அத்தியாயம் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
திருத்திய மோட்டார் சைக்கிள்களை ஒருதடவை ஓடிப் பார்த்துவிட்டு வெளியில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.

ஒன்றை, சொன்ன நேரத்துக்கு வந்து எடுத்துச் சென்றார்கள், நண்பர்கள் இருவர்.

இரண்டாவதை மதியப்பொழுதில் தான் எடுக்க வந்திருந்தார், அதன் உரிமையாளர். அவரை எனக்கு முன்னரே தெரியும், இங்குதான் கச்சேரியில் வேலை செய்கிறார். என்னைக் கண்டதும் விழிகளில் வந்து போன ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு இன்முகமாகவே நலம் விசாரித்தார்.

எல்லாம், இந்த வெறிக்குட்டி நேராக நிற்கிறானே என்ற வியப்புத்தான்!

“கண்டு கன நாளாச்சுத் தம்பி! எப்பிடிச் சுகமா இருக்கிறீரோ?” என்றபடி, மோட்டார் திருத்தியதற்கான பணத்தை எடுத்து நீட்டினார்.

“ஓமண்ணே...நல்லா இருக்கிறன்.”

அவர் தந்த பணத்தை வாங்கி லாச்சியில் வைக்கும் சாட்டில் குனிந்து கொண்டேன்.

நின்று நிதானமாகக் கதைத்து அவரோடு அளவளாவுவதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இவரோடு என்றில்லை, எவரோடும் முகம் கொடுத்துக் கதைப்பதில் விருப்பமில்லை.

இருந்தும், நான் வேலையாக இருக்கிறேன் என்று அவர் நகர்ந்து செல்லவில்லை.

“தம்பி, ஒண்டு கேட்க வேணும் எண்டு நினைச்சுக்கொண்டு வந்திட்டு மறந்து போகப் பார்த்தன் பாரும்...”

மீண்டும் கதைக்கத் தொடங்கியவர் பார்வை, கடையின் ஒரு மூலையில் நின்ற ரோஸ் வண்ண ஸ்கூட்டியில்.

அவர் பார்வையோடு எங்கள் பார்வையும் அதில் தான்.

என் முகம் இறுகிப் போனது. கோபத்தில் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள், அது வேதனையின் கருமை தந்த இறுக்கம்!

“இல்லத் தம்பி...தம்பீண்ட மகள் ஸ்கூட்டி வேணும் எண்டவள்." என்று ஆரம்பித்து, "நேற்று மோட்டார் விட வரேக்க இதைக் கண்டனான்; விக்க இருக்கோ எண்டு கேட்க நினைச்சன்." என்று சொல்லிக்கொண்டே நகர்ந்து சென்றவர், "பார்த்தால் புதுசு போலக் கிடக்கே!” என்றபடி அதைத் தொட்டுப் பார்த்தார்.

“இல்ல இல்ல, அது விக்க எல்லாம் இல்ல.”

கடைப்பெடியன் ராமு அவசரமாகச் சென்று அவரின் கரத்தை விலக்கிவிட்டவன், என்னைப் பயத்தோடு பார்த்தான்.

முதல் ஒருதடவை அதைத் தொட்டுவிட்டு கன்னம் வீங்க வாங்கியவனாச்சே!

“ஓ! விக்க இல்லையா? உங்கட பாவனைக்கு வாங்கியதா? சரி சரி, வேற ஸ்கூட்டி விக்க வந்தால் எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோவன்.” அவர் சொல்ல, பெரியவர் அவசரமாக இடையிட்டார்.

“தம்பி! இது சும்மாதானே நிக்குது? இதை வித்து விடுவமே!” தயக்கம் இருந்தாலும் சொல்லிவிட்டார்.

இனி இதற்கு இங்கு என்ன வேலை என்று எண்ணியதை வெகுவாக மறைக்க முயன்றாலும், அவர் விழிகளோ, அதை வெளிச்சம் போட்டுக் காட்டின.

காலையில் அம்மாவோ, அறையைச் சுத்தம் செய்து அவள் நினைவை அழி என்றார் என்றால், இங்கு இவர்.

உள்ளம் இயலாமையில் கொதித்தது.

பெரியவர் அதோடு நிறுத்தவில்லை. சொல்லி முடித்த வேகத்தில் என் மோதிர விரலைப் பார்த்தார்.

‘உனக்குத் தான் கலியாணம் ஆகப் போகுதே, காதலியின் நினைவுச் சின்னம் ஏன்?’ என்கிறார்.

அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டவரிடம் திரும்பினேன்.

“இல்ல, அது விக்க எல்லாம் இல்ல; வேற வந்தால் சொல்லுறம்.” சொன்ன வேகத்தில் கடையை விட்டு வெளியேறி இருந்தேன்.

அங்கு மட்டும் தொடர்ந்து நின்றிருந்தால் பெரியவரோடு வாய்த்தர்க்கமும் ஏற்பட்டிருக்கும்.

‘அந்த ஸ்கூட்டி என் மட்டில எத்தின உயர்வானது எண்டு தெரிஞ்சும் வித்திரலாம் எண்டு சொல்லீட்டாரே!’ சுறுசுறுவென்று கோபமேறியது.

எப்படியாவது என் மனத்தை மாற்றிட வேண்டும் என்று முனைந்தவர்களில் அவரும் ஒருவர். அந்த முயற்சியில் என் குடும்பத்தைப் போலவே அவரும் தோல்வி கண்டிருந்தார். இருந்தும், சரிதான் போடா என்று விலகாது, கராஜைத் தன் சொந்தத்தொழில் போன்றே பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறார். என்னுள் அந்த மரியாதையும் நன்றிக்கடனும் எப்போதும் உண்டு.

சின்னதாகவேனும் அவரை அவமரியாதை செய்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பேன்; மது போதையில் இருக்கையிலும் கூட.

அதனால் தான் அவ்வளவு வேகமாக வெளியேறினேன். அங்கிருந்து புறப்பட்ட வேகத்தில் மத்தியானம் எங்கு செல்லப் புறப்பட்டுவிட்டு மனத்தை மாற்றிக்கொண்டேனோ அவ்விடத்துக்கே வந்து சேர்ந்தேன்.

வழமையாக என்னை நானே மறக்கத் தஞ்சம் அடையும் இடமிது!

இங்கே நான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளன். சென்றமர்ந்ததும் தேவையானவை முன்னால் வைக்கப்பட்டுவிட்டன.

சிறுபொழுது அவற்றையே வெறித்திருந்தேன். முடியவில்லை. எப்போதும் போல் இன்று, என்னை என் நினைவுகளை மறக்கடிக்கும் வகையில் போதையை ஏற்றிக்கொள்ள முடியவில்லை.

என் முன்னால் இருக்கும் மதுவே என்னைப் பார்த்து எள்ளி நகையாடுவது போலிருந்தது.

‘எதுக்காக இந்த மதுவைத் தொட்டன்? வாழுற வரைக்கும் அவள்ட நினைவுகளும் இது தாற போதையும் போதும் எண்டு இருந்தனே! இண்டைக்கோ? எல்லாமே கேள்விக்குறி!’ மனம் வெறுப்போடு அரட்டியது.

முடிவாக என்ன தான் செய்யப் போகின்றேன்?

‘கல்யாணின்ட நினைவுகளோட காலம் கழிச்சிருவன்’ என்ற வைராக்கியத்தில இருந்தவன், அம்மா தன் உயிரை விடப்போவதாச் சொன்னதும் கல்யாணத்துக்குத் தலையாட்டினேன். அதேபோல இன்றைக்கும், அதே உயிரைக் காட்டி அச்சுறுத்தி கராஜூக்கு அனுப்பினார். இப்படியே, நடந்தவை எல்லாவற்றையும் மறந்துவிட்டேன், புதுமனிதனாகிவிட்டேன் என்று என்னை நானே ஏமாத்திக்கொண்டு... ‘அவளோட...வாழப் போறனா?’

இந்தக் கேள்வி மனத்தில் தோன்றிய அந்த நொடி மிகவும் கொடூரமாக இருந்தது. சுருக்கென்று நெஞ்சில் வலித்தது. தாங்கொணா வேதனையில் துடிதுடித்துப் போனேன்.

“என்ர கல்யாணியத் தவிர வேறொருத்தி என்ர வாழ்வில இல்லவே இல்ல. அவள் இல்லயோ எனக்கு வாழ்வும் இல்ல.”

அடிக்குரலில் வெறித்தனமாகச் சொல்லிக்கொண்டே மடமடவென்று மதுவை வாயில் கவிழ்த்தேன்.

தொண்டை எரிய எரிய இறங்கிய திரவம் இதயத்துள் உயிர்ப்போடு இருந்தவளின் நினைவுகளைக் கண்டபடிக் கிளறி விட்டது.



அப்போது நான் கராஜுக்கு வேலைக்கு வந்த புதிது. சிலமாதங்கள் தான் ஆகியிருந்தன.

ஒருநாள்...

அன்று மதிய உணவுண்ண நிறையவே தாமதம் ஆகியிருந்தது. கராஜில் முக்கியமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் உணவைப் பற்றிய சிந்தனையை அண்ட விடவில்லை.

“சூர்யா! இனித் தாக்குப்பிடிக்க ஏலாது...சாப்பிடுவமா?” என்றபடி வந்தான், என்னோடு வேலை செய்யும் பெடியன்.

“ரெண்டுபேரும் இன்னும் சாப்பிடாமல் இருக்கிறீங்களா? எத்தின மணியாகீட்டுத் தெரியுமா? போங்க...போய் சாப்பிட்டுப்போட்டு வந்து உற்சாகமாகச் செய்யலாமே!” என்று கலைத்துவிட்டார், எங்கள் கராஜின் உரிமையாளர் ஐயாத்துரை ஐயா.



மேலும் வாசிக்க...

 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
கதை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறந்துவிடாதீர்கள்!