மாதொரு பாகம் கொண்டான் 21 – 2

இதில் ஆதித்யன் நிலை சொல்லும்படியாகவே இல்லை. சின்னக் குடுமிகள் ஆட வேண்டும் என்றே தலையை அதிகம் ஆட்டிக் கதைக்கும் மகளின் வாயில் நின்று இப்படியான வார்த்தைகள் வருகையில் தாயுமாகித் தந்தையுமானவனுக்கு எப்படி இருந்திருக்கும்?

அவன் தேறி மகள்களுக்கு மறுமொழி சொல்வதற்குள் நித்திலனே, “அப்படியெல்லாம் தலைமயிர வெட்டுறேல்ல. ரெண்டு பேருக்கும் இப்பிடி தலை கட்டத்தான் இன்னும் வடிவாக் கிடக்கு.” என்றான் செல்லக் கட்டளையோடு.

தன் மகள்களுக்கான அவன் உரிமைக் குரல் கேட்ட மறுநொடியே ஆதித்யனின் மனபாரம் பாதிக்கு மேல் பறந்து போக, பற்கள் தெரியாத புன்னகையோடு சின்னவனைப் பார்த்தவன்,

“அப்பிடி உங்களை மீறி வெட்டினா என்ன செய்வியளாம் சேர்?” என்றான் எப்போதும் போல் ஒற்றைப் புருவம் தூக்கி.

எப்போதும் போல் அதைக் குறுகுறுவென்று பார்த்தவன்,

“டொக்டர், நீங்கள் என்னெண்டு இப்பிடிச் செய்யிறனீங்கள்? நான் செய்து பார்த்தா வாறதே இல்லை. ரெண்டு இமையும் தூக்குப்பட்டுடும். இஞ்ச பாருங்கோ!” என்று செய்து வேறு காட்ட, அவனின் மீதி பாரமும் பரிதி முன் பனியாக கரைந்திட வாய்விட்டே சிரித்தான்.

“நீங்க சொல்லுறதைப் பார்த்தா கன காலமா இதே வேலையாதான் திரியுறிங்கள் போல?” நகைப்பினூடே கேட்டான்.

“ஓம்… முதல் எனக்குக் கை முறிஞ்ச அண்டு நீங்க செய்தனீங்கள் எல்லோ, அப்ப இருந்தே செய்து பார்க்கிறன். வருகுதே இல்லை.” என்று உதடு பிதுக்கியவனைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.

“சரி.. சரி.. கவலைப் படாதேங்கோ. நான் இன்னொருநாள் இதை சொல்லித் தாறன். இப்ப வெளிக்கிடுங்கோ நேரம் போச்செல்லோ?” என்றவும்தான் அவனுக்குப் கதைத்துக் கொண்டிருந்த டொபிக் ஞாபகம் வர,

“இஞ்ச, நீங்கள் இவைக்கு முடிவெட்டக் கூடாது சரியோ?” என்றான் மீண்டும் அதே கட்டளை தொனியில்.

“ஏன் நான் வெட்டினா சேர் என்னை என்ன செய்வீங்கள்?” அவனிடமும் அதே கேள்வியும் கேலியும்.

“வெட்டினா நான் உங்களோட கதைக்கமாட்டன். கோவம் போடுவன்.” என்றவும் சிரித்துக் கொண்டவன்,

“சரி, நான் வெட்டேல. பெரிய மனுஷர் சொன்னாக் கேட்கத்தானே வேணும். இப்ப வெளிக்கிடுறீங்களோ?”

“வெளிக்கிடுவம்.. வெளிக்கிடுவம்.. மயூ, மகி ரெண்டு பேரும் ஒண்டும் யோசிக்காதேங்கோ என்ன? அம்மாவும் நானும் நாளைக்கு வேளைக்கெண்டு வருவம்.”

வாக்குறுதி கொடுத்த சின்னவனை இப்போது பரமேஸ்வரியின் விழிகளும் வாஞ்சையாக வருடிக் கொண்டன.

“நீங்க சொன்னதே காணும் அப்பு. ஆனா அம்மா பாவமல்லோ? அவாக்கு உங்களையும் பார்த்து எங்களையும் பார்க்கக் கஷ்டமெல்லோ?”

சாதனா மனதில் என்ன உறுத்திக் கொண்டிருக்கிறதோ என்று தெரியாமல் அவளை வற்புறுத்தி இங்கே அழைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அப்படி சொன்னார்.

“ஓம்… நிலன் அண்ணா. அன்ட்ரி பாவம். கொஞ்சம் வளர்ந்தா நாங்களே எங்களுக்குத் தலை கட்டுவம். அது மட்டும் அப்பம்மா கட்டி விடுவா.” என்று மயூ சொல்ல, ஆதித்யன் சாதனாவைப் பார்த்தான்.

அவள் தலை இன்னுமே நிமிரவில்லை. போகப் போக அவளின் குற்றக் குறுகுறுப்புக் கூடிக் கொண்டே போனது.

‘யாரோ ஏதோ கதைத்தார்கள் என்று ஒன்றுமே அறியாத பச்சிளம் பிள்ளைகளைத் தண்டித்து விட்டேனா? ஒன்று இதைப் பழக்கப்படுத்தியிருக்கக் கூடாது. இல்லை, செய்ததை ஒழுங்காக செய்திருக்க வேண்டும். அதை விடுத்து அந்தச் சின்ன வண்ணத்துப் பூச்சிகளின் மனதில் வயதை மீறிய கவலையை ஏற்றி விட்டேனே!’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் நிலை அவனுக்கும் புரிந்ததோ என்னவோ, “ஒருதரும் ஒண்டும் யோசிக்க வேண்டாம், அப்பம்மாக்கு ஏலாட்டி, அப்பா களத்தில குதிக்கிறன். பெரிய பெரிய ஒப்பிரேஷன் எல்லாம் செய்யிற எனக்கு இதொண்டும் பெரிய வேலையா இருக்காது. இல்லையோ சாதனா?”

அவளை இயல்புக்குத் திருப்பப் பேச்சுக் கொடுக்க, அவனை ஒரு நொடிக்கும் குறைவாக நிமிர்ந்து பார்த்தவள், அடுத்து மயூ, மகி, பரமேஸ்வரி மூவரையும் பார்த்து,

“நான் போட்டு வாறன் அம்மா. மான்குட்டியள் ரெண்டும் நாளைக்கு விடிய வேளைக்கு வெளிக்கிட்டு நில்லுங்கோ. அன்ட்ரி வந்து தலை இழுத்து விடுவன். இப்ப பாய்.” என்று விட்டுக் கிளம்ப, இருவரும் முகம் அப்பிய சிரிப்போடு விடை கொடுத்தனர் அவளுக்கு.

அவள் சென்றதும் பிள்ளைகளை உடல் கழுவி வர அனுப்பி வைத்த மகனைப் பிடித்துக் கொண்டார் பரமேஸ்வரி.

“கதைக்கப் போன விஷயம் என்ன மாதிரித் தம்பி?”

“கேட்ட உடன ஓம் எண்டு சொல்லியிருப்பா எண்டு நினைக்கிறீங்களோ?”

“வேற ஆரேன் எண்டா ஓமெண்டிருப்பினம். சாதனா… கஷ்டம்தான்.”

“தெரிஞ்சும் ஏன் அப்ப கேட்கிறீங்கள்?”

“வேற என்ன சொன்னவா எண்டு கேட்கத்தான்.”

“அக்கம் பக்கத்தில வேற மாதிரிக் கதைக்கினமாம். அவாவும் பிள்ளையும் எந்த நேரமும் இஞ்சயே இருக்கினம் எண்டுற மாதிரி…”

“ச்சை… இந்தச் சனங்கள் எப்பதான் திருந்தப் போகுதுகளோ தெரியா. வெள்ளைச் சுவராப் பார்த்துத்தான் சாணி அள்ளி எறியுங்கள். நல்ல காலத்துக்கு உதுகளோட நான் பழக்கம் வைக்கேல. உப்பிடிப் பட்டதுகளோட கதைச்சுப் பொழுது போக்காட்டுறதுக்குத் தனியா இந்த மரஞ்செடியளோட கதைச்சிட்டுப் போகலாம்.” என்றார் வெறுப்பாக.

“ஏன் இப்ப இப்பிடி டென்ஷன் ஆகுறீங்கள்? இவைக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் குடுக்குற முக்கியத்துவத்தாலதான் இவையின்ர குணம் இன்னும் மாறாம கிடக்கு. இவையைக் கணக்கிலயே எடுக்காம எங்கட வேலையைப் பார்த்திட்டு போகோணும். அதைத்தான் அவாட்டையும் சொல்லிவிட்டனான். பார்ப்போம்.”

“எனக்கும் அதுதானப்பு கவலை. அந்தப் பிள்ளையின்ர மனம் என்ன பாடுபடும், என்ன?”

“அப்படியெல்லாம் அவா தன்னை நினைச்சுக் கவலைப்படுற மாதிரி தெரியேலை அம்மா. தன்னால எங்கட மரியாதை குறையுதாம் எண்டுதான் கவலைப்படுறா. அப்பிடி ஒண்டும் இல்லையெண்டு நான் என்னால ஏலுமான மட்டும் சொல்லி விட்டிருக்கிறன். நீங்களும் கதையுங்கோ அவவோட.”

“நாளைக்கு வரட்டும் சொல்லுறன், அவ்வளவு கவலையெண்டா எங்களோட வந்து இருந்து எங்கட மரியாதையைத் தூக்கி நிப்பாட்டு எண்டு.” என்றவர் சிரித்துக் கொண்டு சொல்ல,

“கவனம் அம்மா, வில்லி மாமியார் வேண்டாம் எண்டு ஒரே ஓட்டமா ஓடினாலும்…” அவனும் அவரோடு இணைந்து நகைத்தான்.

error: Alert: Content selection is disabled!!