கிருபனின் கமலி 11 – 1

அத்தியாயம் 11

அவர்களின் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான், கிருபன். உள்ளே செல்லக் கால்கள் வரமாட்டேன் என்றன.

இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவும் பரந்தாமனும் ஏன் என்று கேட்டால் என்ன சொல்லுவது? அந்த வாயாடி வேறு இருக்கிறாள். அவள் நினைவு வந்ததும் அவன் உதடுகள் அழகிய முறுவலில் விரிந்தன. இன்றைக்கு அவனை என்ன செய்யப் போகிறாளோ?

வேறு வழியே இல்லை. எல்லோரையும் சமாளித்தே ஆகவேண்டும். அவளைப் பார்க்கும் ஆவலும் தூண்டியது. தயக்கத்தை வெளியில் காட்டாமல் உள்ளே நடந்தான்.

வீட்டின் வாசலுக்கு வந்து செருப்பைக் கழட்டும் போதே, இவனைக் கவனித்துவிட்டார், பரந்தாமன்.

“வாரும் வாரும்! என்ன கன(நிறைய) நாளாக் காணேல்ல? வேல கூடவோ?” என்று வரவேற்றார்.

அவர் சொன்னதையே பிடித்துக்கொண்டு, “ஓம் அங்கிள். கொஞ்சம் வேல.” என்று, மெல்லிய சிரிப்போடு சமாளித்தான்.

“அரவிந்தன்ர பிரென்ட்.” அங்கிருந்தவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார், அவர்.

எல்லோருக்கும் ஒரு முறுவலைப் பரிசளித்துவிட்டு, “சுகமா இருக்கிறீங்களா, அங்கிள்? மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று, முறையாகக் கை கொடுத்து வாழ்த்தினான்.

அவர் சிரித்தார். “பிறந்தநாள் கொண்டாடுற வயசா தம்பி எனக்கு? எல்லாம் பிள்ளைகளின்ர சந்தோசத்துக்குத் தான். அரவிந்தன் உள்ளுக்குத் தான் நிக்கிறான். போங்கோ!” என்று, அவனை அனுப்பி வைத்தார்.

இதற்குள், இவன் குரலைக் கேட்டுவிட்டு வாசலுக்கு வந்தான், அரவிந்தன். “என்னடா அதிசயம்? வரமாட்டியாக்கும் எண்டு நினைச்சன். வந்து நிக்கிறாய். எந்தச் சாமியார் வந்து பேயோட்டினது?”

‘உன்ர தங்கச்சிதான்’ என்று சொல்லவா முடியும்? “வந்தாலும் பேசுறாய் வராட்டியும் பேசுறாய். போடா, நீதான் இப்ப வர வரச் சரியில்ல.” என்று, கதையையே மாற்றிப் போட்டான், கிருபன்.

சமையற்கட்டில், அரவிந்தனோடு வேலையில் பங்கெடுத்துக் கொண்டவனின் விழிகள், மற்றவர்கள் அறியாமல் அவளைத் தேடின.

“டேய் அண்ணா, பலகாரம் எல்லாம் குடுத்திட்டியா?” கேட்டுக் கொண்டே விரைந்து வந்த கமலி, அங்கே நின்றவனைக் கண்டுவிட்டு, புருவங்களை உச்சி மேட்டுக்கு உயர்த்தினாள்.

“என்ன அண்ணா, வராதவர் எல்லாம் வந்திருக்கிறார். என்ன விசேசமாம்?” என்றாள், வேண்டுமென்றே.

அவளுக்குப் பதில் சொல்லும் நிலையில் கிருபன் இல்லை. அவளோடு கூடவே வந்த வாசம், மனதை மயக்கிற்று. இன்னும் உலராததில் வாரப்படாத ஈரக் கூந்தலை இருபக்கமும் காதோரமாக ஒதுக்கி விட்டிருந்தாள். முகத்துக்கான மேக்கப் முடிந்திருந்தது. பலவர்ணப் பூக்கள் தூவிய, தரையைத் தொடும் நீண்ட பாவாடை. அதற்கு, வெள்ளையில் கையில்லாத குட்டி மேற்சட்டை. யாரும் கவனித்தாலும் என்று கண்களை அவளிடமிருந்து அகற்றிக் கொண்டாலும், அவளும் அங்கேயே தான் நிற்கிறாள் என்கிற உணர்வே, அவனை என்னென்னவோ செய்தது.

“சாப்பாட்டுப் பாத்திரங்களைத் திறந்து வைக்காத எண்டு எத்தின தரம் சொன்னாலும் கேக்காத அண்ணா! ஒரு நாளைக்குப் பார், நாய் வாய் வச்சதை உனக்குப் போடுறனா இல்லையா எண்டு.” என்று, தமையனைத் திட்டிக்கொண்டு இருந்தாள், அவள்.

“நான் எல்லாம் இயற்கையோட ஒன்றி வாழுற மனுசன். கரப்பொத்தான் பூச்சியக்(கரப்பான் பூச்சி) கூடக் கருவாட்டுப் பொரியல் மாதிரிச் சாப்பிட்டு வளந்த உடம்பு!” இல்லாத தன் தசைக் கோளங்களை முறுக்கிக் காட்டிச் சொன்னான், அரவிந்தன்.

அடுத்த நொடியே, அவனை நோக்கிப் பறந்து வந்தது, சில்வர் மூடி.

“அம்மாடி! என்ர உயிருக்கு உலை வைக்கிறாளே!” பதறியபடி வேகமாக விலகினான், அவன்.

டொங் என்று தரையில் விழுந்து சலசலத்தது, அது. வேகமாக அதை எடுத்து வைத்த கிருபனுக்கு, அண்ணன் தங்கையின் கூத்தில் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது. சிரித்தால் அவனுக்கு என்ன பறந்து வருமோ என்கிற பயத்தில் அடக்கிக்கொண்டு நின்றான்.

“என்ன பிள்ளை சத்தம்?” என்றபடி, வந்து எட்டிப்பார்த்த சுகுணா, நடந்ததை அறிந்து, அவளைத் திட்டிக்கொண்டு போனார்.

சிரிப்புடன் அவன் பார்க்க, “இங்க என்ன பார்வை? வேலையப் பாருங்க!” என்று, அன்னை மீதிருந்த கோபத்தைக் கிருபனிடம் காட்டினாள், அவள்.

அரவிந்தன் திறந்து வைத்திருந்த பலகாரச் சட்டிகளை வேகவேகமாக மூடினான், கிருபன். அளவான சமையல் அறை தான். என்றாலுமே, அன்றைய விசேசம் காரணமாகப் பாத்திரங்கள், பெரிய பெரிய சட்டிகள் நிறைந்திருந்து, அந்த இடமே குட்டியாகிற்று. அவளும் அங்குமிங்கும் நடமாடி, அவனைக் கடந்து, அவனருகில் இருக்கும் ஏதோ ஒன்றை எடுத்து என்று, அவனைச் சோதித்துக் கொண்டு இருந்தாள்.

“இதப் பிடிங்க!” திடீரென்று கேட்ட அவளின் குரலில் திரும்பிப் பார்த்தான், கிருபன்.

பெரிய சட்டியில் கரைத்து வைத்திருந்த மில்க்க்ஷேக், எல்லோருக்கும் கொடுத்தும் எஞ்சி இருந்தது. அதை, சின்னப் பாத்திரம் ஒன்றிற்குள் மாற்ற முயன்றாள், அவள்.

அந்தச் சின்னப் பாத்திரம் அடியில் வளைந்து இருந்தது. ஊற்றும் போது ஆடியசைந்து வெளியில் சிந்திவிடும் என்று தான் பிடிக்கச் சொல்கிறாள் என்று புரிந்தது. ஆனால், பெரிய சட்டியை அவளைத் தூக்க விடுவதா? “நீங்க விடுங்க. நான் ஊத்துறன்!” என்றான் கிருபன், அவசரமாக.

“இல்ல சிம்ரன். உங்கட உடம்பு இந்தச் சட்டியத் தூக்கிற அளவுக்குத் தாங்காது! நானே ஊத்துறன்.”

அவள் பதிலில் அவன் முகம் சிவந்து போயிற்று. கேவலப்படுத்துவதற்கு ஒரு அளவே இல்லையா? கெக்கப்பிக்கே என்று சிரிக்கத் தொடங்கியிருந்தான், அரவிந்தன். அவளை முறைக்கச் சக்தியற்று நண்பனை முறைத்தான், கிருபன்.

“என்னை ஏனடா முறைக்கிறாய்? அவள் சொன்னதில என்ன பிழை? என்னவோ பஞ்சத்தில அடிபட்ட பரதேசி மாதிரித்தான் இருக்கிறாய்.” அரவிந்தனும் அப்படிச் சொல்லிவிட, கிருபனுக்கு அவளின் முகமே பார்க்க முடியவில்லை.

ஒருவழியாக, எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துப் பாட, “என்னடாப்பா இதெல்லாம்?” என்கிற பெரிய சிரிப்புடன், ‘பிறந்தநாள் குழந்தை’ கேக் வெட்டினார்.

அது ஒரு வட்டக் கேக். அதிலே, மேல் பக்கம் பிறை வடிவில், ‘Happy Birthday Appa’ என்று எழுதி, கீழ் வட்டத்தில் கருத்தடர்ந்த பெரிய மீசையைக் கறுப்பு வர்ண ஐஸிங்கால் உருவாக்கியிருந்தாள், கமலி. தந்தை மீதான அவளின் பாசத்தை அந்த மீசையே சொல்லிற்று. ஒரு நொடி, தன்னை மறந்து அவளையே பார்த்தான், கிருபன்.

கேக்கை அவளுக்கும் அரவிந்தனுக்கும் கொடுத்துவிட்டு, மனைவிக்குக் கொடுக்கக் கொண்டுபோன பரந்தாமனின் கையைப் பற்றி இழுத்து, தன் வாய்க்குள் திணித்துவிட்டுச் சிரித்தாள், அவள். கரண், சுதனுக்குக் கூட ஒழுங்காகக் கொடுக்க விடவேயில்லை. அவனுடைய உதடுகள், அவனே அறியாமல் சிரிப்பில் விரிந்தே இருந்தன. விழிகள், பெரும் கனவைச் சுமந்தபடி அவளிடமே நிலைத்திருந்தன. இதயம் நழுவும் ஓசை அவனுக்கே கேட்டது.

கை கொடுத்து, கட்டியணைத்து என்று அவரவருக்கு ஏற்ப எல்லோரும் வாழ்த்த, பெரிய சிரிப்புடன் அவர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார், பரந்தாமன். கேக்கை அதிலேயே வைத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, எல்லோருக்கும் பகிர்ந்தளித்தாள், கமலி.

“காச்சட்டையோட திரிஞ்ச பெடி. கேட்டா அவனுக்கு அம்பத்தியஞ்சு வயசாம்!” பரந்தாமனுக்கே பெரியம்மா முறையில் இருந்த பெண்மணி ஒருவர் சொன்னார்.

“அப்பாக்கு வயசு தான் அம்மம்மா அம்பத்தி அஞ்சு. ஆள் இன்னும் பதினெட்டுத்தான். என்னப்பா, நான் சொல்லுறது சரி தானே?” என்று, அதற்கும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள், கமலி.

“ஓமடியப்பா, உன்ர அப்பாக்குப் பதினெட்டு. நீ இன்னும் பிறக்கவே இல்ல. இப்ப சந்தோசம் தானே. போ போய்ப் பாக்கிற வேலையப் பார். வந்திடுவா எல்லாத்துக்கும் வரிஞ்சு கட்டிக்கொண்டு.” என்று துரத்தினார், அவர்.

“என்ர அப்பாக்காக நான் வராம வேற ஆர் வருவினமாம். கிழவிக்குப் பொறாமை!” பார்வையால் அவரை வெட்டிவிட்டுப் போனாள், அவள்.

“இவளுக்கு முதல் ஒரு கலியாணத்தைப் பார் பரந்தாமா! அப்பத் தான் இந்த வாய் அடங்கும்!” அவளுக்கு எதை ஆரம்பித்தாள் பிடிக்காதோ அதை ஆரம்பித்தார், அவர்.

“ஓமோம்! அப்பிடியே அவவுக்கும் பாருங்கோ அப்பா! அப்பத் தான் நாங்க நிம்மதியா இருக்கலாம்!” உள்ளிருந்து சத்தம் உடனேயே வந்தது.

அதற்குமேல் முடியாமல் தலையில் அடித்துக்கொண்டார், அவர். எல்லோர் முகத்திலும் சிரிப்பு.

“அங்கிளிட்ட குடுத்தா வாங்கமாட்டார், மச்சான். நீ பிறகு, நான் தந்தனாம் எண்டு சொல்லிக் குடுத்து விடு.” அரவிந்தனைத் தனியாகப் பிடித்துக்கொண்டு வந்து, கையோடு கொண்டு வந்த பரிசை நீட்டினான், கிருபன்.

“விசராடா உனக்கு? எங்கட வீட்டுச் சில்வண்டுக்கு இந்தக் கொண்டாட்டம் எல்லாம் விருப்பம் எண்டு தான் அப்பா ஓம் எண்டுறவர். அதுக்குப் போய் நீ கிஃப்ட் கொண்டு வருவியா?”

அவன் கேட்டு முடிக்க முதலே, “வீட்டுக்கு வாற லச்சுமிய வேண்டாம் எண்டு சொல்லாம வாங்கு, அண்ணா.” என்றவள், தானே அவனிடமிருந்து பறித்து, பரபரவென்று சுற்றியிருந்த பேப்பரைப் பிரித்தாள்.

error: Alert: Content selection is disabled!!