மாதொரு பாகம் கொண்டான் 25 – 2

எல்லாம் அண்ணான்ர வேலையாத்தான் இருக்கும். நான் அங்க இருக்கும் மட்டும் வீட்டுக்குள்ள வாறதே இல்லை. இப்ப வீட்டை விட்டுப் போறதே இல்லையாம். பக்கத்து வீட்டு அக்கா அண்டைக்கு ஒருநாள் கதைக்கேக்க சொன்னவா. எங்கட அம்மாக்கும் ஆம்பிளை பிள்ளையள்தான் பெருசு. அவை தன்னைத் தலையில தூக்கி வைக்கோணும் எண்டு என்னைத் தன்ர பிள்ளை இல்லை எண்டு கூடச் சொல்லக் கூடிய ஆள் அவா.” என்று விரக்தியில் கதைத்துயவளுக்குத் தொண்டை அடைத்தது.

“கோபத்தில சில மனுஷர் இப்படித்தானம்மா. உண்மையான அன்பு எங்க இருக்கெண்டு யோசிக்க ஏலாது அவையால. எண்டைக்கா இருந்தாலும் உங்கட அண்ணான்ர ஒரிஜினல் குணம் தெரிய வராம போகாது. அண்டைக்கு பிள்ளை எண்டு உன்னட்டத்தான் ஓடி வருவா உங்கட அம்மா. அந்த நேரம் ஒண்டையும் யோசிக்காம அவாக்கு ஆறுதலா இருக்கோணும்.”

“அதெல்லாம் செய்யாம விடமாட்டன். கல்லா இருந்தெண்டாலும் என்ர கடமையைச் செய்வன்.”

“இந்தக் குணங்கள் தானம்மா என்னையும் உன்னை விடக்கூடாதெண்டு தூண்டிக் கொண்டே இருக்கு. நீதான் ஒரு கரைக்கும் வரமாட்டியாம். இன்னும் நான் கேட்டதுக்குப் பதிலே வரேல.” என்று தன் காரியத்தில் வந்து நிற்க, சாதனா சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்,

“யோசிச்சு சொல்லட்டோ அம்மா?” என்று தரையைப் பார்த்தவண்ணம் கேட்க, அதற்கே பரமேஸ்வரி ஏகத்துக்கும் மகிழ்ந்து போனார்.

“சந்தோஷம் அம்மா. நீ பொறுமையா யோசிச்சு இண்டைக்குப் பின்னேரம் இல்லா நாளைக்குப் பதிலைச் சொல்லு!” என்றவர் பேச்சில் சாதனாவுக்கு சின்னதாய் சிரிப்பு அரும்பிற்று.

“பொறுமையா யோசிக்க எவ்வளவு பெரிய காலம் தாறிங்கள்?” என்றாள் சற்றே இலகுவாகி கேலியாக.

“பிறகு இன்னும் எத்தின வருஷத்துக்குத் தள்ளிப் போட? அடுத்த வருஷம் முதலாம் ஆண்டுக்குப் போகப் போகுதுகள் பிள்ளையள்! நித்திலன் நாலாம் வகுப்பு போகப் போறார். அவைக்கு விருத்தெரிய முதல் எல்லாத்தையும் சரியாக்கோணும் எல்லோ?” என்ற, அவள் இலகுதன்மை மறைந்து மீண்டும் ஒருவித அழுத்தத்துக்குள் சிக்குண்டது அவள் சித்தம்.

அதை அவளின் முக மாற்றத்தை வைத்தே கணித்த பரமேஸ்வரி,

“பிள்ளையளுக்கு என்ன சொல்லுறதெண்டதைப் பற்றியெல்லாம் நீ ஒண்டும் கவலைப்படாத பிள்ளை. அதுக்கெண்டேதானே நான் ஒரு காரியவாதியைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கிறன். படிச்சது எலும்பு முறிவு டொக்டருக்கு எண்டாலும் மனோதத்துவ நிபுணர் மாதிரி எதிர்க்க இருக்கிற ஆளைக் கதைச்சே தன்ர வழிக்குக் கொண்டு வந்திடுவார்.” என்று வெளி வாய் பேசியவர் மனதுக்குள்,

‘பிள்ளையளை மட்டும் இல்லை, உன்னையும் அப்பிடிக் கொண்டு வந்துடுவான்.’ என்று ரகசியம் சொல்லிக்கொள்ள அது தெரியாத சாதனா,

“அதெண்டா உண்மைதான். கவுன்சிலிங் எல்லாம் நல்லா குடுப்பர் உங்கட பிள்ளை.” என்று கேலியை ஏற்றி சொல்ல, பரமேஸ்வரி முகத்தில் புன்னகை.

அதன் பின் ஆட்டோ வர இருவரும் ஏறிக் கொண்டவர்கள் அமைதியாகவே பயணத்தைத் தொடர்ந்தனர். சாதனா தங்கள் வீட்டுக்கு செல்வதாகக் கூற, பரமேஸ்வரியும் மறிக்காது அனுப்பி வைத்தார், அவள் அமைதியாக சிந்திக்கட்டும் என்று!

அவள் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் மதியம் உணவைத் தான் கொடுத்து விடுவதாக மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்து அனுப்பியிருந்தார். அதோடு நித்திலனைக் கூட்டி வருவது பற்றிய கவலையும் வேண்டாம். ஆதித்யன் பார்த்துக் கொள்வான் என்று விட்டார். அவர் சொல்லும் முன்பே அவளுக்கு அது தெரிந்ததுதான் என்பதால் அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.

முடிவெடுக்க யோசிக்க என்று வந்தவளுக்கு இன்னுமே இது சரிவராது என்ற வட்டத்தைத் தாண்டி சிந்திக்க வரவே இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் இதே தனிமையில் இருந்து யோசித்திருந்தாள் என்றால் இறுதி முடிவாக வேண்டாம் என்று பரமேஸ்வரிக்கு எடுத்து சொல்லியிருப்பாள்.

அதைப் பரமேஸ்வரி எப்படி முன்கூட்டியே அறிந்தாரோ தெரியாது, அவளுக்கான மதிய உணவுடன் நேர்சரியில் இருந்து வந்த பேத்திகளையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் மட்டும் வீடு திரும்பி விட்டார்.

பரமேஸ்வரி சென்றதும் அவளின் இருபுறமும் அணைவாக வந்து ஒட்டிக் கொண்டு அமர்ந்தார்கள் பிள்ளைகள் இருவரும்.

மயூ, “கால் சரியா நோகுதோ அன்ட்ரி? அதோ படுத்துக் கிடந்தனீங்கள்? நாங்கள் வந்து எழுப்பிட்டமோ உங்களை?” என்று பண்டேஜ் இருந்த காலை பார்த்து மெய்யான கவலையுடன் கேட்க, சாதனா வாஞ்சையோடு அவள் தோளை சுற்றி அணைத்துக் கொண்டவள் மற்றக் கையால் மகியையும் வளைத்துக் கொண்டாள்.

“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை செல்லம், ஹொஸ்பிட்டல் போய் வந்தாப் போல நோ (வலி) கொஞ்சம் குறைஞ்சிருந்தது. பிறகு இப்ப மான்குட்டி ரெண்டு என்னைப் பார்க்க ஓடி வந்ததில மிச்ச நோவும் ஓடிப் போயிற்று.” என்று செல்லம் இழைய, அவர்களும் அவளோடு இணைந்து இழைந்தவர்கள் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆளுக்கு ஒன்று என்று முத்தம் வைக்க, சாதனா முகத்தில் பெரிய புன்னகை.

“இப்ப இன்னும் நோ குறையுற மாதிரிக் கிடக்கு. இன்னொண்டு தாங்கோ பார்ப்போம் அன்ட்ரிக்கு.” என்று அவள் குறும்பாய் கேட்க, மகி படக்கென இன்னொருமுறை அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்திருந்தாள்.

மயூ மட்டும் அவள் கேட்டதைக் கொடுக்காமல், “அதென்னென்னண்டு அன்ட்ரி நாங்கள் வந்தவுடனேயே உங்களுக்கு நோவெல்லாம் போயிட்டு எண்டுதானே சொன்னீங்கள்! பிறகு எப்பிடி நாங்க கொஞ்சினா (முத்தம் கொடுத்தா) இன்னும் குறையும் அது? முதலே இல்லைத்தானே அது?” என்று அறிவியல் ஆராய்ச்சியில் இறங்கிட, சாதனா அவளைப் போலியாக முறைத்தாள்.

“கொஞ்சச் சொன்னா சத்தமில்லாம கொஞ்சிப் போட்டுப் போகோணும். இல்லையெண்டா விருப்பமில்லையெண்டு போட்டுப் போகோணும். அதை விட்டுட்டு அவாக்கு அதில ஒரு ஆராய்ச்சி கேக்குது. கேக்குமோ இனி?” என்று சிரித்துக் கொண்டே அவளை இழுத்து மடியில் போட்டவள், அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்ட, கூச்சத்தில் கிளுக்கி சிரித்தாள் அவள்.

அவள் சிரிக்கவே மகி தானும் உற்சாகமாகி “அன்ட்ரி நானும் செய்யிறன்.” என்று சாதனாவுடன் இணைந்து கொள்ள, மயூ முடியாமல் சிரித்துக் கொண்டே இருவரிடமும் தன்னை விட்டு விடச் சொல்லிக் கெஞ்சினாள்.

ஒருகட்டத்தில் அவள் மிகவும் களைத்து விட, “மகி செல்லம். காணுமடா விடுங்கோ அவாவை.” என்று மயூவை எழுப்பி அவள் தலை முடி, முகம் எல்லாம் தடவி ஆசுவாசப் படுத்தினாள்.

சிறிது நேரத்தில் முற்றாக சீரான மயூ, “அன்ட்ரி! உங்களுக்குப் பாருங்கோ… உங்களுக்கு கால் சுகமானாப் போல நானும் உங்களுக்கு இப்பிடிச் செய்வன்! இப்ப மகிக்குச் செய்யப் போறன்.” என்று எழ, மகி எழுந்து ஓடப் பார்த்தாள்.

ஆனால் அதற்குள் மயூ அவளை எட்டிப் பிடித்து சாதனா மேல் சரித்திருந்தாள். சாதனா இருவரும் தடுமாறி விழுந்து விடாதபடிக்கு இருவரையும் ஒரு சேரப் பிடித்துக் கொண்டவள், கொஞ்ச நேரம் இருவரையும் விளையாட விட்டு விட்டு பிறகு போதும் என்று பிரித்து விட்டாள்.

“ரெண்டு பேரும் களைச்சாச்சு. இனி இந்த விளையாட்டுக் கூடாது.” என்றவும் எப்போதும் போல் உடனே கேட்டுக் கொண்டு முன்னர் இருந்த நிலையில் அவளின் இருபுறமும் அணைவாக அமர்ந்து கொண்டனர். அவளும் இருவரையும் அணைத்துக் கொண்டு சுவற்றில் தலை சாய்த்துக் கண் மூடிக் கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!