• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9


லோஃபர்ஸை கழற்றி ஷூ ராக்கில் வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் சித்தார்த்தன். அவனால் எதிரிலிருந்த அவனின் அன்னை தந்தை புகைப்படத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. குற்றவுணர்வு குத்திக் கிழித்தது.


கற்புநெறி குறித்து அவனது தாய் அநுத்தமா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுக்கு மனப்பாடம். அவர் பாரதியாரின் பரம விசிறி. மனப்பாடமாய் பாரதியின் பாடல்களை சொல்லி பொருள் சொல்லுவார்.


ஒருமுறை அவர், ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்று பாரதியார் சொல்லியிருப்பதாகச் சொல்லி, ஆண்பிள்ளைகளும் சூதானமாக இருக்க வேண்டிய காலமென்று அவனுக்கு அறிவுரை கூற, சிரத்தையுடன் கேட்டுக்கொண்டான் சித்தார்த்தன்.


ஆனால், இன்று அந்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் வேலையையா அவன் செய்திருக்கிறான்?


“அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா. நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன்மா. ஜெயகாந்தனோட அக்னி பிரவேசம் சிறுகதையில இது மாதிரி கெட்டுப்போய் வர்ற தன் மகளுக்கு தாய் தலைல தண்ணீரை ஊத்தி, நீ சுத்தமாயிட்டடி குழந்தைனு சொல்ற மாதிரி, என் தலைலயும் தண்ணி ஊத்தி என்னை சுத்தம் பண்ணுங்கம்மா. நீ சுத்தமாயிட்டடா கண்ணானு சொல்லுங்கம்மா” என்று கதறினான்.


அதற்கு வாய்ப்பேதும் இல்லையென்பது புரிந்ததும், சோர்ந்து சோஃபாவில் சரிந்தான்.


மாலை மின்விளக்கை கூட போடத் தோன்றாமல் இருளில் கிடந்தான். அவன் அகம் இருளில் மூழ்கிவிட்ட பிறகு, புறம் வெளிச்சமாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்ற அலட்சியம் அவனுக்கு.


அவ்வேளை தான் மின்விளக்கின் ஸ்விட்சை போட்டாள் பானுமதி. மாலையே வீட்டிற்கு திரும்பியிருக்க வேண்டியவள், இவ்வளவு நேரம் கடந்து வருவதை எல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லை.


ஆனால், அவளின் முகத்திலிருந்த கண்ணீர் தடயங்கள்…


“பானு என்னாச்சுடா? ஏன் இப்படி கண்ணு ரெண்டும் வீங்கியிருக்கு? காலைல கூட நல்லா தானே இருந்த?” என்று வினவ,


“அண்ணா” என்று அவனின் நெஞ்சில் வந்து விழுந்தாள் தங்கை.


“அண்ணா நான் மோசம் போயிட்டேண்ணா” என்று அலற, அவன் உடல் விறைத்தது.


“பானு புரியுற மாதிரி சொல்லு” என்று கோபமாக அவளை உலுக்கினான்.


“அவர்.. அவர்.. என்னை ஏமாத்திட்டார்ணா. என்னை காதலிக்கலைனு சொல்லிட்டார்ணா.” என்று அழுது கரைந்தாள்.


“ஏன்? ஏன் அப்படி‌ சொன்னாரு?” என்று புரியாமல் கேட்டான்.


“நான் கேட்டேண்ணா. ஆனா, அவர் அதை சொல்லக்கூட என் வாய் கூசுதுனு சொன்னாருண்ணா. நான் கொடுத்தேன் இல்ல அந்த வாட்ச்? அதை கழட்டி என் மூஞ்சில வீசி எறிஞ்சிட்டார்ணா. ஒருவேளை.. ஒருவேளை.. அந்த வாட்ச் மாறின விசயத்தை நான் மறைச்சது அவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அந்த ஆத்மீகா மேடம் போய் அவர்கிட்ட இந்த விசயத்தை சொல்லிட்டாங்களோ? எனக்கு அசிங்கமா இருக்குண்ணா. அவர் என்னைவொரு ஈனப்பிறவினு நெனச்சு தான் காதலை முறிச்சிக்கலாம்னு சொல்லியிருக்காரு. சொல்லுண்ணா? அந்த மேடம் நம்மளை பழி வாங்கிட்டாங்களா?” என்று துவண்டு கீழே உட்கார்ந்தாள்.


அவனுக்கும் ஒருவேளை அப்படியிருக்குமோ என்று தோன்றியது. ஆனால், ஆத்மீகா கண்ணபிரான் அப்படிப்பட்டவள் இல்லையென்றும் அவன் இன்னொரு மனம் அடித்து சொன்னது. ஏனோ நம்பிக்கை துரோகியாகவோ, நேர்மையற்றவளாகவோ அவளை எண்ணத் துணியவில்லை அவனுள்ளம்.


பிறகு எப்படி என்றவன் யோசிக்க.. வாகன நிறுத்தத்தில் சந்தித்த அந்த இளைஞன்…


“அவர் பேரென்ன பானு?”


“விஹான் ணா”


“விஹான்”- அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்தது அவன் மூளையில்.


அவனது ஒழுக்கக்கேட்டில் பானுமதி பலியாகியிருக்கிறாள்.


ஆனால், அவளின் ஒழுங்கீனத்தில் தானே அவனது‌ ஒழுக்கம் பலியானதென்று கொடூரமாக குதூகலிக்க முடியவில்லை அவனால். அவளுக்காக இரங்கினான்.


அவனுக்கு இன்னொரு பக்கம் பானுவின் துக்கங்கள் யாவும் அதிகப்படியாக பட்டன.


அவள் அப்பாவிப்பெண் என்பதால், தனக்கு ஏற்பட்ட நிலையெதுவும் அவளுக்கு ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து, கம்மிய குரலில் விசாரித்தான்: “பானு நீ.. அவர் உன்கிட்ட தப்பா எதுவும் நடந்துக்கிடலையே?”


“அதெப்படிணா? நான் எப்படி அதுக்கு அனுமதிச்சிருப்பேன்? நான் உன் தங்கச்சிணா. எனக்கு பத்து வயசுல நம்ம அம்மா இறந்து போயிட்டாலும், ஒரு பொண்ணு எப்படி வாழனும்னு நம்ம அம்மா சொல்லிட்டு போன ஒவ்வொரு வார்த்தையும் அக்காங்க மூலமா எனக்கு மனப்பாடம். நான் செத்தாலும் அந்த வார்த்தைகளெல்லாம் என் நெஞ்சைவிட்டு போகாது. ஆமா நீ எப்படிணா என்கிட்ட இந்த மாதிரி கேட்கலாம்? அன்னைக்கு நான் வாட்ச் மாறினதை நேர்மையா சொல்லி திருப்பி கொடுக்காதனால தான? குற்றமே தண்டனையா மாறும்னு சொல்றதுக்கு அர்த்தம் இப்ப தாண்ணா எனக்கு புரியுது. நான் ஒரு முட்டாள்ணா. ஒரு நிமிசம்.. ஒரு நிமிசம்.. என் புத்தி தடம் புரண்டதோட பலனை ரணக்கொடூரமா அனுபவிக்கறேன். இனி என்னால எப்படிணா காலேஜுக்கு போக முடியும்? அவருக்கும் எனக்கும் ப்ரேக்கப்பானு போட்டிபோட்டு விசாரிப்பாங்களே. எல்லார் வாய்க்கும் நான் அவலாகிடுவேனே. என்னை எங்கேயாவது மலைஉச்சிக்கு கூட்டிப்போய் தள்ளி விட்டிருணா. இல்ல கடல்ல தள்ளி விட்டிரு. இதுக்கப்பறம் நான் வாழ்றதுலயே அர்த்தம் இல்லைணா” என்று பிச்சி போல் அவள் புலம்ப, அவனுக்கு அவன் வேதனையையும் மீறி அவள் மீது கனிவு உண்டானது.


அவள் எந்த அளவுக்கு அந்த விஹானை விரும்பியிருந்தால், அவனது விலகலை உயிரே போனது போல் நினைத்து துடித்துக் கொண்டிருப்பாள்?


“இங்கப்பாரு பானு! நீ ஒரு தப்பு செஞ்ச. அந்த தப்பை உணர்ந்து இப்ப திருந்தவும் செஞ்சிட்ட. மேலும் மேலும் அதைப் பத்தியே யோசிக்கறதுல துக்கம் தான்மா மிஞ்சும். அந்த விஹான் இல்ல? அவருக்கு உன்னை மாதிரி ஒரு அன்பான பொண்ணை கல்யாணம் பண்ண கொடுத்து வைக்கல. அதுக்காக நீ தப்பான முடிவுக்கெல்லாம் போகக்கூடாது சரியா? அண்ணனுக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்றதும், தேம்பலுக்கிடையே சத்தியம் செய்தாள்.


அவன் அவளுக்கு தேநீர் தயாரிக்க எழுந்தபோது, “அண்ணா, நான் இனிமே அந்த காலேஜுக்கு போக மாட்டேண்ணா” என்றாள்.


அவன் சரியென்றான்.


“நாம இந்த வீட்டுல இருக்க வேண்டாம்ணா. அவருக்கு இந்த அட்ரஸ் தெரியும்” என்றதும், அவன் இழுத்து மூச்சுவிட்டான்.


“பானு பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகமே இருண்டுருச்சினு நெனைக்குமாம். அந்த மாதிரி இருக்கு நீ சொல்றது. நாம எங்கப்போனாலும் அவர் தேடி வர்றவரா இருந்தா என்ன பண்றது?” என்று அவளை யோசிக்கச் செய்தான்.


“ஆனா எனக்கு இங்க இருக்க வேணாமே. உனக்கு நான் சொல்றது புரியலைணா. இங்க எல்லாமே அவரை எனக்கு ஞாபகப்படுத்த மாதிரியே இருக்கு. எனக்கு வேற ஊருக்கு போகனும். என்னை ஹாஸ்டல் எங்கேயாவது சேர்த்து விட்டிருணா ப்ளீஸ்” என்றதும், அவனுக்குள்ளும் ஒரு வெளிச்சம் பரவியது.


பானு சொல்வது போல் வேறு ஊரிற்கு சென்றால் தான் என்ன? நமக்கும் நடந்ததை மறக்க வசதியாயிருக்கும். ஆனால், இந்துவும் மதுவும்? இப்போது மட்டும் அவர்களுடன் தினமும் கொஞ்சுக்குலாவும் சூழ்நிலையிலா நாம் இருக்கிறோம்? வேறு நாட்டில் இருப்பவர்கள் போலத்தான் அரிதினும் அரிதாய் சந்திக்கிறோம்? அதனால் அதைவொரு தடையாக ஏன் நினைப்பானேன் என்று அவன் மனமே வாதம் புரிந்தது.


ஆனாலும் இங்கிருந்து செல்வதென்றால் எங்கே செல்வது என்று குழப்பம் அவனுக்குள்.


பானுமதியிடம், “எதுவாயிருந்தாலும் யோசிச்சு செய்வோம் பானு” என்றுவிட்டு சமையலறை சென்றான்.


குளிர்சாதனப்பெட்டியில் காலையில் வாங்கிய பால் பாக்கெட் இருந்தது. அவளுக்கும் தனக்கும் தேநீர் தயாரித்தான். அப்போது பால் சட்டியில்- சாக்லேட் மஃப்பின் போல்- தேயிலைத்தூள் நுரையுடன் பொங்கி வர, அவனது நாசி தேயிலையின் மணத்தை ஆழ உள்ளிழுத்தது. ஊட்டி தேயிலைத்தூள்!


சிறு வயதில் அவனின் அன்னையுடன் அவரின் நாடக படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்ற ஞாபகம் வந்தது. அவனுக்கு அங்கு யாரையும் தெரியாது. இருந்தாலும்.. அந்த தேயிலைச் செடிகளின் மணம்.. ஆம், யாரும் எளிதில் கணிக்க முடியாத ஊர் அது. அதனால் அங்கு செல்லலாம் என முடிவெடுத்தான்.


தனது மற்ற தங்கையரிடம் தனக்கு ஊட்டியில் ஒரு பிரசித்தி பெற்ற உணவுவிடுதியில் வேலை கிடைத்திருப்பதாய் பொய் கூறியவன், பானுமதியிடமும் அவ்வாறே கூறச் சொன்னான்.


அதன்படி அதிமுக்கிய பொருட்களை மட்டும் பெட்டி கட்டி, வீட்டிலிருந்த இதர பொருட்களை வீட்டின் உரிமையாளரிடமே கேட்ட விலைக்கு விற்றுவிட்டான் சித்தார்த்தன்.


அப்போது பானுமதி தனது புத்தகப்பைக்குள் கை விட்டு அந்த கிங் செய்கோ கைக்கடிகாரத்தை எடுத்து கொடுக்க, அவன் விதிர்த்தான்.


“இந்தாண்ணா இதைப்போய் அந்த மேடம் கிட்ட கொடுத்துட்டு வா. நமக்கு சொந்தமில்லாதது நம்மகிட்ட இருக்க வேண்டாம்” என்றவள் ரோசமாக சொல்ல, அவனுக்கு அய்யோவென்று கதற வேண்டும் போல் இருந்தது.


இதற்காக தானே அவன் தனது மானத்தை விற்றான். இப்போது இந்த கைக்கடிகாரத்தை கொடுத்தால் அவனது போன மானம் திரும்ப கிடைத்துவிடுமா? அவனின் உடல் புனிதமடைந்துவிடுமா? இறைவா என்னை ஏன் இப்படியெல்லாம் சோதிக்கிறாய் என்று வெதும்பியவன், அதனை வாங்கிக்கொண்டு அஞ்சல் அலுவலகம் சென்றான்.


ஆத்மீகா கண்ணபிரானின் முகவரிக்கு அதை பொட்டலம் கட்டி அனுப்ப சொல்லிவிட்டு, தான் தனது தங்கையோடு இரயிலில் கோவைக்கு பயணமானான்.


அவனின் பயணத்தை அறியாத ஆத்மீகா கண்ணபிரானோ தலைக்கு மேலிருந்த வேலைகளிலும் அடிக்கடி - அவனின் ஆக்கிரமிப்பை தாபத்தோடு நினைத்துப் பார்த்தாள்.


அவன் விரல்களின் ஸ்பரிசங்களை நினைத்தால் இப்போதும் அவளுக்கு ஜிவ்வென்று இருந்தது.


அவன் வேண்டும் என்று அவள் உடலின் ஒவ்வொரு செல்லும் கேட்டன. திடீரென கன்னங்கள் சூடாகின அவன் தன்னை முத்தமிட்ட‌ கணத்தை‌ நினைத்து. அவளுக்கு வெட்கப்பட தெரியும் என்பதே- அவன் அவளின் ஆடைகளை களைந்தபோது தான் தெரியும்.


அதிலும் அவளுக்கு வலிக்குமோ என்று பார்த்து பார்த்து அவன் கூடிய விதம் இருக்கிறதே- இதுவரை எந்த ஆணிடமும் அத்தகைய நிதா‌னத்தை அவள் கண்டதில்லை. மலைக்க வைத்துவிட்டான்.


பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை மூடி வைத்தாள். அவளுக்கு அந்த சுகம் இன்னொரு முறை வேண்டும். அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமென்றாலும் சரி. அவன் அவளுக்கு வேண்டும்.


அவனைத் தேடி அவன் வேலை பார்த்த உணவுவிடுதிக்கு சென்றாள். அவன் வேலையை விட்டு நின்று விட்டதாய் தெரிவித்தார்கள். அதிருப்தியாக அவனின் வீட்டிற்கு சென்றாள். இன்றும் மின்தூக்கியில் கோளாறு. ஆனால், உல்லாசமாய் இரண்டு இரண்டு படிகளாய் தாவிச் சென்றாள்.


வீடு ‘டூ லெட்’ பலகையுடன் பல்லிளித்தது. வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தாள். அவர் பேச மறுத்தார். வீட்டை தான் வாடகைக்கு எடுப்பதாக கூறி கதவை திறக்கச் சொன்னாள்.


அவளின் தோரணைக்கு அவள் இங்கு வந்து தங்குவதாவது? அவர் திகைத்தார்.


ஆனால், அவள் கத்தையாக பணத்தை தூக்கி நீட்டவும், மறுகையில் சாவியை தந்துவிட்டு சென்றுவிட்டார்.


அந்த வரவேற்பறையை ஒட்டிய சிறிய அறை முழுவதும் சித்தார்த்தனின் வாசனை. அவளுக்கு இந்த அளவிற்கு அவனை பிடித்திருப்பது அவளுக்கே வியப்பாக இருந்தது.


அங்கிருந்த மெத்தையில் சரிந்து அவனின் கையணைப்புக்குள் இருப்பவள் போல் மெல்ல கண்களை மூடினாள்.


தொடரும்…

இனி சித்தார்த்தன் மீண்டும் ஆத்மீகாவை சந்திப்பானா? அப்படி சந்தித்தால் அவனின் நிலை என்னவாகும்?

தெரிந்துகொள்வோம் அடுத்தடுத்த அத்தியாயங்களில். இந்நாவலை வாசிப்பவர்கள் தளத்தில் லாகின் செய்து கமெண்ட் எழுத தவறவேண்டாம் நண்பர்களே. அதுவே என்னை தொடர்ந்து எழுத உற்சாகமளிக்கும்.
 
Last edited by a moderator:

Sowdharani

Well-known member
ஒரு 30 ஆயிரம் ரூபாய் watch க்கு அவனையே விக்கிற நிலைமை
 
Top Bottom