நட்சத்திரா 3 -2

 

இறுதிப்போர், வன்னி நிலைமை, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்வதைகள், அதைத்தொடர்ந்து இழப்பும் வலியும் தாராளமான ஊனமுமான அகதிவாழ்வு அவலங்கள், கைதாகிச் சென்ற பெண்கள் ஆண்கள் வதைபடல் என்று, எல்லாமே இவன் மட்டில்  கேள்வி ஞானம் தான்.  உலகில் எத்தனை இடங்களில் இப்படி நடந்திருக்கு, நடந்துகொண்டிருக்கு!

 பெண், மண், மதம், இனம், கூடுதலாக சாதிவெறி என்பவற்றின் மீதான அதீத பற்றென்பது எல்லை கடக்கையில்,  இதுதான் நடக்கும் என்றளவில் மட்டுமே  இவன் புரிந்துணர்வு.  பொதுவானதுதான். இனத்தின், சமூகத்தின் விடுதலை என்பதையெல்லாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்  வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

இத்தகைய கொடூரங்கள் எங்கள் நாட்டில் என்றதில் சற்றே  கூடுதல் கவனம் பெற்ற செய்திகளாக இருந்தவற்றுக்கு, நேரடிச் சாட்சிகளாகச் சுமதியையும் கல்யாணியையும் கண்டவன் உச்சி மண்டையில் ஆணியிறக்கிய கணக்கில் வலியுணர்ந்தான். ஏன், கிறிஸ்டினாக்குக் கூட இலங்கை தெற்கில் நடந்த இனக்கலவர அனுபவங்கள் மட்டும் தான். இப்போது, நெருங்கிய சிநேகிதி தீபா சொல்ல சொல்ல உறைந்துபோனார்.

சுமதியின் பின்னால் இத்தனை உண்டா? நம்ப முடியவில்லை. அப்பழுக்கற்ற முழு நிலவு போல் குளிர்மையைக் கல்யாணியிடம் உணர்ந்திருக்கிறார். அதன் பின்னால் இத்தனை வேதனையா என்று கண்ணீரோடு கதை கேட்டார், கிறிஸ்டினா. 

அவர் மகனுமே, அடுத்துச் செய்ய வேண்டிய முக்கிய வேலையைக்கூட மறந்துவிட்டு அமர்ந்திருந்தான்.

இறுதிச் சண்டை நேரம், குண்டு வீழ்ந்து அந்த இடத்திலேயே சுமதியின் மகன் சிதறி மரணித்திருந்தான். கால்கள் இரண்டும் பிய்ந்து  சிதறியிருக்க, படுகாயமுற்ற கணவனைக் காப்பாற்ற அலறியடித்துக்கொண்டு சென்றார், சுமதி. 

பயத்தில் அழக் கூட முடியாது உறைந்து நின்றிருந்தாள், கல்யாணி. அவளைப் பிடித்து, பக்கத்து வீட்டுப் பெண்ணும் சிநேகிதியுமானவரிடம் ஒப்படைத்துவிட்டே ஓடியிருந்தார், சுமதி. அப்பெண்ணின் கணவரும் இறந்திருக்க, மகனோடு கல்யாணியையும் அழைத்துக்கொண்டு சரணடையச் சென்ற மக்கள் கூட்டத்தில் கலந்திருந்தார்.

காயமடைந்தோர் என்ற பரிதாபத்தில் இராணுவப் பகுதிக்குள் நுழைந்த சுமதி,  கணவனை வைத்தியசாலையில் சேர்த்து விடலாம், காப்பாற்றிவிடலாம் என்று பெரிதும் நம்பியிருக்க, அவரோ இறந்து போயிருந்தார்.  

அலறித் துடித்ததார். கணவன் உடலைத் தழுவிக் கிடந்து துடித்தவரைப் பிரித்தெடுத்த இராணுவம் தரதரவென்று இழுத்துத்தான் சென்றிருந்தார்கள். 

அவர் கணவனின் தடித்த மீசையும் திடகாத்திரமான தோற்றமும் ‘இயக்கமா?’ என்று, வினவ வைத்திருந்தது. இல்லையென்றதைச் செவிமடுக்கவேயில்லை.  

 சுமதிக்கு நாற்பத்தியைந்து வயது. இரு பிள்ளைகளின் அன்னை. மகன் கொடூரமாக மரணித்திருக்கிறான். மகள் இங்கு எங்கோ தான் இருக்கிறாள். அலறிக்கொண்டே அவர் சொன்ன தகவல்கள் இராணுவத்தரப்பில் பெரிதாக நம்பப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் கைதாகிப் போனார்,அவர். 

சில காலம் கடுமையான சிறை வாழ்வு. அவரது சுகயீனம் தான் அதிலிருந்து  வெளியே கொண்டு வந்தது. மருத்துவனையில் வைத்துத்தான், சமூக ஆர்வலரும் மனநல வைத்தியருமான தீபாவின் பார்வையில் பட்டார், சுமதி. அரசியல், பதவி, பணம் என்று எல்லாம் சேர்ந்த, கொழும்பைப் பூர்வீகமாகக்கொண்ட குடும்பமொன்றைச் சேர்ந்தவர், தீபா. போர்க்காலத்தில் சேவை செய்யவென்று வவுனியாவில் வந்து தங்கி நின்ற வேளையது. 

சுமதியை மட்டுமல்லாது நிறையப் பெண்களுக்கு மருத்துவம் மட்டுமல்ல, உடல் குணமாகிய பின்னும்  சித்தம் குலைந்து நின்றவர்களை அதற்குரிய இடங்களில் சேர்த்துச்  சாதாரண வாழ்வுக்கு இழுத்து வருவதில் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டிருந்தார், தீபா.

அப்படி, அவர் கவனிப்பில் இருந்த சுமதி, வழமைக்குத் திரும்ப நீண்ட காலமாகிற்று. சுயத்துக்கு வந்தவர் மகளைத் தேடத் தொடங்கினார்.   எங்கெங்கோ தேடி, இறுதியில்,அவள் பற்றிய தகவல்  கிடைத்திருந்தது. சந்தித்தார். தாயின் கதையைக்  கேட்டவள் அவரோடே இருந்துவிட்டாள்.

சில வருடங்களுக்குப் பின்னரே அவள் காதல் விடயம் சுமதிக்குத் தெரிய வந்தது. அந்த நேரம்  சூர்யா உதயாவோடு இணைந்திருந்தான். இன்றுவரை, இன்னொரு வாழ்வுக்குத் தயாராகாது  தாய் மட்டுமே போதும் என்று இருக்கிறாளாம். 

வந்த வேலைகளைப் பார்த்தான், டேமியன். மனத்தில் சுமதி, கல்யாணி பற்றிய எண்ணங்கள்தான்  ஓடிக்கொண்டிருந்தன.  தன்னதெல்லாம் துன்பமா என்ன என்று எண்ணவும்  வைத்தன. 

ஒன்பதரை போல் கைகால் கழுவிக்கொண்டு சென்றபோது அங்கிருந்த மேசையொன்றில் கல்யாணி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இன்று மதியம் ஒரு  மணியில் இருந்துதான் வேலை. பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டவள், அப்படியே இங்கு வந்துவிட்டாள். 

அப்பப்போ நேரம் கிடைக்கையில் வந்து தாய்க்கு உதவுவது அவள் வழக்கம் தான். என்றாலும் கறாராக மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று பணம் செலுத்திவிடுவான், டேமியன். 

இன்று, அவளுக்கு வேலை எதுவும் செய்ய மனம் வரவில்லை. காலை பத்தரைக்குப் பிறகு, எல்லாம் சுத்தப்படுத்தி ஒதுக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலை மூன்று மணிபோல்தான் சுமதி திரும்பவும் வருவார். அவரைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு அப்படியே வைத்தியசாலைக்குப் போகலாம் என்று எண்ணி அமர்ந்திருந்தவள், “சுமதிம்மா, ஒரு பால் அப்பம் இன்னொண்டு கட்டச் சம்பலோட” என்றபடி  எதிர்மேசையில் வந்தமர்ந்தவனைக் கண்ட வேகத்தில் எழுந்துவிட்டாள். 

இவன் எப்போ எப்படி வள்ளென்று பாய்வான் என்று ஒருவருக்கும் தெரிவதில்லை. இதில் இருந்து வம்பை விலைக்கு வாங்குவான் ஏன் என்ற எண்ணத்தில் உள்ளே நகர்ந்தவள், ‘அம்மாவாமே! புதுசா இருக்கே மிஸ்டர் டேமியன். நாங்க இந்த சிலோன் டேஸ்ட்ட எழுதி வாங்கிட்டம் எண்டா  பரவாயில்லயோ!’ அவன் இதுவரை கதைபேச்சு இல்லாது ஒதுங்கி விடுவானே. அதுவே, நக்கலாக எண்ண வைத்திட்டு.

அவளையும் மீறியே உதடுகள் சுழித்துக்கொண்டாள். உள்ளே செல்ல நடந்தவள், “பிள்ளைகள விட்டுட்டீங்களா?”என்று அவன் கேட்கத் திரும்பிப் பார்த்தாள். அவளிடம் தான் கேட்கிறான். 

சட்டென்று நேரத்தைப் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தாள். இத்தறிக்குப் பாடசாலைகள் தொடங்கி இருக்குமே! இப்ப வந்து கேட்கிறார்.  

அவளையே பார்த்திருந்தவன், “தேங்க் யூ!”  அவள் முகத்தை நேராகப் பார்த்துச் சிறு சிரிப்போடு சொன்னான்.

தலையாட்டலோடு வேகமாக உள்ளே சென்றவள், “இண்டைக்கு இடி முழக்கத்தோட மழை வரப்போகுது.” முணுமுணுக்க, “ச்சே ச்சே. வெளியில என்னமா வெயில் அடிக்குது. என்ன நீங்க?” என்றாள், கவிதா.

கல்யாணிக்குப் பக்கென்று சிரிக்க வேண்டும் போலிருந்தது. சிரிக்கவில்லை. பிறகு டேமியன் வந்து ஒரு பார்வை பார்த்தால் என்ற எண்ணம். பார்வை, பேச்சு உடல்மொழி அனைத்திலும் இறுக்கத்தையும் ‘நான்’ என்ற அகங்காரத்தையும் அதையும் கடந்து ‘இங்கு நான் முதலாளி’ என்று சொல்லாமல் சொல்லும் வகையில் நடப்பவன், வீட்டிலும்  நான்தான் எல்லாம் என்றுதான் நடப்பான். அருகே சென்று நொந்து வருவானேன் என்று கவனமாகப்பார்த்து எட்டவே நின்றுவிடுவாள், இவள். 

error: Alert: Content selection is disabled!!