நட்சத்திரா 3 -1

பாஜியோலிருந்து கிட்டத்தட்ட அரைமணித்தியால காரோட்டம்தான் பாடோவா(Padova). மிலானில் உள்ள  நெருக்கடிமிக்க ஊர்களில் ஒன்று.  எப்பக்கம் திரும்பினாலும் உயர்ந்த கட்டிடங்கள், நெரிசலான வாகனப் போக்குவரத்து மற்றும்  சனத்திரளான தெருக்கள் என்ற சூழலில், இரு உயர்ந்த அடுக்குமாடித் தொடர்களுக்கு நடுவில் அடக்கமாக நின்றது, அந்த மென் நீல நிற இரு மாடிக்கட்டிடம்.

பொதுவாக உயர் கட்டிங்கள் பலவற்றின் கீழ்தளம் வர்த்தக, அலுவலகப் பயன்பாட்டில் தான் இருந்தன. அப்படியேதான் இங்கும். அக்கட்டிடத்தின்  கீழ்தளத்தில் ‘சிலோன் டேஸ்ட் ரெஸ்ட்டோரண்ட்’ இருந்தது. மேலே இருந்த இரு மாடிகளும் ‘சிலோன் இன்’, மிலானுக்குக்  குழுவாகவோ, பெரிய குடும்பங்களாகவோ  வருகிற உல்லாசப்பயணிகளின் முதல்தரத் தெரிவிலிருக்கும் குடியிருப்புகளாக இருந்தன. 

சரியாகக் காலை நான்கரை மணி. இருள் பிரியாத  அவ்வேளை, மின்விளக்குகள் ஒளியில் சோம்பலோடு நெட்டி முறித்துக்கொண்டிருந்தது.  சுறுசுறுப்பாக வந்து, சிலோன் டேஸ்ட் ரெஸ்ட்டோரண்டின் பக்கக் கதவைத் திறந்தார், சுமதி. கூடவே திலினி. இத்தாலி நாட்டுக் குடியுரிமை பெற்ற சிங்களப் பெண், அவள். பாஜியோவிலிருந்து திலினியின் காரில் தான் சுமதி வந்து போவார்.  அவர்கள் உள்ளே சென்ற அடுத்த சில நிமிடங்களில், இன்னும் இரு பெண்கள் வேகமாக உள்ளிட்டார்கள்.

 கடந்த மூன்று வருடங்களாக, இந்த உணவகத்தில் இயங்கும் காலையுணவுப் பகுதியின் பொறுப்பாளராக இருக்கிறார், சுமதி, கல்யாணியின் அன்னை. 

உணவகத்தின் சமையலறைக்குள் புகுந்த நால்வரும்   பம்பரம் போல் சுழறத் தொடங்கியிருந்தார்கள். 

“சுமதி அக்கா, உங்கட மகள் கொழும்பால வந்திட்டாவோ? நான் சொன்ன இடம் பத்திக் கதைச்சீங்களா?  அவா மாட்டன் எண்டா விடுறதா என்ன? இப்ப அவேக்கு விளங்காது அக்கா, வயசான காலங்களில தனிமை எண்டுறது பெருங் கொடுமை. எங்களுக்கு எண்டு ஒரு  துணை கட்டாயம்  வேணும்.” நீட்டி முழங்கினாள், கவிதா.

 லெவரியா அவித்துக்கொண்டிருந்தார்,சுமதி. வேலை அதுபாட்டில் நடந்துகொண்டிருந்தது. மனக்கண்ணிலோ, மகள் பயணத்தால் வந்திருந்த சோர்ந்துபோன தோற்றம்தான். மனசுக்குள் குடைந்தது. தான் இறந்ததாகவே இருந்திருக்க, தன் மகள், பிள்ளை குட்டி என்று மனம் போல் வாழ்ந்திருப்பாளே என்ற எண்ணத்தை அவரால் அழிக்க முடியவில்லை. 

“அக்கா… கேக்கேல்லையா என்ன?” கவிதாவிற்கு அவ்வளவு இலகுவில் விட்டு விடும் எண்ணமில்லை. கல்யாணியை வைத்தியசாலையில் கண்டுவிட்டு, இவளுக்குத் தெரிந்தவர்கள் என்று அறிந்ததும் திருமணத்துக்குக் கேட்டிருந்தார்கள். வலிய வருவதை விடுவதா என்றிருந்தது. அதோடு, சும்மா சும்மா கலியாணம் வேண்டாம் என்றால் எப்படியாம்? அதன் அர்த்தம் என்னவென்று அறிகிற ஆர்வமும் கூட!

 “இனித்தான் கதைக்கோணும் கவிதா.” மூன்றே வார்த்தைகளில் முடித்துக்கொண்டார், சுமதி. 

‘மனுசி கல்லுளிமங்கி! அவேட  நல்லதுக்குச் சொன்னாலும் காது குடுக்காட்டி நான் என்ன செய்யிறது?’  மனத்துள் சொன்னபடி அருகில் நின்றவளைப் பார்க்க, அவளோ முறைத்தாள். இதென்ன அநாகரிகம் என்றளவுக்கு நாகரீகமானவள், அவள்.

அதுவே,கதையை மாற்றும் பொருட்டு, “நேற்று முழுதும் சரியான நாரி வலி! சித்தாலெப்ப போட்டும் கேக்கேல்ல.” என்று ஆரம்பித்தாள். கவிதாவும் நாரி வலிக்கு நாலு பக்கங்களில் மருந்துகள், கை வைத்தியங்களை அள்ளி  விடத் தொடங்கிவிட்டாள். 

“ஊர்ல அம்மாட 60 வது பிறந்தநாள் செய்யப்போகினமாம் . இந்த மாதம்  கொஞ்சம் கூட  அனுப்போனும். ஓவர் டைம் எல்லாம் நான் செய்யத் தயார்!”  நாரி வலிக்காரிதான். அதற்கும் கதை சொன்னாள், கவிதா.  

இப்படி, தமிழ் ஆங்கிலம் இத்தாலியன் என்று கலந்து கட்டி, கதை பேச்சுகளுக்குக் குறைவிருக்கவில்லை. வேலையும் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.  கை நிறையக் கிடைக்கும் சம்பளம்,  இன்னபிற வசதி வாய்ப்புகள், சலுகைகள் தம் சொந்தத் தொழில் போலவே அவர்களை நடத்தவைக்கிறது.

அடுத்த மணித்தியாலம் கடந்திருக்க, உணவுகளின் கலவையான வாசம் அவ்விடமெல்லாம் கமழ்ந்தது.

அநேகமானவை இலங்கை, இந்திய காலை உணவுகள்தான். தோசை வகைகள் சுடச் சுடவே பரிமாறுவார்கள். எல்லாவற்றுக்கும் உரிய ஆயத்தங்களைச் செய்து வைத்தார்கள். அப்பமும் அப்படியே. மென்மையான இடியப்பம் , லெவரியா, மூங்கில் வாசத்தோடு  குழல் பிட்டு, கறி பணிஸ், முட்டை பண், இட்டலி,  பொங்கல், வடை, போலி என்று, ஒன்று ஒன்றாகத் தயாராக தயாராக,  முன்புறமிருந்த  கண்ணாடிப் பெட்டிகள் தம்மை நிரப்பிக்கொண்டன. 

ஏழு மணியில் இருந்து இணையவழி ஓடர்கள் பெறப்பட, சதுரப் பச்சை மின் விளக்கினுள் ஒளிர்ந்த  ‘Open’  போர்ட் வீதியைப் பார்க்கும் வண்ணம் திருப்பப்பட்டது.

‘டேக் அவேக்கு’  இரு இத்தாலிப் பெடியலும் ஒரு பெட்டையுமாக வந்து, உணவகத்தின் பெயரோடு இருந்த மேலங்கியை அணிந்துகொண்டு தயாராக நின்றார்கள். 

 ஏழே முக்கால் போல் நெடுநெடுவென்று உரமான தோற்றத்திலிருந்த டேமியன் உள்ளிட்டான். சட்டென்று அந்த இடமே சிறுத்துவிட்டது போலிருந்தது. தத்தம் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தாலும் எல்லோரிலும் ஒரு அவதானம் வந்துவிட்டது. இறுக்கமாக நிமிர்ந்து நின்று  காலை வணக்கம் சொன்னார்கள்.

 சிறு தலையசைப்பில் பதில் சொன்னவன், ஒரு வார்த்தை அநாவசியமாகக் கதைக்கமாட்டான். உணவுகளில், சமையல் அறையில் என்று லேசர் பார்வை மட்டுமே. சில நிமிடங்களில்  எப்போதும் எழும் திருப்தியோடு பின்புறமாக நடந்து அப்பார்ட்மெண்ட் செல்லும் படிகளில் கால் வைத்தவன், “தம்பி!” என்ற விளிப்பில் நின்று திரும்பினான்.

சுமதிதான். ஏன் அழைக்கிறார் என்ற அனுமானம் அவனுக்கு  இருந்தது. 

“சொல்லுங்கம்மா!” என்றானே, அது அவனுக்குமே புதிதுதான். அந்த ஒற்றைச் சொல்லில் ஒட்டிக்கிடந்த பரிவு கலந்த பாசம் அவனையும் அறியாதே வந்திருந்தது. அழைத்தால், நெற்றியேறி இறங்க, கேள்வியோடு பார்ப்பவனின் அந்த ஒற்றைச்சொல் உணர்த்தி நின்றதை சுமதியாலும் உணர முடிந்தது. 

அதையெல்லாம் கடந்து, தடித்த குரலில் ஒலித்த ‘அம்மா’ ஒரு கணம் அவரை இறுகப் பிடித்துக்கொண்டது. துண்டு துண்டாகச் சிதறி இறந்த அவர் மகன் இன்று இருந்திருக்க, இப்படித்தான் வாலிப வயதில் இருந்திருப்பான். கனத்த குரலில் ‘அம்மா’  என்று விளித்திருப்பான். சுமதியின் மனம் கண்டபடி கத்திக்கொண்டு அலைமோதியது. வெளிப்பார்வைக்கு மிகவுமே அமைதியாக நின்றார். 

அதற்குள் அவரருகில் வந்துவிட்டான் , டேமியன். 

“என்ன விசயம் அம்மா?”  என்றான், மீண்டும்.  திரும்பி வந்தவனை வியப்போடு பார்த்தார்,சுமதி. 

சில கணங்கள்தான், “அப்பம் சாப்பிடுறீங்களா? குடிக்க என்ன வேணும்?” தாயின் பரிவோடு கேட்டவரையே பார்த்தவன் நெஞ்சுக்குள் பிசைந்தது. அவர் பார்த்துக்கொண்டு நிக்கிறாரே. 

“கொஞ்ச முதல்தான்…வெளிக்கிட முதல் க்ரோசன்ட் சாப்பிட்டனான். ஒன்பது போல சாப்பிட வரவோ?” என்னவோ அவர் வீட்டில் சாப்பிடும் கணக்கில் கேட்டவனுக்கு, முறுவலோடு தலையசைத்துவிட்டுத் திரும்பிவிட்டார்,அவர்.

 அவனோ, அவரையே பார்த்து நின்றான். ஏதோவொரு உணர்வில் திரும்பினார், சுமதி. அதையுணர்ந்தவன்  பட்டென்று நகர்ந்து மாடியேறிவிட்டான். அவன் மனமோ, பிய்த்துக்கொண்டு  பின்னோக்கிப் பாய்ந்திட்டு.

தொலைபேசி அழைப்புகள் வந்தால், எப்போதும் ஸ்பீக்கரில் வைத்துத்தான் கிறிஸ்டினா கதைப்பார். ஏதோவொரு வேலையைச் செய்தபடி சுறுசுறுப்பாக இருப்பவரின்  வழக்கம் அது. அப்படித்தான் இரு நாட்களுக்கு முன்னரும், கொழும்பிலிருந்து அழைத்த தீபாவோடு கதைத்ததை, டேமியன் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. 

அதுவும் கல்யாணி இலங்கை போய் நிற்கும் கதை வந்ததில், தீபா, பேச்சோடு பேச்சாக வார்த்தையை விட்டுவிட, கிறிஸ்டினா தூண்டித் துருவியதில்தான் மிகுதியைச் சொல்லி இருந்தார்.

 “அவே பெரும் பாவம் கிறிஸ்டி. ஒருநாளும் தெரிஞ்சது போலக்  காட்டிக்கொள்ளாத!” என்று, பல தடவைகள் கேட்டும் இருந்தார்.   

சுமதி, அவன் உணவகத்துக்கு வேலைக்கென்றே இலங்கையில் இருந்து வந்தவர். அவர் மகளுக்குத் தாதி வேலை கிடைத்திருப்பதைச் சொல்லி, அவருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து, இருவரும் ‘லோங் டேர்ம் விசா’வில் மிலான் வந்ததிலிருந்து , இவர்கள் வீட்டில் தங்கும் வரை எல்லா ஆயத்தங்களும் தீபாதான் செய்திருந்தார். தனக்கு மிக வேண்டியவர்கள் என்றும் சொல்லியிருந்தார். இதுவரை அவர்கள் பற்றி அவ்வளவுதான் இவனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் தெரியும்.

சுமதியோடு வேலை சம்பந்தமாகச்  சில சமயங்கள் கதைத்திருப்பான். கல்யாணியோடு அதுவும் இல்லை.

அப்படியிருக்க, அவர்கள் வாழ்வின் இருண்ட பக்கம் பார்த்துப் பேயறைந்துதான் போனான். 

 

error: Alert: Content selection is disabled!!