பாவை 02

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
சில வருடங்களுக்கு முன்பு!

ஹாய் ஹலோ மக்களே!

இப்ப நீங்க bus-la, bike-la, office-க்கு வேலைக்காகவோ வேலை தேடியோ ஓடிட்டு இருக்கலாம். இல்ல வீட்டுல பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ‘வீட்டு பிரச்சனை என்ன ஆகுமோன்னு உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்கலாம். காதல்ல தோல்வி, பரிட்சையில தோல்வி, வாழ்க்கையில தோல்வினு பல தோல்விகளை நீங்க சந்திச்சிருக்கலாம்.

ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க…நீங்க தோற்றது நாலு தடவைன்னா, இன்னொரு தடவை முயற்சி பண்ண முடியாதுன்னு எந்த சட்டமும் இல்ல.

உலகத்துல எல்லாருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை கிடையாது…
ஆனா, எல்லாருக்கும் ஒரே மாதிரி இன்னொரு நாளு கிடைக்கும்.
இன்னைக்கு நீங்க சின்னதா ஒரு நல்ல முடிவு எடுங்க…
அதுவே நாளைக்கு பெரிய மாற்றமா மாறும்.

நீங்க கேட்டுட்டு இருக்கறது குயிலோசை எப்எம் நான் உங்கள் RJ ரிஷி. உங்களோட நல்ல ஆரம்பம் இன்னைக்கு தொடங்கட்டும். இப்போ நம்மளோட இணைந்திருப்பது சித்ரா. ஹலோ சித்ரா எப்படி இருக்கீங்க?”

“சூப்பரா இருக்கேன் ரிஷி. உங்க குரல் என்னய என்னமோ பண்ணுது. உங்க வீட்டு அட்ரஸ் கிடைக்குமா?”

“எதுக்கு சித்ரா?”

“உங்கள மாப்பிள்ளை கேட்டு வரலாம்னு தான்” என்றாள் அந்த பெண் சிரித்துக் கொண்டே

“குயிலோசையை கேட்டு ரசிக்கணுமே தவிர, அது கூண்டுக்குள்ள போட்டு அடைக்க நினைக்க கூடாது மிஸ். சித்ரா. குயில புடிச்சு கூண்டில அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்” என ரிஷி சிரித்தபடி பாடி நிலைமையை அழகாக சமாளிப்பதை கேட்டு புன்னகைத்தாள் நிருஷிகா.

காதிலிருந்த ஹெட்போன் கழற்றப்பட்டதும் புன்னகை மறைந்து சிடுசிடுப்புடன் அன்னை மைதிலியை முறைத்தாள்.

“நிரு, நான் பேசறது கேக்குதா இல்லையா? எப்போ பாத்தாலும் இந்த ஹெட்போனை காதுல மாட்டிட்டு நீ மட்டும் தனி உலகத்துல இருந்தா எப்படி? எப்எம் தானே கேக்கற? ராஜ் பாட்டை நிறுத்திட்டு எப்எம் போடுங்க” என்றதும் காரின் டிரைவர் சீட்டில் இருந்த ராஜ் பாட்டை நிறுத்திவிட்டு எப்எம்ஐ ஆன் செய்ய,

“டாடி பாட்டு போடுங்க” என்று கத்தி புவன் கூச்சலிட்டான்.

ராஜ் இப்போது மனைவியை பார்க்க, “இவன் கத்த ஆரம்பிச்சுட்டா நிறுத்த மாட்டான். பாட்டையே போடுங்க” என்ற மைதிலி நிருஷிகாவிடம் திரும்பி, “எல்லாரும் ஒண்ணா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு தானே வெளியே வந்தோம். நீ இப்பவும் காதுல ஹெட்போன மாட்டிக்கிட்டா எப்படி நிரு? எங்க கூட பேசிட்டே வரலாமில்ல”

“என்கிட்ட பேச கூட உங்களுக்கு நேரமிருக்கா என்ன?” என்றாள் சின்னவள் வெடுக்கென்று

“பேசறதுக்கு தனியா நேரமிருக்கணுமா என்ன? நீதானே ஒதுங்கி ஒதுங்கி போறே? எல்லாரும் குடும்பமா ஒண்ணா இருக்கணும்னு தானே அவுட்டிங் போகலாம்னு கார்ல கிளம்பி வந்தோம்?”

பதில் பேசாமல் தாயின் அருகில் அமர்ந்திருந்த நான்கு வயது இரட்டையர்கள் புவன், புவனிகாவை பார்த்தாள். இருபத்தி மூன்று வயதான அவளுக்கு நான்கு வயதில் தம்பி தங்கை.

“எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னா, நீங்க உங்க புருஷன் குழந்தைங்களோட வந்திருக்கணும். அவங்க தான் உங்க குடும்பம் நானில்ல”

“நிரு, ஏன்டி இப்படி பேசிட்டு இருக்கே” என்று மைதிலி கண்கலங்க,

“மைதிலி அமைதியா இருக்க மாட்டே? எதுக்கு நிருஷிய திட்றே? நிரு டார்லிங், காம் டவுன் பேபி” என்றார் தேவ்ராஜ்

“டோன்ட் கால் மீ ஆஸ் டார்லிங்” மிகுந்த அழுத்தத்துடன் தெறித்து விழுந்தன வார்த்தைகள்.

“ஓகே டன்” என்று உடனடியாக ஒப்புக் கொண்ட ராஜ் மீண்டும் மறந்தோ வேண்டுமென்றோ அப்படி தான் அழைப்பார் என்று அவளுக்கு தெரியும். எரிச்சலுடன் பார்த்தாள், ராஜூம் கண்ணாடி வழியே பின்னால் இருந்தவளை பார்த்திருந்தார்.

கையில்லாத இறுக்கமான டாப்ஸ்ம் குட்டை பாவாடையும், உயர்த்தி போட்டிருந்த போனி டைல், முகத்தில் இருந்த பிடிவாதம் அவளை புவனிகாவை விட சிறு பெண்ணாய் காட்டியது. நிருஷிகாவுக்கோ அவரின் பார்வை எரிச்சலை தந்தது. இந்த பார்வைக்கு பின்னே குரூரத்தை தவிர வேறு என்ன இருக்கும்? அவரின் கண்களை நோண்டி, கழுத்தை நெருக்கி விட்டால் என்ன? விபரீதமாக யோசித்தவளின் காதுகளில் புவன் புவனிகாவின் குரல்கள் கேட்கவும் ஆத்திரத்தை அடக்கி கொண்டாள்.

பள்ளி இறுதி பரிட்சை விடுமுறை முதல் கல்லூரியின் செமஸ்டர் விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீட்டிற்கு வரவே அவளுக்கு தொண்டை வரை கசக்கும். இப்போது கல்லூரியின் இறுதியாண்டு பரிட்சை முடிந்ததால் இனி இவர்களுடன் தான் இருந்தாக வேண்டும் என்ற உண்மை மனதில் பாறாங்கல்லாய் கனத்தது. ஏசி காருக்குள் மூச்சு முட்டுவது போல இருக்கவே காரின் கண்ணாடியை இறக்கினாள்.
“நிரு, உன் தம்பி தங்கச்சிக்கு வெளி காத்து ஒத்துகாது, ஏன் கண்ணாடிய இறக்குற?” என்று மைதிலியிடமிருந்து அதட்டல் வரவும், கார் கதவை திறந்து கீழே குதித்து விட்டால் என்ன? என்று தோன்றியது. அதை உடனே அடக்கி கார் கண்ணாடியை மீண்டும் உயர்த்தினாள்.

மைதிலி தன் குழந்தைகளுடன் செல்லம் கொஞ்சி கொண்டு வர, ஆத்திரத்தில் முகம் சிவந்தாள். இதற்கு காரணமான ராஜ்ஜை அவள் முறைக்கவும், அதே நேரம் அவரும் அவளை தான் கண்ணாடி வழியே பார்த்தார். யாரையும் பார்க்க பிடிக்காமல் கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு காதில் மீண்டும் ஹெட்போனை வைத்துக் கொண்டாள்.

குயிலோசை எப்எம்இல் ரிஷியின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஒருத்தர் மேல இன்ட்ரஸ்ட் அதிகமாகி லவ் பண்றதும் பேங்க்ல அதிக இன்ட்ரஸ்ட்க்கு லோன் வாங்கறதும் கிட்டத்தட்ட ஒண்ணு தாங்க, பேங்க்காரன் தினம் போன் பண்ணி நம்ம வீட்டு வாசலுக்கு வந்து நிப்பான். லவ்பண்றவனும் தினம் லவ்வருக்கு போன் பண்ணி அவங்க வீட்டு வாசலுக்கு போய் நிப்பான்.

வாழ்க்கையில பிரச்சனையா? போன்ல வைபை (wifi) சரியா வொர்க் ஆகலயா? ரெண்டுக்கும் ஒரே தீர்வு தான். ரி-ஸ்டார்ட் (restart) பண்ணி மீண்டும் தொடருங்க, அப்படியே குயிலோசை ரிஷியையும் தொடருங்க”, நிருஷிகாவின் இறுக்கம் தளர்ந்து புன்னகை மலர்ந்தது.

அதே நேரம் கார் நின்றிருக்க, மைதிலி குழந்தைகளுடன் கீழே இறங்கினார். கண்மூடி அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் முரட்டு கரம் பட்டதும் துள்ளி குதித்து எழுந்தாள்.

“நிருஷி டார்லிங், காம்டவுன்” என்ற ராஜின் கரத்தை வெடுக்கென்று தள்ளிவிட்டு “டோன்ட் கால்மீ டார்லிங்” என்று விரலை நீட்டி எச்சரித்துவிட்டு காரிலிருந்து கீழே இறங்கினாள்.

கடற்கரையை கண்டதும் புவனும் புவனிகாவும் தலைதெறிக்க ஓடினார்கள். மைதிலி அவர்கள் பின்னால் ஓடி முடியாமல் மூச்சு வாங்க மடிந்து அமர்ந்தவர், “நிரு, அவங்கள பிடி, என்னால ஓட முடியல” என்றார்.

நிருஷிகா அவர்களின் பின்னால் ஓடி அவர்களை பிடிப்பதற்குள் மூவருமே கடல் மணலில் சறுக்கி விழ, அலை அவர்களை மூடி சென்றது. அதில் குதுகூலமானவர்களாய் மூவருமே கடல் அலையில் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர். அலைகள் அவர்களின் காலுக்கு அடியில் வரும்போது வானை நோக்கி குதிப்பதும், பின் தடுமாறி கீழே விழுவதும் என அவர்களின் ஆட்டம் தொடர, நிருஷிகா கடல் நீரில் மொத்தமாக நனைந்திருந்தாள். தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவளின் தோளை பற்றி யாரோ நிறுத்தவும் திரும்பி பார்த்தாள்.

தேவ்ராஜ் தான் நின்றிருந்தார். “நிருஷி, நீ சின்ன பொண்ணில்ல. உன் டிரஸ் நனைஞ்சிருக்கு. பீச்சுக்கு போறாம்னு தெரியும் தானே, ஏன் இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வர்றே? எல்லாரும் உன்னையே பாக்கறாங்க பாரு. போய் கார்ல உட்காரு” என்றார் அதிகார தோரணையில்

“யாரும் பாக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க உங்கள மாதிரி கேவலமானவங்க இல்ல”

“என்ன பேசறே?” ராஜ் முகத்தில் கடுமை தோன்ற, அவருக்கு பதில் சொல்ல பிடிக்காமல் அங்கிருந்து சென்று தூரமாக மணலில் அமர்ந்து கொண்டாள். சிறுவர்கள் தனியாக விளையாடுவதால் மைதிலி அவர்களிடம் செல்ல, இப்போது தந்தை தாய் குழந்தைகள் அனைவரும் குடும்பமாக அலைகளில் விளையாடினார்கள். என்னவோ தான் மட்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தாள்.

இந்த தனிமை இன்று நேற்று வந்ததல்ல. சுமார் எட்டு வருடமாக தொடர்கிறது. அவர்கள் வாழ்வில் தேவ்ராஜ் குறுக்கிடாதவரை மைதிலி தன் சிறுவயது பிராயத்தில் தனக்காக மட்டும் வாழ்ந்ததை எண்ணி பார்த்தாள். அப்போது வசதியில்லாமல் ஒண்டு குடித்தனித்தில் விதவை தாயாக மைதிலியும் அவரது ஒரே மகளாக நிருஷிகாவும் மட்டும் வாழ்ந்து வந்தனர்.

தந்தை இருந்ததும் இறந்ததும் அவளுக்கு சரியாக நினைவில்லை. வறுமையிலும் தகப்பன் இல்லாத குறை தெரியாமல் மகிழ்ச்சியாகவே வளர்ந்தாள். அந்த மகிழ்ச்சி அவள் பத்தாவது படிக்கும் வரை தான் இருந்தது. அடிக்கடி மைதிலி தேவ்ராஜ்ஜூடன் காரில் வந்து இறங்கினாள்.

“யார் மம்மி அந்த அங்கிள்?” என கேட்டாள் மகள்

“அவர் நான் வேலை செய்ற கம்பெனி முதலாளி தேவ்ராஜ். அவர்கிட்ட தான் நான் பிஏவா வேலை செய்யறேன்” என்றாள் அன்னை. அடிக்கடி தேவ்ராஜ் வீட்டிற்கு வருவதும் சாப்பிட்டு விட்டு செல்வதும் நிருஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த வயதில் தாயை அதட்டவும் வழி தெரியாமல் பதினொன்றாம் வகுப்பு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என்று சொல்லி அடம்பிடித்தாள்.

அதற்கும் தேவ்ராஜ் உதவியை தான் நாடியிருந்தாள் அவள் அன்னை. அவள் அடம்பிடித்ததால் போர்டிங் பள்ளியில் அவர்கள் சேர்த்திருந்தாலும், அவர்களின் தனிமைக்கு தான் இடையூறு என்பதால் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள் என்று கோபம் கொண்டாள். படிப்பில் கவனம் செலுத்தி பன்னிரண்டாவது முடித்து வெளியே வரும் போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லி அவளை அழைத்து செல்ல காருடன் வந்திருந்தனர்.

பன்னிரண்டாவது மாணவியான நிருஷிக்கு தாயின் புதிய திருமணம் அவமானமாக இருந்தது. யாரோ ஒரு மனிதரை எப்படி தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியும்? அத்தோடு அன்னையின் வயிறு வீங்கியிருப்பதை கண்டு அவமானத்தில் கூனி குறுகி போனாள். “ச்சீ” மனதிற்குள் அருவருப்புடன் சொல்லி கொண்டாள்.

உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டல் ஒருபக்கம், உடன் பயிலும் மாணவிகளின் அறிவுரை மறுபக்கம் என குழம்பி போனாள். “நிருஷி, நீ வயசு பொண்ணு, உன் அம்மாவோட புருஷன்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு. இப்போ வர்ற நியூஸ்லாம் பார்த்தா கொடுமையா இருக்கு” என்று ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி, “அவங்களுக்குனு ஒரு குழந்தை வந்திடுச்சு. இனி நீ வேண்டாத பொருளா தான் அங்கே இருக்க போறே. படிப்புல கவனம் செலுத்து. இதையெல்லாம் நினைச்சு மனச விட்ராத” என்று சொல்ல நிஜமாகவே மனம் விட்டு போனது அவளுக்கு.

அதற்கேற்றாற் போல மைதிலி முப்பத்தியெட்டு வயதில் கருவுற்றதால் ராஜ் மிகவும் கவனமாக மனைவியை பார்த்துக் கொண்டார். மைதிலிக்கு மகளிடம் பேச கூச்சமோ நேரமில்லையோ தெரியாது, தாய் மகளுக்கிடையே நீண்ட இடைவெளி வந்திருந்தது. தேவ்ராஜ் அவளுடன் நெருங்க முற்பட்டபோது, அந்நிய ஆணின் தொடுகையோ, அக்கறை பேச்சோ அவளால் சகித்து கொள்ள முடியவில்லை. வளர்ந்த பெண்ணால் இன்னொருவரை தந்தை ஸ்தானத்தில் நிறுத்தி பார்க்கமுடியவில்லை என்பதே நிதர்சனம்.

ரெட்டை குழந்தைகளாக புவனும் புவனிகாவும் பிறந்து விட, அவர்களை கவனிக்கவே மைதிலிக்கு நேரம் போதவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டங்கள், குடும்ப திருவிழா என நால்வரும் தனி குடும்பமாக சென்று புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் போட, அது நிருஷிகாவை மேலும் தள்ளி நிறுத்தியது. அந்த வீட்டில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்விலும் தான் ஒரு வேண்டாத பொருள் என்று உணர்ந்து கொண்டவள் மொத்தமாக அவர்களை விட்டு ஒதுங்கியிருக்க ஆரம்பித்திருந்தாள்.

பள்ளி முடிந்த பின்னும் கல்லூரி விடுதியில் தான் தங்குவேன் என்று அடம் பிடித்தாள். வாரவிடுமுறைகளில் கூட வீட்டிற்கு போக மாட்டாள். ஆனால் செமஸ்டர் விடுமுறை, பண்டிகை நாட்களில் வீட்டிற்கு செல்வதை தவிர்க்க முடியாது. தேவ்ராஜ்ஜின் பிரம்மாண்ட வீட்டில் தாமரை இலை தண்ணீராக ஒட்டாமல் நின்றாள். அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையில் எப்போதும் முடங்கி கொள்வாள்.

கல்லூரியில் சேர்ந்தது முதல் விடுமுறையின் தனிமையை போக்கி கொள்ள குயிலோசை எப்எம்ஐ கேட்ட ஆரம்பித்தவளுக்கு ரிஷியின் குரலும் சூழ்நிலைக்கேற்றவாறு ஊக்கம் தரும் வார்த்தைகளும் அவள் தனிமைக்கு துணையாக நின்றன. என்னவோ அவன் தன்னுடன் தான் பேசுவது போல நினைத்துக் கொள்வாள். இப்போது கல்லூரி படிப்பு முடிந்துவிட்டது. வீட்டிற்கு வந்தாக வேண்டிய நிலை. இனி இவர்களோடு எப்படி இருக்க போகிறேன்? என்ற கவலையும் தனக்காக யாருமில்லை என்ற கழிவிரக்கமும் தோன்ற கண்ணீர் விட்டாள்.

அன்றிரவு ரெஸ்டாரண்டில் உணவு உண்ணும்போது கடமைக்கு சாப்பிட்டு கொண்டிருந்தவளின் காதில் ஆர்ஜே ரிஷியின் குரல் காதில் விழ மனம் சற்றே அமைதியடைந்தது. யாருடனும் பேசாமல், மற்றவர்களின் பேச்சை கேட்க தயாராக இல்லாமல் எப்போதும் தன்னை சுற்றி ஒரு வலையை உருவாக்கி கொண்டிருந்தவள் தன்வலைக்குள் ரிஷியின் குரலுக்கு மட்டுமே இடம் கொடுத்திருந்தாள்.

அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டவள் ரிஷியின் குரலை கேட்க கைப்பேசியில் எப்எம்ஐ அழுத்தினாள்.

“இப்ப இந்த நேரத்துல radio கேட்டுட்டு இருக்கீங்கன்னா, தூக்கம் வராம ஏதோ ஒண்ணு மனசுக்குள்ள ஓடிட்டு இருக்குன்னு அர்த்தம். நடந்தது எதையும் மாத்தமுடியாது. இனி நடக்க போறத கண்டிப்பா உங்களால மாத்தமுடியும்! நம்புங்க! வாழ்க்கை இன்னும் முடியல.”

ஆமா ரிஷி! வாழ்க்கை இன்னும் முடியல. நாம சேர்ந்து வாழப்போற வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்லயே, எப்படி முடியும்? என்று மனதிற்குள் அவனோடு பேசி சிரித்தாள்.

(தொடரும்)
 

Attachments

  • பாவையின்றி பார்வையில்லை! (1).jpg
    பாவையின்றி பார்வையில்லை! (1).jpg
    294.6 KB · Views: 1
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 02
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
வாவ் ரிஷி RJ வா❤️❤️❤️❤️
பாவம் தான் நிரு.....மைதிலி ஏன் இப்படி????
ராஜ் எண்ணம் சரி இல்லையோ
 
  • Love
Reactions: STN - 94