கிருபனின் கமலி – 10

அத்தியாயம் 10

அன்று, பரந்தாமனுக்கு ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாகத் தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. இருந்தும், கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் பெரும் விருப்பம் என்பதால் மறுப்பதில்லை.

கூடவே, வேலை காரணமாக அவர் வீட்டில் தங்குவதில்லை; ஊர் ஊராக அலைந்துகொண்டு இருப்பார். உறவினர்களின் விசேசங்களுக்குக் கூடப் போவதற்கு நேரம் அமைவது குறைவு. மனைவி பிள்ளைகளை மாத்திரமே அனுப்பி வைப்பார். ஆதலால், உறவினர் நண்பர்கள் எல்லோரையும் வீட்டுக்கு வரச் சொல்லி, பேசிச் சிரித்து, அளவளாவி என்று, இந்த நாளை, அவருமே பயன்படுத்திக் கொள்ளுவார்.

கேக் செய்வது, பலகாரங்கள் செய்வது, சமைப்பது எல்லாம் கமலிக்குப் பிடித்தமான காரியங்கள். வீட்டில் யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் முதலாவது ஆளாக நின்று, அவளே திட்டம் போட்டு அனைத்தையும் செய்துவிடுவாள். அதே தான் இந்த முறையும் நடந்தது.

பயற்றம் பணியாரம், அரியதரம், வெட்டுப் பலகாரம் என்று இனிப்புக்கும், பருத்தித்துறை வடை, கடலை வடை, ரோல்ஸ் என்று உறைப்புக்கும் செய்திருந்தாள். இரவு உணவுக்கு இடியப்பக் கொத்து ஏற்பாடாகி இருந்தது.

அதற்கு, ஆட்டிறைச்சிக் கறியும், அது உண்ணாதவர்களுக்குக் கோழி இறைச்சிக் கறி என்றும் முடிவாகியிருந்தது. அப்படியே, இரவு உணவுக்குப் பிறகு உண்பதற்கு வட்டிலாப்பமும் செய்து வைத்திருந்தாள்.

“ஏன் பிள்ளை இவ்வளவு?” சுகுணாவே கேட்கும் அளவில் இருந்தது, அவளின் தயாரிப்புகள்.

“நெடுகவா(எப்பவுமே) செய்றம் அம்மா? எப்பயாவது தானே. எனக்குப் பிடிச்சிருக்கு நான் செய்றன். உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லை எண்டால் போங்க அந்தப் பக்கம்!” என்று, அவரைத் தான் துரத்தினாள், அவள்.

“பாத்தியா மாலி, பாவம் பிள்ளை எண்டு சொன்னா எனக்கு வேல செய்ய விருப்பம் இல்லையாம். இவள் பிறக்க முதல் இந்த வீட்டுல எல்லா வேலையையும் ஆர் செய்ததாம்?” தன் தங்கை மாலினியிடம் முறையிட்டார், சுகுணா.

மாலினிக்குப் பத்து மற்றும் பன்னிரண்டு வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள். பெண் பிள்ளை இல்லை. அதில், கமலி மீது பிரத்தியேகமான பாசம் உண்டு.

“அவளுக்கு விருப்பம், செய்யிறாள். விடுங்கோவன் அக்கா. இப்பத்தியப்(இன்றைய) பிள்ளைகள் எல்லாம், சமையல் தெரியாம இருக்கிறதுக்குப் பெயர் தான் சுதந்திரம் எண்டு சொல்லிக்கொண்டு அலையேக்க, எங்கட பிள்ளை எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கிறாள் எல்லா. அதுக்கு நாங்க பெருமைப்பட வேணும்.” அவளை விட்டுக் கொடுக்க மனம் வராமல் சொன்னார், அவர்.

“இன்னும் நல்லா விளங்கிற மாதிரிச் சொல்லுங்கோ சித்தி. இந்த வீட்டில என்ர அருமை ஒருத்தருக்கும் தெரியிறேல்ல.” என்றாள் வேண்டுமென்றே.

சுகுணாவுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தது. “ஓமோம்! தெரியாமத்தான் பெத்து, வளத்து வச்சிருக்கிறம். போடி விசரி! அம்மா காலுக்க நோகுது, கைக்க நோகுது, இடுப்பு வலிக்குது எண்டு கொண்டு நாளைக்கு வா! விறகுக் கட்டையாலேயே ரெண்டு போடுறன்!” என்றுவிட்டுப் போனார், அவர்.

“எனக்கு என்ர அப்பா இருக்கிறார். அவர் தடவிவிடுவார். இல்ல, சித்தியத் தடவிவிடச் சொல்லுவன். நீங்க தேவையில்லை போங்க! போய் வேலையப் பாருங்க.” என்று, அதற்கும் பதில் கொடுத்துவிட்டுத் தான் விட்டாள், அவள்.

மாலை நான்கு மணியாயிற்று. தன் நண்பர்கள் குழாமை சேர்த்துக்கொண்டு பம்பரமாகச் சுழன்றுகொண்டு இருந்தாள், கமலி. ஆண்களுடன் விறாந்தையில் ஐக்கியமாகி இருந்தார், பரந்தாமன். வீட்டின் பின்பக்கம் கல் அடுப்பைத் தயார் செய்திருந்தனர். அதில், விறகு மூட்டி, பெரிய சட்டிகளில் தயாராகிக் கொண்டிருந்த இறைச்சிக் கறிகளைக் கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை. அதில், பெண்கள் கூட்டம், அடுப்பைச் சுற்றிக் கதிரைகளைப்(நாற்காலிகள்)
போட்டுக்கொண்டு, அவர்களின் சமாவை ஆரம்பித்திருந்தனர்.

பலகாரங்கள் தயார். உணவு தயார். பாத்திரங்களும் தயார். மேசை, அதற்கான விரிப்பு, கடைசி நேரத்தில் காணாமல் போகும் மெழுகுதிரி, கேக் வெட்டக் கத்தி, அதைச் சுற்றும் ரிப்பன் என்று எல்லாமே தயார். அவள் குளித்துத் தயாராவது மட்டுமே எஞ்சி இருந்தது. நேரம் போவதை உணர்ந்து அவசரமாக அரவிந்தனை அழைத்தாள்.

“அண்ணா, நான் டக்கெண்டு குளிச்சிட்டு உடுப்பைப் போட்டுக்கொண்டு ஓடி வாறன். அதுக்கிடையில பலகாரமும் ஜூசும் எல்லாருக்கும் குடு. ஒவ்வொரு பேப்பர் தட்டிலையும் எல்லாப் பலகாரமும் ஒவ்வொண்டு வச்சாக் காணும். போகேக்க குடுக்கிறதுக்குத் தனியா பேக்ல போட்டு வச்சிருக்கிறன்.” என்றுவிட்டு, “சுதன், கரண் ரெண்டு பேரும் இங்க வாங்கோ!” என்று, மாலினியின் பிள்ளைகளையும் அழைத்தாள்.

“எல்லாம் சரி. நீ டக்கெண்டு வருவியா? அதச் சொல்லு முதல்!” அரியதரம் ஒன்று வாயில் அரைபட, கண்ணில் சிரிப்புடன் சீண்டினான், அரவிந்தன்.

அவனை மேலும் கீழுமாக அளந்தாள், கமலி. “என்னை என்ன உன்ன மாதிரி ஒன்பது மணிக்குப் போற இடத்துக்குப் பத்து மணிக்கு ரெடியாகிற ஆள் எண்டு நினைச்சியா?” என்று, திருப்பிக் கொடுத்தாள்.

என்னக்கா என்று வந்த சின்னவர்களிடம், “அங்க பாருங்கோ, ரெண்டு பேரும். ரெண்டு பெரிய ட்ரே வச்சிருக்கிறன். அண்ணா தாற பலகாரத் தட்டுகளை அதுல வச்சு, கொட்டாம, எல்லாருக்கும் கொண்டு போய்க் குடுக்க வேணும். சரியா?” என்றாள் விளக்கமாக.

“நான் செய்வன். ஆனா, நீங்க எனக்கு நிறைய அரியதரம் தரவேணும். ஒண்டு காணாது!” முகத்தைச் சுருக்கிக்கொண்டு சொன்னான், கரண்.

அவனைப் பார்த்தாலே சாப்பாட்டுப் பிரியன் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்குக் கொழுக் மொழுக் என்று இருந்தான். “அலையாதையடா குண்டோதரா!” அவன் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டுச் சிரித்தாள், கமலி.

“அப்பிடியெல்லாம் தரேலாது. ஆளுக்கு ஒண்டு எண்டு கணக்குப் பாத்துத் தான் எல்லாம் செய்திருக்கு.” மெய் போன்ற குரலில் சொன்னான், அரவிந்தன்.

நொடியும் யோசிக்காது, “அப்ப உங்கட ரெண்டு பேரின்ரயும் பெரியப்பான்ரயும் பெரியம்மான்ரயும் எனக்குத்தான் தரவேணும். நீங்க சாப்பிடக் கூடாது!” என்று நின்றான், அவன்.

அதற்குள், சட்டிகளுக்குள் தலையை விட்டுப் பார்த்துவிட்டு வந்த சுதன், “டேய்! அண்ணா பொய் சொல்லுறாரடா. அக்கா சட்டி நிறையச் செய்து வச்சிருக்கிறா.” என்றான், கண்கள் ஆசையில் மின்ன.

“அப்ப எனக்கு நிறையத் தருவீங்க தானே, அக்கா?”

“டேய், சாப்பாட்டு ராமா! வீட்டை போகேக்க இன்னும் நிறையக் கட்டித் தருவன் அக்கா. இப்ப கொட்டாமச் சிந்தாமக் குடுக்கவேணும், சரியோ. சாப்பிட்ட தட்டு எல்லாத்தையும் வாங்கி, அங்க பாருங்கோ, அந்தக் குப்பை வாளிக்கப் போடுறதும் உங்கட வேல தான். வீட்டைக் குப்பையாக்கினா உங்க ரெண்டு பேருக்கும் தான் அடி விழும்!” என்று மிரட்டிவிட்டு, டின்பால், ஏலக்காய், கசகசா எல்லாம் போட்டுத் தயாரித்திருந்த மில்க் ஷேக்கை காட்டி, “ஐஸ் கட்டியைத் தட்டிப் போட்டுட்டுக் கப்புகளுக்க கவனமா வாத்துக் குடு அண்ணா! நான் வெளிக்கிட்டுக்கொண்டு ஓடி வாறன்!” என்றுவிட்டு விரைந்தவள் நின்றாள்.

“உன்ர நண்பர் இண்டைக்காவது வருவாரா?” வெகு சாதாரணக் குரலில் விசாரித்தாள்.

“நாலரை போல வா எண்டு தான் சொன்னனான். இன்னும் நேரம் இருக்குத் தானே. எண்டாலும் வருவான் எண்டுர நம்பிக்கை இல்ல. வரவர அவனுக்கு என்ன பிடிச்சிருக்கு எண்டே தெரியேல்ல.” சலிப்புற்ற குரலில் சொன்னான், அரவிந்தன். இப்போதெல்லாம், எதைக் கேட்டாலும் மழுப்புகிறவனை என்ன செய்வது என்றே புரிவதில்லை.

“விடு அண்ணா! அவன் வராட்டி எங்கட வீட்டுக் கொண்டாட்டம் நடக்காதா? அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு!” என்றுவிட்டு அறைக்குள் போனவள், முதல் வேலையாக, அவனுக்குத் தான் அழைத்தாள்.

கமலி என்கிற பெயரைப் பார்த்ததுமே கிருபனுக்குள் ஒருவிதப் பரபரப்புத் தொற்றிற்று. எதற்கு அழைக்கிறாள் என்றும் கணிக்க முடிந்தது. அவர்கள் சந்தித்துப் பேசி மூன்ற வாரங்கள் கடந்திருந்தன. அன்றைக்கு, ‘அன்று கேட்ட கேள்விக்கான இன்றைய உன் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்டு, அவன் வாயைப் பிடுங்கியவள், அவள் என்ன நினைக்கிறாள் என்று சொல்லாமலேயே சென்று, இன்றுவரை, அவனுடைய இரவுகளின் உறக்கங்களைப் பறித்துக்கொண்டு இருக்கிறாள்.

அந்தச் சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால் கூட, நடந்த நிகழ்விலிருந்து கடந்து வர முயன்று இருப்பானாக இருக்கும். இப்போதோ, அவள் விட்டுவிட்டுப் போன இடத்திலேயே தேங்கி நின்றுகொண்டு இருந்தான். அவர்களுக்குள் நடந்த சம்பாசணையைப் பலமுறை மீள் ஒளிபரப்பு நிகழ்த்திப் பார்த்துவிட்டான். அவள் எந்தப் பிடிமானத்தையும் அவனுக்குத் தந்ததாகத் தென்படவேயில்லை. முதல், இதையெல்லாம் ஏன் கூப்பிட்டுக் கேட்டாள் என்று கூடப் புரிபட மறுத்தது.

எல்லாவற்றையும் விட, மாமா குடும்பம் எதற்காக அவனை ஒதுக்கியதோ, அதற்காகவே, அவளும் ஒதுக்கிவிட்டாளா என்று நினைத்து நினைத்து மருகிக்கொண்டு இருந்தான். இத்தனையும் அவனுக்குள் ஓடினாலும் அவளின் அழைப்பை அலட்சியம் செய்கிற அளவுக்குத் தைரியமற்று, “ஹலோ” என்றான்.

“உங்களுக்கு என்ன வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாத் தான் வருவீங்களோ? அப்பாக்குப் பிறந்தநாள் எண்டு அண்ணா சொன்னவனா இல்லையா? வாறதுக்கு என்ன? உங்கட செருக்கைக் கொண்டு போய் வேற எங்கயும் காட்டவேணும், விளங்கிச்சோ! இன்னும் பத்து நிமிசத்தில ஒழுங்கா வெளிக்கிட்டுக்கொண்டு வந்து இங்க நிக்கிறீங்க. இல்ல, என்ன நடக்கும் எண்டு எனக்கே தெரியாது. வையடா ஃபோன!” என்றுவிட்டு, அழைப்பைத் துண்டித்தவளுக்கு அவ்வளவு ஆத்திரம்.

‘கேக்கிறதை எல்லாம் கேக்கிறது. பிறகு, என்னவோ அப்பாவி மாதிரி நடிக்கிறது. இண்டைக்கு மட்டும் வராம இருக்கட்டும். இருக்கு அவனுக்கு!’ அவனைத் திட்டித் திட்டியே குளித்து முடித்தாள்.

இங்கே கிருபனோ, அத்தனை மனச் சிணுக்கங்களும் எங்கேயோ மாயமாகியிருக்க சிரித்துக் கொண்டு இருந்தான். உண்மையிலேயே போகும் எண்ணமில்லை. பெரியவர்களின் முகம் பார்க்க அவ்வளவு சங்கடம். ஆனால், போகாமல் இருப்பது சரியில்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் தான், அவள் அழைத்திருந்தாள். இப்போது, அவளைப் பார்க்கும் ஆவலும் வந்திருந்தது.

மருந்துக்கும் மரியாதை தராதவளின் செய்கை, மனதுக்குள் பனிச் சாரல்களை வீசியது போல் இருக்கும் விந்தை என்னவென்று, அவனுக்குப் பிடிபடவேயில்லை.

பிந்தினால் அதற்கும் பேச்சு விழும் என்று பயந்து, வேகமாகக் குளியலறைக்குள் புகுந்து வந்தான். அவள் சொன்னது போலவே புது ஜீன்ஸ் டீ ஷேர்ட்டில் தயாராகினான்.

கண்ணாடியில் பார்த்த போது அந்த மெலிவு மட்டும் கண்ணை உறுத்தியது. அவனுடைய அப்பாவைப் போல அவனும் நல்ல உயரம். அந்த உயரம் அவனை இன்னுமே, ஒல்லியாகக் காட்டிற்று. அவனும் நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றத் தான் நினைக்கிறான். எங்கே, பசித்தால் தானே?

error: Alert: Content selection is disabled!!