• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 7

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 7


அவன் இளம் வயதில் வரைந்தது போலவே ஆசையாசையாகக் கட்டிய அதே வீடு. அதே போன்று அந்த வீட்டுக்கு நிறைமொழி இல்லம் என்று வைக்கையில் அவன் உள்ளத்தில் முழுமையாக நிறைந்திருந்தவளும் நிறைமொழிதான்.

கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, வீட்டு வாசலின் ஒரு பக்கமாக பைக்கை நிறுத்துகையிலேயே, “அப்பா!” என்று ஓடி வந்தான் அவன் மகன் சஜிதன். நான்கு வயதாகப்போகிறது. மொழிக்குப் பிறகான அவன் வாழ்க்கையின் மொத்த ஆதாரமாகிப்போனவன்.

“சஜூக்குட்டி! இன்னும் படுக்காம என்ன செய்றீங்க?” மகனைத் தூக்கிக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு வினவினான்.

“நித்திரை வரேல்லையப்பா. நாங்க பாமு மாமா வீட்டை போனனாங்க. அங்க நவி அன்ட்ரி பெருசா அழுதவா. சஜூ பயந்திட்டான். சஜூக்கு மாதிரி அவான்ர அம்மாவும் அப்புச்சாமிட்ட போய்ட்டாவாம் எண்டு அப்பும்மா சொன்னவா.” என்றதும் மகனை மார்போடு அணைத்துக்கொண்டு அன்னையைப் பார்த்தான்.

அவரும் கலங்கிப்போய்த்தான் அமர்ந்திருந்தார். அழுதிருக்கிறார் என்று தடித்திருந்த கண் மடல்கள் சொல்லின.

“அப்பா, ஏனப்பா எல்லாரின்ர அம்மாவையும் அப்புச்சாமி கூப்பிடுறார்? சஜூ பாவம், நவி அன்ட்ரியும் பாவம்.” என்று உதடு பிதுக்கினான் சின்னவன்.

“நாங்க கோயிலுக்குப் போகேக்க ஏன் எண்டு அப்புச் சாமிட்ட கேப்பம், சரியா? ஆனா அப்புச்சாமி பெரிய ஆள். அவர் கடவுள். அவர் ஏன் இப்பிடி எல்லாம் செய்றார் எண்டு எங்களுக்கு விளங்காது. ஆனா, எங்களுக்கு நல்லதை மட்டும்தான் செய்வார் எண்டு அப்பா சொல்லியிருக்கிறன்தானே.” என்று விளக்கம் சொன்னவன் அதற்கு மேலே அதைப் பற்றி மகனைப் பேச விடவில்லை.

அவன் நல்ல புத்திசாலி. என் அம்மாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு எனக்கு என்ன நல்லது செய்தார் என்று கேட்கக்கூடியவன். அவனை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து, வயிற்றில் வாய் வைத்து ஊதிச் சிரிக்க வைத்து, அந்தப் பேச்சை மறக்க வைத்தான்.

அப்படிச் சிரிக்கும் மகனைப் பார்க்கையில் மொழியின் நினைவுகள் தானாக வந்தன. அவனின் விடாத இந்தப் பேச்சும் துறுதுறு என்று இருப்பதும் அப்படியே அவள்தான். அவள் இருந்திருக்கலாம். இருந்திருக்க அவனுக்கு இந்த அலைப்புறுதல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

அதே நேரத்தில் நாவினியின் நினைவுகளும் அவனுள் படையெடுத்தன. அவளும் இப்படித்தான் கள்ளம் இல்லாமல் சிரிப்பாள். இன்று அழுதுகொண்டு இருப்பாள். தன் உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பாள் என்று நினைத்த மாத்திரத்தில் அவனால் மகனுக்காகக் கூடச் சிரிக்க முடியாமல் போயிற்று.

அவனோடு பேசுவதற்காகவே காத்திருக்கும் அன்னையைக் கண்ணால் தேற்றிவிட்டு, மகனோடு சென்று உடை மாற்றி, முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, மகனுக்கும் தனக்கும் சேர்த்துத் திருநீறு பூசிக்கொண்டு வந்தான்.

மகனின் தோளில் தொற்றியபடியே வந்த பேரனைப் பார்த்ததுமே பிரேமாவுக்கு இலேசான முறுவல் மலர்ந்துபோயிற்று. கலக்கங்கள் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தன. அந்தளவில் நெற்றிப் பரப்பு முழுக்கத் திருநீற்றினைப் பட்டையாகத் தீட்டியிருந்தான்.

அவனுக்கு ஒற்றை விரலால் கீற்றாகத் தீற்றினால் பிடிக்காது. தகப்பனின் நடு மூன்று விரல்களாலும் நன்றாகத் தொட்டு இப்படி நெற்றி முழுக்கத் தீட்ட வேண்டும். காதோரம் ஒரு செம்பரத்தையையும் செருக வேண்டும். அப்போதுதான் அவன் சுவாமி கும்பிட்டான் என்றாகுமாம்.

என்னவோ பக்திப் பரவசமானவன் போல் ஒரு தோற்றம். ஆனால், முழுமையான கள்ளச் சாமியார். வெள்ளிக்கிழமைகளை மச்சம் கொடுக்காமல் ஓட்டுவதற்குள் படாத பாடு பட்டுவிடுவார் பிரேமா.

பட்டையும் காதோரம் செம்பரத்தையுமாக வந்த பேரனை அள்ளிக் கொஞ்சிவிட்டு, “நேரமாயிற்றுது தம்பி. தேத்தண்ணிய விட்டுப்போட்டுச் சாப்பிடப்பு.” என்று உணவைப் போட்டுக் கொடுத்தார்.

“நாவினி எப்பிடி இருக்கிறாளம்மா?” சாப்பாட்டில் கவனம் காட்டி வினவினான்.

“என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? மெலி மெலி எண்டு மெலிஞ்சு எலும்பும் தோலும் தானப்பு தெரியுது. பரிமளா செத்த நேரம் கூட அந்தப் பிள்ளை இப்பிடி இருக்கேல்ல. ஆனா இப்ப… பாக்க மாட்டாய்.” என்றவருக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

“இரவுச் சாப்பாடு செய்து கொண்டுபோய்க் குடுத்துப்போட்டுத்தான் வந்தனான். சாப்பிடவே இல்ல. அழுதுகொண்டே இருக்கிறா.” என்றதும் மகனுக்கு ஒரு வாய் கொடுத்துக்கொண்டிருந்தவன் திரும்பித் தாயைப் பார்த்தான்.

“அவா அழுத அழுகையைப் பாக்க மாட்டாய் தம்பி. இஞ்ச வந்து அழுறதுக்காகவே இந்த ஒண்டரை வருசமும் கண்ணீரைச் சேத்து வச்சுக்கொண்டு வந்திருக்கிறா போல.” என்று அங்கே நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

அவளை அனாதை என்று சொல்லி, அவள் குணத்துக்குத்தான் குடும்பத்தையே பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள் என்று பரமேஸ்வரன் வீட்டினர் மண் அள்ளித் திட்டியதை அயலட்டையினர் அவருக்குச் சொல்லியிருந்தனர். அதை அவர் அவனுக்குச் சொன்னபோது சுருக்கென்று ஒரு வலி. தொண்டைக்குள் விக்கிக்கொண்ட உணவை விழுங்க மிகவுமே சிரமப்பட்டுப்போனான்.

இரவுகளில் மகனைத் தன்னோடுதான் வைத்துக்கொள்வான் கேசிகன். இன்று அந்த மகனும் நாவினியின் அழுகையைத்தான் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய இந்த மூன்றரை வருட வயதில் அவன் பார்த்த பெரும் சம்பவம் அது. அதனாலேயே அது அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது புரிந்தது.

அவள் விறாந்தையில் விழுந்துகிடந்து தரையில் கையால் அடித்து அடித்து அழுதது முதற்கொண்டு, ‘என்னை மட்டும் ஏன் விட்டுட்டுப் போனனீங்க அம்மா?’ என்று கேட்டு கேட்டு அழுதது வரை அப்படியே ஒப்பித்தான் குழந்தை.

அன்றைய அவன் உறக்கம் முற்றிலுமாகத் தொலைந்தே போயிற்று. குடும்பமாகப் போனவள் தனியாக வந்து நிற்கிறாள். என்ன நடந்திருந்தாலும், யாரில் சரி பிழை இருந்தாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறவளை அவன் போய்ப் பார்த்தேயாக வேண்டும்.

ஆனால், யாராய் நின்று அவளைக் காண்பான்? சிறு வயது தொடங்கி அறிந்த நண்பனாக, பழைய காதலனாக, அயல் வீட்டினனாக என்று எப்படி யோசித்தும் அவள் முன்னால் நிற்க முடியும் போலில்லை.

அடுத்த நாளும் விடிந்தது. அவனின் அம்மம்மா அழைத்து, கோயிலுக்குக் கொண்டுபோக வாழை இலைகளை அறுத்துத் தரச் சொன்னார்.

இவ்வளவு காலமும் பரமேஸ்வரன் வீட்டில், அதாவது நாவினி வீட்டில்தான் அறுப்பார்கள். பரமேஸ்வரன் அவளின் வீட்டைச் சுற்றி வாழைகள் போட்டிருந்தார். செழிப்பான, பிய்யாத நல்ல வாழை இலைகள் கிடைக்கும்.

அங்கே போனால் கோயில் அன்னதானத்திற்குத் தேவையான மொத்த இலைகளையும் வெட்டிவிடலாம் என்று மொழியின் தம்பி முகிலனை அனுப்பிவிடுவான். இவன் போகமாட்டான். இன்று அவன்தான் போக வேண்டும். அப்படியே அவளையும் பார்த்துப் பேச வேண்டும்.

அதை நினைக்கவே கால்கள் பின்னின. அவன் மனநிலை அறியாத பிரேமா, “நீயும் அவாவை ஒருக்கா போய்ப் பாக்கத்தானேயப்பு வேணும். உன்னட்டப் படிச்ச பிள்ளை எல்லா? சின்ன வயசில என்னத்துக்கு எண்டாலும் அவாக்கு நீதானே வேணும். போய் ஆறுதலா ரெண்டு வார்த்த கதச்சிப்போட்டு, இலையையும் அறுத்துக்கொண்டு வாங்கோவன்.” என்று சொன்னார்.

இலை அறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மகனையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மா வீட்டுக்குச் சென்றான். அங்கே சின்னவனை விட்டுவிட்டு நடையிலேயே நாவினி வீட்டுக்குப் போனான்.

நெஞ்சில் ஒரு தடதடப்பு. போனமுறை வந்தவளை இலகுவாகப் புறம் தள்ளவும், அவளைக் கடந்து போகவும் அவனால் முடிந்தது. இந்த முறை?

தயக்கம் இருந்தாலும் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவளின் வீட்டின் பக்கச் சுவர் பக்கமாக, அவர்கள் இருந்த காலத்திலேயே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அவள்.

அன்னை சொன்னபோது கூடத் தெரியவில்லை. அந்தளவில் எலும்பு மட்டுமே தெரிந்தது. கன்னங்கள் இரண்டும் ஒட்டி அந்த முகத்தில் கண்கள் மட்டுமே தெரிந்தன. ஒரு காலத்தில் செழிப்பும் செழுமையுமாக இருந்து, அவன் பார்த்து ரசித்த கன்னங்களைக் காணவே இல்லை. கழுத்தோரத்து எலும்பு கூட எழும்பி நின்றது.

கழுவித் துடைத்த முகத்தில் பொட்டு இல்லை. கண் மடல்கள் இரண்டும் தடித்துச் சிவந்திருந்தன. மூக்கின் சிவப்பு அப்போதும் அழுத்திருக்கிறாள் என்று சொல்லிற்று. கீற்றாகத் திருநீறை மட்டுமே பூசியிருந்தாள். தலைமுடியை வாராமல் அப்படியே சேர்த்து வூல் பாண்ட் போட்டிருந்தாள்.

முழங்கால் வரை நிற்கும் சட்டை ஒன்றை அணிந்து, கழுத்தோரம் மெல்லிய செயின் மட்டுமே கிடக்க அந்த ஊஞ்சலில் சப்பாணி கட்டி அமர்ந்திருந்தவள், ஊஞ்சலின் ஒரு பக்கக் கம்பியில் இலேசாகத் தலை சாய்த்திருந்தாள்.

இவன் வந்திருப்பதை உணரவேயில்லை. வீசிய காற்றின் பயனாக ஊஞ்சல் இலேசாக அசைந்தபடியிருந்தது. எங்கோ ஒரு புள்ளியில் தன் எண்ணங்களைத் தொலைத்துவிட்டு, வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

இதே ஊஞ்சலில் அவர்களின் பல சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதும் இப்படித்தான். கால்களைத் தொங்கவிட்டு அமரமாட்டாள். அதுவும் தள்ளி விடுவதற்கு இவனோ அவள் தம்பிகளோ இருந்தால் இப்படித்தான் சப்பாணி கட்டி அமர்ந்துவிடுவாள்.

அவளின் முன்னால் நின்று, தன்னை நோக்கி வருகிறவளின் ஊஞ்சல் பலகையின் இருபுறமும் பற்றிப் பின்னால் தள்ளிவிட்டபடி அவளிடம் வாய்ப்பாட்டையோ, படித்த பாடத்திலிருந்து கேள்விகளையோ கேட்பான்.

இப்போதும் அவன் கைகள் தன்னை மீறித் துறுதுறுத்தன. ஆனால் இன்று அவன் யாரோ, அவள் யாரோ. அந்த நினைவு வருகையில் உள்ளூர ஒரு வலி ஊடுருவி, நெஞ்சைப் பிசைந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இலேசாகக் கனைத்தான்.
 

Vishakini

Moderator
Staff member
அப்போதுதான் அவள் கவனம் கலைந்து அவனிடம் திரும்பிற்று. “வா…ங்க!” என்றாள் மெல்லிய குரலில்.

அந்தக் குரலில் உயிர்ப்பு என்பது மருந்துக்கும் இல்லை. இவனைப் பார்த்த பரபரப்பும் அவளிடம் இல்லை.

“எப்பிடி இருக்கிறாய்?” என்றான் தன்னையும் கொஞ்சம் சமாளித்தபடி.

இருக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.

பிறகேன் கண்ணில் நீர் என்று கேட்க உந்தியதை அடக்கி, “வாழை இலை அறுக்க வந்தனான்.” என்றான் கையில் இருந்த கத்தியையும், அங்கே நின்ற வாழைகளையும் காட்டி.

வாழைகள் நின்ற பக்கமாகக் கையைக் காட்டினாள் அவள். மேலதிகமாக எதையும் பேச விழையவில்லை.

அவனும் வேறு பேச வராமல் நல்ல இளம் இலைகளாகப் பார்த்து அறுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினான். முழு இலைகளாக இருந்தால் இருபது இருபத்தி ஐந்துக்கு மேல் வேண்டும் என்று சொல்லியிருந்தார் அம்மம்மா.

அதற்கு ஏற்ற வகையில் பார்த்து பார்த்து இலைகளை அறுத்துக்கொண்டிருந்தாலும் அவனுக்கும் அவளுக்குமிடையில் இருக்கும் அந்த அழுத்தமான அமைதி, இலையை அறுக்கும் கத்தியாக அவன் நெஞ்சை அறுத்தது.

திரும்பி அவளைப் பார்த்தான். திரும்பவும் ஊஞ்சல் கயிற்றில் தலை சாய்த்து, எங்கோ பார்வையைப் பதித்திருந்தாள்.
வேறு யாரையும் காணவில்லை. ஆனால் அன்னை வேறு யாரோவும் இருப்பதாகச் சொன்னாரே.

“தனியவா இருக்கிறாய்?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவன் புறம் பார்வையைத் திருப்பி, “இல்ல, மாதவன் அங்கிளும் அன்ட்ரியும் இருக்கினம். அங்கிள் நடக்கப் போய்ட்டார். அன்ட்ரி சமைக்கிறா போல.” என்றாள்.

அது யார் என்று தெரியாதபோதும் கேட்கவில்லை அவன். இதற்குள் பேச்சுக்குரல் கேட்டு வைதேகி வெளியே வந்தார். சின்ன வயதிலிருந்து தெரிந்தவன் என்றதும் அவன் மறுத்ததையும் கேளாமல் தேநீர் கொண்டுவந்து கொடுத்தார்.

சத்துமாவில் காய்ச்சிய கஞ்சியைக் கொண்டுவந்து அவளிடம் நீட்டினார். “தேங்க்ஸ் அன்ட்ரி!” கண்கள் பனிக்க உள்ளத்திலிருந்து சொன்னாள்.

“அடிதானம்மா வாங்கப்போறீங்க.” என்று பாசமாக அவளைக் கடிந்துவிட்டு, “இரவும் சாப்பிடேல்லை. சொட்டும் விடாம குடிக்கோணும் சொல்லிப்போட்டன்.” என்று உரிமையோடு அதட்டிச் சொன்னார்.

எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்று கேசிகனோடும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அடுப்பில் கறி கொதிக்கிறது என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் அவர்.

“எத்தின நாளைக்கு இஞ்ச நிப்பாய்?” தேநீரைப் பருகியபடி விசாரித்தான்.

“இன்னும் ரெண்டரைக் கிழமை.”

“வீட்டை என்ன செய்யப் போறாய்?”

“வாடகைக்கு விடலாம் எண்டு மாதவன் அங்கிள் சொன்னவர்.”

“ஏதாவது உதவி வேணுமெண்டா கேளு.”

சரி என்று சிறிதாகத் தலையை மட்டும் அசைத்தாள் அவள். அந்த அசைப்பே உன்னிடம் வரமாட்டேன் என்று சொன்னது போலிருந்தது அவனுக்கு. கேசிகனால் அடுத்துப் பேச முடியாமல் போயிற்று.

அப்போது, “அப்பா!” என்று ஓடி வந்தான் சஜிதன். அவன் பின்னால் அவன் சாடையிலேயே கொஞ்சம் வளர்ந்த இன்னொருவன். “தம்பி உங்களைக் கேட்டு அழுதவன் அத்தான். கோல் பண்ணினனான். நீங்க எடுக்கேல்ல. பாட்டி நீங்க இஞ்ச நிப்பீங்க எண்டு சொன்னா. அதான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்று சொன்னான் அவன்.

உடனேயே இனம்காண முடியாதுபோனாலும் நிறைமொழியின் தம்பி முகிலன் என்று கண்டு பிடித்திருந்தாள் நாவினி. அவர்கள் வீட்டில் மூத்தவன் மயூரன். பிறகு நிறைமொழி. அதன் பிறகு பிந்திப் பிறந்தவன் இந்த முகிலன். இவள் இங்கிருந்து போகையில் அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருந்த நினைவு.

இவளை நோக்கி இதமாகப் புன்னகைத்து, “ஹாய் அக்கா!” என்றான் முகிலன்.

“நவிய உனக்கு நினைவிருக்கா?” மகனைத் தூக்கிக் கையில் வைத்திருந்த கேசிகன் வினவினான்.

இல்லை என்பதுபோல் சிறு கூச்சத்துடன் தலையசைத்துவிட்டு, “அது… நவி அக்கா எண்டுறவாவ நினைவிருக்கு. அவாட முகம் மறந்துபோச்சு.” என்றான் அவன்.

“உனக்கு இவனைத் தெரியும்தானே. முகிலன். மொழின்ர தம்பி.” என்று அறிமுகம் செய்தான் கேசிகன்.

அந்த மொழி என்கிற பெயர் மிகுந்த நெருக்கத்துடனும் நேசத்துடனும் அவன் வாயிலிருந்து வருவதை உள்ளூர உணர்ந்தபடி மேலும் கீழுமாகத் தலையசைத்தாள் நாவினி.

இதற்குள் அவனிடமிருந்து இறங்கி அவளிடம் வந்தான் சஜிதன். “உங்களுக்கு மாதிரித்தான் என்ர அம்மாவையும் அப்புச்சாமி கூட்டிக்கொண்டு போய்ட்டார். வாறீங்களா நானும் நீங்களும் போய், எங்கட அம்மாவை ஏன் கூட்டிக்கொண்டு போயிட்டீங்க எண்டு அப்புச்சாமியக் கேப்பம்.” என்று வினவினான்.

பெரும் அதிர்வுடன் திரும்பிக் கேசிகனையும் முகிலனையும் மாறி மாறிப் பார்த்தாள் நாவினி.

கேசிகனுக்குக் குழப்பம். இது இவளுக்குத் தெரியாதா என்று உள்ளே ஓடினாலும், “தம்பின்ர முதல் பிறந்தநாள் முடிஞ்சு கொஞ்ச நாளில அவளும் ரோட் ஆக்சிடென்ட் ஒண்டில ஸ்பொட்லேயே…” என்றவன் மேலே சொல்ல முடியாமல் நிறுத்திவிட்டான்.

அன்று கண் முகமெல்லாம் மலர, ‘கலியாணம் போன வருசம் நடந்தது’ என்று பூரிப்புடன் சொன்ன பெண் இல்லையா? என்ன கொடுமை இது? கொஞ்ச நேரம் அதை ஜீரணிப்பவள் போல் தவித்துவிட்டு, “சொறி! எனக்குத் தெரியாது.” என்றாள் அவன் துயரைப் பகிர்ந்துகொள்கிறவளாக.

கேசிகனுக்கு இன்னுமே குழப்பம்தான். அவளின் அன்னையும் தந்தையும் எடுத்து அவனோடும் அவன் அன்னையோடும் கதைத்திருந்தார்கள். மயூரன் வீட்டிலும் அவர்கள் பேசியது தெரியும்.

பிறகு ஏன் அவளிடம் சொல்லவில்லை? ஒன்றும் புரியாதபோதும் கேட்டுக்கொண்டு போகவில்லை அவன். அதைவிட அவனுக்கு நேரமாகியிருந்தது. இலைகளைக் கொண்டுபோய் அம்மம்மாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டுக்குப் போய் உணவை முடித்துக்கொண்டு, சுப்பர் மார்க்கெட்டுக்குப் போக வேண்டும்.

அதில் வேக வேகமாகத் தேவையான மிகுதி இலைகளை அறுத்தான். அவற்றை இரண்டு பகுதியாகப் பிரித்தான். தூக்கிக்கொண்டு போவதற்கு ஏற்ப, இலைகள் பிய்யாத வகையில் இலேசாக ரோல் போன்று சுற்றி, வாழை நார் கிழித்துக் கட்டினான்.

ஒன்றை முகிலன் தூக்கிக்கொள்ள மற்றையதை அவன் தூக்கிக்கொண்டான். வைதேகியிடமும் அவளிடமும் சொல்லிக்கொண்டு அவன் நடக்க, “பாய் அன்ட்ரி!” என்றுவிட்டு அவர்கள் பின்னே ஓடினான் சின்னவன்.
 

aymaan

New member
கேசிகனை அடி மனதில் இருந்து வெறுக்கிறேன்.யார் என்ன சொல்லி இருந்தாலும் அவளிடம் பேசி இருக்கணும்.
Same here sis Nithani mam please Naaviniya Kaesigan kooda sethudaadeenga.
 

vidhya s

Member
கேசிகன மன்னிக்க நவி னால முடியுமா தெரில எங்களால முடியும் னு தோனல
 

Kalai Karthi

Active member
கேசி ஒருத்தி காதலிக்கும் போது இன்னொருத்தி காதல் செய்து இருக்கிறான் நிறைவாக. அபிராமி ஏதாவது செய்து இருப்பாளோ?.
 
Top Bottom