மையல் மீளுதே மேகவியே - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,726
1,146
113

குடியிருப்பு பகுதியின் அருகேயான ஆலயத்தில் இருந்து ஒலித்த பக்திப் பாடலின் சத்தத்தில் இமைகளைப் பிரித்தான் சத்தி. சற்றே உடலைத் திருப்பி பக்கவாட்டில் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மேகவி.

அனிச்சையாய் கரம் நீண்டு படுக்கையை ஒட்டியது போலான மேஜையில் இருந்த கைப்பேசியை எடுத்தது. அதனை ஒளிரவிட்டுப் பார்க்க, ஐந்து நாற்பது எனக் காட்டியது.

வழக்கமாய் அவன் எழுவது ஏழு மணிக்கு மேல்தான். ஊரிற்கு வரும் பொழுதினில் மட்டும், கோவிலின் காலை நேர பூஜை ஒலி ஆடவனின் துயிலை முன்னரே துரத்தி விடும்.

ஒரு கொட்டாவியை வெளிவிட்ட படி எழுந்து அமர்ந்தான். அருகே மங்கையவள் மறுபக்கம் திரும்பிப் படுத்ததன் விளைவாய், கவனம் அவளிடம் திரும்பியது.

உறங்கும் பெண்மைக்கு, வைகறை பூக்களது முகிழ் நிலையின் சாயல். மார்பின் மேல் பக்கம் வரை, போர்வையை இழுத்துப் போர்த்தி இருந்தாள். அதனை விலக்கிப் பார்த்தால், இரவில் உடுத்திய புடவை எத்தனை தூரம் விலகி இருக்கிறது என அறியலாம்.

மையலால் அதனைச் செய்து பார்த்திட ஆசை கொண்டது ஆடவனின் மனம். எனினும் உள்ளிருந்த கண்ணியவான், 'வேணாம் சத்தி. இப்படி நினைக்கிறது தப்பு!' என எச்சரித்திட, எல்லை மீறாது மெலிதான புன்னகையுடன் அவளின் அருகே உடலைச் சாய்த்தான்.

வலது கையில் தலையைத் தாங்கியபடி படுத்துக் கொண்டு நோக்கினான்.

முதன்முதலாய் மங்கையைக் கண்டது நினைவிற்கு வந்தது. இரண்டு ஆண்டுகளிற்கு முன்பான நிகழ்வு அது.

விடுமுறைக்காக ஊரிற்கு வந்திருந்த தருணம். அன்றைய தினம் தந்தைக்கு ஓய்வளித்து டயாலிசிஸ் சிகிச்சைக்காக அன்னையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை தான் ஏற்றிருந்தான்.

முற்பகல் பதினோரு மணிக்கு மருத்துவமனை சென்றது. வரிசைப்படி மருத்துவரைப் பார்த்து, சிகிச்சையை முடித்துக் கொண்டு கிளம்பும் பொழுது மாலை நான்கை நெருங்கிவிட்டது.

இல்லம் திரும்பும் வழியில், மேம்பாலம் ஒன்றின் இறக்கத்தில் சற்றே போக்குவரத்து நெரிசல்.

அயர்வின் காரணமாக ஆட்டோவிலேயே கண் அயர்ந்து இருந்தார் புஷ்பவதி.

ஓட்டுநர் ஹாரனை அழுத்துவதும் அவ்வப்போது இறங்கி எட்டிப் பார்ப்பதுமாக இருக்க, "என்ன ஆச்சு அண்ணே?" என விசாரித்தான் சத்தி.

"ஏதோ ஆக்ஸிடெண்ட் போல தம்பி. நாலரைக்கு ஸ்கூல் சவாரி இருக்கு. உங்கள விட்டுட்டு கரெக்ட் டைமுக்குப் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா இப்படி டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வேற ஆட்டோவை அனுப்பலாம்னு பார்த்தா, ஸ்கூல்ல என்னைத் தவிர வேற யாரு போனாலும் பிள்ளைகளை அனுப்ப மாட்டாங்க." என அவர் தனது இக்கட்டான நிலையை உரைக்க, "அம்மா தூங்குறாங்க. ஒரு கண்ணு வச்சிக்கோங்க அண்ணே. நான் போயி, என்னனு பார்த்திட்டு வர்றேன்!" என்றுவிட்டு நகர்ந்து வந்தான்.

கூடியிருந்த கூட்டத்தை விலக்கிப் பார்க்க, இரு சக்கர வாகனம் ஒன்று அதிவேகமாய் வந்ததன் காரணமாக அதன் சக்கரம் வழித்தடத்தில் பிறழ்ந்து விபத்து ஏற்பட்டு இருந்தது.

அதில் இரண்டு ஆண்கள் பயணித்து இருந்தனர்.

பெரிய அளவிலான காயம் எதுவும் இல்லை. கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு, இருவரது உடலில் இருந்தும் சிறிதளவு குருதி வெளிநடப்பு செய்திருந்தது.

மேகவியும் மேலும் இரண்டு ஆண்களும் விபத்து நடந்தவர்களிற்கு உதவிக் கொண்டிருந்தனர். பின்னர் தான் தெரிய வந்தது, உதவியவர்கள் காயம் அடைந்தவர்களின் நண்பர்கள் என.

அங்கு அவனை ஈர்த்தது, அவள் செய்த உதவி அல்ல. அதன் பின்பான நிகழ்வு.

காயம் அடைந்தவனில் ஒருவன் மேகவிக்கு நன்றி தெரிவிக்க, நொடி இடைவெளியில் உதவியவரில் ஒருவன் வந்து, "தேங்க்ஸ் மேடம்." என்றான்.

அடுத்ததாய் மீதம் இருந்த இருவரும் பேசுவதற்காக வர, நால்வரையும் ஒருசேர மேல் இருந்து கீழ் வரை பார்வையால் அளந்தவள், "பாவப்பட்டு போனா போகுதுனு வந்து ஹெல்ப் பண்ணி இருக்கேன். தேங்க்ஸ் சொல்லுறேன்ற பேர்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தரா வந்து என்கிட்ட பேசி, ஏண்டா இந்த உதவியைச் செஞ்சோம்னு நினைக்க வச்சிடாதீங்க."

"சிஸ்டர்.." என நால்வரில் ஒருவன் பேச முயல, "எனக்கு ஆல்ரெடி அண்ணன் இருக்கான். புதுசா யாரையும் அண்ணனாவோ தம்பியாவோ நினைக்கிற எண்ணம் இல்ல. சோ ப்ளீஸ்.. அப்புறம் இன்னைக்கு நடந்தது இன்னையோட முடிஞ்சிடுச்சு. திரும்ப நாம பார்த்துக்க போறது இல்ல.

ஒருவேளை அப்படியே பார்த்தாலும், இந்த ஹெல்பை மைண்ட்ல வச்சுக்கிட்டு என்கிட்டப் பேச டிரை பண்ணாதீங்க. நான் உங்களை மறந்துடுவேன். சோ, நீங்களும் என்னை மறந்துடுங்க. ஓகே.?" என்றவள் அங்கிருந்து கிளம்பிட, சிறிது நேரத்தில் போக்குவரத்து பழைய நிலைக்கு மீண்டு இருந்தது.

பொதுவாகவே பெண்களிற்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் தான். பிரச்சனை என்று வரும் பொழுது, அமைதியாய் கடந்து செல்லவே முனைவர். தான் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடு இது.

ஆனால் மேகவியிடம் இருந்து வெளிப்பட்டது, எச்சரிக்கை உணர்வு இல்லை. அவள் வகுத்துக் கொண்ட எல்லைக் கோடு.

பார்க்கும் எவரானாலும் சட்டென்று அறிந்து கொள்ள முடியும், அந்நால்வருக்கும் தவறான உள்நோக்கம் எதுவும் இல்லை என்று. எனில், அவளிற்குப் புரியாது போகுமா என்ன?

நிச்சயம் உணர்ந்தே தான், அவர்களுடனான உரையாடலுக்குக் கத்தரி போட்டாள்.

'ஆண்களுடன் பேசினால், யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ.?' என நினைத்து இருந்தால் உதவி செய்யவே முன் வந்திருக்க மாட்டாள். அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்ற பலரில் அவளும் ஒருவளாய் இருந்திருப்பாள்.

மங்கையின் இயல்பான நல்மனம் உதவிட தூண்டி இருக்க, அதை மறுயோசனை இன்றி செய்து விட்டாள். ஆனால் அதற்கான நன்றியை ஏற்கத்தான் விருப்பம் இல்லை அவளிற்கு.

'ஹெல்ப் பண்ணீட்டு தேங்க்ஸ் கூட தேவை இல்லனு போகுதே இந்தப் பொண்ணு?' என்றுதான் சத்திக்கு முதலில் தோன்றியது.

'என்ன கொஞ்சம் அதை நிதானமா சொல்லி இருக்கலாம். எதுக்கு இவ்வளவு ஹார்ஷா பிஹேவ் பண்ணணும்.?' என வினா வேறு எழுந்தது.

அதன் பின்னரான எதிர்பாரா சந்திப்புகளிலும், சாகரன் அவ்வப்போது தனது தங்கையைப் பற்றிப் பேசும் பொழுதும் தான் புரிந்தது, அதுதான் அவளின் இயல்பு என்று. அதனாலேயே மேகவியிடம் ஒருவித ஈர்ப்பு இருந்தும், பேசுவதற்கு பல வாய்ப்புகள் கிட்டியும், ஒருமுறைக் கூட அதனைச் செயல்படுத்த முனையவில்லை சத்தி.

போய் பேசும் பொழுது, "என்கிட்ட வந்து பேசாதீங்க!" என்று விபத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் உரைத்தது போல் அவனிடமும் மொழிந்து விட்டால், அச்சொல்லை மீறி சத்தியால் ஒருஅடி கூட முன்னெடுத்து வைக்க இயலாது. அதையும் கடந்து ஏதேனும் செய்தால், அது அவளை வற்புறுத்துவது போல் ஆகிவிடும்.

'நோ மீன்ஸ் நோ!' என்பதன் பொருள் உணர்ந்தவன். அந்த நோ'விற்கு வேறு அர்த்தத்தை நிச்சயமாய் தேட மாட்டான்.

உண்மையில் அவனிற்கு மேகவியை நெருங்கும் எண்ணமே இல்லை. அவளிடம் உண்டான ஈர்ப்பை, 'க்ரஷ்' என்ற உணர்வோடு நிறுத்திக் கொண்டான்.

'சாகரன் மற்றும் பிரார்த்தனாவின் காதலிற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து இருக்க, அது தனது செயல்பாட்டால் பாதிப்பு அடைந்து விடக்கூடாது!' என்பதற்காகவே பிடித்தத்தை விலக்கி நிறுத்தி, அமைதியாய் இருந்தான்.

ஆனால் காலம் வேறொரு கணக்கை இட்டு, பிடித்தம் கொண்டவளுடனே அவனின் உறவை பிணைத்து வைத்து விட்டது. இனி அவளின் மனதை வசமாக்குவது என்பது ஆடவனின் கரத்தில் தான் உள்ளது. அதனை திருமணத்திற்கு முன்பிருந்தே செயல் படுத்த துவங்கிவிட்டான் அவனும்.

திருமணம் முடியும் வரை மங்கையிடம் பேசாமல் இருந்தது கூட, அவன் வகுத்திருந்த திட்டங்களின் ஒருபகுதி தான்.

"கும்பகர்ணனுக்கு அக்காவா இருப்பா போல! இவ்வளவு சௌண்டா பாட்டு ஓடுது, ஆனா இவ கொஞ்சம் கூட அசையாம எப்படி தூங்குறானு பாரு? நேத்து தான் கல்யாணம் ஆச்சு. அவனவன் ஃபர்ஸ்ட் நைட்டை சந்தோசமா கொண்டாடி முடிச்சிட்டு, பொண்டாட்டியைக் கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கிட்டு, காலையில முழிக்க முடியாம இருப்பானுங்க. ஆனா நான்.? சத்தி, கல்யாணம் ஆகியும் இப்படி பிரம்மச்சாரியா இருக்கியேடா? ஆழ்ந்த இரங்கல்!" எனத் தனக்குத் தானாகவே வருந்திக் கொண்டவன், "ஆனா இதை இப்படியே விடக்கூடாதே? அப்படி விட்டா, எதுக்கு இந்த கல்யாணம்?" என்று சிந்தனையில் இறங்கினான்.

சில நொடிகளில் விவகாரமாய் ஒரு யோசனை தோன்றிட, படுக்கையில் இருந்து இறங்கினான்.

மனைவியை முழுவதுமாய் பார்த்தவன் மெல்ல அவளின் போர்வையை விலக்கி, புடவையை அங்கங்கு கசக்கி விட்டான். இடது கரத்தில் இருந்து ஒரு வளையலைக் கழட்டிட, ஆடவனின் விரல் தீண்டலில் சற்றே அசைந்தாள் மேகவி.

நொடியில் அவனின் சுவாசம் நின்று போக, பட்டென்று நான்கடி பின்னால் விலகிக் கொண்டான். மங்கையானவள் இரண்டு வினாடிகளின் இடைவெளியில் மறுபுறம் திரும்பி வசதியாய் படுத்து மீண்டும் தூக்கத்தை தொடர, அவன் பாதி அளவிற்கு கழட்டி இருந்த வளையல் முழுவதுமாய் கரத்தில் இருந்து நழுவி படுக்கையில் விழுந்தது.

நடந்த நிகழ்வில் நின்றிருந்த சத்தியின் மூச்சு, 'அப்பாடா?' என ஆசுவாசத்துடன் பழைய நிலைக்குத் திரும்பிட 'நல்லவேளை முழிக்கல!' என்று நிம்மதி அடைந்தான்.

வகிட்டில் வைத்திருந்த குங்குமத்தைச் சற்றே கலைத்து, விரலில் ஒட்டிய அதன் நிறத்தை தனது சட்டையில் துடைத்தான். மேல் உடையைக் கழட்டி மனைவியின் தலையணையை சற்றே விலக்கிவிட்டு அதன் இடைவெளியில் நுழைத்தான். குழலில் இருந்த வாடிய மல்லிகை சரத்தில் சில பூக்களை உருவி அறையில் அங்கங்கு போட்டவன், தனது பணியனை அவிழ்த்து கைகளால் நன்கு கசக்கி, மீண்டும் அணிந்து கொண்டான்.

அறையில் இருந்த கண்ணாடியின் முன்சென்று நின்றவன் குழலைக் கலைத்து விட்டு மீண்டும் சரிசெய்தான்.

"பர்ஃபெக்ட் சத்தி! இது போதும். பார்த்ததும் அவங்களே ஒரு முடிவுக்கு வந்துக்குவாங்க." என அவன் தன்னையே மெச்சிக் கொள்ள, கதவு தட்டும் ஒலி கேட்டது.

'என்ன அதுக்குள்ள எழுப்ப வந்துட்டாங்க. புது பொண்ணு மாப்பிள்ளையைக் கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்ரா தான் தூங்க விட்டா என்னவாம்? என் பொண்டாட்டி வேற இன்னும் முழிக்கல. வழக்கமா எத்தனை மணிக்கு எழுந்திரிப்பானு தெரியல. அவளை பாதியில எழுப்பணுமா?' என்று சிந்தித்தபடி இருக்க, "மேகா மா, சத்தி.." எனப் புஷ்பவதியின் குரல் மீண்டும் கதவு தட்டும் ஒலியோடு இணைந்து கேட்டது.

சில வினாடிகள் இடைவெளி விட்டு, "ஹான் இதோ வரேன்மா, மேகா.. மேகவி.. எழுந்திரி. அம்மா கூப்பிடுறாங்க!" என்று அருகே சென்று குரல் உயர்த்தி உரைத்தபடியே நொடிப் பொழுதில் அவளின் இதழ்களில் இருந்த சாயத்தை அழுந்தத் துடைத்துவிட்டு ஓடிச் சென்று அறைக் கதவைத் திறந்தான்.

அவனது தீண்டலிலும் குரலிலும் இமைகளைப் பிரித்த மேகவி, அறையின் வாயிலில் மாமியாரை கண்டதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

புஷ்பாவின் கண்கள் நேராய் மருமகளிடம் சென்றிட, மங்கையின் விழிகளோ கணவனது முதுகில் பதிந்தது.

'உதட்டை யாரோ பிடிச்சு இழுத்த மாதிரி இருந்துச்சே? இவனா அது? ஆமா, என்ன சர்ட் இல்லாம நிக்கிறான். பணியன் வேற கசங்கி இருக்கு. நைட் நான் தூங்கும் போது எதுவும்?' எனச் சிந்தனை தறிகெட்டு ஓட, உடனடியாய் படுக்கையில் இருந்து இறங்கினாள்.

பார்வையை மேகவியிடமே வைத்திருந்த அன்னையை, வேண்டுமென்றே ஒரு கொட்டாவியை வெளி விட்டு தன்பக்கம் திருப்பினான் சத்தி.

'"ஹ்ஹாவ், என்னமா..?"

"மணி ஆறாச்சுடா. அதான் எழுப்ப வந்தேன்."

"என்ன அவசரம்னு அதுக்குள்ள எழுப்புறீங்க?"

"மறுவீடுக்குப் போக வேண்டாமா? மேகா மா, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சு ரெடியாகி வாங்க. நான் காஃபி போட்டு வைக்கிறேன். இந்தாடா, அவளோட டிரஸ் பேக்!" என்று அவர் பையை மகனின் கரத்தில் கொடுத்துவிட்டுச் செல்ல, மனைவியின் பக்கம் திரும்பினான் சத்தி.

"நைட் என்ன செஞ்ச நீ.?" என அடிக்குரலில் சினத்துடன் வினவ சட்டென்று அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு, அவளின் அருகே வந்தான்.

ஆடவனின் அமைதி மங்கையின் சினத்தை மேலும் அதிகரிக்க, "கேட்கிறேன் இல்ல.?"

"வாய்ஸை லோ பண்ணு பொண்டாட்டி. வீட்டுல நாம மட்டும் இல்ல. பெரியவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு கேட்டுச்சுனா என்ன நினைப்பாங்க?"

சூழலை உணர்ந்தவள் குரலை தாழ்த்தி, "என்ன செஞ்சனு கேட்டேன்?" என்று கடிந்த பற்களுக்கு இடையே அடக்கப்பட்ட சினத்துடன் சொற்களைத் துப்பினாள்.

அவளின் மனநிலைக்கு அப்படியே நேர் எதிராய் வெகு நிதானத்துடன், "வெயிட் பொண்டாட்டி, சொல்லுறேன்!" என கையில் இருந்த பையை ஓரமாய் வைத்தான்.

அவளின் பின் பக்கமாய் வந்து இரு பக்க தோள்களிலும் கரம் பதித்து நகர்த்திட, "என்ன செய்யிற, விடு!" என்று கணவனின் கரத்தைத் தட்டிவிட முயன்றாள்.

அதற்கு அனுமதியாதவன், "உன்னை என்ன செஞ்சேன்னு தெரிய வேண்டாமா பொண்டாட்டி?" எனக் கேட்டபடி அவளைக் கண்ணாடியின் முன்பு நிறுத்திட, தனது பிம்பத்தை கண்டு திடுக்கிட்டாள் மேகவி.

தலையை மட்டும் திருப்பி அவனை பார்வையாலேயே எரிக்க, "இதைத்தான் செஞ்சேன். ஆனா நீ நினைக்கிற மாதிரி நைட்ல இல்ல. இப்ப காலையில ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி! அம்மா உன்னை பார்த்தாங்க இல்ல? அவங்களுக்காக இது! இருபத்தெட்டு வயசு ஆயிடுச்சு. உனக்கு புரியலனு மட்டும் சொல்லிடாத!"

அதரங்களின் பக்கவாட்டில் சற்றே பரவியிருந்த உதட்டுச் சாயத்தைத் தொட்டுப் பார்த்தவள், "இது.?" என்றிட, வலது கரத்தின் இரு விரல்களால் அவளின் இதழ்களை அழுத்தமாய் ஒருமுறைப் பற்றி விடுவித்து, அதன் நிறத்தை தனது பணியனில் துடைத்தான்.

மங்கையவள் திணறலுடன் நோக்க, "மேட்சிங் கரெக்டா இருக்கு இல்ல? குட்மார்னிங் பொண்டாட்டி. அப்புறம் ஹேப்பி ஃபர்ஸ்ட்நைட்." என உரைத்துவிட்டு, கள்ளப் புன்னகையுடன் துவாலையை எடுத்துக் கொண்டு ஓய்வறை நோக்கிச் சென்றான் சத்யகீர்த்தி.
 

Author: ரோசி கஜன்
Article Title: மையல் மீளுதே மேகவியே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Priya saravanan