காதல் நெய்த வர்ணம் – 20

வர்ணம் 20:

ராஷியின் ஆழ்மனம் தனது வார்த்தைகளைக் கேட்கும் என்ற முழு நம்பிக்கையோடு, தன் காதலியின் உயிரை மீட்டெடுக்க அந்த மருத்துவமனை அறையில் ஒரு காதலனின் மாபெரும் போராட்டம் தொடங்கியது!

நேரங்கள் கடந்திருக்க…மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவைத் தாண்டி வெளியே வந்த அருளின் முகத்தில் இருந்த குழப்பங்களும் பயமும் முற்றிலும் மறைந்திருந்தன. அவனது கண்களில் இப்போது ஒரு புதிய தீர்க்கமும் நம்பிக்கையும் வெளிப்பட்டது.

தன் காதலியை, தன் அன்பான மாணவியை இந்த நிலையிலேயே விட்டுவிட்டுப் போக அவனது மனம் சற்றும் ஒப்புக்கொள்ளவில்லை. அவளை மீண்டும் பழையபடி சிரிக்க வைக்கவும், கண் விழிக்க வைக்கவும் தான் அவளுடனே இருக்க வேண்டும் என்பதை உறுதியாக முடிவெடுத்தான்.

நேராகத் தனக்காக மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கொண்டிருந்த தன் அத்தான் ராஜனிடம் வந்தான்.

“மாமா…” என்று அழுத்தமான குரலில் அழைத்தான்.

ராஜன் அவனை நிமிர்ந்து பார்க்க, அருள் அமைதியாகவும் தீர்க்கமாகவும் பேசத் தொடங்கினான்:

“இன்னைக்கு நமக்குக் கிடைச்சிருக்க இந்த மாபெரும் வெற்றிக்கு முழுக்காரணமும் ராஷியும் சாருவும்தான் மாமா. அவங்க ரெண்டு பேரும் தங்களோட உயிரையே பணயம் வச்சுதான் இந்த நிலைக்கு நம்ம கலையைக் கொண்டு வந்திருக்காங்க. இப்போ அவங்க உயிருக்குப் போராடுறப்போ, ‘விருது கிடைச்சிருச்சு’ன்னு நான் மட்டும் கௌரவமா ஊருக்குத் திரும்பி வந்தா, நான் மனுஷனே இல்லை…

அவங்களை முழுசா குணப்படுத்தி, பழையபடி சிரிக்க வச்சு, ஆரோக்கியமா கூட்டிட்டு வர என்னாலான எல்லா முயற்சிகளையும் நான் இங்கேயே இருந்து பண்ணப்போறேன். நீங்க ஊருக்குப் போயி, அப்பாகிட்டயும் அம்மா கிட்டயும் டெல்லியில நடந்த விஷயத்தையும், இங்க நடக்குற சம்பவங்களையும் தெளிவா சொல்லி புரியவையுங்க மாமா,” என்றான்.

அருளின் முகத்தில் தெரியும் அந்த அசைக்க முடியாத உறுதியையும், அவனது ஆழ்ந்த உணர்வுகளையும் பார்த்த ராஜனுக்கு ஒரு நொடி எல்லாம் புரிந்துபோனது!

வெறும் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையேயான பாசம் மட்டும் இதுவல்ல… அதற்கு மேலான ஏதோ ஒரு ஆழமான பந்தமும் காதலும்தான் அருளை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்பதை ராஜன் நொடியில் உணர்ந்துகொண்டான்.

தனது மைத்துனனின் தோள்களைப் பிடித்துப் பார்த்த ராஜனின் கண்களில் லேசான ஈரம் படர்ந்தது. அவனை நெகிழ்ச்சியோடு தன் மார்போடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அருளின் காதோரம் குனிந்து, “சரிடா அருள்… நீ தைரியமா இங்கேயே இரு. நான் போய் மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். ஆனா ஒன்று மட்டும் ஞாபகம் வச்சுக்கோ…” என்று லேசாகப் புன்னகைத்து, “என் தங்கச்சியைப் பத்திரமா குணப்படுத்தி, அவளோடவே சிரிச்ச முகமா ஊருக்குத் திரும்பி வாடா!” என்று நம்பிக்கையோடு சொன்னான்.

அருள் ஆமோதிப்பாகத் தலையசைக்க, ராஜன் அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு, அங்கே நின்றிருந்த ராஷியின் பெற்றோரிடமும் விடைபெற்றுக்கொண்டு சிரசா மலையை நோக்கிப் புறப்பட்டான்.

ராஜன் சென்ற வழியையே பார்த்தபடி நின்றிருந்த அருள், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கித் திரும்பினான். ராஷியை மீண்டும் தன் காதலால் மீட்டெடுக்கும் அந்தப் புனிதமான போராட்டத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாரானான்!

ராஜன் கிளம்பிச் சென்றதும், அருள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ராஷி மற்றும் சாருவின் பெற்றோர்களை நோக்கி நடந்தான்.

அவர்களைப் பார்த்து, “அய்யா… அம்மா… நான் இங்கேயே தங்கப்போறேன். ராஷியும் சாருவும் முழுசா குணமடைந்து கண் விழிக்கிற வரைக்கும் நான் இவங்களை விட்டு எங்கே பேரப்போறதில்லை. எனக்கு மருத்துவமனையில இவங்க பக்கத்துலேயே இருக்க அனுமதி வாங்கித் தாங்க,” என்று மிகவும் பணிவாகவும் உறுதியாகவும் கேட்டுக் கொண்டான்.

அருளின் இந்த அன்பையும் அக்கறையையும் பார்த்த பெற்றோர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘தன் மாணவிகளுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வரும் இப்படி ஒரு ஆசிரியரை நாம் எங்குமே பார்த்ததில்லை’ என்று நினைத்து நெகிழ்ந்துபோய், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி அருளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் வாங்கித் தந்தனர்.

அன்று முதல் அருளின் வாழ்க்கையே அந்த ஐ.சி.யு அறைக்குள் சுருங்கத் தொடங்கியது.

தினமும் காலையிலேயே எழுந்து, ராஷியின் அருகில் அமர்ந்து கொள்வான். அவளது குளிர்ந்த விரல்களைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அவளது காதோரம் ஓயாமல் பேசத் தொடங்கினான்.

மருத்துவர்கள் சொன்னது போல, அவளுக்குப் பிடித்தமான விஷயங்களை, சிரசா மலையின் நினைவுகளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டினான்.

“டி… ராஷி! தென்னந்தோப்புல நாம விழுந்தப்போ தென்ன ஓலை பண்ணின சத்தம் ஞாபகம் இருக்காடி? ‘இனிமே நீதான் என்னை தேடி வரணும் வர்மா சார்’னு சொன்னியா… இதோ பாரு, உன் வர்மா சார் சென்னை வரைக்கும் உன்னைத் தேடி வந்து உன் பக்கத்துலேயே உட்கார்ந்திருக்கேன்டி! நீ கண் விழிக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன்,” என்று அவள் காதில் காதலாக முணுமுணுப்பான்.

சாருவின் கட்டிலுக்கும் சென்று, “சாரு பாப்பா… சீக்கிரம் எழுந்திரீங்க… நாம திரும்பவும் சிரசா மலைக்குப் போய் புதுசு புதுசா நெசவு கத்துக்கணும்ல?” என்று அவளிடமும் பேசுவான்.

நாட்கள் மெல்ல நகரத் தொடங்கின. ஒரு நாள்… இரண்டு நாள்… ஒரு வாரம் கடந்தது.

அருள் இரவும் பகலும் தூங்காமல், ராஷியின் கைகளைப் பிடித்தபடியே அவளது காதோரம் தன் காதல் கதைகளையும், சிரசா மலையின் பௌர்ணமி இரவுகளையும் சொல்லிக் கொண்டே இருந்தான். அவனது கண்களில் தூக்கமின்மையால் சிவப்பும் தவிப்பும் கூடியிருந்தது.

அன்று பௌர்ணமி இரவு…

மருத்துவமனை ஜன்னல் வழியே நிலவின் ஒளி மெல்ல ஐ.சி.யு அறைக்குள் ஊடுருவியது.

அருள் வழக்கம்போல ராஷியின் கைகளைப் பற்றியபடி, “ராஷி… இன்னைக்கு பௌர்ணமிடி… அன்னைக்கு சிரசு மலையில நாம ஒண்ணா பார்த்த அதே நிலா இன்னைக்கு இங்கேயும் பிரகாசிக்குது. ஆனா நீதான் கண்ணை மூடிகிட்டு இருக்க… பிடிவாதக்காரி, போதும்டி உன் விளையாட்டு, தயவுசெஞ்சு கண் விழிடி!” என்று கூறி, அவளது கைகளில் தன் கண்ணீரைச் சிந்தினான்.

காலம் இரக்கமில்லாமல் நகர்ந்தது. டெல்லியில் பெற்ற தேசிய விருதின் சந்தோஷமும், ராஷி- சாருவின் அந்த கொடூர அதிர்ச்சியும் அருளின் மனதை இன்னமும் பிழிந்தெடுத்துக் கொண்டுதான் இருந்தன.

“இல்லை… இவர்களை நான் இழக்க மாட்டேன்!” என்ற அருளின் ஒற்றை நம்பிக்கைதான் அவனை உயிரோடு வைத்திருந்தது.

மருத்துவர்கள், “அவங்களோட மூளை நரம்புகள் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு… இனி அவங்க கோமாவிலிருந்து மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம்,” என்று கைவிரித்துவிட்ட போதிலும் அருள் பின்வாங்கவில்லை.

அருளின் இடைவிடாத அன்பும், ஆழமான காதலும், இரவும் பகலும் அவனுள் எரிந்த விடியாத பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை. அந்த மூளைச் நரம்புகளின் மரத்துப் போன உணர்ச்சிகளை, அவனது காதல் குரல் தினமும் ஊடுருவிக்கொண்டே இருந்தது.

மருத்துவமனை வாசம், சாப்பாடற்ற நாட்கள், கலங்கிய கண்கள்… என அருள் தன் சுயநினைவை இழந்து, ராஷியின் நினைவாகவே அங்கேயே தவமிருந்தான்.

அன்றிரவு… மருத்துவமனையின் அமைதியான அந்த ஐ.சி.யு அறையை நிலவின் வெண்ணிற ஒளி மேலும் அழகாக நனைத்துக் கொண்டிருந்தது.

அருள் ராஷியின் விரல்களைத் தன் முகத்தோடு சேர்த்து அழுத்திப் பிடித்தபடி, அவள் காதோரம் மெதுவாகக் குனிந்தான். அவனது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரை வடித்தாலும், அவனது குரலில் அந்தக் காதலின் காவிய நினைவுகள் கசிந்து உருக்கமாய் வெளிவந்தன.

“டி ராஷி… உனக்கு ஞாபகம் இருக்காடி?” என்று தொடங்கும் போதே அவனது குரல் தழுதழுத்தது.

“அன்னைக்குச் சிரசா மலையில… யாருக்கும் தெரியாம நாம ரெண்டு பேரும் மட்டும் திருட்டுத்தனமா சந்திச்சோமே, அந்த இரவை உன்னால மறக்க முடியுமாடி? ஊரெல்லாம் தூங்கிட்டிருந்த அந்தப் பௌர்ணமி ராத்திரியில, அந்த மலையோட உச்சியில காத்து சடசடன்னு வீசும்போது, நிலா மட்டும் தான் நமக்கு மேலே சாட்சியா நின்னுட்டு இருந்துச்சு…”

அவன் தன் கண்ணீரைத் துடைக்கக்கூட நினைக்காமல், அவளது விரல்களில் முத்தமிட்டபடி தொடர்ந்தான்:

“அன்னைக்கு நிலவோட வெளிச்சத்துல உன்னோட முகத்தைப் பார்த்த கணத்துல, என் உலகமே உன்னோட கண்களுக்குள்ள அடங்கிப்போச்சுடி. பயத்துல நடுங்கின உன்னை நான் கட்டிப்பிடிச்சப்போ… நாம ரெண்டு பேரும் ரெண்டு உடலா இல்லாம, சர்ப்பம் போல ஒன்னோடு ஒன்னு பிண்ணிப் பிணைஞ்சு உறைஞ்சு போன தருணம்டி அது… என் உதடுகள் உன்னோட நெத்தியிலும், கன்னத்திலும், அப்புறம் உன்னோட ஈர உதடுகளிலும் ஆழமாப் பதிஞ்சப்போ, இந்த உலகத்துல நாம ரெண்டு பேரைத் தவிர வேற எதுவுமே இல்லைனு தோணுச்சு…”

அருள் தன் நெஞ்சில் கைவைத்து, விம்மியபடியே சொன்னான்:

“அந்த ஒற்றை இரவு தந்த நினைவுகள்தான்டி இத்தனை மாசமா என்னை உயிரோட வச்சுட்டிருக்கு! அந்த நிலவும், அந்த மலையும், நம்ம உடம்பை உரசிட்டு போன அந்த பனிக் காற்றும் இன்னமும் உனக்காகக் காத்துட்டிருக்குடி… அந்த இரவோட சுகத்தையும் காதலையும் எனக்கு திருப்பிக் கொடுக்க மாட்டியா ராஷி? பிடிவாதம் பண்ணாம ஒரே ஒரு தடவை கண் விழிடி… உன் அருளுக்காகக் கண் விழிடி…”

அவன் கண்ணீரோடு தன் காதலை அவளது மூச்சுக்காற்று படும் தூரத்தில் உருகி உருகிச் சொன்னான்…

இந்த இடைப்பட்ட நாளில் சாருக்கு முதலில் நினைவு வந்து விட்டது…

மூன்று மாதங்கள்…

அன்று காலையிலும் வழக்கம்போல…

ஜன்னல் வழியே அதிகாலைச் சூரியனின் முதல் கதிர்கள் அறைக்குள் மெல்ல எட்டிப்பார்த்தன.

அருள் ராஷியின் அருகிலேயே அமர்ந்து, அவளது கைகளைப் பற்றிக்கொண்டு, அவளது கைவிரல்களில் தன் முகத்தைப் புதைத்தபடி நின்றான். தூக்கமில்லாத அவனது கண்கள் சிவந்திருந்தன.

“டி ராஷி… உனக்கு இன்னும் எத்தனை நாள் தான் இந்த அடம்? எந்திரிடி… நாம நம்ம ஊருக்குப் போகணும்டி. நம்ம தறிக்கூடம் உனக்காகக் காத்துட்டு இருக்கு… சாருவோட கனவை நாம நிஜமாக்கணும்ல? ப்ளீஸ் டி… ஒரு தடவை என் முகத்தைப் பாரேன்…” என்று மெல்லிய குரலில் தவிப்போடு முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அருள்.

திடீரென…

அருள் தன் முகத்தைப் புதைத்திருந்த அவனது கைகளுக்குள், ராஷியின் மெல்லிய விரல்கள் லேசாக அசைந்தன!

அது அருளின் பிரமையோ அல்லது வெறும் உணர்ச்சியற்ற நரம்புத் துடிப்போ அல்ல… அவனது விரல்களை ராஷியின் சுண்டு விரல் மெதுவாக உரசியது!

அருள் அதிர்ச்சியோடு, நெஞ்சு படபடவென அடிக்கத் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

ராஷியின் மூடியிருந்த கண் இமைகள் லேசாக அதிர்ந்தன. அவளது கண்களின் ஓரத்திலிருந்து ஒரு சிறிய கண்ணீர்த்துளி மெல்ல வழிந்து, அவளது கன்னத்தைக் கடந்து படுக்கையில் இறங்கியது.

மானிட்டர் கருவியின் துடிப்பு வீதம் மெல்ல மாறத் தொடங்கியது!

“ராஷி…!” – அருளின் தொண்டையிலிருந்து வார்த்தைகள் உறைந்துபோய் வெளிவந்தன. அவன் தன் வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய அற்புதத்தை தன் கண்முன்னே பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்து நின்றான்.

வர்ணம் மிளிரும்…

error: Alert: Content selection is disabled!!