மாதொரு பாகம் கொண்டான் 23 – 2

“அது சரி, என்னத்துக்கு நித்திலனிட்ட சாவச்சேரிக்குப் போறம் எண்டு பொய் சொன்னீங்கள்? நூல் விட்டுப் பார்க்கிறீங்களோ, அப்பிடிப் போறதெண்டா பிள்ளை என்ன சொல்லுவான் எண்டு அறிய!” ஆழ்ந்த குரலில் கேட்க அவள் தடுமாறினாள்.

“அப்பிடிப் போற எண்டா நிலன்ர எதிர்வினை என்னமாதிரி இருக்கும் எண்டு இப்ப தெரிஞ்சிட்டுத்தானே? இனி அதைக் கனவிலையும் நினைச்சுப் பார்க்காதேங்கோ.” என்றவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல அவளுக்குக் கோபம் வந்து விட்டது.

“நீங்க கதைக்கிறதில கொஞ்சம் எண்டாலும் நியாயம் இருக்கா எண்டு சொல்லுங்கோ பார்ப்பம். அவன் என்ர பிள்ளை. அவனை என்ர இஷ்டத்துக்கு எங்க வளர்க்கோணும் எண்டு முடிவெடுக்கிற உரிமை எனக்கில்லையோ? பெத்த அம்மாவை வேண்டாம் எண்டு சொல்ல வைக்கிற அளவுக்கு அவனை ஆக்கி வச்சிருக்கிறீங்கள்! இதே மயூவோ மகியோ உங்களைப் பார்த்து இப்பிடி சொன்னா உங்களுக்கு எப்பிடி இருக்கும்? எனக்கும் அப்பிடித்தானே?”

தன் பொருள் மேல் தனக்கு உரிமையில்லை என்ற நிலையில் வரும் ஒரு வகையான ஆவேசத்தோடு அவன் மேல் குற்றம் சுமத்தினாள் அவள்.

இங்கே ஆதித்யன் நிதானித்தான். சக மனிதனாக அவள் மனநிலையைப் புரிந்து கொண்டவன், தன் கோபத்தை அறவே தள்ளி வைத்து அவளிடத்தில் நின்று யோசித்து பொறுமையாக அணுகினான்.

“சாதனா! முதல்ல நீங்க ஒண்டை விளங்கிக் கொள்ளுங்கோ. நிலனுக்கு நீங்க அம்மா. அவருக்கு உங்களில பாசமில்லாமதான் இப்ப கொஞ்சம் முதல் நீங்கள் அழுததைப் பார்த்திட்டு அழுது கொண்டு எனக்கு கோல் அடிச்சவரா? கோபத்தில கண்டதையும் யோசிக்காம தேவையானதை மட்டும் யோசியுங்கோ!”

ராமனுக்கு விரைந்த ஆறுதல் கிட்ட, ‘கண்டேன் சீதையை!’ என்று சொன்ன அனுமானின் உத்தியைக் கையாண்டவன், அதை நினைத்துப் பார்த்து அவள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும்தான் மேலே பேசினான்.

“அதேமாதிரி இதையும் யோசியுங்கோ, சாதனா! நிலன் உங்கட பிள்ளை. அவரை என்னட்ட இவ்வளவு ஒட்டா பழக விட்டது ஆர்? நீங்க தானே!

எனக்குத் தெரிஞ்சு எங்களை மாதிரி வேற ஒருத்தரோடையும் அவரை நீங்க சேர விட்டதில்லை. அப்பிடியிருக்கேக்க இஞ்சயும் நீங்க அனுமதிக்காம எங்களால ஒண்டும் செஞ்சிருக்கேலாதெண்டுறது உண்மையோ? இல்லையோ?” என்றவன் கேள்விக்குப் பதிலின்றி அவள் முகம் கசங்கியது.

அதைப் பார்த்தவன், “உங்களில பிழை சொல்ல இதைச் சொல்லேல. ஆரம்பத்தில அவரிட்ட சில முரட்டு சுபாவங்கள் இருந்ததை நானும் பார்த்திருக்கிறன். அதெல்லாம் எங்களோட பழகப் பழகத்தான் குறையுதெண்டு நீங்களும் அம்மாட்ட சொல்லியிருக்கிறீங்கள் போல. அதுக்காகத்தான் நிலன் எங்களோடயும் நாங்கள் நிலனோடயும் கனக்க உரிமையெடுக்கேக்க ஒண்டும் சொல்லாம நீங்க அமைதியா இருந்திருக்கிறீங்கள்! அதில பிழையெண்டு இல்லை. சொல்லப்போனா பிள்ளை நல்லபடியா வளரோணும் எண்டு உங்கட கொள்கையை மீறி நீங்க எடுத்த முயற்சியை பாராட்டவே செய்வன் நான்.

ஆனா… இப்ப நீங்க செய்யிறது கதைக்கிறது எல்லாம் பச்சைப் பிழையான விஷயம்.

உங்களுக்குத் தேவை எண்டுற நேரத்தில எல்லாத்துக்கும் அனுமதிச்சு அமைதியா இருந்து போட்டு, இப்ப எங்களால ஒராக்களை விட்டு ஒராக்கள் இருக்கேலாது எண்டு நிக்கேக்க ஒரேயடியா அறுத்துக் கொண்டு போறன் எண்டு நிற்கிறது சரியோ? அப்பிடி செய்தா பிள்ளையளின்ர மனநிலை எப்பிடி மாறும் எண்டு யோசிச்சிங்களா? எல்லாரையும் விட நிலன்ர நிலைமை?

அண்டைக்கு கல்யாணத்தைப் பற்றிக் கதைக்கேக்கயே உங்களிட்ட என்ன சொன்னனான்? நான் கேட்டதை இப்ப நீங்கள் இருக்கிற நிலைமையோட தொடர்புபடுத்த வேண்டாம், உங்கட முடிவு என்னெண்டாலும் நீங்க இதே நிலையில எங்களோட தொடரலாம் எண்டு தெளிவாத்தானே சொன்னனான்? பிறகும் ஏன் இப்பிடி பிடிவாதமா நிக்கிறீங்கள்? எல்லா நேரமும் எமோஷ்னலா முடிவெடுக்க கூடாது. பிரக்டிகலாவும் யோசிக்கோணும். கல்யாணத்துக்குக் கேட்ட விஷயத்திலயும்தான் சொல்லுறன், கொஞ்சம் நிதர்சனத்தை யோசிச்சு வேளைக்கு எண்டு முடிவை சொல்லுங்கோ. பிள்ளையள் ஸ்கூலுக்குப் போக நாள் கணக்குத்தான் கிடக்கு.” என்றவன்,

“சொறி… அதைப் பற்றி ஃபோர்ஸ் பண்ணிக் கதைக்கக் கூடாதெண்டு நினைச்சனான். செயல்படுத்தேலாமப் போயிட்டு!” என்றவன் தலை கவிழ்ந்து இருந்தவளிடம் அதற்கு மேல் எதையும் பேசாமல், படுக்கையறைக்குள் சென்று மறைந்தான்.

தானாகவே மூலையில் இருந்த பாயை எடுத்து நித்திலன் அருகே விரித்து தலையணையை எடுத்துப் போட்டவன், வெளியே வந்து அவளுக்கு எழுந்து கொள்ளக் கையை நீட்டி விட்டுப் பின் வேண்டாம் என்று பின்னிழுத்துக் கொண்டான்.

அது அவள் கருத்தில் பதிந்தாலும் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

ஆதித்யன் ஒரு பிளாஸ்டிக் கதிரையை எடுத்து வந்து அதை அசையாமல் விசை கொடுத்துப் பிடித்துக் கொண்டவன், “இந்தக் காலுக்கு அழுத்தம் குடுக்க வேண்டாம். கதிரையைப் பிடிச்சு மெதுவா எழும்பிட்டு, சுவரைப் பிடிச்சுக் கொண்டு கெந்திக் கொண்டு மெதுவா போய்ப் படுங்கோ. நாளைக்கு நான் வந்து நிலனைக் கூட்டிக் கொண்டு போறன். நீங்க ஆரையும் பிடிச்சு ஹொஸ்பிடல் போய்ப் பாருங்கோ.” என்று ஒப்பித்தான்.

அவளை அவனே அழைத்துச் செல்வதில் அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவள் அதற்கு ஒத்து வரமாட்டாளே என்றுதான் விலகிக் கொண்டான்.

சாதனா அவன் சொன்ன எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு தலையசைப்பைக் கொடுத்தவள், மெல்ல எழுந்து அவன் சொன்னது போல் படுக்கையறையில் புகுந்து கொண்டாள். பண்டேஜ் சுற்றியிருந்தது காலில் பெரிதான வலியை உணரவிடவில்லை.

அவள் படுத்ததை வெளி விறாந்தையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன், உள்ளே சென்று மூலையில் இருந்த நாற்காலியில் இருந்த இன்னொரு தலையணையை எடுத்துக் கால்மாட்டில் போட்டான்.

“காலை உயரமா வச்சுக் கொண்டு படுங்கோ.” என்று சொல்ல, இப்போது எந்தத் தவறான எண்ணமும் அவன் மேல் இல்லை என்றாலும் அவன் பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள நிறையவே சங்கோஜப்பட்டுப் போனாள்.

அந்த சங்கோஜத்தின் நடுவிலும் ‘இது போன்று ஒரு அக்கறையான செயலைக் கூடக் கணவனிடம் இருந்து அனுபவித்திராத இல்வாழ்க்கையை வெறும் மூன்றே வருடம் வாழ்ந்து இறந்து போகவா இந்த ஜென்மத்தை எனக்கு எழுதினாய், இறைவா!’ என்று ஒரு மெல்லிய வேதனை கலந்த ஏக்கம் அவளுள் எழாமல் இல்லை.

வாழ்க்கைத் துணை என்ற ஒரு உறவு சரியாக இருந்திருந்தால் இன்று அவள் அனுபவிக்கும் எந்த வேதனைக்கும் வழியே இருந்திருக்காதே!

கழிவிரக்கத்தில் அவள் கண்கள் உப்பு நீரை சுரக்க ஆயத்தமாக அதை அவனுக்குக் காட்டி விடாதபடி இமையின் துணை கொண்டு மூடிக் கொண்டாள்.

ஆதித்யனும் அதற்கு மேல் அங்கே தாமதிக்க சரிவராது என்று,

“கால் கவனம் சாதனா. கதவை வெளில பூட்டிட்டுத் திறப்பை நான் கொண்டு போறேன். இன்னொரு திறப்புக் கிடக்குத்தானே, தேவையெண்டா அதை யூஸ் பண்ணுங்கோ. நான் போட்டு விடிய வாறன்.” என்று விட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான்.

கண் மூடிப் படுத்திருந்தவள் காதுகளில் தேயும் அவன் காலடி ஓசைகளும் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பூட்டுப் பூட்டிக் கொள்ளும் சத்தங்களும் விழுந்தன.

இதுவரை தங்களுக்காக ஓங்கி ஒலித்த அக்கறைக் குரல் இன்றி, இல்லத்தோடு சேர்த்து அவள் உள்ளமும் ஒருவித வெறுமையால் நிரப்பப்பட்டது போலிருந்தது.

அந்த வெறுமையை இட்டு நிரப்ப அவள் அனுமதியே இன்றி மனம் அவனைப் பற்றிய நினைவுகளை அடுக்கடுக்காக கிளறி விட்டுக்கொண்டே இருந்தது.

இன்றைய நாளையே மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது!

விழுந்து அடிபட்டாலும் கடும் காய்ச்சல் கண்டு கிடந்தாலும் என் மகனை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியை மறந்து ஓடும் அவள், இன்று காலில் பட்ட சிறு அடிக்கு அரை மணித்தியாலங்களுக்கு மேல் அசையாமல் இருந்திருக்கிறாள்!

அவளுக்காக ஒருவன் மருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறான்! படுக்கை விரித்து விட்டிருக்கிறான்! அக்கறையோடு காலுக்கு அணைவாகத் தலையணை போட்டு விட்டிருக்கிறான்!

செயல்கள் சின்னதுதான். ஆனால் முடியாத காலத்தில் துணைக்குக் கொடுக்கும் இது போன்ற சின்னச் சின்ன இளைப்பாறுதல்கள்தானே திருமண வாழ்வுக்கு அர்த்தமும் அழகும்.

‘அதை உணர்த்தவென்றே என்னை விழ வைத்து, விழிக்க வைக்க முயல்கிறதா காலம்?’

இப்படியாக எழுதிய பக்கங்கள் கிழிக்கப்பட்டு எஞ்சிய வெற்றுக் காகிதக் கட்டாக இருந்த அவள் மனதில் தன் அக்கறையால் இரண்டாம் திருமணம் பற்றிய முதல் சலனத்தை அழகிய ஓவியமாகத் தீட்டியிருந்தான் ஆதித்யன்.

இங்கே வயதின் கிளர்ச்சிகளும் இல்லை. வரம்பு மீறும் இச்சைகளும் இல்லை. பண்பட்டு பக்குவப்பட்ட இருவர் ஆன்மாக்களுக்கு ஆத்மார்த்தமான துணை வேண்டும். பொறுப்புகளை சுமைகளைப் பகிர்ந்து கொள்ள சக தோள் வேண்டும். உள்ளத்து உணர்வுகளை ஒளிவின்றி சொல்ல ஒரு உன்னத நட்பு வேண்டும்.

இவையெல்லாம் போகத்தான் மற்ற எதுவாகினும்! அவற்றை ஆகாதென்று சொல்ல இயற்கைக்கே கூடத் தகுதியில்லை! உணர்வுகளின் ஆக்க தேவதையே அந்த இயற்கைதானே!

எனில் இன்னுமா இந்த உறவின் பரிசுத்தத்தை நிறுவ ஆதாரங்களும் ஆராய்ச்சிகளும் தேவைப்படுகிறது இவளுக்கு?

error: Alert: Content selection is disabled!!