மாதொரு பாகம் கொண்டான் 24 – 1

MPK 24

சாதனாவின் மறுநாள் பொழுது குழப்பங்களுடனும் குறைத் தெளிவுடனும் மந்தமாய் புலர்ந்தது.

காலில் பெரிதான வலி இல்லையென்றாலும் கொஞ்சம் கடுகடுப்பு இருந்தது.

ஆதித்யன் சொன்னது போல் அந்தக் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுமெதுவாக வேலைகளை செய்தவள், நித்திலனையும் எழுப்பி விட்டாள்.

எழுப்பி மட்டும்தான் விட்டாள். மிகுதி வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்து வழமைக்கும் விரைவாகவே தயாராகி நின்றான் அவன்.

எல்லாம் ஆதித்யனுடன் பள்ளிக்கூடம் சென்று இறங்கும் ஆர்வம். அது சாதனாவுக்கும் விளங்க அமைதியான பார்வையுடனே மகனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

புத்தகப் பையையும் தானாகவே அடுக்கி வைத்துக் கொண்டவன், “அம்மா சாப்பாடு என்ன?” என்று கேட்டான்.

“சாப்பாடு ஒண்டும் செய்யேல நிலன். சொக்லேட் கிரீம் பிஸ்கேட் இருக்கு. சாப்பிட்டு, கொண்டும் போங்கோ.”

“பிஸ்கேட் எல்லாம் நிறைய சாப்பிடக் கூடாதாம் எண்டு டொக்டர் சொன்னவர். அதில நிறைய சீனி இருக்காம்.
அதுக்குப் பதிலா பழங்கள் சாப்பிடோணுமாம். அதுதான் நல்லமாம்.” என்று கொண்டே தாயைப் பார்த்தவன் அவள் பார்த்த சுடு பார்வையில் கொஞ்சமாய் அடங்கினான்.

“இண்டைக்கு மட்டும் இதைக் கொண்டு போறன். உங்களுக்குக் கால் ஏலாதெண்டா ஒண்டும் செய்யேலாதுதானே?” என்று விட்டு ஒரு பைக்கட்டில் பாதியை உண்டுவிட்டு பாதியை உணவுப் பெட்டிக்குள் அடக்கிக் கொண்டான்.

சாதனா அவனுக்கான உடையை எடுத்து வைத்ததோடு சரி. அதன்
பின் அவனுக்குக் கிட்டவும் வரவில்லை. அதுதான் தனியாக எல்லாம் செய்வேன் என்று நேற்று பெரிய மனுஷர் மாதிரி சொன்னவர்தானே செய்யட்டும் என்று விட்டு விட்டாள்.

அப்படி விட்டாலும் ஏதும் ஒரு இடத்தில் தடுமாறித் தன்னைக் கூப்பிடுவான் என்று அவள் பார்த்திருக்க, அவனோ எதற்குமே இவளை எதிர்பார்க்கவில்லை.

ஷேர்ட் இன் பண்ணியது கொஞ்சம் அலங்கோலமாக இருந்தது. மற்றது முகத்தில் பவுடர் கொஞ்சம் திட்டுத்திட்டாக இருந்தது. அதைத் தவிர மற்ற எல்லாமே சரியாக செய்திருந்தான்.

அவளுக்கே அவனை நினைத்து ஆச்சர்யமாகிப் போனது. என் மகன் வளர்ந்து விட்டான் என்று நினைக்க வரவில்லை. சுய ஒழுக்கத்துடனும் தன்னிறைவுடனும் வளர ஆரம்பிக்கிறான் என்று பூரித்துப் போனாள்.

இதற்கெல்லாம் காரணம் என்று யோசித்ததும் அவன் ஒருவனின் முகம்தான் மனக் கண்முன் வந்து மின்னி மறைந்தது.

“நிலன்! என்னெண்டு தனியா வெளிக்கிட்டனீங்க? இப்பிடி இப்பிடி வெளிக்கிடோணும் எண்டு ஆர் சொல்லித்தந்தது?” பதில் தெரிந்த கேள்விதான். இருந்தாலும் கேட்கத் தோன்றியது.

“நேற்றுப் பின்னேரம் அங்க நிண்டு வெளிக்கிட முன்னம் டொக்டர்தான் சொன்னவர். அம்மா இவ்வளவுநாளும் செய்ததை யோசிச்சுப் பார்த்து நீங்களா வெளிக்கிட்டுப் பழகுங்கோ எண்டு!”

அவள் நினைத்தது போல் இங்கும் அவன்தான். பெரிதான ஆரவாரங்கள் ஏதுமே இன்றி தங்களைச் சுற்றிலும் அவனை நிரப்பி வைத்திருக்கிறான். அந்த தைரியத்தில்தான் ‘நீங்கள் எப்பவும் எனக்குப் பக்கத்திலதான் இருப்பீங்கள்’ எண்டு நிலனுக்கு சொல்லியிருக்கிறான்.

நினைத்து முடிக்கவில்லை. அவள் நினைவின் நாயகன் அங்கு வந்து நின்றான். அவன் வரவை நேராக அவள் கண்கள் காணவில்லை. நித்திலன் உடலில் ஒட்டிக் கொண்ட திடீர் உற்சாகத்தைக் கண்டே வாசல் பக்கம் எட்டிப் பார்த்தாள்.

கையில் ஏதோ பார்சலுடன் வந்து கொண்டிருந்தான் ஆதித்யன். அவள் அதன் மேல் கேள்வியாகப் பார்வையைப் பதிக்க, எப்போதும் போல் பதில் வாங்கும் போட்டியில் அவளை முந்திக் கொண்டான் அவள் மகன்.

“குட் மோர்னிங் டொக்டர். நான் தான் இண்டைக்கு வெளிக்கிட்டனான். எல்லாம் சரியோ?” என்று அவன் முன் நின்று ஒரு வட்டம் சுற்றினான்.

“குட் மோர்னிங் மை லிட்டில் சாம்ப்.” என்று அவனுக்குக் குறையாத உற்சாகத்துடன் அவனை எதிர்கொண்டவன், கையில் இருந்த பார்சலை அங்கே இருந்த கதிரையில் வைத்து விட்டு அவன் முன் மண்டியிட்டான்.

“வெரி குட் நிலன். முதல் தரம் நீங்களா வெளிக்கிட்ட மாதிரியே இல்லை. நீட்டா வெளிக்கிட்டிருக்கிறீங்கள். என்ன இந்த ஷேர்ட் தான் சரியா இன் பண்ண வரேல்ல பிள்ளைக்கு. பிறகு இந்தப் பவுடரும். பவுடர் போட முன்னுக்கு முகத்தை வடிவா துடைச்சுப் போட்டுக் கொஞ்சமா கையில எடுத்து பூசிட்டு வடிவா காஞ்ச துண்டு ஒண்டால துடைச்சு விடோணும்.” என்று சொல்லிக் கொண்டே அவன் விட்ட பிழைகளைத் திருத்த முனைய, சாதனா தடுக்க வந்தாள்.

“நீங்க விடுங்கோ டொக்டர், நான் செய்யிறன்.”

“ஏன் இதென்ன அவ்வளவு கஷ்டமான வேலையோ? எனக்கு செய்யத் தெரியாதோ?” என்று கேட்டுக் கொண்டே வேலையை முடித்தவன்,

“இப்ப கண்ணாடியைப் பார்த்து சொல்லுங்கோ நிலன், நான் செய்து விட்டது சரியோ?” என்று கேட்க, அந்தப் பக்க வாத்தியமானவனும் ஓடிச் சென்று கண்ணாடியில் பார்த்து விட்டு,

“ஓம்.. இப்பதான் வடிவாக் கிடக்கு.” என்றவன் அத்தோடு முடிக்காமல், “அம்மா செய்யிறதை விட நீங்கள் இன்னும் வடிவா செஞ்சிருக்கிறீங்கள் டொக்டர்.” என்று விட்டான். அதைக் கேட்ட ஆதித்யன் வேறு சும்மா இருக்காமல் நமட்டு சிரிப்போடு அவளைத் திரும்பிப் பார்க்க, சாதனாவுக்கு சொல்லவா வேண்டும்? சாத்தானைக் கண்ட சாமி போல் இருவரையும் பார்வையாலே எரித்தாள்.

“நிலன்! இதுக்குப் பிறகு இஞ்ச நிண்டா ரெண்டு பேருக்கும் நல்லதில்லை. வெளிக்கிடுவமோ? வீட்ட போய் சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போவம்?” என்று அவன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தான் ஆதித்யன்.

“நான் சாப்பிட்டன் டொக்டர். பிஸ்கேட் சாப்பிட்டேன்.” என்றவனை அவன் லேசாய் முறைக்கவும்,

“நான் அம்மாட்ட சொன்னான் டொக்டர், பிஸ்கேட் நிறைய சாப்பிடக் கூடாதெண்டு. ஆனா இண்டைக்கு அம்மாக்கு கால் ஏலாதெல்லோ! அதான் வேற சாப்பாடு செய்யேல எண்டு இதை சாப்பிட்டனான்.” என்று பம்மிக் கொண்டு பதில் சொன்னான்.

“சரி, அப்ப ஸ்கூலுக்கு என்ன கொண்டு போறீங்கள், அந்த பிஸ்கேட்தானோ?” என்று அவன் சந்தேகமாக கேட்க, அவன் பதில் சொல்லாமல் முழித்து வைத்தான்.

“என்ன முழிப்பு? கெதியா அதை எடுத்து வெளில வைச்சிட்டு வெளிக்கிடலாம்.” என்று லேசான அதட்டலுடன் புத்தகப்பையை அவனிடம் நீட்ட, முகத்தைக் கூம்பிக் கொண்டே எடுத்து தாயிடம் நீட்டியவன்,

“உங்களால தான் எனக்குப் பேச்சு விழுகுது. நான் சொன்னான்தானே இது கூடாதெண்டு!” என்று தன்னை நல்லவனாக்க அவள் மேல் பழி சுமத்தினான்.

“இப்ப எழும்பினன் எண்டா தெரியும் தம்பிக்கு! எத்தினை நாள் இரவு செஞ்சு வச்ச சாப்பாட்டைத் தொட்டும் பார்க்காம சாமத்தில எழும்பி பிஸ்கேட் சாப்பிட்டு படுத்திருக்கிறாய்? அப்ப எல்லாம் நான் சொல்லலேயோ உனக்கு இது கூடாதெண்டு! அப்ப துரும்புக்கும் என்ர சொல்பேச்சுக் கேட்காம இருந்திட்டு இப்ப வாறார் புதுசா எனக்குப் படிப்பிக்க.” என்று அவளும் பதிலுக்கு எகிறினாள்.

“அப்ப நீங்க எனக்கு அடிக்கிறனீங்கள். அதுதான் கோபத்தில சாப்பிடாம படுக்கிறானான்.”

“அந்தக் கோபத்திலதானே பிஸ்கேட்டும் சாப்பிடுறனீ? அதை மாதிரி சாப்பாட்டையும் சாப்பிட்டிருக்கலாம்தானே!”

இருவரும் மாறி மாறி நீயா நானா என்று அடித்துக் கொள்ள, ஆதித்யன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தான். அவனுக்கு இதெல்லாம் சுவாரசியமாக இருந்தது.

பின் நேரம் ஆகவே, “சரி காணும்.(போதும்) ரெண்டு பேரில ஆர் பிழை செஞ்ச எண்டு பிறகு வந்து கண்டு பிடிப்பம்! இப்ப நேரம் போயிட்டு.” என்று மீண்டும் நித்திலனின் புத்தகப்பையைத் தன் வசப்படுத்தியவன்,

“உங்களுக்குக் கால் இப்ப எப்பிடி இருக்கு?”

“நேற்றைக்குப் பரவாயில்லை.” என்றாள் சுருக்கமாக.

“ம்ம்…” என்று கேட்டுக் கொண்டவன், “அதில உங்களுக்குச் சாப்பாடு இருக்கு சாதனா. சாப்பிட்டு வெளிக்கிட்டு நில்லுங்கோ. அம்மாவும் உங்களோட ஹொஸ்பிட்டல் வர வேணுமாம். அவாக்கும் ஸ்கான் எடுத்துப் பார்க்கட்டாம் எண்டவா. ஆட்டோ அனுப்பி விடுறன், அவாவயும் கூட்டிக் கொண்டு வரேலுமோ உங்களால?” என்று கேட்டவனை சந்தேகமாகப் பார்த்தவள்,

“உண்மையா அம்மாவுக்கு ஸ்கான் எடுக்கோணுமோ, இல்லா எனக்காண்டி அலையப் பார்க்கிறாவோ? அப்பிடி ஏதேன் எண்டா பிளீஸ் வேண்டாம். நானே சமாளிப்பன். அவாவைக் கஷ்டப்படுத்த வேண்டாம்.”

error: Alert: Content selection is disabled!!