அத்தியாயம் 1
எரிக்கும் வெயிலும் அல்லாத காற்றும் முற்றிலும் அகலாத முன்காலைப் பொழுதில், கிணற்றில் அள்ளி நன்றாகக் குளித்துவிட்டு வந்தாள் பல்லவி. குளிக்கும்போதே துவைத்த உடைகளோடு வீட்டின் பின்பக்கம் சென்று, கூரையிலிருந்து வேலி வரைக்கும் சென்ற கொடியில் ஒவ்வொன்றாக உதறிக் காயப்போட்டாள்.
“இப்பிடி எல்லாருமா சேர்ந்து ஒதுக்கி வச்சா அவனும் எங்கயப்பு போவான்? அப்பிடி என்ன இந்த உலகத்தில நடக்காததையா செய்திட்டான்? பிழைதான். இல்லை எண்டு சொல்லேல்ல. அதுக்கு எவ்வளவு காலத்துக்கு எண்டு தண்டனை அனுபவிக்கிறது? என்ன இருந்தாலும் பெத்தவனுக்குப் பாசமே இருக்காதா?” அவளின் அப்பம்மா சிவலோநாயகியின் கவலை தோய்ந்த குரல், குசினிக்குள் இருந்து கேட்டது.
பாவாடையைக் காயப்போட்டுக்கொண்டிருந்த பல்லவி, பாவாடையோடு சேர்த்துக் கொடியையும் பற்றித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள். மனத்தினில் புயலடிக்க ஆரம்பித்தது. உலகத்தில் நடக்காததா? களவு, கொலை, கொள்ளை, வன்புணர்வு இப்படிப் பலதும்தான் இந்த உலகத்தில் நடக்கிறது. அதனாலேயே அதையெல்லாம் செய்யலாமா? தவறுதான்; அதற்கு என்ன செய்வது என்று கடந்து போகலாமா?
பெற்ற பாசம் இருந்திருந்தால் இப்படி அவளின் வாழ்க்கையையே சுழற்றி அடித்திருக்க முடியுமா? முதலில் அந்த மனிதர் எங்கே தண்டனை அனுபவித்தார்? செய்த காரியத்துக்கு யாரின் முகமும் பார்க்க முடியாமல் வெட்கி ஒளிந்து வாழ்ந்தார். அதற்குப் பெயர் தண்டனையா?
ஆனால் அவள்?
நொடியில் அநாதையாக்கப்பட்டாளே! திக்குத் திசை தெரியாமல் திகைத்து நின்றாளே. அவளின் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் எல்லாமே நொருங்கிப் போனதே. அலையில் அடித்துச் செல்லும் இலையாக, அவள் வாழ்க்கையும் அதன் முடிவுகளும் அடுத்தவரின் வசமாகிப் போயிற்றே.
இன்னாரின் மகள் என்கிற அந்த அடையாளத்தையே அவமானமாகச் சுமக்கிறாளே. யாரின் முன்னும் தலை நிமிர்ந்து நிற்க முடியாமல், முகம் பார்த்துப் பேச முடியாமல், அவளுக்குள்ளேயே தினம் தினம் குமைந்து சாகிறாளே. ஆறு வருடங்களாக நடந்ததையெல்லாம் ஜீரணிக்க முடியாமல், நெஞ்சு அடைக்க அடைக்கச் சுமந்துகொண்டு திரிகிறாளே. இத்தனைக்கும் காரணமான அந்த மனிதன் பாவமா? அவள் நெஞ்சுக்குள் அணல் பற்றியது.
“மாமி சொல்லுறதும் சரிதானேப்பா. அவளுக்கும் வேற ஆரு இருக்கினம்? நாங்க என்னதான் எடுத்துச் செய்தாலும் பெத்த தகப்பன் நிக்கிற மாதிரி வருமா? அதவிட, இனியாவது அவரும் கொஞ்சம் பொறுப்ப எடுக்கிறதுதானே சரி. சீதனம் இல்லை எண்டாலும் கலியாணச் செலவு இருக்குத்தானேப்பா. சும்மா வறட்டுக் கோபத்தப் பிடிச்சுத் தொங்காம, நடப்பு நிலவரத்தையும் கொஞ்சம் யோசிங்கோ.” என்று அவளின் பெரியம்மா பானுமதி சொல்வதும் கேட்டது.
அதற்குமேல் அவளால் பொறுக்க முடியவில்லை. மனம் கொதிக்க ஆரம்பித்தது. விறுவிறு என்று வீட்டுக்குள் நடந்து, அவளுக்கும் பெரியப்பாவின் மகள் தாரணிக்கும் என்று தந்திருந்த அறைக்குச் சென்று, கப்போர்ட்டை திறந்தாள்.
அதன் இழுப்பறைக்குள் இருந்த அவளின் சொற்ப நகைகளையும், அன்னையின் தாலிக்கொடியையும், அவளின் பாஸ்புக்கையும் எடுத்துக்கொண்டு குசினிக்கு வந்தாள். தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெரியப்பா தவகணேசனின் முன் அவற்றை எல்லாம் வைத்தாள்.
உண்பதை நிறுத்திவிட்டு அவளைக் கேள்வியோடு நிமிர்ந்து பார்த்தார் அவர்.
“அவே சீதனம் கேக்கேல்லைதானே பெரியப்பா. அதால இதை நீங்க கலியாணச் செலவுக்கு எடுங்கோ. நகைகளை அழிச்சாலும் சரிதான் வித்தாலும் சரிதான். இதுவரைக்கும் நான் வேலை செய்த சம்பளக்காசும் புத்தகத்தில இருக்கு. எனக்கு இதுல எதுவுமே வேண்டாம் பெரியப்பா. ஆனா, அம்மா அப்பா எண்டுற இடத்தில எனக்கு நீங்கதான் நிக்கோணும். வேற ஆரும் இல்ல. அப்பிடி வேற ஆராவது வந்தா அம்மாவை மாதிரி நானும் வேற முடிவு எடுக்கவேண்டி வரும்!” சொன்ன வேகத்திலேயே அங்கிருந்து வெளியே வந்து, அறைக்குள் புகுந்து, கட்டிலில் விழுந்து, கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
அங்கிருந்த மூவருமே ஆடிப்போயினர். இப்படி ஒரு மிரட்டலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. சற்று நேரத்துக்குப் பேச்சு வரவே மாட்டேன் என்றது.
திகைப்பிலிருந்து மீண்டதும், “பாத்தியா தம்பி, எப்பிடி வெருட்டிப்போட்டுப் போறாள் எண்டு. அப்பிடியே பெத்தவளின்ர குணம். அவள் ஒழுங்கா இருந்திருந்தா இவன் ஏன் திசைமாறிப் போகப்போறான்? அடங்காத குணம், தினம் ஒரு சண்டை எண்டா ஆம்பிள வேற தேடத்தான் செய்வான்! இதுல இவளுக்கு ரோசம் வேற வருதாம்!” என்று சீறினார் சிவலோகநாயகி.
“விடுங்கம்மா. சும்மா கண்டதையும் கதைக்காதீங்க. முதல் கலியாணம் முடியட்டும். மிச்சத்தப் பிறகு பாப்பம்!” உண்பதை மீண்டும் தொடர்ந்தபடி சொன்னார் தவகணேசன்.
“அந்தக் கலியாணத்துக்குத்தான் அவன் நிக்கோணும் எண்டு நான் சொல்லுறன். நீ கலியாணம் முடியட்டும் எண்டு சொல்லுறாய்? அவன் பாவம் எல்லா. அவனப் பற்றியும் கொஞ்சம் யோசி.”
சிவலோகநாயகியின் கணவர் பேரின்பநாதன் எப்போதோ தவறியிருந்தார். தப்பித்தவறி தனக்கும் ஒன்று நடந்துவிட்டால் தனித்து நிற்கும் சின்ன மகன் அநாதையாகவே போய்விடுவான் என்கிற அச்சம் அவருக்கு. இந்தத் திருமணத்தைப் பயன்படுத்தி மகனை இங்கே கொண்டுவந்துவிட எண்ணியிருந்தார். அதற்குத் தடையாக இருந்த பல்லவியின் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால், மூத்தவனின் முடிவு ஏமாற்றத்தைத் தந்தது.
“அதுதானேப்பா..” என்று ஆரம்பித்த பானுமதியைத் தவகணேசன் பார்த்த பார்வை அடக்கியது. அதன் பிறகு அவர் வாயைத் திறக்கவில்லை. ஆனால், பல்லவி மீது மெல்லிய கோபம் உண்டாயிற்று.
இனி அவர்கள் அவளைப் பெற்றவரை வரவழைக்க முடியாது. தப்பித்தவறி அழைத்து, இவள் சொன்னதுபோல் எதையாவது செய்துவிட்டாள் என்றால் தீராத பழிக்கு ஆளாகிவிடுவார்களே.
தவகணேசன் சாதாரண விவசாயி. இரவு பகல் பாராமல் கணவனும் மனைவியுமாகப் பாடுபட்டுத்தான் உழைப்பது. அவர்களுக்கும் ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகனை இப்போதுதான் ஏஜென்சி மூலம் இத்தாலிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடன் இருக்கிறது. வயதான சிவலோகநாயகி இருக்கிறார். இதோடு, இப்போது அவளின் கலியாணச் செலவும்.
அவர்களின் இந்த நிலையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்திருந்தால் இப்படிச் சொல்வாளா? அவளின் கோபத்தில் நியாயம் உண்டுதான். இருந்தாலும், கொஞ்சமேனும் பொறுத்துப் போனாள் என்றால் அவர்களின் சுமை கொஞ்சம் குறையுமே.
“அவனுக்கும் என்ன ஆயிரம் சொந்தமே இருக்கு? அவள் ஒருத்திதான் மகள் எண்டு இருக்கிறாள். நீ ஒருத்தன்தான் சகோதரம் எண்டு இருக்கிறாய். நீங்க ரெண்டு பேரும் இப்பிடி தள்ளி வச்சா அவன் எங்க போவான்? ஒண்டுக்கும் உதவாத சாரமும் பழைய சேட்டும் போட்டுக்கொண்டு விசரன் மாதிரித் திரியிறான்.” புலம்பியபடி பானுமதி போட்டுத் தந்த உணவைத் தானும் உண்ணத் தொடங்கினார் சிவலோகநாயகி.
“என்னவோ காலம் சரியில்ல. சறுக்கிட்டான். அதுக்கு எண்டு இப்பிடித் தள்ளியே நிப்பாட்டுறதே. அவளுக்குத்தான் அறிவில்ல எண்டா நீயும் யோசிக்காம கதைக்கிறியே தம்பி.”
அன்னையின் தொடர்ந்த தொணதொணப்புக்குப் பதிலேதும் சொல்லவில்லை தவகணேசன். அதுவரையில் தம்பியைக் கூப்பிடுவதா, இல்லையா என்கிற குழப்பம் அவருக்கும் இருந்ததுதான். பானுமதி சொன்னதுபோல் நாளாந்த வாழ்வின் நெருக்கடி, தன் விருப்பு வெறுப்பைத் தள்ளி வைத்துவிட்டு யோசிக்க வைத்திருந்தது.
அழைக்கலாமா, அழைத்தால் செலவின் பாதியையாவது அவன் ஏற்றால் பரவாயில்லாமல் இருக்குமே என்று அவரும் நினைக்கையில்தான் பல்லவி இப்படிச் சொல்லியிருந்தாள். அது அவருக்கும் அதிர்ச்சிதான். ஆனால், இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆறு வருடங்களாக அவளை வைத்துப் பார்த்தவர் இந்தத் திருமணத்தையும் செய்து முடிக்கத்தான் வேண்டும்.
உணவை முடித்துக்கொண்டு எழுந்த தவகணேசன், “இதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பல்லவிட்ட குடு.” என்று அவளின் நகைகளைக் காட்டிச் சொல்லிவிட்டுத் தோட்டத்துக்கு நடந்தார்.
“கொண்டே குடு! சீமாட்டி நல்லா இருக்கட்டும். அவளுக்கு ஆர் எப்பிடிப் போனாத்தான் என்ன? அவள் நினைச்சது நடக்கோணும்.” இருந்த சினத்துக்கு அவளையும் சேர்த்துத் தன் வாயில் போட்டு மென்றார் சிவலோகநாயகி.
இவை அனைத்தும் பல்லவியின் காதில் விழுந்துகொண்டுதான் இருந்தன. ஆனாலும் அசையவில்லை அவள்.
யாருமே இல்லாமல் அநாதையாய் நின்றவளை அரவணைத்து, பள்ளிக்கூடப் படிப்பை முடிக்க வைத்து, நர்சிங் கோர்ஸ் செய்யப்போகிறேன் என்றபோது அதையும் செய்ய வைத்து, சொந்தக் காலில் நிற்க வைத்தது எல்லாம் அவளின் பெரியப்பாதான். அவருக்காக அவள் என்னவும் செய்வாள்; இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தது போன்று.
ஆனால் இதற்கு? கடைசிவந்தாலும் சம்மதிக்க மாட்டாள்!
அவளின் அறைக்குள் நுழைந்தார் பானுமதி. தன் எண்ணங்களில் இருந்து அறுபட்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள் பல்லவி. கையிலிருந்த அவளின் பாஸ்புக், நகைகள் எல்லாவற்றையும் மேசையில் வைத்தார் பானுமதி.
“விடியக்காலமாயே இப்பிடிப் படுத்துக்கிடந்தா போற வீடு விளங்கின மாதிரித்தான். எழும்பிப் போய்ச் சாப்பிடு. சாப்பிட்டுட்டுப் பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வச்சுவிடு. பெரியப்பா மீன் கொண்டுவருவார். கிளீன் பண்ணி, வெட்டி, மஞ்சளும் உப்பும் போட்டுவை. சமைக்க நான் வாறன்.” அவளின் முகம் பார்க்கவும் இல்லை, நிற்கவும் இல்லை. போகிற போக்கில் சொல்லிக்கொண்டே வெளி வாசலை நோக்கி நடந்தார் அவர்.
அவளும் எழுந்துபோனாள். பிட்டுக்கு நெத்தலிக் கருவாடு பிரட்டி, நல்லெண்ணையில் முட்டை பொரித்திருந்தார் பானுமதி. பக்கத்தில் வாழைப்பழமும் இருந்தது. இரண்டுமே காலை வேளைக்குப் பெரும் சுவையோடு இறங்க வல்லவை. ஆனாலும் அவள் சாப்பிடவில்லை. பசியே மந்தித்துப்போன உணர்வு. கடந்த ஆறு வருடங்களாகச் சுவையை மறந்து பசிக்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள், திருமணம் முற்றான இந்தப் பத்து நாட்களாக மற்றவர்களின் முன்னே சாப்பிட்டேன் என்று காட்டுவதற்காகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்.
இன்று அதுவும் முடியவில்லை.

