்ர்ர்ர்…” என்ற அவன் உரத்த அழைப்பில், “வாறன்… வாறன்…” என்று கொண்டே ஓடினான்.
இவன் பாய் சொல்லி வழியனுப்பி வைக்காவிட்டால் அந்த வெளிநாட்டுத் தூதுவர் இடத்தை விட்டு அசையமாட்டாரே!
அவன் அங்கே செல்லும் போது சாதனா மகனை அதட்டிக் கொண்டிருந்தாள், “இந்தப் பழக்கம் கூடாது!” என்று.
“ஏன் கூடாம? உங்களுக்குச் சொன்னது விளங்கேலயோ? நீங்க மாறினாலும் மாறாட்டிலும் மற்ற எதையும் மாத்தோணும் எண்டு நினைக்காதேங்கோ!” என்று அழுத்தத்துடன் அவள் முகம் பார்த்து சொன்னவன் நிலனிடம்…
“போயிட்டு வாரும் நிலன். நாளைக்கு விடிய வரோணும் என்ன?” என்றான் வாஞ்சையாக.
“அதை அம்மாட்ட சொல்லுங்கோ டொக்டர். நான் இண்டைக்கும் வரத்தான் நிண்டனான். அம்மாதான் தேவையில்லை எண்டவா.”
“ஏன் தேவையில்லையெண்டவா அம்மா? ஒருவேளை மகியும் மயூவும் நீங்க மோர்னிங் வாறதில விருப்பமில்லை எண்டு சொல்லிப் போட்டினமோ?” m
தனக்குள் யோசிப்பது போல் சும்மா நின்றிருந்த மகள்களை பேச்சுக்குள் இழுக்க, அவர்கள் பாய்ந்து கொண்டு பதில் சொல்ல வந்தார்கள்.
“நாங்கள் அப்பிடிச் சொல்லவே இல்லை அப்பா. அவை வாறது எங்களுக்கு விருப்பம்.” என்று மகி சொல்ல மயூ தொடர்ந்தவள்,
“அன்ட்ரிக்கு விடிய வேளைக்கு வந்து போறது கஷ்டமாம் அப்பா. அப்பம்மா சொன்னவா. அதான் நாங்கள் இனி தலை அவிண்டாலும் பரவாயில்லை எண்டு அப்பம்மாவையே கட்டி விடச் சொன்னாங்கள். அப்பம்மாக்கும் கஷ்டம் எண்டா நாங்கள் முதல் வெட்டின மாதிரியே தலைமயிரை வெட்டலாம் எல்லோ அப்பா?” என்று கேட்டு விட, பெரியவர்கள் மூவரதும் மனங்கள் கனத்துப் போயின.
பரமேஸ்வரி பேத்திகளின் கைகளை ஒன்றாகப் பிடித்தபடி கலங்கத் துடிக்கும் கண்களை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தார் என்றால் சாதனா தான் செய்த மடத்தனத்தை எண்ணி அவர்கள் முன்னில் தலை குனிந்து நின்றாள்.

