காதல் நெய்த வர்ணம் 23 – 1

வர்ணம் 23:

நாட்கள் இதோ மின்னல் வேகத்தில் ஓடியது…சாருவுக்கு அவளது சொந்தத்திலேயே ஒரு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தன் வாழ்வின் மிக முக்கியமான அந்த விசேஷத்திற்கு, தங்களை உயிரோடு வாழவைத்த அருளை அழைக்காமல் இருக்க அவளது குடும்பத்தினரால் முடியவில்லை. அழைப்பிதழோடு நேரில் வந்த சாருவின் பெற்றோர், அருளையும் அவனது குடும்பத்தையும் கட்டாயப்படுத்தி அழைத்தனர்.

சிரசாமலையின் குளுமையான காற்றும், பச்சைப் பசேலென்ற மலைகளின் பின்னணியும் அருளின் மனதில் இருந்த கொந்தளிப்பைக் குறைக்கவில்லை. சாருவின் திருமணத்திற்காக அவன் சென்னைக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால், அந்தப் பயணத்திற்குப் பின்னால் தங்கையின் திருமண மகிழ்ச்சியைத் தாண்டி, நெஞ்சைக் கூர்மையாக்கும் மற்றொரு ஏக்கமும் ஒளிந்திருந்தது.
அவனின் காதலி.

சாருவின் நெருங்கிய தோழியான தன்னவள் இந்தத் திருமணத்திற்கு நிச்சயமாக வருவாள் என்பது அருளுக்குத் தெரியும். பிரிவின் வடுவும், காதலின் கனமும் அவனைக் கடந்த சில காலமாகவே தவிப்பில் ஆழ்த்தியிருந்தன. அவளது முகத்தைப் பார்த்துப் பல மாதங்களாகிவிட்ட நிலையில், மீண்டும் அவளைக் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே அருளின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.

பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் வழியில், சிரசாமலையின் வளைவுப் பாதைகளில் வாகனம் இறங்க இறங்க, அருளின் நினைவுகள் சென்னையை நோக்கி விரைந்தன.

“அவள் எப்படி இருக்கிறாள்? என்னைப் பார்த்ததும் என்ன சொல்வாள்? அந்தச் கூட்டத்தில் அவள் கண்கள் என்னைத்தான் தேடுமா?” போன்ற ஆயிரம் கேள்விகள் அவன் மனதை முற்றுகையிட்டன.

தங்கைக்குத் தன் சொந்தக் கையால் நெய்த பட்டுப்புடவையை பத்திரமாக எடுத்து வைத்தபடியே, காதலியைப் பார்க்கப் போகும் அந்த நொடிக்காக அவன் ஆவலோடு காத்திருந்தான்.

அன்று மாலை சாருவின் அறைக்குச் சென்ற அருள், கதவை மெல்லத் தட்டினான். மணப்பெண் அலங்காரத்தின் சோபையோடு, கையில் மருதாணி மணக்கத் திரும்பிப் பார்த்தாள் சாரு.

“அண்ணே…” என்று ஓடிவந்த அவளிடம், அந்தப் பெட்டியைக் நீட்டினான்.

“என்னண்ணே இது?” என்றபடி ஆவலுடன் பெட்டியைத் திறந்தாள் சாரு.

அங்கே விரிந்தது ஒரு அற்புதம். வேறு எங்கும் பார்க்க முடியாத தனித்துவமான வண்ணக் கலவையில், தங்கச் சரிகை மிளிர அந்தப் பட்டுப்புடவை மின்னியது. அதன் மென்மையும், அதில் வீசிய புதிய பட்டின் வாசனையும் அருளின் உழைப்பையும், அன்பையும் உரக்கச் சொன்னது.

“இது சாதாரணப் புடவை இல்ல சாரு. நீ என்னை ‘அண்ணே’னு கூப்பிட்ட ஒவ்வொரு கணத்தையும் மனசுல வச்சு, என் சொந்தக் கையால நெய்தது. நாளைக்கு என் தங்கை அக்னி சாட்சியா அடி எடுத்து வைக்கும் போது, என் அன்பு உன்னைச் சுத்தி கவசமா இருக்கணும்,” என்ற அருளின் குரல் தழுதழுத்தது.

சாருவின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பட்டின் மீது சிந்தாமல் கன்னத்தில் வழிந்தோடின. வார்த்தைகள் வரமால் அருளின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“எனக்கு தாய் மாமன் சீர் இல்லண்ணே… ஆனா, உலகத்துல எந்த தங்கச்சிக்கும் கிடைக்காத தாய்மை கலந்த அண்ணனோட அன்பு கிடைச்சிருக்கு,” என்று அருளின் தோளில் சாய்ந்து விம்மினாள்.

அவள் தலையை மெல்லக் கோதி, கண்ணீரைத் துடைத்து விட்ட அருள், “சிரிக்கணும் சாரு… நாளைக்கு என் தங்கை மகாராணி மாதிரி பிரகாசிக்கணும்,” என்றான்.

அந்த மாலைப் பொழுதில், உடன்பிறவா பந்தத்தின் தூய்மையான அன்பிற்குச் சான்றாக அந்தப் பட்டுப்புடவை இருவரின் பாசத்தையும் சுமந்து மிளிர்ந்தது.

மறுநாள் திருமண நாளன்று, மண்டபமே கோலாகலமாகக் காட்சி அளித்தது.

அருளின் பார்வைகள் மண்டபத்தின் ஒவ்வொரு மூலையிலும் தன்னவளை தேடி அலைந்தன. சற்று நேரத்தில், சாருவின் அருகே புடவையில் தேவதையென வந்த ராஷியைப் பார்த்ததும் அருளின் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்று மீண்டது.

கோமாவிற்குப் பிறகு, இத்தனை அருகில் அவள்… உடல் மெலிந்து, சற்றே சோர்ந்திருந்தாலும், அவளது கண்கள் அந்த மண்டபத்தில் அருளின் முகத்தைத்தான் தேடிக் கொண்டிருந்தன.

ராஷியின் பார்வையும் அருளின் பார்வையும் ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்தன. அந்த ஒற்றைப் பார்வையில் ஆயிரம் கேள்விகள்…

‘ஏன் என்னைப் பார்க்க வரல வர்மா?’ என்று அவளது கண்கள் கதறின.

ஆனால், அருள் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான். அங்கேயே நின்றால் தன் கட்டுப்பாடு உடைந்துவிடும், தன் காதலை மறைக்க முடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவன், தன் கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

சாருவுக்கும் அவளது கணவருக்கும் மேடையில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, மொய் எழுதி முடித்த அடுத்த கணமே… அருள் மண்டபத்தின் பின்வாசல் வழியாக மெதுவாக வெளியேறினான்.

ராஷி தவிப்போடு கூட்ட நெரிசலில் அவனைத் தேடி ஓடிவருவதற்குள், அருள் மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றிருந்தான்.

தன்னைக் காப்பாற்றித் தந்தவனை, தன் உயிர் காதலனை, இத்தனை தூரம் அருகில் இருந்தும் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல்… அவளது பார்வையில் இருந்து முற்றிலும் விலகி, அவளைப் பார்க்காமலே மீண்டும் சிரசாமலையை நோக்கிச் சென்றுவிட்டான் அருள் வர்மா.

அடை மழையில் நனைந்தபடி பேருந்தில் பயணித்த அருளின் கண்களிலிருந்து, அவன் அடைத்து வைத்திருந்த காதலின் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது!

மண்டபத்திலிருந்து திரும்பிய அருளின் முகம் முன்னெப்போதையும் விட மிகவும் கன்றிப்போய், பேரமைதியுடன் இருந்தது. அவனது தோற்றமும், விழிகளின் ஓரங்களில் காய்ந்துபோன கண்ணீர்ப் பாதைகளும் தாய் பார்வதியின் பார்வையில் படாமல் இல்லை.

வீட்டிற்குள் வந்து அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்த மகனின் அருகே பார்வதி மெல்லச் சென்று அமர்ந்தாள். அவனது தலையை மென்மையாகத் தன் மடியில் சாய்த்துக்கொண்டு, அவனது தலைமுடியைக் கோதிவிட்டபடி அன்போடு வினவினாள்.

“அருளு… என்னடா ஆச்சு? நேற்று கல்யாணதுக்குப் போனவன் இப்படி உயிரே இல்லாத உடம்பு மாதிரி திரும்பி வந்து நிக்கிறியேடா… அங்க அந்த ராஷி பாப்பாவைப் பார்த்தியா? என்னடா பிரச்சனை உனக்கு? அம்மாகிட்ட மறைக்காம சொல்லுடா…”

தாயின் அந்தப் பாசமான அணைப்பும், மென்மையான விசாரிப்பும் அருளின் இரும்பு போன்ற மனக்கட்டுப்பாட்டை நொடியில் உடைத்தெறிந்தது.

இத்தனை நாட்களாக நெஞ்சின் ஆழத்தில் பூட்டி வைத்திருந்த பாரம் அனைத்தும் பொங்கி வர, தன் தாயின் மடியிலேயே முகம் புதைத்து அருள் கதறி அழத் தொடங்கினான். அவனது உடம்பு விம்மி விம்மி நடுங்கியது.

“அம்மா… என்னால முடியலம்மா… என்னால இந்த வலியைத் தாங்கிக்கவே முடியலம்மா!” என்று கைகூப்பி அழுதான்.

பார்வதி பதறிப்போய், “அருளு… என்னடா இது, சிறுசு மாதிரி இப்படி அழுகுற? என்ன ஆச்சுடா?” என்று அவனது முகத்தைத் தூக்கினாள்.

கண்கள் சிவக்க பார்வதியைப் பார்த்த அருள், தன் உள்ளத்தின் அத்தனை ரகசியங்களையும் கொட்டினான்:

“அம்மா… நான்… நானும் ராஷியும் ஒருத்தரையொருத்தர் ஆழமா காதலிக்கிறோம்மா! இங்கு அவள் இருந்த போது எங்களுக்குள்ள காதல் மலர்ந்திருச்சு. அவளோட அன்பும் காதலும்தான் என்னைப் பெரிய ஆளா மாத்துச்சு. ஆனா… ஆனா இன்னைக்கு என்னால அந்த காதலை அவங்க வீட்ல சொல்ல முடியலம்மா…”

பார்வதி அதிர்ச்சியோடு மகனைப் பார்க்க, அருள் கண்ணீரோடு தொடர்ந்தான்:

“அவ கோமால உயிருக்குப் போராடினப்போ, அவளை மீட்டுக் கொண்டு வர நான் அங்கே போராடினேன். ஆனா அவ கண் விழிச்சதும் அவளோட அம்மா குமாரிம்மா என் கால விழுவாத குறையா அழுது… ‘நீங்க தம்பி இல்லை, எங்க உயிரையே திருப்பித் தந்த நடமாடும் சாமி!’ன்னு சொல்லி என் கையைப் பிடிச்சு அழுறாங்கம்மா. அவங்க என்னை ஒரு தெய்வஸ்தானத்துல வச்சுப் பார்க்கிறாங்க…”

அருளின் தொண்டை அடைத்தது.

“அந்தப் பெற்றோர் கண்ணுல என்னைப் பத்தின நன்றி மட்டும்தான் இருக்குமா. ‘நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்’ன்னு இந்த நிலைமையில நான் சொன்னா, அவங்க என்மேல வச்சிருக்க அந்த உயரிய மரியாதையும் நம்பிக்கையும் உடைஞ்சு போயிரும்மா. ‘தன் பொண்ணைக் காப்பாத்துனதுக்கு கைமாறா காதலைக் கேக்குறானோ’ன்னு அவங்க நினைச்சுருவாங்களோன்னு பயமா இருக்குமா!”

“இன்னைக்கு கல்யாண மண்டபத்துல அவ என்னைத்தான் தேடுனா… அவ கண்ணுல ‘ஏன் வர்மா சார் என்கிட்ட பேசல?’ன்ற கேள்வி அப்பட்டமா தெரிஞ்சுதுமா. அவளைப் பார்க்காமலே ஓடி வந்துட்டேன்மா. அவ உயிரைப் காப்பாத்துன என்னால, அவளோட காதலையும் அவங்க பெற்றோர் நம்பிக்கையையும் ஒரே நேரத்துல காப்பாத்த முடியலையேம்மா…” என்று கூறித் தாயின் மடியில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதான் அருள்.

error: Alert: Content selection is disabled!!