கிருபனின் கமலி 13 – 2

கிருபனின் உதட்டோரம் கீற்றாக முறுவல் அரும்பிற்று. “இல்ல இல்ல. பிரச்சினை இல்ல. நீ கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போ! நான் இன்னொரு டிக்கெட் எடுத்துக் கொண்டு வாறன்.”

டிக்கட் கவுண்டரில் நின்றவனுக்கு ஏன் வந்திருக்கிறாள் என்கிற யோசனை ஓடிற்று. அவர்கள் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. இனி, முடிவு சொல்ல வேண்டியவள் அவள் தான். பதிலே இல்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்க, இப்படி வந்து நிற்கிறாள். எது எப்படியானாலும் அவளைப் பார்த்ததில் இரகசியமாகச் சந்தோசப்பட்டுக் கொண்டான்.

அவள், அரவிந்தன், கிருபன் என்கிற வரிசையில் அமர்ந்து கொண்டனர். படமும் தொடங்கியது. சற்று நேரத்திலேயே தமையனின் கையைச் சுரண்டினாள், கமலி.

“பக்கத்தில இருக்கிறவன் ஒழுங்கா இருக்கிறான் இல்ல.”

“என்ன செய்தவன்.” சட்டென்று மூர்க்கமாகிக் கேட்டான், அரவிந்தன். உடலை முன்னே சாய்த்து, எட்டிப் பார்த்து அவளுக்குப் பக்கத்தில் இருந்தவனை முறைத்தான்.

“ஒண்டும் செய்யேல்ல. ஆனா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அந்தப் பக்கம் வரட்டா?”

“அங்கால அவன் எல்லாடி!” சத்தமில்லாமல் பல்லைக் கடித்தான், அரவிந்தன்.

“அவனும் என்ன இவனை மாதிரிச் சொறிவான் எண்டுறியோ?” ஒன்றுமே தெரியாத குழந்தையாக விழிகளை விரித்து வினவினாள்.

“சேச்சே! அவன் அப்பிடியான ஆள் இல்ல.”

“பின்ன என்ன, எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்கு அண்ணா.”

அரவிந்தனுக்கு இடம்மாறி இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், யாரோ தெரியாத அந்த அவனுக்கு நண்பன் எவ்வளவோ மேல் என்று நினைத்தான். பின்னுக்கு இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாத வகையில் இருவரும் வேகமாக இடத்தை மாற்றிக்கொண்டனர்.

கிருபனுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. இருந்தும், அவளும் இருக்கிறாள் என்கிற நினைப்பே அவனைப் படம் பார்க்க விடாமல் செய்யப் போதுமாக இருந்தது. இப்போதோ, அவனுக்கு அருகிலேயே வந்து அமர்ந்திருக்கிறாள். அவளின் வாசனை வேறு மென்மையாய் அவன் நாசியைத் தீண்டிற்று.

ஒரு சில நிமிடங்கள் கடந்தன. இருளின் மறைவில், அவளின் விரல்கள், அவன் விரல்களைத் தேடிப் பிடித்துக் கோர்த்துக் கொண்டன. அவன் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான். அவளின் விழிகள் திரையில் தான் இருந்தன.

இது சரி இல்லையே. அவன் தன் கையை விடுவிக்க முயன்றான். அவள் விடவில்லை. கையில் மெல்லிய அழுத்தம் கொடுத்து விடச்சொல்லி உணர்த்தினான். அவளோ இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

முதலில், விறைப்புடன் அவள் விரல்களுக்குள் அகப்பட்டிருந்த அவனுடைய விரல்கள் மெல்ல மெல்ல இலகுவாகின. மெல்லிய நடுக்கத்துடன் அவன் விரல்களும் அவள் விரல்களோடு கோர்த்துக் கொண்டன. மெலிதாக விழிகளினோரம் பூப்பூத்தது. திரை கலங்கித் தெரிந்தது. அவள் விரல்களின் மென்மையில் கிறங்கிக் கிடந்தான், கிருபன்.

அன்னையின் விரல்களுக்குப் பிறகு, அவன் பற்றிய முதல் பெண்ணின் விரல்கள் அவளுடையவை. மனதில் ஒரு நெகிழ்ச்சி. அவளின் மடியில் சாய்ந்துகொள்ள வேண்டும் போலாயிற்று. அவனை மீறி, அவன் விரல்கள் அழுத்தமாகப் பற்றிவிட, அவனை உணர்ந்தவளாய் மெல்ல அழுத்திக் கொடுத்தாள், கமலி.

இடைவேளை வந்தது. விருப்பமே இல்லாமல் தன் கையை விடுவித்துக் கொண்டான், கிருபன். நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு நேரமாக, மயக்கத்தில் மூழ்கி இருந்த மனது விழித்துக் கொண்டது. தப்புச் செய்கிற உணர்வு. அவள் தான் சின்னப்பிள்ளை என்றால் அவனும் இசைவது முறை இல்லையே. இது தொடரக் கூடாது. அவளிடம் கேட்டுவிட்டு அரவிந்தனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.

“அண்ணா, எனக்குக் கோக் வேணும்.” என்றாள், அவள்.

அரவிந்தனோடு அவனும் புறப்பட, அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

போகாதே என்கிறாள். எப்படிப் போகாமல் இருப்பது? தயங்கினாலும் அவளிடம் விழிகளால் இறைஞ்சியபடி நண்பனோடு நடந்தான். சற்றுத் தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்கு மேல், அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை.

“டேய், பேர்ஸ் சீட்ல விழுந்திட்டுப் போல. நீ போ, நான் வாறன். இல்லாட்டி கண்டீன்ல ஆக்கள் கூடிடும்.” என்று, அரவிந்தனை அனுப்பிவிட்டு அவளிடம் வந்தான்.

“சும்மா இருந்தவளைக் கலியாணம் கட்டுறியா எண்டு கேட்டு, மனதைக் கெடுத்துப்போட்டு, இப்ப எங்க ஒளிச்சு ஓடுறீங்க.” என்றாள் அவள், அதட்டலாக.

இது என்ன மீண்டும் ஆரம்பிக்கிறாள். அவன் திகைத்தான். “அது பிழை எண்டு தான்…” இப்போது, அவனுக்கே அதைச் சொல்லப் பிடிக்கவில்லை.

“அப்ப, என்னைப் பிடிக்கேல்ல உங்களுக்கு?”

அவளைப் பிடிக்காதா? இது என்ன கேள்வி? இந்த உலகின் அத்தனை சொந்தமாகவும் அவள் வேண்டும் என்று, மனம் ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கையில், அப்படி எப்படிச் சொல்லுவான்?

“சொல்லுங்க! என்னைப் பிடிக்குமா பிடிக்காதா?”

அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவளுக்குக் கோபம் வந்தது.

“நான் வேணுமா வேணாமா?”

“வேணும்.”

“இது எத்தினை நாளா?”

அவனுக்கே தெரியாதே. துளித்துளியாக வீட்டுக்குள் நுழைகிற மழைத்துளி, ஏதோ ஒரு நொடியில் வீட்டையே நனைத்து விடுவதில்லையா?அப்படித் தான், அவள், அவனை ஆக்கிரமித்திருந்தாள். முதல் துளி எப்போது விழுந்தது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

அவன் தடுமாறுவது அழகாயிருந்தது. “ஒரு கிஸ் தாங்களன்.” என்றாள், கமலி.

திகைத்துத் திரும்பியவன் அவளை முறைக்க முயன்றான்.

“ஓ! சிம்ரனுக்குக் கோவம் எல்லாம் வரும் போல இருக்கே. பெரிய ஆள் தான்.”

“இந்த சிம்ரன விடன், பிளீஸ்!” அவனுக்கு வெட்கமாக இருந்தது.

“விடவா தியேட்டர் வரைக்கும் வந்து நிக்கிறன்?”

அவன் அவளைப் பார்த்தான். என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தினாள், கமலி. அவன் மனம் மயங்கிற்று. இப்போது, அவன் விரல்கள் தைரியமாக நீண்டு வந்து, அவளின் விரல்களைப் பற்றிக் கோர்த்துக் கொண்டன.

“தொரைக்கும் காதல் வந்திட்டுது போல இருக்கே.”

அவளின் குறும்பில், உதட்டோரம் அரும்பிய சிரிப்புடன் பார்வையை அகற்றிக் கொண்டான், அவன். மெலிதாக வெட்கப் பட்டான். நேசத்தைப் பரிமாறிக்கொண்ட தருணத்தை மனம் துளித்துளியாய் அனுபவித்தது. இப்படி, ஒரு துள்ளலான மனநிலையை அவன் அனுபவித்ததே இல்லை. அதைத் தந்தவளைப் பெரும் நேசத்தோடு நோக்கினான்.

“என்ன?” விழியுயர்த்திக் கேட்டாள், அவள்.

ஒன்றும் இல்லை என்று தலையசைத்தான், கிருபன்.

“சந்தோசமா இருக்கா?” அவனை உணர்ந்து கேட்டாள், கமலி.

தலையை மெல்ல ஆட்டினான், அவன். விழிகள், காந்தமென அவளிடமே கட்டுண்டிருந்தன.

“இனி நீங்க சந்தோசமாத்தான் இருப்பீங்க. நான் உங்களை அப்பிடி வச்சிருப்பன். சரியா?”

அவனுக்கு விழிகள் பனித்துவிடும் போலாயிற்று. ஒற்றை உறவுக்காய் அவன் உயிர் துடிக்கிற துடிப்பை உணர்ந்து பேசியவளின் பால், அவன் நேசம் பல்கிப் பெருகியது. இருந்தும், மனதில் ஏதோ ஒன்று நெருட, “இது ஒண்டும் பரிதாபத்தால வந்தது இல்லையே?” என்றான், மெல்லிய குரலில். ஆம் என்று சொல்லிவிடாதே என்று பரிதவித்தது, அவன் மனது.

அவனை நன்றாக முறைத்தாள், கமலி. “பரிதாபம் வந்தா சோத்தப் போட்டு வயித்த நிரப்பலாமே தவிர, வாழ்க்கை தரேலாது!” என்றாள் பட்டென்று.

அவனுக்கு அவளின் கோபம் வலிக்கவே இல்லை. அடி நெஞ்சுவரை இனித்தது. அழகாய்ச் சிரித்தான்.

கமலிக்கும் அவன் மனநிலை விளங்காமல் இல்லை. அதில், “அண்ணாட்டக் கதைக்கிறீங்களா?” என்று, வினவினாள்.

அதற்கும் தலையை ஆட்டினான், அவன். “ஆனா, என்ர அப்பா பற்றி…” சாதி என்கிற சொல்லைக்கூடச் சொல்ல முடியாமல் தடுமாறினான், கிருபன்.

“அப்பா அதெல்லாம் பாப்பார் தான். ஆனா, எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு எண்டு தெரிஞ்ச பிறகும், சாதியக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு தொங்கிற அளவுக்கு அவர் மூடர் இல்ல.” என்று, தைரியம் தந்தாள், அவள்.

அவன் ஒன்றும் பேசவில்லை. பேசும் நிலையில் இல்லை. ஆசையோடு அவளையே பார்த்திருந்தான்.

“சரி போங்க. அண்ணா தேடப் போறான். பொப்கோர்ன் வாங்கிக்கொண்டு வாங்கோ. ‘நீங்க’ ‘எனக்கு’ வாங்கிக்கொண்டு வரோணும். ஓகே?”

தலையை ஆட்டிவிட்டு எழுந்தான், அவன்.

“இனி ஒவ்வொரு நாளும் வீட்டை வாறீங்க. நான் ஊத்தித் தாற தேத்தண்ணியைக் குடிச்சிட்டு, பலகாரத்தைச் சாப்பிட்டுப் போகவேணும். இல்லையோ, நான் உங்கட வீட்டை வந்து நிப்பன்.” என்று, மிரட்டிய பிறகு தான் அனுப்பிவைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!