நட்சத்திரா 4 – 2

 

அவன் சம்பளம் தருபவன். என்னதான் கிறிஸ்டினா நட்பாகப் பழகினாலும், பிள்ளைகள் மூவரும் பாரபட்சமின்றி அன்போடு பழகினாலும் தாயும் மகளும் இந்த எண்ணத்திலிருந்து  துளி விலகாதுதான் நடந்துகொள்வார்கள். 

அப்படியிருக்க, இப்படித் திடீரென்று அவன் நட்போடு கரிசனையாக நெருங்குவதை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. இருந்தபோதும் படக்கென்று எழுந்து நிற்க முயன்றாள். 

“பச்! எழும்ப வேணாம், இருங்க.” என்றபடி அருகண்மையில் வந்து நின்று ஆராய்ந்தவன், அங்கு வந்த தாதியிடமும்  கதைத்தான். வலது கால் பாதம் நன்றாகவே வீங்கிப் போயிருந்தாலும், முழுதாக அமர்ந்திருந்தவளைப் பார்த்த பின்னரே அவனுள் இருந்த பதற்றம் வடிந்திருந்தது. 

“பிரசர் வேற சரியான லோ. அதிர்ச்சியிலும்  வந்திருக்கலாம். எண்டாலும்  இனிக் கவனமாக இருங்க.” என்றுவிட்டு,  கணுக்கால் சவ்வு கிழிந்துள்ளதாகச் சொன்ன  தாதி,  “ உன் நல்ல நேரம் மெல்லிய கிழிவுதான்.” என்றுவிட்டு, “ ஊருக்குப் போய்ட்டு வந்த வேகத்தில் லீவு  எடுத்திட்டாய் கல்யாணி” என்று, பகிடியாகச் சொன்னாள்.

 “ரெண்டு கிழமைதான் உனக்கு, அதுக்குள்ள  குடுகுடுவெண்டு ஓடி வந்திரு.” என்று சொல்லிவிட்டு நகர,  நொண்டிக்கொண்டு எழுந்து நின்று, ஊபரில் போகிறேன் என்று நின்றவளை, வற்புறுத்தித்தான்  கைத்தாங்கலாக நடத்திச் சென்று தன் காரில் ஏற்றினான், டேமியன்.

“பள்ளிக்கூடம் விடுற நேரம் வருதே, பிள்ளைகளக் கூப்பிட வேணாமா?” மெல்லக் கேட்டாள்.

“இப்பிடியே பிக்கப் பண்ணிட்டுப் போகலாம். வடிவாச்  சாஞ்சு  காலை நீட்டி  இருங்க கல்யாணி!” என்றுவிட்டுக் காரைக் கிளப்பினான், அவன்.

“உங்கட கார் கராஜிலதான் விட்டிருக்கு. தெரிந்த கராஜ் தான். பிறகு போய்ப்  பாக்கலாம் . இன்சூரன்ஸ் என்ன மாதிரி?”  என்று கதைத்தவனுக்கு  , வேறு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. 

அவளோ, இதுவெல்லாம் கனவோ என்று இருந்தாள் . விபத்து எப்படி நேர்ந்தது என்பதே விளங்கவில்லை என்றால், காலையில் ‘தேங்க்யூ’ சொன்னவன், இப்படி, வரிசையாக ‘தேங்க்யூ’ சொல்ல வைத்துவிட்டானே என்றிருந்தது.

பதற்றமும் சோர்வும் விலகாதிருந்தவள்,  கண்களை மூடிச் சாய்ந்ததுதான் தெரியும்.

 பாடசாலை விட்டுச் சில நிமிடங்களாகியிருந்தது. பிள்ளைகள் மூவரும் வாயிலருகில் காத்து நின்றிருந்தார்கள். டேமியன் காரைக் கண்டதும் மலர்வோடு ஏற வந்தவர்கள் அங்கிருந்த கல்யாணியைப் பார்த்துவிட்டுத் தம்முள் பார்த்துக்கொண்டார்கள். அதுவும் உறங்கிக் கொண்டிருந்தாளா?

என்ன ஏதென்று விசாரிக்க முயன்றவர்களை வாயில் விரல் வைத்துச் சத்தம் செய்யாதீர்கள் என்றான், டேமியன். தலையாட்டிக்கொண்டே மெதுவாகப்  பின்புறமாக ஏறிக்கொண்டவர்கள், சைகையாலும் கிசுகிசுவென்றும் என்ன நடந்தது என்று கேட்க, பதில் சொன்னவாறே வீடு நோக்கிச் சென்றான்.

ஆட்டோமேட்டிக் கேட் லொக் மூலம் உயர்ந்து நின்ற இரும்பு கேட் இரண்டும் வாய் திறக்க, வழுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த கார், எப்போதும் போல் பெரிய  வீட்டின் முன்னே நிற்காது வளைந்து சென்றது. சுமதியும் கல்யாணியும் வசிக்கும் வீட்டின் அருகில் காரை நிறுத்தினான், டேமியன்.

அப்போதும் கல்யாணி உறக்கத்தில்தான். பிள்ளைகள் மூவரும் சத்தமிடாது இறங்கி வீட்டை நோக்கி ஓடினார்கள்.

திரும்பி அவளைப் பார்த்தான், டேமியன். தட்டி எழுப்ப நகர்ந்த கரத்தைத் தளைத்துவிட்டு மெல்ல இறங்கி மெதுவாகக் கதவைச் சாத்தினான். டிக்கியில் மடித்து வைத்திருந்த வோக்கிங் ஸ்டிக்கை நீட்டி எடுத்துக்கொண்டு கல்யாணியின் புறமாக வந்து கதவைத் திறந்தவன்,  அசந்து உறங்குபவளை எழுப்புவதா இல்லையா என்ற சிறு தடுமாற்றத்தில் இருக்க, சட்டென்று இதமாக வந்து தழுவிய காற்றில் மெல்லக் கண்விழித்தாள், கல்யாணி.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், தன்னையே பார்த்து நிற்கும் டேமியனையும் சுற்றத்தையும் பார்த்துவிட்டு, “ஓ தூங்கிட்டன், சொறி!” பட்டென்று இறங்க எத்தனித்தாள். வலக்காலை கீழே வைத்துவிட்டு உன்னி எழ முயன்றவள் தடுமாறப் பிடித்துக்கொண்டான், டேமியன். 

“மெல்ல பாத்து, அந்தக் கால இப்பிடி  ஊண்ட வேணாம்.” அவளின் மேல் கையில் பிடித்து நிறுத்திய வேகத்தில்  இறங்கி நிற்க உதவியவன் , அவள் இடக்கையில் ஸ்டிக்கைக் கொடுத்தான்.

அவன் பிடியிலிருந்து விலகி நடக்க விரும்பினாலும் பாரமாகத் தெரிந்த கால், அதில் இன்னும் இருந்த வலி அவளைப் பயப்படுத்தியது. இரு கிழமைகளில் சுகம் வருவதற்குப் பதில் காலையூன்றி இன்னமும் கெடுத்துக்கொள்வானேன் என்ற உணர்வே அவன் கைத்தாங்கலில்  வீட்டினுள் உள்ளிட வைத்தது.

ஏதோ அரவம் கேட்டுச் சமையலறைக்குள் இருந்து வந்த சுமதி, இருவரையும் பார்த்துத் திகைத்துப் போனார். அதுவும் மகள் நொண்டிக்கொண்டு …

பதைபதைக்க, “ என்னம்மா நடந்தது, அடிபட்டிட்டியோ?”  அவர்களை நோக்கி விரைந்தார்.

error: Alert: Content selection is disabled!!