அத்தியாயம் – 21
காலையில் கண்விழித்ததும் தன்னெதிரே உறங்கிக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவளுக்கு நேற்றிலிருந்து அவனது அக்கறையும் கவனிப்பும் மனதில் நிழற்படமாக ஓடியது.
அவளது வாழ்க்கையில் என்றிலிருந்து ஹாஸ்டல்வாசியாக மாறினாளோ அன்றே இப்படியான பாசமான கவனிப்பும் பரிதவிப்பும் காணாமல் போனது.
ஹாஸ்டலில் உடனிருந்த தோழிகள் அவளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் மருந்துகளை வாங்கி தந்துவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அவரவர் வகுப்புகளுக்கு சென்று விடுவர்.
இதுதான் தனக்கு வாய்த்தது என அவளும் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள். ஆனால் அம்மாதிரியான சமயங்களில் உள்ளுக்குள் தாயை எண்ணி வருந்தாத நாட்களே இல்லை.
அதனாலேயே சளி, காய்ச்சல் வருவதை போன்று லேசாக உணர்ந்தாலே மருந்து மாத்திரைகளை விழுங்கி அதை தீவிரமடையாமல் காத்துக் கொள்வாள். திடீரென ஏற்படும் உபாதைகளில் தான் மேற்கூறிய அத்தனை வேதனையும்.
நேற்றைய காய்ச்சலில் அன்புவின் கவனிப்பும் அவளுக்கான தவிப்பும் அந்த பாசமான வருடலும் உயிர் போகும் நிலையில் கிடைத்த மூச்சுக்காற்று போல அவனை இழக்கவே முடியாது என்பதை அவளுக்குள் உறுதியாக வைத்தது.
உட்கார்ந்த நிலையிலேயே இப்படி அசந்து உறங்குகிறான் என்றால் தனக்காக இரவெல்லாம் விழித்திருப்பான் போல என்றெண்ணியவள் மனதில் அவன் மீது காதல் பொங்கிப் பிரவாகமெடுத்தது.
இன்னும் சிறிது நேரம் அவனை ரசிக்க முடியாமல் அழைப்பு மணியோசை தொல்லை செய்தது. அதில் திடுக்கிட்டு விழித்தவன் அப்போதும் அவளது நலத்தை பரிசோதிக்க அப்படியே அவனை இழுத்து தன்னுள் வைத்துக் கொள்ள அவளுள் பேராவல்!
அதற்குள் மீண்டும் ஒலியெழுப்பிய அழைப்பு மணியில் எரிச்சலாக அவள் உணர, “உடனே எழுந்துக்காதேடா. யாருனு பார்த்துட்டு வர்றேன்.” என்றவன் விரைந்து சென்று கதவைத் திறக்க, எதிரே நின்ற தாயைக் கண்டு திகைத்தான் அன்பு.
“காலிங் அடிச்சா உடனே வந்து கதவைத் திறக்க மாட்டியாடா? எவ்வளவு நேரம்! நகரு, நான் போய் என் மருமகளைப் பார்க்கறேன். நீ போய் சமைக்கற வேலைய ஆரம்பி. ட்ராவல் பண்ணி வந்தது பசிக்குது.” படபடவென பொரிந்த லீலா வேகமாக வீட்டிற்குள் நுழைந்தார்.
“யம்மோவ்! என்ன திடீர்னு இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறீங்க? அப்பா எப்படி உங்கள தனியா விட்டாரு?” முதல்கட்ட அதிர்ச்சியில் இருந்து விடுபட்டவன் தாயின் பின்பு வேகமாக வந்து வினவினான்.
நேற்றைய தினம்..
“அந்த 211ல ஏசி ஒழுங்கா வேலை செய்யலைனு கம்ப்ளைன்ட் வந்ததே அதை சரி பண்ணியாச்சா?” பணியாளர் ஒருவரிடம் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்த சிவநாதனின் அலைபேசி சிணுங்க யாரென எடுத்துப் பார்த்தார்.
அழைப்பது தன் மனைவி என்றதும் “சரி போய் அப்படியே 413ல டிவி கனெக்ஷன் வரலைனு சொன்னாங்க என்னனு பாருங்க.” அந்த பணியாளரை அனுப்பிவிட்டு அழைப்பை ஏற்றார்.
அவர் ஆன் செய்தது தான் தாமதம், “என்னங்க நீங்க உடனே வீட்டுக்கு வாங்க, ஒரு எமர்ஜென்சி!” படபடப்புடன் அவசரமாக சொன்ன மனைவியின் பேச்சில் பதறி விட்டார்.
“என்னம்மா உடம்புக்கு என்ன பண்ணுது?! டேப்லெட் எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? டாக்டரை கூப்பிடவா?” மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று தவிப்புடன் கேள்விகளை அடுக்கினார் சிவநாதன்.
“எனக்கென்ன நல்லா குண்டுக்கல்லு மாதிரி தான் இருக்கேன். இது வேற விசயம். அரைநாள் லீவு சொல்லிட்டு நீங்க உடனே கிளம்பி வாங்க.” நிதானமாக லீலா சொன்னதில் கடுப்பானார் அவர்.
மூச்சை இழுத்து விட்டு ” அப்புறம் எதுக்குடி உயிர் போற மாதிரி கத்துற? அப்படி என்ன எமர்ஜென்சி?” கடுப்புடன் கேட்க, அவர் வந்தால்தான் சொல்வேன் என்றவர் பட்டென அலைபேசியை வைத்துவிட்டார்.
என்ன விசயமென்று தெரியாமல் மண்டை குழம்பிப் போனவர் வேறு வழியில்லாமல் விடுப்பு சொல்லிவிட்டு வழியெல்லாம் அப்படி என்ன அவசரமா இருக்கும்?! என்ற யோசனையோடு வீடு வந்து சேர்ந்தார்.
“வாங்க! வாங்க!” உற்சாகமும் பரபரப்புமாக வரவேற்ற மனைவியை முறைத்தவர், “இப்ப என்ன அவரசம்னு எனக்கு ஃபோனைப் போட்டு உடனடியா வரச் சொன்ன லீலா?” இழுத்து வைத்த பொறுமையுடன் எரிச்சலாகக் கேட்டார்.
“நான் உடனடியா சென்னைக்கு கிளம்பனும். அதுக்கு டிக்கெட் போட்டு என்னை வந்து ஏத்திவிட நீங்க வர வேண்டாமா?! அப்றம் வீட்டுல என்னென்ன எங்கெங்க இருக்குனு உங்களுக்கு நான் தெரியப்படுத்த வேணாமா? ” நிதானமாக கேட்டவரின் கேள்வியில் விழித்தார் அவர்.
“இப்ப என்னாச்சு, திடீர்னு அங்க போகனும்னு இப்படி பறக்கற? உன் மகன் எதாவது ஏடாகூடம் பண்ணி வைச்சுட்டானா?!” கூர்மையாகப் பார்வையை வீசியபடி கோபமாகக் கேட்டார்.
“அதென்ன உன் மகன்? அப்ப அவன் உங்களுக்கு பிள்ளை இல்லையா?” என எகிறியவர், “அதை அப்பறம் கவனிச்சுக்கறேன். இப்ப அங்க புள்ளைக்கு உடம்பு சரியல்ல. பயங்கர காய்ச்சல். நான் உடனே அங்க போயாகனும்.” பிடிவாதமாகச் சொல்ல, உறுத்து விழித்தார் அவர்.
“அவன் என்ன சின்ன குழந்தையா? காய்ச்சல் வந்ததும் ஓடிப் போய் உன் மடியில போட்டு தாலாட்டுப் பாடப் போறியா?” கடுப்புடன் கேட்டவருக்கு மனைவியை பிரிய மனமில்லை அதை ஒத்துக் கொள்ளாமல் கோபத்தை காட்டினார்.
“ஏன் இதே போன வாரம் உங்களுக்கு சாதாரண சளி பிடிச்சதுக்கே ‘லீலா ஆவி பிடிக்கனும் தண்ணி வை! தைலத்தை நல்லா தேய்ச்சு விடு. லீலா! கொஞ்ச நேரம் கிட்டயே இரேன்’னு என்னை என்ன பாடுபடுத்துனீங்க?”
“இப்ப பிள்ளைக்கு காய்ச்சல் கொதிக்குதாம் அதுக்கு நான் போய் பிள்ளைய பார்க்கக்கூடாதா? உங்கள்ட்ட என்ன பேச்சு, இப்ப டிக்கெட் போடுவீங்களா மாட்டீங்களா?” அவரை கேள்விகளால் வாட்டியெடுத்து கறாராகக் கேட்டார் லீலாவதி.
மனைவியின் திடீர் பரிணாமத்தில் விழி பிதுங்கியவர், “சரி, போட்டு விடுறேன். ரெண்டு நாள்ல ரிட்டர்ன் டிக்கெட்டும் போட்டுடவா?” சலிப்புடன் கூறியவர் திரும்பி வருவதையும் உறுதிப்படுத்தக் கேட்டார்.
“ரெண்டு நாளா?! அது நான் அங்க போயிட்டு எப்ப திரும்பி வர்றதுனு முடிவு பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்றேன். அப்பறமா டிக்கெட் போடுங்க.” மிதப்பாக லீலா சொல்ல,” என்ன வெளாடுறியா?! நீ இல்லாம நான் தனியா இங்க எப்படி சமாளிப்பேன்டி?!” எகிறிக் குதித்தார் சிவநாதன்.
“அதெல்லாம் பழகிக்குங்க.” என்ற லீலா, முடியாதென்று தாம்தூமென குதித்த கணவனை மேலும் பல பழைய கதைகளை எடுத்துவிட்டு ஒருவழியாக சம்மதிக்க வைத்து தன்னை ட்ரைனில் ஏற்றி விட வரவைத்தார்.
முகத்தை உர்ரென்று தூக்கி வைத்த கணவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும் தற்போது லேசாக இளக்கம் காட்டினாலும் உடனே போகாதே என நிறுத்தி வைப்பார் என்பதால் கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டார்.
“அவனுக்கே உடம்பு சரியில்லனு சொல்ற, அப்றம் அவன் எப்படி உன்னை கூப்பிட வருவான்? நான் வேணும்னா வந்து உன்னை இறக்கி விட்டுட்டு ரெண்டு நாள் இருந்துட்டு நாம ஒட்டுக்காவே திரும்பி வந்துடலாம்.” என்றதும் லீலாவதிக்கு கலவரமானது.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவன் வீடு இருக்கற ஏரியாக்கு போனா எனக்கே அடையாளம் தெரியும். ஸடேஷன்ல இறங்கி ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கிறேன்.” அவசரமாக அவரை கழட்டி விடப் பார்த்த மனைவியை குறுகுறுவெனப் பார்த்தார் சிவநாதன்.
“சரி சரி, ட்ரைன் கிளம்பப் போகுது, நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க. ஒழுங்கா டைமுக்கு சாப்பிட்டு மாத்திரை போடுங்க. நான் கொஞ்ச நாள்ல திரும்பி வர்றேன்.” அவரை விரட்டிய மனைவியை ஆராய்ச்சியாக பார்த்தவர்,
“என்னமோ தில்லாலங்கடி வேலை பண்ற, என்னனு தான் தெரியல. எப்படி இருந்தாலும் விசயம் எங்கிட்ட வந்து தானே ஆகனும். அப்ப பார்த்துக்கறேன்.” என்றவர் பலமுறை ‘கவனமாக இரு, இறங்கியது கூப்பிடு’ அறிவுரைத்து மனைவியை அனுப்பி வைத்தார்.
அன்பு கேட்டதில் நடந்த விசயங்களை மனதில் ரீவைண்ட் செய்தவர் “உங்கப்பாவை சமாளிச்சுட்டு வர்றதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு.” நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவர்,
“இதுல நீ வேற வந்ததும் வராததுமா கேள்வியா கேட்டு கொல்ற! ஒரு காஃபியாவது போட்டு கொடுடா,தொண்டை எல்லாம் காயுது.” கழுத்தை நீவிக் காட்டவும் “ஃபைவ் மினிட்ஸ்ம்மா!” என்றவன் வேகமாக தன்னை சுத்தம் செய்ய தனது அறைக்குச் சென்றான்.
லீலாவதியின் பேச்சு சத்தத்தில் வெளியே வரலாமா வேண்டாமா எனத் தெரியாமல் விழித்தபடி அறைக்குள் படுத்திருந்தாள் சக்தி. தன் தாயிடம் அன்பு அனைத்து உண்மையையும் சொன்னது அவளுக்கு தெரியாதே!
அன்பு வருவதற்குள் காமன் பாத்ரூமிற்கு சென்ற லீலா தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்து தயாராகி வெளியே வர, அவரது கையில் கோப்பையைக் கொடுத்தான் அன்பு.
அப்போதும் கூட சக்தி வெளியே வராமல் போகவே மீண்டும் தூங்கி விட்டாளோ என்றெண்ணியவன் அவளது அறைக்குச் செல்ல, “ஹே நில்லு! சக்தியைவா பார்க்க போற? நானும் வர்றேன்.” ஆர்வமாகக் கேட்டவர் அவளைக் காண தானும் வருவதாகக் கூறினார்.
தாயின் ஆர்வத்தில் சிரித்த அன்பு “வாங்க!” என்று அவரோடு அறைக்குள் நுழைய, அங்கே அமர்ந்திருந்த சக்தி திகைத்து “ஆன்ட்டி! அது வந்து..” என்னச் சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்து அன்புவைப் பார்த்தாள்.
“என்னடி பொண்ணே! இதான் நீ சமையல் செய்ற லட்சணமா? என்னமோ நீதான் வீட்டுக்கு ராணி மாதிரி இங்க வந்து ஜம்பமா படுத்துட்டு இருக்க?” முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்டார் லீலாவதி.
“அது.. ஆன்ட்டி.. நான்..” சொற்கள் வராமல் அவள் தடுமாறி, ‘எதாவது சொல்லி சமாளி’ எனும்விதமாக அன்புவை துணைக்கு அழைக்கும் பார்வை பார்க்க, அவனோ தோள்களை குலுக்கிச் சிரித்ததில் விழித்தாள் அவள்.
” நான் இங்க கேட்டுட்டு இருக்கேன், அவன்கிட்ட என்ன பார்வை வேண்டி கெடக்கு உனக்கு?” மிரட்டலான குரலில் அவர் கேட்க, ஏற்கனவே மனமும் உடலும் சோர்ந்திருந்த சக்திக்கு கண்கள் கலங்கத் துவங்கியது.
“ஹே! என்னடா செல்லம்! இதுக்கெல்லாம் அழலாமா?!” ஓடிவந்து அவளை அணைத்த அன்பு அவளது கண்களைத் துடைத்துவிட அவனது தாயின் முன்பு அவன் செயலில் விதிர்த்துப் போய் லீலாவதியை பார்த்தாள் சக்தி.
அதேசமயம், ” போதும்மா! அவளே இப்ப தான் காய்ச்சல் விட்டு சரியாகி இருக்கா, நீங்க வேற அரட்டி மறுபடியும் காய்ச்சலை வர வைச்சுடாதீங்க.” தன் தாயை அதட்டினான் அன்பு.
“பார்த்தியா இன்னமும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள அவளுக்காக அம்மாவை திட்டுற. இதெல்லாம் நல்லதுக்கில்ல. என்னோட உதவி இல்லாம உன்னால எதுவும் செய்ய முடியாது பார்த்துக்க!” பொய்கோபம் காட்டி எச்சரித்தார் லீலாவதி.
‘இல்ல.. புரியல..இங்க என்னதான்டா நடக்குது?!’ விழித்த சக்தி தாய் மகன் இருவரையும் மாறி மாறி பார்க்க பக்கென சிரித்து விட்டார் அவர்.
“அச்சோ பாவம்! புள்ள ரொம்ப பயந்துடுச்சுடா. நீ நகரு, போய் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட ரெடி பண்ணு. நான் என் மருமக புள்ளைகிட்ட பேசி முடிச்சு கூட்டிட்டு வர்றேன்.” அன்புவை விரட்டியவர் சக்தியை ஆதரவாக கட்டிக்கொண்டார்.
நடப்பதை நம்ப முடியாத வியப்புடன் பார்த்து கொண்டிருந்த சக்திக்கு தான் காண்பது கனவா! இல்லை நனவா! என்று தோன்றியது.

