MPK 22
நாட்களும் கிழமைகளும் அதன் வேகத்துக்கு ஓடிக் கொண்டிருக்க, அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓடவேண்டிய கட்டாயத்தில் மனிதர்களும்.
ஆனால் ஆதித்யன், சாதனாவிடம் வைத்த கோரிக்கை மட்டும் கடலில் போட்ட கல்லாக அப்படியே இருந்தது.
இன்னும் ஒன்றரை மாதங்களில் மான்குட்டிகள் இருவரும் முதலாம் தரத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கின்றனர்.
நித்திலனின் பள்ளியில்தான் சேர்க்கப் போவதாக ஆதித்யன் சொன்னதிலிருந்து நிலனின் கால் தரையிலேயே இல்லை.
ஒவ்வொரு நாள் விடியும் போதும் தாயிடம் “இன்னும் எத்தனை நாள் கிடக்கம்மா மான்குட்டியள் என்ர பள்ளிக்கூடம் வர?” என்று கேட்டுத்தான் எழுவான்.
அதேபோல் மாலையில் ஆதித்தினை சந்திக்க நேர்ந்தால் அவனிடமும் நாட்கணக்கைமறக்காமல் கேட்டு விடுவான்.
போதாத குறைக்கு பள்ளியில் அவன் நண்பன் ஒருவன் தன் தம்பி இதே பள்ளியில் சேர இருப்பதாக சொல்ல இவனும்,
“என்ரயும் ரெண்டு தங்கச்சியளும் இஞ்சதான் வருவினம்.” என்று கூறி வகுப்பறையில் ஒரே பெருமித ஆர்ப்பாட்டம்.
நான் சொல்லும் வரை அவர்களை உன் தங்கைகள் என்று சொல்லாதே என்று ஆதித்யன் சொன்னதை அவன் இந்த இடத்தில் மறந்தே போனான்.
அன்றைய நாளே சாதனா நித்திலனைப் பள்ளியில் இருந்து கூட்டி வர சென்றவேளை, நித்திலனின் அந்த நண்பன்,
“நித்திலன்ர தங்கச்சியளை இஞ்சயோ சேக்க போறீங்க அன்ட்ரி? ரெண்டு பேரும் முதலாமாண்டோ?” நித்திலன் பொய் புளுகுகிறானோ என்றறிய இவளிடம் குறுக்கு விசாரணை செய்ய, சாதனா திகைத்துத் தடுமாறினாள்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், “நிண்டு கதைச்சுக் கொண்டு போக நேரமில்லை அப்பு. வேளைக்கெண்டு போகோணும்.”
அந்த சிறுவனுக்குப் போக்குக் காட்டிவிட்டு மகனை இழுத்துக் கொண்டு வந்தவள், மோட்டார் சைக்கிளில் வர வர அவனைக் கடிந்து கொண்டே வந்தாள்.
“ஏன் நிலன் இப்பிடி சொல்லிக் கொண்டு திரியுறீங்கள்? இதெல்லாம் அவைக்குத் தெரிஞ்சா பேசுவினம் எல்லா?”
“டொக்டர்தான் சொன்னவர், ‘அவை உங்களுக்கு ஃப்ரெண்ட் இல்லை, தங்கச்சி!’ எண்டு. பிறகேன் அவர் பேசப் போறார்?” என்றவனை என்ன சொல்லி மேலே திட்ட முடியும் அவளால்?
‘அவர் சொன்னா நீ கேப்பியோ?’ என்று கேட்கத்தான் நா துடித்தது. முடியத்த்தான் இல்லை.
அவனின் டொக்டர் இதை மட்டுமே சொல்லிக் கொடுப்பதில்லையே அவனுக்கு. ஆயிரம் நல்லறிவுரைகள் எல்லாம் சொல்லி சொல்லித்தானே இவனை இந்தளவில் மாற்றி வைத்துள்ளான்.
இந்த நிலையில் அவர் சொல்வதைக் கேட்பாயா என்று இவள் கேட்டு, மகன் அவன் சொல்லும் எதையும் கேட்காது போனால் இவளுக்குத்தானே பெரும் நஷ்டம். அதனால் வாயை மூடி மனதுக்குள் மட்டும் ஆதித்யனுக்கு மண்டகப்படி பாடிக் கொண்டாள்.
ஆதித்யனிடமும் இதைப்பற்றிக் கேட்கப் போகவில்லை. அன்று மட்டுமே அதைப் பற்றிக் கதைத்து விட்டு அவன் தன் வேலையில் பிஸியாக அலைய, அதைப்பற்றிய அதீத கவலையின்றித் திரியும் அவளுக்கு, தானே அதை ஒட்டிய ஒரு விஷயத்தை அவனிடம் கதைத்து மீண்டும் தொடர விருப்பம் வரவில்லை.
இப்படியே இருவரும் இரு திக்கில் இருந்தால் எப்படித்தான் இருவரையும் ஒரே கலப்பையில் இழுத்துப் பூட்டுவது என்று நொந்த விதி, தானே அதற்கு வழி செய்து சாதனாவின் காலைப் பதம் பார்த்துவிட்டது.
தரையில் தண்ணீர் ஊற்றியிருந்ததைக் கவனிக்காமல் நடந்ததில் கால் பிசகி விட்டிருந்தது. இரவு நேரம் அவர்கள் வீட்டில் வைத்துத்தான் விபத்து நடந்திருந்தது. எலும்பு முறிவென்று எதுவும் இல்லை. தசை நெரிவுதான். ஆனாலும் சாதனாவால் வலி தாங்க முடியவில்லை.
தாயின் கதறலில் பயந்து போன நித்திலன், உடனே அழைத்தது ஆதித்யனைத்தான். சாதனா மறுத்தும் கேட்காமல் அழைத்து விட்டிருந்தான்.
அப்போதே குளித்து விட்டு வந்து உணவுண்ண என்று அமர்ந்த ஆதித்யன், சாதனாவின் எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் ஏதோ அவசரம் என்று புரிந்து அழைப்பை ஏற்றுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான்.
நித்திலனின் பயந்த குரல் அவன் காதில் விஷயத்தை உரைக்கக் கேட்டபடியே தாய் மற்றும் பிள்ளைகளிடம் வந்துவிடுவதாக மட்டும் கூறி விட்டு, சாதனா வீட்டை நோக்கி விரைந்தான்.
அவள் வீடு வரும் வரை அழைப்பை அவன் துண்டிக்கவே இல்லை. நித்திலனின் பயத்தைப் போக்கும் வகையில் கதைத்துக் கொண்டே வந்தவன், தான் அவர்கள் வீட்டை நெருங்கி விட்டேன், பயப்பட வேண்டாம் என்று சொன்னவேளை சாதனா தன் வலியையும் மீறி மகனிடம் இருந்து தொலைபேசியைப் பறித்தவள்,
“டொக்டர்! இந்த நேரம் நீங்க இஞ்ச வராதேங்கோ. என்னால இப்ப சமாளிக்க ஏலுமாத்தான் கிடக்கு. விடிய விட்டு நான் ஹொஸ்பிட்டல் போவன். நீங்க போங்கோ.” என்ற, அவனுக்கு வந்ததே ஆத்திரம்.
“நான் டொக்டர் சாதனா. என்ர வேலையை என்னெண்டு பார்க்கோணும் எண்டு எனக்குத் தெரியும். வாயையும் காலையும் அசைக்காம இருந்தீங்கள் எண்டா எல்லாம் நல்லதா நடக்கும்.” என்று அடிக் குரலில் கத்தி விட்டு வைத்த அடுத்த கணம் அவன் கையில் உடைபடாத குறையாகத் தட்டுப்பட்டது அவர்கள் வீட்டுக் கதவு.
நித்திலன் கஷ்டப்பட்டு ரீப்பையை எடுக்க முயல்வதும், “கவனம் நிலன். காலில போட்டிடப் போறீங்கள்.” என்ற சாதனாவின் குரலும் கேட்கவும்தான் தன் சீற்றம் தணிந்து கதவைத் தட்டுவதை நிறுத்தினான்.
“அவசரம் இல்லை நிலன். பொறுமையா கட்டைய எடுத்திட்டுக் கதவைத் திறவுங்கோ.” என்றான் தானும்.
ஒருவழியாக கதவைத் திறந்த நிலன், ஆதித்யனைக் கண்டதும் இதுவரை நெஞ்சில் கவ்வியிருந்த அச்சம் அகன்றவனாய் அவனிடம் தவ்விக் கொள்ள, ஆதித்யனும் அவனைத் தழுவித் தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்னபடியே சாதனாவிடம் வந்தான்.
“நிலனுக்குப் பயம் போயிட்டு எண்டா இறங்கி நிக்கிறீங்களோ? அம்மாக்கு என்னெண்டு பார்க்கோணும் எல்லோ நான்?” என்கவும் புரிந்து கொண்டு ஓரம் நின்றான் அவன்.
சாதனா தரையில் விழுந்த இடத்திலேயே அமர்ந்திருக்க ஆதித்யனும் தரையிலேயே முழங்காலிட்டு அமர்ந்தவன், “எங்க நோகுது?” என்றான் வலி தாங்கி நின்ற அவளின் விழி பார்த்து.
இவ்வளவு தூரம் வந்துவிட்டவனை மறுத்து அனுப்புவது உசிதமல்ல என்று புரிய அவளும் பாதம் வரை விரிந்திருந்த பிஜாமாவை கொஞ்சமாக விலக்கி மொழிப் பகுதியைத் தொட்டுக் காட்ட, அவளை முறைத்தான்.
“அவர் கை மூட்டுக்க முறிச்சார். நீங்கள் கால் மூட்டோ? அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இதுதான் வேலை என்ன? நடக்கேக்க கொள்ளேக்க கவனமா இருக்கிறேலயே? நடக்கிறதெல்லாம் பார்த்தா உங்களுக்காகத்தான் நான் ஓர்தோ படிச்ச மாதிரிக் கிடக்கு.” என்று கடிந்து கொண்டே, அவள் வலியென்று சொன்ன பகுதியைக் கையால் பிடிக்க, இவள் வெடுக்கெனக் காலைப் பின்னிழுத்துக் கொண்டாள்.
அவள் செயல் அவனோடு அவன் தொழிலையும் சேர்த்து அவமானப் படுத்துவது போல் இருக்கவே மருத்துவனுக்கு உச்சியில் ஏறிவிட்டது.
“திரும்பத் திரும்ப சொல்லுறன் சாதனா, நான் டொக்டர். என்னவோ கிடைச்சது சான்ஸ் எண்டு தேய்…” என்று எதையோ சொல்ல வந்தவன், நித்திலன் இருப்பை உணர்ந்து வார்த்தைகளை வாய்க்குள் விழுங்க, அவன் விழுங்கிய விகுதியைத் தெளிவாகப் புரிந்த சாதனாவுக்கும் கோபம் வந்துவிட்டது.
அவள் ஒன்றும் அப்படி நினைத்துக் காலை இழுக்கவில்லையே! அவன் பிடி வலிக்கவும்தானே இழுத்தாள்.
“நீங்க டொக்டர், விளக்குமாறு பின்னுறவர் இல்லை எண்டு எனக்குத் தெரியுது. ஆனா நோவுக்குத் தெரியாதெல்லோ! அதான் பிடிச்சது ஆர் எண்டு தெரியாம கூட நொந்திட்டு. நானும் காலை இழுத்திட்டன்.”
அவனுக்கு சற்றும் குறையாத சீற்றத்தோடு கத்தியவள், ஆதித்யன் முகம் காட்டிய ஆச்சர்யபாவத்தில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
கூடவே நித்திலன் முன்னால் தான் அவனை இப்படி மரியாதைக் குறைவாகப் கதைத்திருக்கக் கூடாதென்றுணர்ந்து மன்னிப்புக் கேட்டாள்.
“சொறி டொக்டர். கால் நோவில கூடக் கதைச்சிட்டன்.”
“பரவாயில்லை. இப்பிடியே கதையுங்கோ… நல்லாத்தான் கதைக்கிறீங்கள்.” உதடுகளோடு கண்களும் சிரிக்க சொன்னவன், அவள் காலைப் பொறுமையாக ஆராய ஆரம்பிக்க, சாதனா சட்டென மகனைத் திரும்பிப் பார்த்தாள்.

