அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவளின் கோபம், அவன் இதயத்தின் மெல்லிசையை மீட்டிவிட்டதில் இனம் புரியாத இனிமை ஒன்று, அவனைச் சூழ்ந்தது.
“யோசிக்காமக் கதைக்கிற அளவுக்கு நீங்க சின்னப்பிள்ளை கிடையாது. அதவிட, நீங்க காதலைச் சொல்ல இல்ல. என்னைக் கலியாணம் கட்டுறியா எண்டு தான் கேட்டனீங்க! ஏன் அப்பிடிக் கேட்டனீங்க? எனக்கு அதுக்கான முறையான விளக்கம் வேணும்.”
அவன் வாயிலிருந்து உண்மையைப் பிடுங்கத்தான் வந்திருக்கிறாள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போனது. கையில் இருந்த ஹெல்மெட்டை வாங்கிலிலேயே வைத்துவிட்டு எழுந்து நடந்தான், கிருபன்.
நெஞ்சுக்குள் பெரும் புழுக்கம். அந்த அரைவட்ட நிலப்பரப்பின் அடுத்த முனைக்குச் சென்று, அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான். தன் வெளிச்சத்தைக் கடலுக்குள் பாய்ச்சியபடி சூரியன் கரையொதுங்கிக் கொண்டிருந்தது.
ஆழிப் பேரலைக்குள் அகப்பட்டு விட்ட படகினைப் போன்று, கிருபனின் மனம், அமைதியிழந்து அலை பாய்ந்தது. அவள் கேட்கிற கேள்விக்கு உண்மையைச் சொல்வது என்றால், அவன், தன் மனதைச் சொல்ல வேண்டும். அங்கே, அவள், தன் அன்னையின் இடத்தைப் பிடித்திருப்பத்தைச் சொல்ல வேண்டும். என்ன செய்யப் போகிறான்?
அரவிந்தன் கண் முன்னே வந்து போனான். சுகுணாவும் பரந்தாமனும் கனிவுடன் அவனை நோக்கிப் புன்னகைத்தனர். விழிகளை இறுக்கி மூடித் திறந்தான். மன்னிப்பைக் கேட்டு மனதை மறைத்துவிடுவோம் என்று எண்ணியிருந்தான். அவள், தொடக்கத்திலேயே உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்று கத்தரித்துவிட்டாள்.
அவளும் அவனருகில் வந்து நிற்பது தெரிந்தது. “நிறைய நேரம் என்னால இங்க மெனக்கேடேலாது.” என்றாள், அறிவிப்புப் போன்று.
அப்போது தான், மெல்லிய இருள் கவியத் தொடங்குவதைக் கவனித்தான். கையோடு அவனுடைய ஹெல்மெட்டையும் அவள் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டான். கூடவே, ஏன் இங்கே வரச் சொன்னாள் என்கிற கேள்வியோடு அவளை ஏறிட்டான்.
“இங்க, கிளிநொச்சில ஒரு அத்தை இருக்கிறா. இன்னும் ரெண்டு நாளைக்கு இங்க தான் நிப்பன்.” அவன் பார்வையின் பொருளைப் புரிந்து பதிலளித்தாள், அவள்.
அதன் பிறகு, அவளிடம் சத்தமில்லை. அவனுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்று காட்டினாள்.
உண்மையைச் சொல்லாமல் விடமாட்டாள் என்று புரிந்தது. ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான், கிருபன். “ஏன் அப்பிடிக் கேட்டனான் எண்டு உண்மையா எனக்கும் தெரியாது. ஆனா, நான் கேட்டதுக்கு எந்த விதத்திலையும் நீ காரணமே இல்ல!” என்று, அதை முதலில் தெளிவுபடுத்தினான். தொடர்ந்து, “நிம்மதியா இருந்த உன்ன, நான் தான் குழப்பி விட்டுட்டன்.” என்றான், மிகுந்த வருத்தத்தோடு.
அதற்கு, அவள் ஏதும் சொல்வாளோ என்று பார்த்தான். முழுவதையும் சொல்லி முடி என்பது போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவள்.
“அண்டைக்கு உன்ர வாய் என்னைக் கோபமாத் திட்டினாலும் கை பாசத்தோட என்ர காயத்தைக் கவனிச்சது. அந்த நிமிசம், நீ எனக்கு என்ர அம்மா மாதிரித் தெரிஞ்சனி(தெரிந்தாய்). அவாதான் என்னை விட்டுட்டுப் போய்ட்டா. நீயாவது பக்கத்திலையே வேணும் எண்டு நினைச்சதும் யோசிக்காம வாய விட்டுட்டன்.”
அவளைப் பாராமல், கடலின் மீது பார்வையைப் பதித்தபடி சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தாள், கமலி. நேசம், பாசம், ஈர்ப்பு, காதல் என்று, எதையாவது சொல்லுவான் என்று யோசித்தாளே தவிர, அவளைத் தன் அன்னையோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பான் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
“நீ திட்டவும் தான் உச்சி மண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி நிதர்சனம் விளங்கினது. உண்மையா நான் அப்பிடிக் கேட்டிருக்கக் கூடாது. கேட்டுட்டன். அதை மாத்தேலாது. சொறி வேணாம் எண்டு சொல்லிப்போட்டாய். வேற என்ன நான் சொல்லுறது?” என்று, அவள் முகம் பார்த்தான்.
“என்னை மன்னிச்சு நடந்ததை மறக்க மாட்டியா?” அவனின் யாசிப்பில் கமலிக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.
ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நான் மன்னிக்கிறது மறக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்தக் கேள்விக்கான உங்கட நிலைப்பாடு இப்ப என்ன?” என்றாள், அவன் முகம் பார்த்து.
ஒருகணம், மிகவுமே தடுமாறிப் போனான், அவன். மீண்டும் பார்வையை வேகமாகத் திருப்பிக் கொண்டான்.
“அதுதான் யோசிக்காமக் கேட்டுட்டன் எண்டு சொன்னனே. மன்னிப்பும் கேட்டேனே…” அவன் சமாளிக்க முற்பட, “சிம்ரன்!” என்று எச்சரித்தாள், அவள். அதில், பொய் பேசாதே என்கிற தொணி அழுத்தமாய் இருந்தது.
அதை உணர்ந்தது போல் காட்டிக்கொள்ளாமல், “என்ர பெயர் கிருபன்!” என்றான், வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றபடி.
“அப்பிடியா சிம்ரன்? அப்பிடியே நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லுங்கோ பாப்பம்.”
“அது தான் சொன்னேனே. அந்த நேரம் யோசிக்காமக் கேட்டுட்டன் எண்டு.”
“அண்டைக்கு நீங்க என்ன நிலைமைல கேட்டீங்க எண்டு நான் கேக்கேல்லை. இப்ப உங்கட நிலைப்பாடு என்ன எண்டு தான் கேக்கிறன். விளங்குதா?” இனியும் அவன் மழுப்ப முடியாத அளவுக்குத் தெளிவாகக் கேட்டாள், அவள்.
சற்று நேரம், அவனிடம் மௌனம் மட்டுமே நிரம்பியிருந்தது. கடல் மீதே பார்வை இருக்க, “உனக்கு நான் பொருத்தமில்லை.” என்றான், மெல்லிய குரலில்.
“காரணம்?” அடுத்த நொடியே, பறந்து வந்தது கேள்வி.
அவனுக்கு எதுவோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. சிலவற்றை இலகுவாகப் பேசிவிடவே முடியாது. ஆனால், பேசியே ஆக வேண்டிய நிலை. அதில், “என்ர அப்பா சாதி குறைவு.” என்றான், வறண்ட குரலில்.
“ஓ!” என்றவள், கையைத் திருப்பி நேரம் பார்த்துவிட்டு, “நேரமாயிட்டுது. நான் போயிட்டு வாறன்!” என்று, புறப்பட்டாள்.
தவித்துப் போனான், கிருபன். உன் நிலைப்பாடு என்ன என்று கேட்டு, அவன் நெஞ்சுக்குள் இருந்தவற்றை எல்லாம் பிடுங்கியவள், தன் நிலைப்பாடு என்ன என்று சொல்லாமல் புறப்படுகிறாளே.
போகிறவளையே தொடர்ந்தன, அவன் விழிகள். அதுவும், தந்தையைப் பற்றிச் சொன்ன பிறகான அவளின் மௌனம், அவன் இதயத்தைச் சுளீர் என்று தாக்கிற்று.
கமலியின் ஸ்கூட்டி அருகே ஒருவர், உடன் மீன், இறால் வகைகளை விற்றுக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்துவிட்டு அத்தை வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கினாள், கமலி.
ஸ்கூட்டி சீட்டினை உயர்த்தி அவள் பேர்ஸ் எடுப்பதற்குள், “நான் குடுக்கிறன்.” என்றபடி விரைந்து வந்தான், கிருபன்.
“நீங்க ஏன் குடுக்கோணும்?” புருவம் சுருக்கிக் கேட்டாள், அவள்.
“எத்தினை நாள் எனக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு தந்து இருப்பீங்க? ஆன்ட்டி இப்பவும் இறைச்சிக்கறி சமைச்சாக் குடுத்து விடுவா. நானே குடுக்கிறன்.” பின் பொக்கெட்டில் இருந்த பேர்ஸை எடுத்துப் பணத்தை அவரிடம் நீட்டினான், அவன்.
“அண்ணா! மீன் வாங்கினது நான். காசும் நீங்க என்னட்டத் தான் வாங்க வேணும். இல்லையோ, மீனைத் திருப்பித் தந்திட்டுப் போயிடுவன்.” என்றுவிட்டு, அவருக்குத் தானே பணத்தைக் கொடுத்தாள், கமலி.
“கலியாணத்துக்குக் கேப்பாராம், ஒரு பகிடியப் பகிடியா எடுக்கத் தெரியாம முகத்தைச் சுருக்குவாராம், உனக்கு நான் பொருத்தமில்லை எண்டு சொல்லுவாராம், பிறகு, மீனுக்குக் காசு குடுப்பாராம். என்னப் பாத்தா எப்பிடித் தெரியுது உங்களுக்கு? வாற ஆத்திரத்துக்கு ஊதி விட்டுட்டுப் போயிடுவன். நடுக் கடலுக்க போய்க் கிடப்பீங்க!” என்றுவிட்டுப் போனவளை, முகம் முழுக்க நிறைந்த சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான், கிருபன்.
அவள் பார்வைக்கு மறைந்ததும், ‘அந்தளவுக்கா மெலிஞ்சு போயிருக்கிறன்.’ என்று, தன்னையே குனிந்து பார்த்தான். அவளுடைய, ‘சிம்ரன்’ வேறு நினைவில் வந்து, அவன் உதட்டுச் சிரிப்பைப் பெரிதாக்கி விட்டது.
கூடவே, இவள் எனக்கே எனக்கென்று கிடைத்துவிட மாட்டாளா என்று ஏக்கமும் பிறந்தது.

