அத்தியாயம் – 20
சக்திக்கு கஞ்சியை சமைத்து முடித்த அன்பு, அவள் எழுந்து விட்டாளோ என்று பார்க்க இன்னமும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் பார்வை அவளது அறையை வலம் வந்தது.
கலைந்து அலங்கோலமாக கிடக்கும் பொருட்களைப் பார்த்ததும் அவனுள் பதற்றம் ஏற்பட்ட “பொருட்கள் கலைஞ்சு கிடந்தா அது ஒன்னும் கொலை குற்றமில்ல அன்பு. அதுக்காக உங்க மனநிம்மதியை இழக்கக்கூடாது.” மருத்துவரின் சொற்கள் மனதில் ஓடியது.
அவர் சொன்னது போல கண்களை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விட்டு நிதானித்தவன், கண்களைத் திறந்து பொறுமையாக ஒவ்வொன்றையும் அடுக்கத் தொடங்கினான்.
டேபிளில் ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடந்த பொருட்களை சீராக வைத்தவன், அழுக்கான திரைச்சீலைகளையும் கட்டிலில் சிதறிக் கிடந்த அவளது உடைகளையும் மெஷினில் போட்டான்.
துவைத்த துணிகளை பால்கனியில் உளறப் போட்டு முடித்து அவளது அறையில் திரைச்சீலைகளை மாற்றிவிட்டு திரும்பியவனுக்கு சுத்தமாக இருந்த அறை மனதை அமைதிப்படுத்தியது.
அவன் இத்தனை செய்தும் கண்விழிக்காமல் உறங்கிக் கொண்டிருந்த சக்தியின் உடற்சூட்டை சோதித்தவன், காய்ந்து போன துணியை மீண்டும் நனைத்து அவளது நெற்றியில் போட்டு விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.
அவன் எண்ணமெல்லாம் சக்தி உளறலாக பேசிய விசயத்தில் உழன்றுக் கொண்டிருக்க, அதைப் பற்றிய உண்மையை எவ்வாறு அறிந்து கொள்வது என்ற குழப்பத்தில் சிந்தனையோடு அவளது முகத்தையே பார்த்திருந்தான்.
கள்ளங்கபடமில்லாத சிறு குழந்தை போல உறங்கும் அவளுக்குள் மறைத்திருக்கும் அந்த மர்மம் தான் என்ன அவனது சிந்தனையை கலைக்கும் வண்ணம் சக்தியின் அலைபேசி சிணுங்கியது.
அவளது உறக்கத்தை தொல்லை செய்யாத வண்ணம் அதை நிறுத்த முயன்றவன் அதில் ஒளிர்ந்த அனிருத் பெயரைக் கண்டு ஒரு யோசனை வர, அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
காணொளி அழைப்பு ஏற்கப்பட “ஹாய் சக்..” உற்சாகமாக சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்த, “சக்திக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது அனிருத். இன்ஜெக்ஷன் பண்ணி இருக்கு அசந்து தூங்கிட்டு இருக்கா.” செய்தியாகக் கூறினான் அன்பு.
“அவளுக்கு காய்ச்சலா? ஆனா திடீர்னு எப்படி?! இப்ப எப்படி இருக்கா?!” கவலையுடன் கேட்ட அனிருத்திடம் மருத்துவர் வந்தது முதல் நடந்த அனைத்தையும் விளக்கமாகச் சொன்னான் அன்பு.
அதன்பிறகே அன்புவிடம் தன்னை அறிமுகம் செய்யாதது நினைவில் வர, “ஹாய்! ஐம் அனிருத்! நீங்க தான் அன்புமதியா?” தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவனைப் பற்றி வினவினான்.
இதழுக்குள் சிரித்த அன்பு, ” நீதான் அனிருத் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். நான் முதல்ல பேசுனதை கவனிச்சு இருந்தா உனக்கும் அது தெரிஞ்சிருக்கும்.” இலகுவாக உரையாட புன்னகைத்தான் அனிருத்.
“அது, டிஸ்பிளேல என் பேர் வந்திருக்கும் அதனால பேர் சொல்ல முடியும். ஆனா அவளுக்கு நான் யாருன்னு உங்களுக்கு தெரியாதுல,” அன்புவை சீண்டி விட நினைத்துக் கேட்டு சிரித்தான் அவன்.
“அவளுக்கு இருக்கற ஒரே அண்ணன், விளையாட்டுத் தோழன் அப்றம் அவகிட்ட இருந்து இதுவரை மரியாதையே கிடைக்காத துரதிர்ஷ்டசாலி.” சொல்லிவிட்டு அன்பு வாய்விட்டு சிரிக்க, ‘ஆ’வென்று பார்த்திருந்தான் அனிருத்.
“அதுசரி, அந்தளவுக்கு வந்தாச்சா?!” வியந்து கேட்டவனிடம், “அது மட்டும் தான் எனக்கு தெரியும் அனி. ஆனா யுவியோட லைஃப்ல என்ன நடந்ததுங்கறது எதுவும் எனக்கு தெரியாது. நீ தான் அதை சொல்லனும்.” பூடகமாக அன்பு சொல்ல, புருவங்கள் சுருக்கினான் அனிருத்.
அவனது யோசனையை கவனித்த அன்பு, காய்ச்சலின் வேகத்தில் சக்தி புலம்பியதைக் கூறி, “அவள் அப்பாவைப் பற்றி சொன்னா, அப்றம் யாரையோ பற்றி பயந்து புலம்பினா. உனக்கு அதைப்பற்றி எதாவது தெரியுமா? ப்ளீஸ்! தெரிஞ்சா சொல்லு அனி.”
“சிட்டுக்குருவி மாதிரி சுத்திட்டு இருந்தவ, இப்படி காய்ச்சல்ல விழுந்து கிடக்கறதை பார்க்கவே கஷ்டமா இருக்கு. இதுல அவ ஏதேதோ சொல்றா என்னனு தான் தெளிவா புரியல.” உண்மையான தவிப்புடன் புலம்பினான் அன்பு.
நேற்றிரவு இவர்கள் இருவரும் மனம் விட்டு தங்களது காதலைச் சொல்லிக் கொண்டது எதுவும் தெரியாத அனிருத், “அதை நான் ஏன் உங்க கிட்ட சொல்லனும்?!” ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான் அவன்.
“ஏன்னா அவள் என் மனைவி! என் மனைவியோட வாழ்க்கையில என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனும். அவளோட பயத்தைப் போக்கி அவள் நிம்மதியா சந்தோஷமா வாழனும்.”
“என்னால அப்படியொரு வாழ்க்கையை அவளுக்கு கொடுக்க முடியும்ங்கற நம்பிக்கை இருக்கு. அதுக்கு முதல்ல அவளோட பிரச்சனை என்னங்கறது எனக்கு தெரியனுமே!” அன்புவின் உறுதியான சொற்கள் அனிருத்தை மனம் மகிழச் செய்தன.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்பு. ஆனா நீங்க நினைக்கிற அளவு அத்தனை சுலபமா தீர்க்கற பிரச்சனை இல்லை அது. சக்தி அதிலிருந்து தற்காலிகமா தப்பிச்சு வந்திருக்கா, அவ்வளவு தான்!” என்றவன்,
சக்தியின் தந்தை குணம் மற்றும் சக்தி வளர்ந்த விதம் எல்லாம் விளக்க, சக்தி வளர்ந்த விதத்தை பற்றி அவள் மூலமாகவே அன்புவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது, ஆனால் இப்படி ஒரு தந்தையை பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறான்.
அன்புவின் தந்தை சிவநாதன் அவனிடம் கண்டிப்புடன் இருப்பதைப் பார்ப்பவர்களுக்கு அவருக்கு பிள்ளை மேல் பாசமே இல்லை என்று கூட தோன்றும். ஆனால் அவரது அந்த கண்டிப்பில் கூட ஒரு அக்கறை இருக்கும்.
தன் மகனை யாரும் ஒரு சொல் குறையாக சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணமே அவரை அவ்வாறு இருக்கச் செய்கிறது என்பதை அன்பு வளர வளர புரிந்து கொண்டான்.
அவனது செயலை பாராட்டி இதுவரை அவனிடம் அவர் எதுவும் பேசியது இல்லை. ஆனால் நண்பர்கள், விருந்தினர் என்று வரும்போது அன்புவின் பொறுப்பான தன்மையை அவர்கள் பாராட்டும் வேளைகளில் அவர் கண்களில் என் மகன் என்ற பெருமிதம் வெளிப்படும்.
அன்பு பல நேரங்களில் அதை உணர்ந்திருக்கிறான். “சைக்கிளை கவனமா ஓட்ட மாட்டியா? எப்படி காயம்பட்டு இருக்கு பாரு.” என்று மிரட்டலாக பேசினாலும் அதில் அவனது வலியை நினைத்த அவரது துடிப்பு மட்டுமே ஒளிந்திருக்கும்.
சிலருக்கு உள்ளுக்குள் இருக்கும் பாசத்தை ‘கண்ணே! மணியே!’ என்று கொஞ்சிப் பேசி வெளிக்காட்டத் தெரியாது அதைப்போல தான் தனது தந்தையும் என்பதை அன்பு கணித்தது போலத் தான், சக்தியும் தன் தந்தையை நினைத்திருந்தாள்.
மகனின் உடல்நலனில் அக்கறை கொண்டு, “நல்லா சாப்பிடு கண்ணா! எப்படி இளைச்சு போயிட்ட பாரு?! “பாசமாக வெளிவரும் லீலாவதியின் சொற்கள் போல,
“துரைக்கு ஒழுங்கா சாப்பிட முடியாதா? உடம்புக்கு எதாவது வந்தா யாரு கஷ்டப்பட போறது?!” கடுமையாக வரும் தந்தையின் சொற்களும் ஒரே மாதிரியான உணர்வுதான், இங்கு சொல்லும் விதம் மட்டுமே மாறுபடுகிறது.
ஆனால் சக்தியின் நிலையே வேறு. தனது தொழிலில் கடன்பட்டதற்காக, பெற்ற மகளை ஒரு வயதான அயோக்கியனுக்கு திருமணம் செய்யத் துடிக்கும் அவளது தந்தை எல்லாம் எந்த ரகம் என்றே அவனுக்கு புரியவில்லை.
அதை யோசிக்கும் போது சக்தி உண்மையில் அவரது மகள்தானா?! என்ற கேள்வி அன்புவின் மனதில் எழ, “உண்மையிலேயே சக்தி அவரோட பொண்ணு தானா அனி?!” அதை வாய்விட்டே அனிருத்திடம் கேட்டான்.
“ம்ஹ்ம்! அவருக்கு பிறந்த பொண்ணு, அவரைப் பொறுத்தவரை அவ்வளவு தான் அன்பு. அவரோட பேர்ல தோட்டம், பங்களானு சொத்து வாங்கி போடுறதில்லையா, அதேப்போல அவருக்கு பிள்ளை இல்லைங்கிற சொல் வரக்கூடாதுனு பெத்துக்கிட்டாரு.” வெறுப்பாகச் சொன்னவன்,
“சித்தி உயிரோட இருந்தவரை சக்திக்கு எதுவும் தெரியல. நாங்களும் அப்பாவோட பிஸினஸ்க்காக கனடா வந்துட்டோம். சக்தி தான் ரொம்ப பாவம்! எங்களோட இருக்கற அந்த சில நாட்கள் மட்டும் தான் அவளோட வசந்த காலம்.” விரக்தியுடன் முடித்தான்.
“அந்த மனுசனுக்கு அவ மேல பாசம் இல்லைனு தெரியும், ஆனா மனசாட்சியே இல்லாதவர்னு இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை செய்ய அவளை வற்புறுத்தும் போதுதான் தெரிய வந்தது. அந்தாளை நினைச்சாலே ஆத்திரம் தான் வருது.” ரத்தன்தேவ்வை நினைத்து கோபத்தில் கொதித்தான்.
“சரி விடு. அதை நாம மாத்த முடியாது, சக்தியை இதுல இருந்து எப்படி வெளியே கொண்டு வர்றதுனு மட்டும் நாம யோசிப்போம். அவளுக்கு பாசத்தை கொட்டிக் கொடுக்க நானும் என் குடும்பமும் இருக்கு, அதனால இனிமே நீ அவளைப் பற்றி கவலைப்படாதே அனி.” உறுதியாகக் கூறினான் அன்பு.
“தேங்க்ஸ் அன்பு! இனியாவது அவளோட வாழ்க்கை நல்லபடியா மாறுனா, அதுல சந்தோஷப்படுற முதல் ஆள் நாந்தான்.” உள்ளம் நெகிழ அன்புவிற்கு நன்றி தெரிவித்தான்.
“ஐ ப்ராமிஸ்! இனிமே அவ எதுக்கும் ஏங்க மாட்டா. முதல்ல அவளுக்கு இருக்கற பிரச்சனையை முடிப்போம். இத்தனை மாசமா சக்தி இங்க வந்தபிறகு அங்க என்ன நடந்தது ஏதுனு உனக்கு எதாவது தெரியுமா? ” அன்பு தீவிரமாகக் கேட்டான்.
“சக்தி படிப்பை இன்னமும் முடிக்கலைனு சொல்லி கொஞ்சம் அவகாசம் கேட்டு இருந்தாரு போல, அதனால அவன் அடங்கி இருக்கான்னு நினைக்கிறான். அப்படி இருந்தும் அவன் அப்பப்போ வீட்டுக்கு வந்து அவரை மிரட்டிட்டு போறதா நாராயணன் தாத்தா சொன்னாரு.”
“சக்தியோட அப்பா அவள் படிச்ச ஊருல தேடிட்டு இருந்ததாகவும் இன்னமும் கிடைக்கலனும் தாத்தாகிட்ட சொல்லி இருக்காரு. ஆனா எப்படியாவது மோப்பம் பிடிச்சு எப்ப வேணும்னாலும் அவங்க சக்தியை தேடி வரலாம்.” சற்று கலவரத்துடன் தனக்கு தெரிந்ததை விவரித்தான்.
அனிருத் சொன்னதை யோசித்த அன்பு, “அவளுக்கு கல்யாணம் பேசுன அந்த ரோக் பத்தி உனக்கு என்னவெல்லாம் தெரியும்? எல்லாத்தையும் எங்கிட்ட விளக்கமாகச் சொல்லு அனி. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கறேன்.” தீவிர சிந்தனையுடன் கேட்க, தனசேகர் பற்றி அவன் விசாரித்த அனைத்தையும் கூறினான் அனிருத்.
“உங்களுக்கு வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளுங்க அன்பு. என்னால இங்கிருந்து செய்ய முடிஞ்சதை கண்டிப்பா செய்றேன்.” சக்தியின் நலனுக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தான் அனிருத்.
“தேவைப்படும் போது கண்டிப்பா கேட்கறேன் அனி. நான் என்னோட நம்பர் சொல்றேன் நோட் பண்ணிக்கோ. சக்தி ஃபோன்ல இனி இதைப்பற்றி பேச வேணாம். எனக்கு இந்த விசயமெல்லாம் தெரிஞ்சதா நீயும் அவகிட்ட காட்டிக்காதே.” தனது எண்ணை கூறினான் அன்புமதி.
மேலும் சிறிது நேரம் அன்பு அவனிடம் பேசிக் கொண்டிருக்க சக்தியிடம் அசைவு தெரியவும்” சரி, நீ அப்றம் என் நம்பருக்கு கால் பண்ணு. நாம பேசிக்கலாம்.” அழைப்பை வைத்தான் அன்புமதி.
அவள் எழுந்ததும் கஞ்சியை அவளுக்கு புகட்டி மாத்திரையை விழுங்கச் செய்து மீண்டும் உறங்க வைத்தான் அன்பு. காய்ச்சலில் இருந்த சக்திக்கு அதை எல்லாம் மறுக்கவும் முடியவில்லை அந்த எண்ணமும் இல்லை.
அன்றைய தினம் முழுவதும் அடிக்கடி அவளது உடல்சூட்டை கண்காணித்தபடி அவளுடனே இருந்தவன் இரவு உடல்சூடு இறங்கத் தொடங்க, மருத்துவர் சொன்னது போல உணவு கொடுத்து மீண்டும் மாத்திரைகளை விழுங்கச் செய்தான்.
நாள் முழுவதும் உறங்கியதிலும் மாத்திரையின் பலனாலும் காய்ச்சல் இறங்கி அதிகாலையில் கண்விழித்த சக்தி கண்டது, அமர்ந்தவாக்கில் உறங்கிக் கொண்டிருந்த அன்புவைத் தான்!
சரியாக அதேசமயம் அழைப்பு மணி ஒலிக்க, திடுக்கிட்டு எழுந்த அன்பு, விழித்திருந்த சக்தியைக் கண்டு, “குட் மார்னிங்டா கண்ணம்மா! காய்ச்சல் விட்டுடுச்சா?” அவளது கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்து பார்த்து முகம் மலர்ந்த அன்பு திருப்தியுற, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.
தன் தலையில் தட்டிக் கொண்டவன், “எழுந்துக்காதேடா. கொஞ்சம் பொறு, யாருன்னு பார்த்துட்டு வர்றேன்.” என விரைந்து சென்று கதவைத் திறக்க, கையில் ட்ராவல் பேக்குடன் நின்றிருந்தார் அவனது தாய் லீலாவதி.

