கிருபனின் கமலி 13 – 1

அத்தியாயம் 13

வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்த கமலிக்குள் புது விதச் சந்தோசம். அத்தனை நாட்களாக, மனதை அலைபாய விட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள். இன்று, சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப் பற்றிச் சொல்வதில் தயக்கமில்லை. பெற்றவர்கள் ஒருவனை நிச்சயித்தார்கள். பிடித்தது, ஏற்றுக்கொண்டாள். அவன் நல்லவன் இல்லை என்று தெரிய வந்த போது, அவன் வேண்டாம் என்கிற முடிவையும் தயங்காது எடுத்திருந்தாள்.

இதில், அவளின் தவறு எங்கு இருக்கிறது? அதேபோல, நடந்துவிட்ட இந்தப் பிசகினால் எதிர்காலம் மீதோ, எதிர்காலத் துணை மீதோ, திருமணம் மீதோ வெறுப்பு எழுந்தது இல்லை. தவறிழைத்தது எவனோ ஒருவனாக இருக்கையில் நான் ஏன் என் வாழ்வின் மீதான பற்றுதலை இழக்க வேண்டும் என்பது, அவள் வாதம்.

ஆனால், அவளின் எதிர்காலத் துணையாக வரப்போகிற அந்த இன்னொருவன், அவளைப் போலவே இதை, நல்ல முறையில் எடுப்பானா என்கிற கேள்வியும் யோசனையும் அவளுக்குள் இருந்ததும் மெய்.

அவளுக்கு ஒன்றுமில்லாமல் படுகிற ஒரு விடயம், இன்னொருவருக்குப் பெரும் பூதமாகப் படலாம். எனினும், எதையும் மறைக்காமல் சொல்லி, அதை, அவன் நல்ல முறையில் ஏற்றால் மாத்திரமே, அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பது என்பதில் மட்டும் மிகுந்த தெளிவாக இருந்தாள்.

அதில் தான், முதலில் தன்னைப் பற்றி அவனிடம் சொன்னாள். அதுவரை, தன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவன், விலகி நின்றவன் உரிமையாகப் பார்த்ததும், அழுத்தமாக, ‘எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு. உனக்கும் என்னப் பிடிச்சிருந்தாச் சொல்லு.’ என்று சொன்னதும் மிகுந்த நிறைவை மனதுக்குள் உண்டாக்கிற்று.

அவளைப் பொக்கிஷம் என்று வேறு சொன்னானே! இப்போதும், அவள் உதட்டோரம் மெல்லிய முறுவல் மலர்ந்தது. அமைதியாக இருந்தாலும் நன்றாகத்தான் கதைக்கிறான்.

அவள் தேடிய துணை அவன் தான்! இனி, அவன் தான் அவளின் எதிர்காலம். ஒருவித உற்சாகம் அவளைச் சூழ்ந்தது. மீண்டும் புதிதாகப் பிறந்தது போலொரு சந்தோசம். வீட்டுக்கு வந்தவள் என்றுமில்லாத வழக்கமாகத் தனிமையை நாடிக்கொண்டாள்.

அடுத்த நாளே, அவனிடம் சம்மதம் சொல்லிவிடலாமா என்று மனம் பரபரத்தது. ஆனால், அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவனின் சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டே சொல்ல வேண்டும். எப்படி?

வீட்டுக்கு வரமாட்டான். அவன் வீட்டுக்கு அவள் போவது அழகல்ல. தனியாகச் சந்திக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. தியேட்டருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான், அரவிந்தன்.

நொடியில் திட்டமிட்டுத் தமையனின் முன்னே சென்று நின்றாள்.

“என்னையும் கூட்டிக்கொண்டு போ, அண்ணா!”

“கிருபன் வாறான் கமலி. அடுத்த வீக்கெண்ட் உன்னக் கூட்டிக்கொண்டு போறன்.” நேரமாகிவிட்டதில் வேகமாகத் தயாராகியபடி சொன்னான், அரவிந்தன்.

அது தெரிந்து தானே ஆரம்பித்தாள். உள்ளக்குள் சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “அவனை வரவேண்டாம் எண்டுபோட்டு என்னைக் கூட்டிக்கொண்டு போ.” என்றாள் அடமாக.

செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுத் திரும்பித் தங்கையை முறைத்தான், அரவிந்தன்.

“என்ன முறைப்பு? கூட்டிக்கொண்டு போக மாட்டியோ? அந்தளவுக்கு என்னைவிட அவன் முக்கியமாப் போய்ட்டான் போல.” என்று, சண்டைக்கு நின்றாள்.

“கோபத்தைக் கிளப்பாத கமலி! நாங்க முதலே பிளான் போட்டுட்டம். இனி மாத்தேலாது. அவன் அங்க தியேட்டருக்கு வந்திருப்பான். உனக்கு விருப்பம் இருந்தா முதலே சொல்லியிருக்க வேணும்!” பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு விளக்கினான், அவன்.

“நீ என்ன பெரிய மினிஸ்டரா? முதலே சொல்லி அப்பொய்ன்மெண்ட் வாங்கிப் படத்துக்குப் போக? இவ்வளவு நாளும் நான் கேக்கிற நேரமெல்லாம் கூட்டிக்கொண்டு போனனீ தானே. இப்ப மட்டும் என்ன அவன் வாறான் எண்டு கதை? உனக்கு நான் முக்கியமா, அவன் முக்கியமா?”

“அவன் தான் முக்கியம்!” அசராமல் சொல்லிவிட்டுப் போனான், அரவிந்தன்.

ஆத்திரம் தாங்காமல், “அம்மாஆஆஆ!” என்று, அவள் கத்திய கத்தில், என்னவோ ஏதோ என்று ஓடிவந்தார், சுகுணா.

“என்ன பிள்ளை? என்னத்துக்கு இப்பிடிக் கத்தினனி?”

“நான் தியேட்டருக்கு போக வேணும். கூட்டிக்கொண்டு போகச் சொல்லுங்க. இல்லாட்டித் தனியாப் போவன்!”

சுகுணாவுக்குப் பெரும் கோபம் உண்டாயிற்று. “எனக்கு வாற ஆத்திரத்துக்குப் படார் எண்டு முதுகிலையே ரெண்டு போட்டு விட்டுடுவன். என்னவோ நடந்திட்டுதாக்கும் எண்டு பதறியடிச்சுக்கொண்டு ஓடி வாறன். நீ என்னடா எண்டா படக்கதை கதைக்கிறாய். பொம்பிளைப் பிள்ளை கொஞ்சம் அமைதியாக் கதைச்சுப் பழகு எண்டு எத்தினை தரம் சொல்லுறது உனக்கு?” என்று அதட்டினார், அவர்.

“அதென்ன பொம்பிளைப் பிள்ளை? அப்ப, ஆம்பிளைப் பிள்ளை தெருவுக்குக் கேக்கிற மாதிரிக் கத்தலாம். அப்பிடியா? அவனைப் பெத்த மாதிரித் தானே என்னையும் பெத்தீங்க? பிறகு என்ன ஆம்பிளை, பொம்பிளை எண்டு பிரிச்சுக் கதைக்கிறது? அவனை மாதிரி நானும் படிச்சிருக்கிறன். அவனை மாதிரி நானும் உழைக்கிறன். அவனை விட உங்களுக்கு உதவியா இருக்கிறது நான் தான். பிறகு என்ன பொம்பிளைப் பிள்ளை எண்டு சொல்லுறது?” அவரிடமும் பாய்ந்தாள், அவள்.

“கடவுளே! ஒரு வார்த்த சொன்னதுக்கு என்னைப் போட்டு என்ன பாடு படுத்திறாய்? உன்னப் பெத்ததுக்குப் பதிலா இன்னும் பத்துத் தென்னையை வச்சிருக்கலாம்!” தலையில் அடித்துக்கொண்டார், அவர்.

“ஓமோம்! தென்னை தான் உங்களுக்குச் சமைச்சுத் தரும். கேக் அடிச்சுத் தரும். பிள்ளை தேத்தண்ணி கொண்டு வாம்மா எண்டதும் கொண்டு வந்து தரும். எல்லாம் செய்யும். போங்கோ! இப்பவும் ஒண்டும் கெட்டுப் போகேல்ல. வச்ச தென்னையிட்டயே போய்க் கேளுங்கோ. எல்லாம் செய்யும்!” என்றவளின் பேச்சில், போதும் போதும் என்றாயிற்று அவருக்கு.

அன்னையைப் பார்த்த அரவிந்தனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. “ஏய் லூசு. சும்மா என்னத்துக்கு அம்மாவைச் சண்டைக்கு இழுக்கிறாய்? அவன் வாறதால தானே அடுத்தக் கிழமை கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னனான். இல்லாட்டி இப்பவே கூட்டிக்கொண்டு போவன் தானே.” என்றான் சமாதானமாக.

“அவன் வந்தா என்ன? அவன் என்ன என்னைப் பிடிச்சா தின்னப் போறான். அவன் ஒரு பக்கம் இருக்கட்டும், நான் ஒரு பக்கம் இருந்து பாக்கிறன்.”

“அவங்கள் பெடியள் பாக்கப் போறாங்கள். அதுக்கப் பெட்டை உனக்கு என்ன அலுவல்? அது தான் அண்ணா வாற கிழமை கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொல்லுறான் தானே. பிறகு என்ன?” என்று கேட்டார், சுகுணா.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது! எனக்கு இப்ப போக வேணும். அவ்வளவு தான்! அவன் கூட்டிக்கொண்டு போகாட்டி நீங்க வாங்க! நாங்க ரெண்டு பேரும் போவம். இல்லையோ, நான் தனியாப் போவன். எனக்கு இண்டைக்குப் படம் பாத்தே ஆகவேணும்!”

“இந்த அடம் பிடிக்கிற பழக்கத்துக்கு அடி வாங்கப் போறாய் கமலி!” விரல் நீட்டி எச்சரித்தார், சுகுணா.

“என்ன அடம் பிடிக்கிறன். அவன் தான் கூட்டிக்கொண்டு போகமாட்டன் எண்டு அடம் பிடிக்கிறான். தனியா விடமாட்டீங்க. நீங்களும் வரமாட்டீங்க. அப்ப, அப்பாக்கு ஃபோனை போட்டு வரச் சொல்லுங்கோ. அவரோட போறன்!”

அவருக்குத் தலையை வலிப்பது போலிருந்தது. கணவருக்கு இப்போது அழைத்தால் நிச்சயம் பேச்சுத்தான் விழும். அது முடியாது என்பதில், “நீயும் போறாய் தானே. கூட்டிக்கொண்டு போ, தம்பி. அந்தப் பெடியும் சோலி இல்லாதவன் தானே.” என்று, வேறு வழியில்லாமல் சுகுணா தான் இறங்கி வரவேண்டி இருந்தது.

அவள் ஆடிய நாடகத்தில் அன்னையும் அண்ணனும் வெறும் பாத்திரங்கள் தானே. நல்ல பிள்ளையாகப் புறப்பட்டுப் போனாள், கமலி.

எதிர்பாராமல் இவளைக் கண்டதும் இனிமையாக அதிர்ந்தான், கிருபன். பார்வை அவளையே வட்டமடிக்க முயன்றது. அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் அரவிந்தனைக் கேள்வியாகப் பார்த்தான்.

“என்ன உன்ர நண்பர் ஒரு மாதிரியாப் பாக்கிறார். நான் வந்தது பிடிக்கேல்லையாமோ? அப்ப, அவரை வீட்டை போகச் சொல்லு!” அவனை முறைத்துக்கொண்டு அரவிந்தனிடம் சொன்னாள், கமலி.

அவளை முறைத்து விட்டு, “சொறி மச்சான், தானும் வருவன் எண்டு நிண்டு வந்திருக்கிறாளடா. குறை நினைக்காத.” என்றான், அரவிந்தன்.

error: Alert: Content selection is disabled!!